மதம் மாறிய இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு இரத்து: மதுரை உயர்நீதிமன்றத்தின் மற்றொரு கரசேவை!

இந்தியாவில் “இந்து மதம்” எனும் ஒற்றை மதத்தை நிறுவத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. பாசிச கும்பல், பௌத்த, சீக்கிய மதங்களை விழுங்குவதையும் கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களை ஒழித்துக் கட்டுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. “தாய் மதத்திற்குத் திரும்புதல்” (கர்வாப்சி) என்ற பெயரில் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் தொடுக்கிறது. பாசிஸ்டுகளின் இந்த நிகழ்ச்சிநிரலுக்குச் சேவையாற்றுவதாகவே இத்தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

0

பிற்​படுத்​தப்​பட்ட வகுப்பு இஸ்லாமியர்” (பி.சி.எம்) பிரிவில் மதம் மாறிய இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கான தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீட்டை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இரத்து செய்து ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. பாசிச கும்பலுக்கு கரசேவை ஆற்றியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சமீர் அகமது என்பவர் கடந்த 2015-ஆம் ஆண்டில் இந்து மதத்திலிருந்து இஸ்லாமிய மதத்திற்கு மாறினார். இவர், தமிழ்நாட்டின் பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர் பிரிவில் பட்டியலிடப்பட்டுள்ள “முஸ்லிம் லெப்பை” (Muslim Lebbai) என்ற சாதிச் சான்றிதழைத் தனக்கு வழங்கக் கோரி வட்டாட்சியரிடம் (Tahsildar) விண்ணப்பித்திருந்த நிலையில், வட்டாட்சியர் அதனை நிராகரித்தார். இதை எதிர்த்து சமீர் அகமது உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இவ்வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தபோது, கடந்த மார்ச் 9, 2024 அன்று முந்தைய தி.மு.க. அரசு அரசாணை 31-ஐ (G.O. Ms. No. 31) பிறப்பித்தது. அதன்படி, பிற்படுத்தப்பட்டோர் (BC), இதர பிற்படுத்தப்பட்டோர் (MBC), சீர்மரபினர் (DNC) மற்றும் பட்டியல் சாதி (SC) ஆகிய பிரிவுகளிலிருந்து இஸ்லாத்திற்கு மாறுபவர்கள், பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர் (BCM) பிரிவின் 3.5 சதவிகித இட ஒதுக்கீட்டுப் பலன்களைப் பெற முடியும். மேலும், தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர்களாக வகைப்படுத்தப்பட்டுள்ள 7 பிரிவுகளில் ஏதேனும் ஒன்றின் கீழ் சாதிச் சான்றிதழ் பெற்றுக்கொள்ளவும் இந்த அரசாணை வழிவகை செய்தது.

இதனையடுத்து, இந்த அரசாணையை அடிப்படையாகக் கொண்டு தனக்குச் சான்றிதழ் வழங்க வேண்டும் என சமீர் அகமது தரப்பில் வாதிடப்பட்டது.

இவ்வழக்கை விசாரித்த ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் பி.பி.பாலாஜி தலைமையிலான இரு நீதிபதிகள் அமர்வு, சான்றிதழ் வழங்க வேண்டும் அல்லது வழங்கக் கூடாது என்று தீர்ப்பளிப்பதற்குப் பதிலாக, மேற்கண்ட அரசாணையையே இரத்து செய்து இஸ்லாமியர்களுக்கு பச்சை துரோகத்தை இழைத்துள்ளது. மேலும், இஸ்லாமிய மதத்தின் மீது வக்கிரத்தைக் கக்கியுள்ளது. இத்தீர்ப்பு கடந்த ஜூன் 25-ஆம் தேதி அன்று வழங்கப்பட்டது.

இத்தீர்ப்பின் போது நீதிபதி  சுவாமிநாதன், “இஸ்லாத்திற்கு மதம் மாறிய பிறகு, மீண்டும் தங்களுக்குள் சாதி மற்றும் சமூகப் படிநிலைகள் இருப்பதாகக் கூறி, அதன் அடிப்படையில் இட ஒதுக்கீடு கோருவது திருக்குரானின் அடிப்படைப் போதனைகளுக்கே முற்றிலும் எதிரானது” என்று தெரிவித்திருப்பது சங்கித்தனத்தின் உச்சமாகும்.


படிக்க: உ. பி: ஆதிக்க சாதிவெறியர்களால் அடித்துக் கொல்லப்பட்ட தலித் இளைஞர்!


இந்தியாவில் பன்னெடுங்காலமாகப் பார்ப்பனியம் கோலோச்சியதன் விளைவாக, இந்து மதம் என்பதைக் கடந்து, இந்தியச் சமூகமே என்பது சாதிய சமூகமாக மாற்றப்பட்டுள்ளது. ஆதலால், மதம் மாறிய பிறகும் அம்மக்கள் மீதான சாதிய ஒடுக்குமுறைகளும் சமூகப் பிரிவினைகளும் தொடர்ந்த வண்ணமே உள்ளது. இந்தியா முழுவதுமே மதம் மாறிய கிறித்தவர்களும் இஸ்லாமியர்களும் தங்களின் முந்தைய சமூக அடையாளங்களைத் தொடர்ந்து சுமந்து கொண்டிருக்கிறார்கள்.

மேலும், ஒடுக்கப்பட்ட சமூகங்கள் சாதிப் பாகுபாட்டிலிருந்து விடுபடவே மதம் மாறுகின்றனர். எனினும், மதம் மாறுவதால் அவர்களின் கல்வி, சமூகம் என வரலாற்று ரீதியான பின்தங்கிய நிலை மாறிவிடுவதில்லை. பொருளாதார நிலையையும் உயர்வதில்லை. எனவே, மதம் மாறிய காரணத்திற்காக இட ஒதுக்கீட்டை மறுப்பது அப்பட்டமான அயோக்கியத்தனமாகும்.

அரசாணை 31 இரத்து செய்யப்பட்டிருப்பதன் மூலம் இனி பிற மதங்களிலிருந்து இஸ்லாத்திற்கு மாறுபவர்கள்  பி.சி.எம். பிரிவின் கீழ் வர முடியாது. அவர்கள் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் போட்டித் தேர்வுகளில் “பொதுப் பிரிவு” (Others / Open Competition) மூலமாக மட்டுமே போட்டியிட முடியும் என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. ஒருவர் இந்து மதத்திலிருந்து வெளியேறுவதன் மூலம் எஸ்.சி, டி.என்.சி., எம்.பி.சி., பி.சி. ஆகியப் பிரிவுகளின் கீழ் வழங்கப்பட்டு வந்த இட ஒதுக்கீட்டை இழப்பதுடன், இஸ்லாமிய மதத்தின் கீழும் இட ஒதுக்கீட்டைப் பெற முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது. அதாவது, இஸ்லாத்திற்கு மதம் மாறிய ஒடுக்கப்பட்ட மக்களின் இட ஒதுக்கீட்டு உரிமை முற்றிலுமாகப் பறிக்கப்பட்டுள்ளது.

மேலும், இத்தீர்ப்பு, அரசியலமைப்பு பிரிவு 25 வழங்கியுள்ள மதம் மாறும் அடிப்படை உரிமையைப் பறித்து, மதம் மாறினால் இட ஒதுக்கீட்டை இழக்க நேரிடும் என்ற அச்சத்தை உண்டாக்கி மதமாற்றத்தை முடக்கியுள்ளது. இந்தியாவில் “இந்து மதம்” எனும் ஒற்றை மதத்தை நிறுவத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. பாசிச கும்பல், பௌத்த, சீக்கிய மதங்களை விழுங்குவதையும் கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களை ஒழித்துக் கட்டுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. “தாய் மதத்திற்குத் திரும்புதல்” (கர்வாப்சி) என்ற பெயரில் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் தொடுக்கிறது. பாசிஸ்டுகளின் இந்த நிகழ்ச்சிநிரலுக்குச் சேவையாற்றுவதாகவே இத்தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

மறுபுறம், மதம் மாறிய இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீட்டை வழங்கும் அரசாணை இரத்து செய்யப்படும் என வழக்கு விசாரணையின் போது ஒரு மாதத்திற்கு முன்பே சுவாமிநாதன் தெரிவித்திருந்தார். ஆனால், சிறுபான்மையினருக்கான அரசு என்று மார்தட்டிக்கொள்ளும் த.வெ.க. அரசு கூடுதல் கால அவகாசம் (எட்டு வாரங்கள்) கேட்டு பதில் மனுத் தாக்கல் செய்யவில்லை. மேலும், வழக்கை கூடுதல் நீதிபதிகள் கொண்ட பெரிய அமர்வுக்கு (Larger Bench) மாற்றவோ, தலைமை நீதிபதியிடம் முறையிடவோ த.வெ.க அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இட ஒதுக்கீட்டைப் பாதுகாப்பதற்கான உரிய நடவடிக்கை எதையும் எடுக்காமல், தற்போது தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாகத் தெரிவித்திருப்பது அப்பட்டமான நாடகமும் இஸ்லாமிய மக்களுக்கு இழைக்கும் துரோகமுமாகும்.

குறிப்பாக, மேற்குவங்கத்தில், திரிணாமுல் காங்கிரசு ஆட்சியில் இஸ்லாமிய சமூகங்களுக்கு இட ஒதுக்கீடு அளித்து வெளியிட்ட அரசாணையை கொல்கத்தா உயர்நீதிமன்றம் அடுத்தடுத்து இருமுறை இரத்து செய்தது. இதற்கெதிராக மம்தா பானர்ஜி அரசு சட்டப் போராட்டங்களை மேற்கொண்டுவந்த நிலையில், தற்போது ஆட்சியைக் கைப்பற்றியுள்ள பா.ஜ.க. அரசு கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை நடைமுறைப்படுத்தி இஸ்லாமியர்களின் இட ஒதுக்கீட்டைப் பறித்துள்ளது; மம்தா அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவையும் திரும்பப் பெற்றுள்ளது.

இதனைப் போலத்தான், முந்தைய தி.மு.க. ஆட்சிக் காலத்தில் மதம் மாறிய இஸ்லாமியர்களுக்கு உத்தரவாதம் செய்யப்பட்ட இட ஒதுக்கீட்டு உரிமை நீதிமன்றத்தின் மூலம் பறிக்கப்பட்டதை தற்போதைய த.வெ.க. அரசு வேடிக்கை பார்க்கிறது. இது, பாசிச பா.ஜ.க. கும்பலின் திட்டத்தை கமுக்கமாக நடைமுறைப்படுத்துவதே ஆகும்.

குறிப்பாக, சங்கி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், பக்ரீத் பண்டிகை மற்றும் பிற நாட்களில் அனுமதிக்கப்பட்ட இடங்களைத் தவிர மற்ற இடங்களில் மாடு, கன்று பலியிடுவதற்குத் தடை விதிப்பது; கோயம்புத்தூர் அருகே காளப்பட்டியிலுள்ள மாரியம்மன் கோவிலுக்கு அருகில் தேவாலயம் கட்டுவதற்கு இடைக்கால தடை விதிப்பது; தற்போது, மதம் மாறிய இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீட்டைப் பறிப்பு என ஆர்.எஸ்.எஸ்-இன் நிகழ்ச்சிநிரலைத் தனது தீர்ப்புகளின் மூலம் தமிழ்நாட்டில் நிலைநாட்டி வருகிறார்.

அந்தவகையில், பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் சட்டம் இயற்றுவதன் மூலம் நிலைநாட்டப்படும் பாசிச நிகழ்ச்சிநிரல்கள், தமிழ்நாட்டில் இத்தீர்ப்புகளின் மூலம் நிலைநாட்டப்பட்டு வருகின்றன. இந்துராஷ்டிரத்திற்கான அடிக்கட்டுமானங்கள் இங்கு நிறுவப்படுகின்றன! எந்தவிதக் கொள்கை – கோட்பாடுமற்ற த.வெ.க. ஆட்சி இதற்குச் சாதமானதாகப் பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது.

எனவே, சங்கி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை நீக்கக் கோரியும், ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பலின் பாசிச திட்டங்களைக் கொள்ளைப்புற வழியாகத் திறந்துவிட்டு தமிழ்நாட்டு மக்களை பாசிசத்திற்குப் பழக்கப்படுத்தி வரும் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசிற்கு எதிராகவும் மக்கள் போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டும். தமிழ்நாட்டிற்கே உரிய பார்ப்பனிய எதிர்ப்பு மரபை உயர்த்திப் பிடித்து பாசிச கும்பலுக்கும் அதன் அடியாட்களுக்கும் எதிராகப் போரிட வேண்டும். அதன் மூலமே சிறுபான்மையின மற்றும் உழைக்கும் மக்களின் உரிமைகளை நிலைநாட்ட முடியும்.


ஆசாத்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க