கீழடி அறிக்கையைப் புதைத்துவிட இந்தியத் தொல்லியல்துறை சதி!

ஓர் அகழ்வாராய்ச்சி அறிவியல் அறிஞர் சமர்ப்பித்த ஓர் அறிக்கையை மறுபரிசீலனை செய்வதற்காக, ஒரு குழு அகழ்வாராய்ச்சி தளத்திற்குச் செல்வது இந்திய தொல்லியல் துறையின் (ASI) வரலாற்றில் ஓர் அரிதான நிகழ்வாகும். இம்முயற்சி இந்து மதவெறி பாசிச கும்பலின் சதிச்செயலாகும்.

ந்த டிஜிட்டல் யுகத்தில், மக்கிச் சிதைந்து சிறுத்துப்போன புராணக் குப்பைகளை, சிறிதும் வெட்கமே இல்லாமல் இந்திய வரலாறாக உலகுக்கு உயர்த்திக் காட்டி மக்களை ஏய்த்து வருகிறது இந்து மதவெறி பாசிச பா.ஜ.க. கும்பல். ஆனால், அதன் பார்ப்பனியச் சித்தாந்தத்திற்கு விரோதமாக இருக்கும் அறிவியல் உண்மைகளையும் தொல்லியல் ஆராய்ச்சிகளையும் வெளியிடாமல் முடக்கி ஒழித்துக்கட்டி வருகிறது.

குறிப்பாக, இந்திய தொல்லியல் துறையின் அகழ்வாராய்ச்சியாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா தமிழ்நாட்டின் கீழடியில் 2015, 2016 ஆகிய இரண்டு ஆண்டுகள் மேற்கொண்ட அகழ்வாராய்ச்சி குறித்த 982 பக்கங்கள் கொண்ட தனது ஆய்வறிக்கையை ஜனவரி 2023-இல் இந்திய தொல்லியல் துறையிடம் (ASI – Archaeological Survey of India) ஒப்படைத்தார்.

அமர்நாத் ராமகிருஷ்ணாவின் அறிக்கை கீழடியை மூன்று காலகட்டங்களாக வகைப்படுத்தியுள்ளது. அவை, முற்கால வரலாற்றுக்கு முந்தைய காலம் (கி.மு. 8-ஆம் நூற்றாண்டு முதல் கி.மு. 5-ஆம் நூற்றாண்டு வரை); முதிர்ந்த முற்கால வரலாற்றுக் காலம் (கி.மு. 5-ஆம் நூற்றாண்டு முதல் கி.மு. 1-ஆம் நூற்றாண்டு வரை) மற்றும் முற்கால வரலாற்றுக்குப் பிந்தைய காலம் (கி.மு. 1-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 3-ஆம் நூற்றாண்டு வரை) ஆகும்.

அகழ்வாராய்ச்சியாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவின் தமிழ்நாட்டின் நாகரீகத் தொன்மைக் குறித்த அந்த அறிக்கை உலகுக்கு இந்திய வரலாற்றைப் புதிய வகையில் அறிமுகப்படுத்தக் கூடியது. உலகத் தமிழர்களின் பெருமிதத்துக்குரியது. அதேவேளை, இந்திய வரலாறு பற்றி ஏற்கெனவே பேசப்பட்டு வந்த பார்ப்பன சனாதனிகளின் வேத புராணப் புனைகதைகளுக்குச் செருகப்பட்ட ஆப்பாக அமைந்து விட்டது.

கீழடியில், இதுவரை நம்பப்பட்டு வந்ததை விடவும் மிகப் பழமையானதாக இருக்கக்கூடிய, கி.மு. 8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, நன்கு திட்டமிடப்பட்ட நகர்ப்புறக் குடியிருப்புக்கான சான்றுகள் உள்ளிட்டு, குறிப்பிடத்தக்க தொல்பொருள் கண்டுபிடிப்புகள் கிடைத்துள்ளன. அவை, அறிவியல் உண்மைகள் என்பதை அறிந்திருப்பினும் இந்திய தொல்லியல் துறையால் அவற்றை அங்கீகரிக்கவோ ஏற்றுக்கொள்ளவோ முடியவில்லை.

எனவே கீழடி அறிக்கையை வெளியிடாமல், அதுகுறித்து எந்தக் கருத்தும் கூறாமல் வெறுமனே அமைதி காத்து காலம் கடத்தி வந்தது. பா.ஜ.க. பாசிச கும்பலுக்குக் கீழடி அறிக்கை தொண்டையில் முள்ளாகச் சிக்கிக் கொண்டது. வெளியில் துப்பிவிடவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது.

கீழடி குறித்த ஆய்வறிக்கையை அதிகாரப்பூர்வமாக வெளியிடக் கோரி முன்னாள் தி.மு.க. அரசு பல கடிதங்களை எழுதியது. அவற்றில் “கீழடி என்பது வெறும் களிமண்ணும் மண்பாண்டங்களும் மட்டுமல்ல; கங்கைச் சமவெளியின் புராணங்களுக்குப் பன்னெடுங்காலத்திற்கு முன்பிருந்தே நகரமயமான, எழுத்தறிவு பெற்ற மற்றும் செழிப்பாக இருந்த 3,000 ஆண்டுகள் பழமையான தமிழ் நாகரிகத்தைப் பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடியாகக் கீழடி விளங்குகிறது.” என்று எடுத்துக் கூறி அகழ்வாராய்ச்சி அறிக்கையை வெளியிடுவதில் ஏற்படும் தாமதம் குறித்துக் கேள்விகளை எழுப்பியது.

நாடாளுமன்றத்தில் இவ்விவகாரம் பலமுறை எழுப்பப்பட்டுள்ளது. ஆனால், அதற்கும் ஒன்றிய அரசு எந்தப் பதிலும் சொல்லாமல், “இடித்த புளி” போல் இறுக்கமாய் இருந்தது. பின்னர் கடந்த ஆண்டு, கலாச்சார அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், கீழடி வாழ்வாராய்ச்சி அறிக்கையை நிராகரிக்கும் கேள்விக்கே இடமில்லை என்று மட்டும் மக்களவையில் கூறியிருந்தார்.

ஒருவழியாக இந்திய தொல்லியல் துறை, அந்த மூன்று காலகட்டங்களின் பெயர்களில் மாற்றம் தேவை என்றும், கி.மு. 8-ஆம் நூற்றாண்டு முதல் கி.மு. 5-ஆம் நூற்றாண்டு வரையிலான காலவரம்பு எந்த வகையிலும் நியாயப்படுத்தப்படவில்லை ஆதலால், அறிக்கையில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்றும் தனது முடிவை அறிவித்தது. அறிக்கையில் மேற்சொன்ன முறையிலான திருத்தங்கள் செய்து மீண்டும் சமர்ப்பிக்குமாறு அமர்நாத் ராமகிருஷ்ணாவிடம் கோரியது.

ஆனால் அவர் தனது காலக் கணிப்பும் முடிவுகளும் அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையிலானவை என்பதால் தொல்லியல் துறை கேட்கும் மாற்றங்களைச் செய்ய மறுத்துவிட்டார்.

இந்நிலையில், வி.சி.க நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், கீழடி அகழ்வாராய்ச்சி அறிக்கையை விரைந்து வெளியிடக் கோரி, 2025 மே மாதத்தில் இந்தியத் தொல்லியல் துறையின் (ASI) தலைமை இயக்குநருக்குக் கடிதம் எழுதியிருந்தார். அதற்குப் பதிலளிக்கும் விதமாக, 2025 ஆகஸ்டில் இந்தியத் தொல்லியல் துறையின் தலைமை இயக்குநர் யதுபீர் சிங் ராவத் அனுப்பியுள்ள கடிதத்தில், “கீழடி அகழ்வாராய்ச்சியின் துல்லியமான கண்டுபிடிப்புகளை வெளியிடுவதில், சட்டப்பூர்வமான மற்றும் அறிவியல் பூர்வமான செயல்முறைகளைப் பின்பற்றுவதில் இந்தியத் தொல்லியல் துறை முழு உறுதியுடன் உள்ளது. எனவே, இது தொடர்பான தரவுகளை நேரடியாகக் களத்திற்கே சென்று மறுபரிசீலனை செய்யத் தொல்லியல் துறையின் உட்குழு (Internal Committee) ஒன்று விரைவில் அனுப்பப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

அவ்வகையில் ராமகிருஷ்ணாவின்  கீழடி அகழ்வாராய்ச்சி அறிக்கையை மதிப்பீடு செய்வதற்காக, இந்திய தொல்லியல் துறை ஐந்து பேர் கொண்ட துறை சார் உட்குழுவை நியமித்துள்ளது. இக்குழுவிற்கு இந்திய தொல்லியல் துறையின் இணைத் தலைமை இயக்குநரும் செய்தித் தொடர்பாளருமான நந்தினி பட்டாச்சார்ய சாஹு தலைமை தாங்குகிறார்.

சாஹு தலைமையிலான குழு, ராமகிருஷ்ணாவின் அறிக்கையை மறுபரிசீலனை செய்வதற்காகத் தற்போது நேரடியாகக் கீழடிக்குச் சென்று மறுபரிசீலனை செய்ய உள்ளது. ஓர் அகழ்வாராய்ச்சி அறிவியல் அறிஞர் சமர்ப்பித்த ஓர் அறிக்கையை மறுபரிசீலனை செய்வதற்காக, ஒரு குழு அகழ்வாராய்ச்சி தளத்திற்குச் செல்வது இந்திய தொல்லியல் துறையின் (ASI) வரலாற்றில் ஓர் அரிதான நிகழ்வாகும்.

இம்முயற்சி இந்து மதவெறி பாசிச கும்பலின் சதிச்செயலாகும். எவ்வாறேனும் கீழடி குறித்த வரலாற்று உண்மையை, தமிழர் நாகரிகத்தின் தொன்மையை, மீண்டும் குழி தோண்டிப் புதைத்துவிட வேண்டும் என்கிற நாசகர எண்ணத்தின் விளைவாகும்.

அறிவியலுக்கு எதிரான இந்தச் சதிச் செயலை முறியடிக்க அறிவியல் உலகத்துடன் ஒன்றிணைந்து உலகத் தமிழர்களும் ஜனநாயகவாதிகளும் உரக்கக் குரல் எழுப்ப வேண்டும். இந்திய தொல்லியல் துறையின் உட்குழு கீழடிக்கு வருவதை எதிர்த்து மக்கள் போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டும்.

செய்தி ஆதாரம்: தி பிரிண்ட் இணையதளம்


ஆதி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க