வட இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ். கும்பலின் வன்முறை தாக்குதல்களால் இஸ்லாமியர்கள் கொல்லப்படுவது அதிகரித்துவரும் நிலையில், உத்தரப்பிரதேசத்தில் 25 வயது இஸ்லாமிய இளைஞரும் காவி கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
பா.ஜ.க. ஆளும் உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தை சேர்ந்தவர் 25 வயதான இஸ்லாமிய இளைஞர் அசீம். இவர் கடந்த ஜூலை 31 அன்று உத்தரப்பிரதேசத்திலிருந்து டெல்லிக்கு தன்னுடைய சரக்கு வண்டியுடன் வேலைக்குச் சென்றார். இவர் உத்தரப்பிரதேசத்தின் ஹாப்பூர் மாவட்டத்தில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக ‘கன்வாரியாக்கள்’ சென்ற ஆட்டோவின் மீது மோதிவிட்டார். (வட மாநிலங்களில் ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் இந்து கடவுளான சிவனுக்கு மேற்கொள்ளப்படும் கன்வார் யாத்திரையில் கலந்துகொள்வோர் “கன்வாரியாக்கள்” என்று அழைக்கப்படுகின்றனர். ஆனால், ஆர்.எஸ்.எஸ். சங்கப் பரிவாரக் குண்டர்கள் சிவ பக்தர்கள் என்ற போர்வையில் இஸ்லாமியர்களைத் தாக்குவது, இஸ்லாமியக் கடைகளைச் சூறையாடுவது போன்ற அட்டூழியங்களை அரங்கேற்றி வருகிறது)
ஆத்திரமடைந்த அக்கும்பல் அசீமை சம்பவ இடத்திலேயே கொடூரமாகத் தாக்கியுள்ளது. இதனால் பலத்த காயமடைந்த அசீம் அருகிலிருந்த மருத்துவமனைக்கும், பின்னர் உயர் சிகிச்சைக்காக அங்கிருந்து டெல்லி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு உணர்விழந்து முழு மயக்க நிலைக்கு (Coma stage) சென்றதால் அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை வழங்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி கடந்த ஆகஸ்ட் 4 அன்று அசீம் உயிரிழந்தார். தலையில் ஏற்பட்ட பலத்த காயமும் இரத்தக் கசிவும்தான் அவர் உயிரிழந்ததற்கான காரணம் எனப் பிரேதப் பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.
இத்தாக்குதலில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநர் ஃபர்மான் உட்பட அங்கிருந்த கன்வாரியா கும்பலில் உள்ள சிலரின் மீது போலீசு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது. ஆனால், இதுவரை போலிசு தரப்பிலிருந்து குற்றவாளிகள் யாரையும் கைது செய்யவில்லை. ஆனால், தன் மகனின் ஆட்டோ மீது அசீம் கொலைவெறியோடு இடித்ததாகவும், இதனால் ஃபர்மானின் உடலில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் ஆட்டோ ஓட்டுநர் ஃபர்மானின் தந்தை போலீசில் அளித்த புகாரை வைத்து, ஆகஸ்ட் 3 அன்று அசீம் மீது கொலை முயற்சி வழக்குப் பதிந்தது. இது உத்தரப்பிரதேச போலீசின் அப்பட்டமான கரசேவையைக் காட்டுகிறது.
இறந்த அசீமுக்கு திருமணமாகி ஒரு கைக்குழந்தை உள்ளது. மேலும், அவரின் தந்தை ஒரு வருடத்திற்கும் மேலாக நோயுற்று படுக்கையில் உள்ளார். அவரின் தந்தை இன்டெசார், “என் மகன் அடித்துக் கொல்லப்பட்டான். சரியாக என்ன நடந்தது என்று யாருக்குத் தெரியும்? எனக்குத் தேவையெல்லாம் நீதிதான். அவன்தான் எங்கள் குடும்பத்தின் ஒரே வருமானத்திற்கான ஆதாரம்” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். தற்போது அசீமின் குடும்பம் நிர்க்கதியாக நிற்கிறது.
படிக்க: கன்வார் யாத்திரையும் கும்பலாட்சியை நிறுவுதலும்
மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததிலிருந்து இஸ்லாமியர்கள் மற்றும் சிறுபான்மையினர் மீதான வன்முறைகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இஸ்லாமியர்கள் கொடூரமான முறையில் தாக்கப்படுவதும் அடித்தே கொலை செய்யப்படுவதும் இஸ்லாமியப் பெண்கள் பாலியல் ரீதியான வன்முறைகளுக்கு ஆளாவதும் அன்றாடம் அதிகரித்து வருகிறது.
அண்மையில் அமெரிக்க ஆராய்ச்சி குழு (India hate club) ஒன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவில் 2024 முதல் இஸ்லாமியர்களின் மீதான வெறுப்பு 74 சதவிகிதத்திற்கும் மேலாக அதிகரித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது. மேலும் இந்தியாவில் இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பு பிரச்சாரமும் பன்மடங்கு அதிகரித்திருப்பதாகத் தெரிவிக்கிறது.
இந்தியாவை இஸ்லாமியர்கள் அல்லாத நாடாக மாற்றுவதற்கும், ‘இந்து’ மதத்தை இந்தியாவில் ஒரே மதமாக மாற்றுவதற்கும் ஆர்.எஸ்.எஸ். குண்டர் படையுடன் இணைந்து பா.ஜ.க. அரசு தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. அதன் வெளிப்பாடாகத்தான் மாட்டுக்கறி வைத்திருந்ததாகக் கூறி இஸ்லாமியர்கள் அடித்துக் கொல்லப்படுவது, இஸ்லாமியர்களின் குடியிருப்பு பகுதிகள் புல்டோசர்களைக் கொண்டு இடிக்கப்படுவது, இஸ்லாமியர்களின் வழிபாட்டுத்தலங்கள் இடிக்கப்படுவது போன்ற பாசிச நடவடிக்கைகளைப் பார்க்க வேண்டியுள்ளது.
இஸ்லாமிய வெறுப்பு சிறு வயது முதலே அனைவரின் மனதிலும் திணிக்கப்படுகிறது. இஸ்லாமியர்களைச் சொந்த நாட்டிற்குள்ளேயே அன்றாடம் அஞ்சி வாழும் நிலைக்கு பாசிச பா.ஜ.க. கும்பல் தள்ளி வருகிறது. தற்போது நடந்த இச்சம்பவம் இந்தியாவில் தொடர்ந்து பரப்பபட்டுவரும் இஸ்லாமிய வெறுப்பின் வெளிப்பாடே ஆகும்.
எனவே இஸ்லாமிய வெறுப்பை இந்தியாவில் திணிக்கும் இந்த பா.ஜ.க – ஆர்.எஸ்.எஸ். சங்கப் பரிவார கும்பல் நாட்டை விட்டு முற்றிலுமாக ஒழித்துக்கட்டப்பட வேண்டும். இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக அனைத்து மக்களும் புரட்சிகர – ஜனநாயக சக்திகளும் ஒருங்கிணைந்து குரல் எழுப்ப வேண்டும்.
செய்தி ஆதாரம்: தி வயர்
![]()
மாயவள்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











