சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தரில் ஒன்றிய, மாநில பாஜக அரசுகளின் இராணுவமயமாக்கல் மற்றும் சட்டவிரோத படுகொலைகளுக்கு எதிராகப் போராடும் 24 வயதேயான இளைஞர் ரகு மிடியாமி (Raghu Midiyami) தேசிய புலனாய்வு முகமையால் (என்.ஐ.ஏ) கைது செய்யப்பட்டுள்ளார்.
ரகு மிடியாமி, தனக்கு 20 வயது ஆவதற்கு முன்னரே, அவரது வயதையொத்த நண்பர்களுடன் இணைந்து பஸ்தர் பிராந்தியத்தின் அண்மை வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த, தற்போது வரை நடந்து கொண்டிருக்கும் ஒரு போராட்டத்தை வழிநடத்தியவர் ஆவார்.
பஸ்தர் பிராந்தியத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் சி.ஆர்.பி.எஃப் முகாம்கள் பெருமளவு நிறுவப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தெற்கு சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் உள்ள சில்கர் கிராமத்தில் மே 2021 இல் போராட்டம் தொடங்கியது. இப்போராட்டத்தை ஒடுக்க ஆயுதப்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், 14 வயது சிறுவன் உட்பட மூன்று பழங்குடி மக்கள் கொல்லப்பட்டனர்.
அரசுப் படையின் இந்த அட்டூழியங்களை எதிர்த்தும், கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவான மாநில அரசின் கொள்கைகள் மற்றும் மக்கள் மீதான படுகொலைகளைக் கண்டித்தும் போராட்டம் தொடங்கப்பட்டது. இந்தப் போராட்டங்கள், செய்தியாளர் சந்திப்புகள் ஆகியவற்றில் போராட்டத்தின் முகமாக மிடியாமி இருந்தார். அதிகார வர்க்கத்துடனான பேச்சுவார்த்தையிலும் முன்னணியாகப் பங்கேற்றார்.
இந்நிலையில்தான், பிப் 27 அன்று, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) அமைப்புடன் மிடியாமிக்கு தொடர்பு இருப்பதாகக் கூறி, என்.ஐ.ஏ அவரைக் கைது செய்துள்ளது.
சுக்மா மாவட்டத்தில் உள்ள பர்லகட்டா கிராமத்தைச் சார்ந்த மிடியாமி, மூல்வாசி பச்சாவோ மஞ்ச் (MBM) என்ற அமைப்பின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவர். இது அரசாங்கத்தின் அடக்குமுறைகளை எதிர்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்ட மக்கள் அமைப்பாகும். மனித உரிமைகள் அமைப்பான மக்கள் சிவில் உரிமைக் கழகம் (PUCL) கடந்த காலங்களில் எம்.பி.எம் அமைப்பு மக்களுக்காகச் செய்த பணிகளைச் சுட்டிக்காட்டி, போலியான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் மிடியாமி கைது செய்யப்பட்டுள்ளதைக் கண்டித்துள்ளது.
படிக்க: கனிமவளக் கொள்ளைக்காக பழங்குடிகள் அமைப்பைத் தடை செய்த சத்தீஸ்கர் அரசு!
மேலும், PUCL ன் அறிக்கை, “எம்.பி.எம் கடந்த மூன்று ஆண்டுகளாக பஸ்தர் பகுதி முழுவதும் 30 ஜனநாயக ரீதியான, அமைதி வழிப் போராட்டங்களுக்குத் தலைமை தாங்கி வருகிறது” எனவும் குறிப்பிடுகிறது. ரகு மிடியாமி, எம்.பி.எம் அமைப்பின் வழியாக, வலுவான இளம் பட்டாளத்துடன் இணைந்து, PESA [The Provisions of the Panchayats (Extension to scheduled Areas) Act] மற்றும் FRA (Recognition of Forest Rights Act, 2006) ஆகிய சட்டங்களை பஸ்தரில் செயல்படுத்த வேண்டும் என்பதற்காக, சட்டரீதியாகப் போராடி வருவதையும் அந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.
இரண்டு வருடங்களுக்கு முந்தைய ஒரு வழக்கில் இணைத்து மிடியாமி கைது செய்யப்பட்டுள்ளார். கஜேந்திர மாத்வி மற்றும் லட்சுமணன் குஞ்சம் ஆகிய இரண்டு இளைஞர்களை, தடை செய்யப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகள் (6 லட்சம் ரூபாய்) வைத்திருந்ததாகவும், மாவோயிஸ்ட் கட்சியுடன் தொடர்புடைய துண்டுப் பிரசுரங்களை வைத்திருந்ததாகவும் கூறி, மே 5, 2023 அன்று சத்தீஸ்கர் போலீசு கைது செய்தது. பின்னர் இந்த வழக்கு என்.ஐ.ஏ வசம் ஒப்படைக்கப்பட்டது.
எஃப்.ஐ.ஆரில் எம்.பி.எம் மற்றும் கிராந்திகரி கிசான் சபா (KKS) இரண்டு அமைப்புகளும் மாவோயிஸ்ட் கட்சியின் முன்னணி அமைப்புகள் எனவும், இதில் மாத்வி தொடர்பு வைத்திருந்ததாகவும் கூறப்பட்டிருந்தது. அக்டோபர் 2024 இல் எம்.பி.எம் தடை செய்யப்பட்டது. மேற்கண்ட வழக்கில் இணைத்து மிடியாமி கைது செய்யப்பட்டுள்ளார்.
“2023 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படும் எந்த ஆவணத்திலும் மிடியாமியின் பங்கு இருந்ததாக எஃப்.ஐ.ஆரிலோ, அதற்குப் பிறகான விசாரணையிலோ எங்கும் குறிப்பிடப்படவில்லை” என்று மிடியாமியின் வழக்கறிஞர் ஷாலினி கேரா கூறுகிறார்.
படிக்க: சத்தீஸ்கர்: அதானியின் நலனுக்காக ஹஸ்தியோவின் பழங்குடி மக்களைத் தாக்கும் பாசிச பா.ஜ.க அரசு
பழங்குடி மக்களைக் கொடூரமாக ஒடுக்கி, அவர்களின் வாழ்விடத்திலிருந்து விரட்டுவதற்காக நிறுவப்பட்டுள்ள ஆயுதப்படை முகாம்கள் மற்றும் அரசாங்கத்தின் கார்ப்பரேட் திட்டங்களை பஸ்தர் பிராந்தியம் முழுவதும் உள்ள ஒட்டுமொத்த மக்களும் எதிர்க்கின்றனர். ஆயுதப் படையினரின் மனித உரிமை மீறல்கள் குறித்து எண்ணற்ற ஆதாரங்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
மக்களை ஒருங்கிணைத்து, அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள பெயரளவிலான உரிமையின் அடிப்படையில் போராடியதுதான் மிடியாமி கைது செய்யப்பட்டதற்கு ஒரே காரணமாகும். இப்பிராந்தியத்தில் சட்டரீதியாகப் போராடுவதே தடை செய்யப்பட்ட ஒன்றாக உள்ளது. அவ்வாறு போராடுபவர்கள் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ் தொடர்ச்சியாகக் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் பிஜப்பூர் போலீசால் மற்றொரு எம்.பி.எம் தலைவரான 25 வயதான சுனிதா பொட்டம் (Suneeta Pottam) கைது செய்யப்பட்டார். பின்னர் பொய்க்குற்றச்சாட்டில் 12 வழக்குகளில் இணைக்கப்பட்டார். பஸ்தர் பகுதியில் நடத்தப்படும் “என்கவுண்டர்களுக்கு” இணையாக இளம் பழங்குடி மக்களின் தலைவர்கள் கைது செய்யப்படுவதும் நடந்து கொண்டிருக்கிறது.
உண்மையில் எம்.பி.எம்-இன் மீது எந்தக் குற்றச் செயலையும் சத்தீஸ்கர் அரசு காரணமாகக் காட்டவில்லை. மாறாக, “மாநில மற்றும் மத்திய அரசுகளின் ‘முன்முயற்சிகளை’ அந்த அமைப்பு எதிர்த்து வருவதாகவும், ஆயுதப்படை முகாம்களை நிறுவுவதை எதிர்ப்பதன் மூலம் பஸ்தர் பகுதியில் ’வளர்ச்சித் திட்டங்களுக்கு’ தடையாக இருப்பதாகவும்” காரணம் காட்டுகிறது.
பழங்குடி மக்களின் காடுகளை அழித்து, அவர்களை நாடோடிகளாக விரட்டி, அதானி – அம்பானி – அகர்வால் கும்பலுக்குப் படையல் வைப்பதே வளர்ச்சி. இதை எதிர்த்தால் கொடுங்குற்றம் என்பதே நடைமுறையில் உள்ள சட்டம்.
அய்யனார்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram