அசாமில் பழங்குடியின மக்களின் நில உரிமைக்காகப் போராடிவந்த பழங்குடியின ஆர்வலர் பிரணாப் டோலியை அம்மாநில பா.ஜ.க. அரசு கைது செய்து ஒடுக்கி வருவதற்கு சர்வதேச அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
அசாம் மாநிலத்தில் கசிரங்கா தேசியப் பூங்காவிற்கு அருகிலுள்ள இங்கிள் பத்தார் பகுதியில் “ஹயாட்” சொகுசு ஹோட்டலை அமைக்க “அசாம் சுற்றுலா மேம்பாட்டுக் கழகம்” திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்திற்காக, பழங்குடியின மக்களின் ஒப்புதல் இன்றியும் எந்தவொரு இழப்பீடும் அளிக்காமலும் அம்மக்களின் நிலங்களை 99 ஆண்டுகளுக்கு கார்ப்பரேட்டுகளுக்கு குத்தகைக்கு தாரைவார்த்துள்ளது, அசாம் பா.ஜ.க. அரசு.
மேலும், அப்பகுதியில் பரம்பரை பரம்பரையாக விவசாயம் செய்து வாழ்ந்து வந்த 45-க்கும் மேற்பட்ட பழங்குடியின – தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் குடும்பங்களை அசாம் அரசு வலுக்கட்டாயமாக வெளியேற்றியுள்ளது; அம்மக்களின் விவசாய நிலங்களையும் கால்நடை மேய்ச்சல் நிலங்களையும் அரசு மற்றும் தனியார் – கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆக்கிரமித்துள்ளன.
மேலும், கசிரங்கா தேசியப் பூங்கா என்பது ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்கள், யானைகள் மற்றும் புலிகள் வாழும் சுற்றுச்சூழல் உணர்திறன் மிக்க பகுதியாகும். இங்கு ஐந்து நட்சத்திர நட்சத்திர விடுதிகள் மற்றும் சுற்றுலா திட்டங்கள் அமைந்தால், காட்டுயிர்களின் இயல்பான வழித்தடங்கள் துண்டிக்கப்பட்டு, வனவிலங்கு-மனித மோதல்கள் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
ஆகவே, மக்களின் வாழ்வாதாரத்தையும் இயற்கை சுற்றுச்சூழலையும் அழித்து பழங்குடியின மக்களின் நிலங்களை கார்ப்பரேட்களுக்குத் தாரைவார்க்கும் இந்த நாசகரத் திட்டத்தை எதிர்த்து “கசிரங்கா நில மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்புக் குழுவின்” (GKLHRPC) ஒருங்கிணைப்பாளரான பழங்குடியின ஆர்வலர் பிரணாப் டோலி போராட்டம் நடத்தினார்.
இதனைச் சகித்துக்கொள்ள முடியாத அசாம் பா.ஜ.க. அரசு, டோலி மீது பொய் வழக்கு பதிந்து கடந்த ஜூலை 12 அன்று குவகாத்தியில் வைத்து அவரை வலுக்கட்டாயமாகக் கைது செய்தது; கைது செய்யப்பட்ட டோலியை ஏழு நாட்கள் கஸ்டடியில் வைத்து போககாட் போலீசு சித்திரவதைக்கு உள்ளாக்கியது. இத்திட்டத்திற்கு எதிராகப் போராடிய மேலும் நான்கு சமூக ஆர்வலர்களையும் அசாம் போலீசு கைது செய்தது.
சமூக ஆர்வலர்களின் கைதுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், கோலாகாட் கூடுதல் அமர்வு நீதிமன்றம், “சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பழங்குடியினரின் வாழ்வாதாரம் சம்பந்தப்பட்ட மக்கள் போராட்டங்களை ஒடுக்கக் குற்றவியல் சட்டத்தைப் பயன்படுத்தக் கூடாது” எனக் கூறி, கடந்த ஜூலை 29 அன்று சமூக ஆர்வலர்களுக்கு பிணை வழங்கி உத்தரவிட்டது. ஆனால், அசாம் அரசு டோலிக்கு மட்டும் பிணை வழங்காமல், மறுநாளே (ஜூலை 30, 2026) அவர் மீது ‘தேசிய பாதுகாப்புச் சட்ட’த்தின் கீழ் புதிய தடுப்பு ஆணையைப் பிறப்பித்து அவரை சிறையிலேயே அடைத்தது.
இது, டோலியை வெளியே விடாமல் சிறையிலடைத்து ஒடுக்கிவிட வேண்டுமென்ற அசாம் பா.ஜ.க. அரசின் சதித்திட்டத்தை அம்பலப்படுத்துகிறது.
படிக்க: பஸ்தர்: பழங்குடி செயற்பாட்டாளர் ரகு மிடியாமி என்.ஐ.ஏ-வால் கைது
இந்நிலையில்தான், பா.ஜ.க அரசின் இந்த ஒடுக்குமுறைக்கு சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. “சர்வைவல் இன்டர்நேஷனல்” (Survival International), “பழங்குடி விவகாரங்களுக்கான சர்வதேசப் பணிக்குழு” (IWGIA – International Work Group for Indigenous Affairs), “நில உரிமைகளுக்கான சர்வதேசக் கூட்டணி” (ILC) மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்புப் பிரதிநிதிகள் உட்படப் பல சர்வதேச அமைப்புகளும், அமெரிக்காவைச் சேர்ந்த கல்வியாளர்களும் பிரணாப் டோலியின் கைதை “அமைதியான முறையில் மக்கள் போராட்டங்களை முன்னெடுப்போரின் குரலை ஒடுக்கும் முயற்சி” என்று விமர்சித்துள்ளனர். எவ்வித பிடியாணையும் (Warrant) இன்றி அவர் கைது செய்யப்பட்டதைச் சுட்டிக்காட்டியுள்ள இந்த அமைப்புகள், அவர் மீதான பொய் வழக்குகளையும் புனையப்பட்ட குற்றச்சாட்டுகளையும் உடனடியாகத் திரும்பப் பெற்று, அவரை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்குக் கோரிக்கை விடுத்துள்ளன.
குறிப்பாக, கசிரங்கா தேசிய பூங்கா பகுதியிலிருந்து தற்போது வெளியேற்றப்பட்டுள்ள பழங்குடி மக்களுக்கு எதிராக அரசால் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறை மற்றும் கொடூரங்கள் என்பது நீண்ட காலந்தொட்டு இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. மக்களைக் கண்டதும் சுடும் பயங்கரவாதத்தை அசாம் போலீசு அங்கு பல ஆண்டுகளாகக் கட்டவிழ்த்துவிட்டு வருவதால், கடந்த 20 ஆண்டுகளில் 106-க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் போலீசால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
குறிப்பாக, பழங்குடியின மக்கள் வாழும் நிலப்பகுதியை கார்ப்பரேட்டுகளுக்கு படையலிட வேண்டும் என்பதே இந்த ஒடுக்குமுறைகளுக்கான முக்கியக் காரணமாக உள்ளது. அதன் காரணமாகவே, மக்களுக்காகக் குரல் கொடுக்கும் செயற்பாட்டாளர்களை பாசிச கும்பல் ஒடுக்கி வருகிறது.
சான்றாக, கடந்த 2021-இல் அசாமில் உள்ள கர்பி ஆங்லாங் தன்னாட்சி மன்றத்தில் 1,000 மெகாவாட் சூரிய மின் பூங்கா திட்டத்திற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது; ஆசிய வளர்ச்சி வங்கி இத்திட்டத்திற்கு 434.25 மில்லியன் டாலர் கடனை வழங்கியது. இத்திட்டத்திற்காகப் பழங்குடியின மக்களின் நிலங்களும் வாழ்வாதாரமும் பாசிச மோடி அரசால் வலுக்கட்டாயமாகப் பறிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் உறுதியாகப் போராடி வந்தனர். ஆர்வலர் பிரணாப் டோலி “கர்பி ஆங்லாங் சூரிய மின் திட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் உரிமைக் குழு” (KASPAPPC) என்ற அமைப்பைத் தொடங்கி, ஆசிய வளர்ச்சி வங்கியின் ஆலோசகர்கள் மற்றும் அரசு அதிகாரிகளால் மதிப்பீடு நடத்தப்பட்டதில் உள்ள பல்வேறு முறைகேடுகளை அம்பலப்படுத்தி நிலக் கையகப்படுத்தலை எதிர்த்து வந்தார். மக்கள் எதிர்ப்பின் காரணமாக இத்திட்டத்திற்காக வழங்கிய கடனை வேறுவழியின்றி ஆசிய வளர்ச்சி வங்கி இரத்து செய்ததது.
இவ்வாறு, பழங்குடியின மக்களின் நில உரிமைக்காகத் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்துப் போராடி வருவதாலேயே அசாம் பா.ஜ.க. அரசு பிரணாப் டோலியை சிறையில் வைத்தே ஒடுக்க முயல்கிறது. இது பாசிச பா.ஜ.க. கும்பலின் அப்பட்டமான கார்ப்பரேட் சேவகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
குறிப்பாக, அதானி உள்ளிட்ட கார்ப்பரேட் முதலாளிகளின் நாசகரத் திட்டங்களுக்காக பழங்குடியின மக்களை விரட்டியடிப்பதையும் முழு மாவட்டத்தைக் கூட கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்ப்பதையும் அசாம் பா.ஜ.க. அரசு வழக்கமாகக் கொண்டுள்ளது.
பா.ஜ.க. கும்பலின் இந்த பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராகப் போராட வேண்டியதும் அசாம் பழங்குடியின மக்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்க வேண்டியதும் நம் அனைவரின் கடமையாகும்.
![]()
வேம்பு
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











