குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்தைத் தனியார் நிறுவனங்களிடம் தாரைவார்க்கும் பாசிச மோடி அரசு!

முக்கியத்துவம் வாய்ந்த ஏவுதள நிலையத்தை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைப்பது என்பது விண்வெளித்துறையை வியாபாரமயமாக மாற்றி, கார்ப்பரேட் பெருமுதலாளிகள் இலாபம் கொழிக்க வழிவகுக்குமே அன்றி, அது இந்திய மக்களின் முன்னேற்றத்திற்கும், பாதுகாப்பிற்கும் எந்த வகையிலும் பயன்படப் போவதில்லை என்பதே நிதர்சனமான உண்மை.

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரப்பட்டினத்தில் ரூ.986 கோடி மதிப்பீட்டில், 2,233 ஏக்கர் பரப்பளவில் புதிய ராக்கெட் ஏவுதள மையம் ஒன்றை ஒன்றிய அரசு உருவாக்கி வருகிறது. இந்திய மக்களின் வரிப்பணத்தில், தமிழ்நாட்டு மக்களின் நிலத்தில் உருவாக்கப்படும் இந்த ராக்கெட் ஏவுதளத்தின் உள்கட்டமைப்பு, அதன் இயக்கம் மற்றும் பராமரிப்பு ஆகிய பொறுப்புக்களைத் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைத்திருக்கிறது ஒன்றிய பாசிச மோடி அரசு.

பா.ஜ.க. தலைமையிலான ஒன்றிய அரசு “தனியார் பங்களிப்பு” என்ற பெயரில் தொடர்ந்து நாட்டின் முக்கியமான பொதுத்துறை நிறுவனங்களையும், இயற்கை வளங்களையும், அடிப்படை கட்டமைப்புகளையும் படிப்படியாகத் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் வேலையைச் செய்து கொண்டு வருகிறது. அந்த வரிசையில், விண்வெளித் துறையையும் தனியார்மயப்படுத்தி வருகிறது.

விண்வெளி ஆராய்ச்சி என்பது வெறும் வணிகம் சார்ந்த தொழில் மட்டும் அல்ல.

அது பல விஞ்ஞானிகளின் உழைப்பாலும், பொதுமக்களின் வரிப்பணத்தாலும் வளர்ந்து நிற்கும் முக்கியமான துறையாகும். மேலும், இஸ்ரோ உருவாக்கிய தொழில்நுட்ப வளாகங்கள், ஆய்வகங்கள், ஏவுதளங்கள் ஆகிய அனைத்தும் நாட்டின் பொதுச்சொத்துகளாகும். அவற்றைத் தனியார் நிறுவனங்களின் இலாப நோக்கத்திற்குப் பயன்படுத்த அனுமதிப்பது என்பது ஒட்டுமொத்த விண்வெளித்துறையும் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் மிக ஆபத்தான நடவடிக்கையே.

மேலும் குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் அமைந்துள்ள இடம் (8.3° N) புவியியல் ரீதியாக மிகவும் முக்கியமானது. நிலநடுக்கோட்டிற்கு (Equator) அருகாமையில் இருப்பதால் தெற்கு நோக்கி ராக்கெட்டுகளை ஏவுவதற்கு ஏற்றதாகக் கருதப்படுகிறது. இதன் மூலம் ஏவுதல்களின் செலவு மற்றும் நேரத்தைக் குறைக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ஏவுதள நிலையத்தை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைப்பது என்பது விண்வெளித்துறையை வியாபாரமயமாக மாற்றி, கார்ப்பரேட் பெருமுதலாளிகள் இலாபம் கொழிக்க வழிவகுக்குமே அன்றி, அது இந்திய மக்களின் முன்னேற்றத்திற்கும், பாதுகாப்பிற்கும் எந்த வகையிலும் பயன்படப் போவதில்லை என்பதே நிதர்சனமான உண்மை.

நாட்டின் வளர்ச்சி என்ற பெயரில் மக்களின் நிலங்களைப் பறித்து ஏவுதளம் அமைக்கும் ஒன்றிய மோடி அரசு, அதை நயவஞ்சகமாகத் தனியாருக்கு அளிப்பது என்பது இந்திய அரசின் தனியார்மயக் கொள்கையின் வெளிப்பாடு ஆகும். எனவே தனியார்மயக் கொள்கைகளை மிகத் தீவிரமாக அமல்படுத்தும் பாசிச மோடி அரசை வீழ்த்தியாக வேண்டும். அதுதான் இந்திய மக்களையும், வளங்களையும் பாதுகாக்க நமக்கு இருக்கும் ஒரே வழியாகும்.

ஆகவே, உழைக்கும் மக்களின் வரிப்பணத்தில் உருவான ராக்கெட் ஏவுதளத்தைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதை உழைக்கும் மக்கள், ஜனநாயக சக்திகள் அனைவரும் ஒன்றுசேர்ந்து கண்டிக்க வேண்டும். அதோடு, தொடர்ந்து பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் அரசின் கொள்கையை முறியடிக்க பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசைக் கட்டியமைக்க வேண்டும்!

பதிவு
மக்கள் அதிகாரக் கழகம்,
நெல்லை – தூத்துக்குடி மாவட்டங்கள்.
9385353605

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க