மக்கள் அதிகாரக் கழகம், மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி சார்பில் ஜூன் 29 அன்று நடைபெற்ற அரங்கக்கூட்டம் மதுரை மாட்டுத்தாவணி அருகே ராமசுப்பு அரங்கத்தில் மாலை 5:45 மணிக்கு ஆரம்பமானது.
இந்தக் கூட்டத்திற்கு மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர். ராமலிங்கம் தலைமை தாங்கினார்.
தியாகிகளுக்கு வீர வணக்கத்துடன் கூட்டம் தொடங்கியது.
அதன் பிறகு வெனிசுலா நிலநடுக்கத்தில் உயிரிழந்த மக்களுக்கும், திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப்பேரில் அமோனியா வாயு கசிவால் இறந்த 16 தொழிலாளர்களுக்கும் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
தலைமை உரையாற்றிய தோழர் இராமலிங்கம், தி.மு.க. ஆட்சியில் பல்வேறு பெரியாரிய இயக்கங்களும் உடன் நின்ற போதும் ஒன்றிய மோடி அரசின் கார்ப்பரேட் திட்டங்களில் சமரசமாகச் செயல்பட்டனர். அதுபோல் விஜய் ஒன்றிய அரசுடன் முரண்படாமல் நடந்து கொள்வோம் என சட்டமன்றத்திலேயே பேசுகிறார் என்றால் இந்த ஆட்சி என்பது சமரசம் இல்லாமல் இருக்குமா என கேள்வி எழுப்பினார். இதுபோல் தலித் மக்களின் மீதும் இஸ்லாமிய மக்களின் மீதும் தொடர்ந்து அநீதி இழைக்கப்பட்டு வருவதையும் குறிப்பிட்டு நாம் இன்னமும் வீரியமாக ஒன்றிணைந்து போராட வேண்டும் என்பதை அழுத்தமாகப் பதிவு செய்தார்.
அடுத்ததாக மக்கள் அதிகாரக் கழகத்தின் மதுரை கிழக்கு மாவட்டத்தின் செயலாளர் தோழர் டங்ஸ்டன் பிரகாஷ் “தமிழ்நாட்டில் த.வெ.க ஆட்சி பாசிசத்தை வீழ்த்தும் திசை எது?” வெளியீடு கொண்டு சென்ற அனுபவத்தையும், அரங்க கூட்ட போஸ்டர் ஒட்டியதற்காக போலீசால் தான் கைது செய்யப்பட்ட அரசு ஒடுக்குமுறை குறித்தும் பகிர்ந்து கொண்டார்.

அடுத்ததாக மக்கள் அதிகாரக் கழகத்தின் இணைச் செயலாளர் தோழர் குருசாமி, அரங்க கூட்டத்திற்கு வருகை தந்திருந்த அனைத்து ஜனநாயக சக்திகளையும் வரவேற்று தனது வரவேற்புரையை ஆற்றினார். அவர், “பாசிசத்தை எதிர்த்து முதன்மைப்படுத்தி நாம் வேலை செய்யவில்லை என்றால் பாசிசத்தை நாம் புரிந்து கொள்ளவில்லை என்பதாகவே அர்த்தம். த.வெ.க. ஆட்சி என்பது பாசிசத்திற்கு செப்பனிட்டுக் கொடுக்கும் வேலையை செவ்வனே செய்யும். அதை எமது வெளியீடுகளில் விரிவாக எழுதியுள்ளோம்” என்பதைப் பதிவு செய்து விடைபெற்றார்.
அடுத்ததாகப் பேசிய ஆதித்தமிழர் விடுதலை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தோழர் சந்துரு, இந்த ஆட்சியில் தொடரும் தலித் மக்கள் மீதான ஒடுக்குமுறையை எடுத்துக் காண்பித்து நாம் தொடர்ந்து போராடும் முன் வர வேண்டும் என்பதைப் பதிவு செய்தார்.
இறுதியாக, சிறப்புரையாற்றிய கழகத்தின் பொதுச்செயலாளர் தோழர் வெற்றிவேல் செழியன், தி.மு.க. அரசின் தோல்விக்கான காரணங்களையும் விஜய் கட்சியின் வெற்றிக்கான காரணங்களையும் த.வெ.க. அரசின் தற்போதைய நடவடிக்கைகளையும் விரிவாக அம்பலப்படுத்தினார். மேலும் மக்களுக்கான உரிமைப் போராட்டத்தை மக்களுக்கான ஜனநாயகத்தைப் படைப்பது என்பது மக்களினுடைய கோரிக்கைக்காக உறுதியாகத் தொடர்ந்து நிற்பது என்பதுதான்; மக்களின் கோரிக்கைகளுக்காக எந்த கட்சி உறுதியாக நிற்கும் என்பதைக் கேள்வியாக எழுப்பினார்.
இதற்கு மாற்று என்பது மக்களின் கோரிக்கைகளை எல்லாம் நிறைவேற்றக்கூடிய பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசு என்பதைச் சிறப்பான முறையில் பதிவு செய்து வந்திருந்த தோழர்களுக்கும் ஜனநாயக சக்திகளுக்கும் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தினார்.


இறுதியில் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் தோழர் தீபன் நன்றியுரை ஆற்றினார்.
பாட்டாளி வர்க்க சர்வதேச கீதத்துடன் வீர வணக்கத்துடன் கூட்டம் முடிவடைந்தது.
தகவல்,
மக்கள் அதிகாரக் கழகம்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
மதுரை மாவட்டம்.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads





