சத்தீஸ்கர்: அதானியின் நலனுக்காக ஹஸ்தியோவின் பழங்குடி மக்களைத் தாக்கும் பாசிச பா.ஜ.க அரசு

அதானி – அம்பானி – அகர்வால் போன்ற கார்ப்பரேட்களின் கனிமவளக் கொள்ளைக்காக மரங்களை வெட்டுவதையும் பழங்குடி மக்களைக் காடுகளிலிருந்து விரட்டும் நடவடிக்கையையும் பாசிச பா.ஜ.க அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

0

த்தீஸ்கரின் ஹஸ்தியோ காட்டில் வியாழக்கிழமை (அக்டோபர் 17) அன்று நிலக்கரி சுரங்கத்திற்காக மரங்களை வெட்ட அதிகாரிகள் முயன்றனர்.  பழங்குடி மக்கள் அவர்களைத் தடுத்ததால் அங்கு மோதல் ஏற்பட்டது. அதானியின் நிறுவனத்திற்கு வழங்கப்படுவதற்காக இங்கு நிலக்கரி எடுக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த மோதலில் கிராமவாசிகள் பலர் காயமடைந்தனர். 13 போலீஸ் அதிகாரிகள், துணை ஆட்சியர் மற்றும் வருவாய்த் துறை ஊழியர் ஒருவர் என சில அதிகாரிகளும் காயமடைந்ததாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ராஜஸ்தான் ராஜ்ய வித்யுத் உத்பதன் நிகாம் லிமிடெட் (Rajasthan Rajya Vidyut Utpadan Nigam Limited – RRVUNL) நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட பார்சா நிலக்கரி திட்டத்தின் (Parsa coal block project) ஒரு பகுதியாக சர்குஜா (Surguja) மாவட்டத்தில் உள்ள ஃபதேபூர் (Fatehpur) மற்றும் சாலி (Sali) கிராமங்களுக்கு அருகே மரங்களை வெட்டத் திட்டமிட்டிருந்தனர். ஆனால், அக்கிராமங்களைச் சேர்ந்த பழங்குடி மக்கள் மரங்களை வெட்டுவதற்குக் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

ஆறு கிராமங்களில் உள்ள சுமார் 5,000 மரங்களை அகற்ற வேண்டும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதிகாரிகள் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதைத் தடுக்க பழங்குடி மக்கள் முந்தைய நாள் இரவே அந்த இடத்தில் கூடினர். இப்பழங்குடி மக்களை ஒடுக்க சுமார் 400 போலீசார் மற்றும் வனத்துறை பணியாளர்கள் நிறுத்தப்பட்டனர்.

போலீசின் தடியடியை பழங்குடி மக்கள் அம்புகளைக் கொண்டு எதிர்கொண்டனர். மக்களுக்கு ஏற்பட்ட காயங்கள் குறித்து விரிவான தகவல் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. போலாராம் ராஜ்வாடே என்ற போலீஸ் அதிகாரி, அம்பு தாக்கியதில் காலில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக ராய்ப்பூருக்கு கொண்டு செல்லப்பட்டார் என்பது மட்டும் அரசால் செய்தியாக்கப்பட்டுள்ளது.

மக்களின் எதிர்ப்பால் மரம் வெட்டும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால், ‘பாதுகாப்பு’ப் படையினர் இன்னும் அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.


படிக்க: பஸ்தர்: பழங்குடியினர் மீது பயங்கரவாத தாக்குதல்களை ஏவும் ராணுவ முகாம்கள்


பழங்குடியின மக்களுக்கு எதிராக பா.ஜ.க அரசு பலபிரயோகம் செய்வதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். “ஹஸ்தியோ ஆரண்யாவில் போலீசு வன்முறையைப் பயன்படுத்தி பழங்குடியினரின் காடு மற்றும் நிலத்தை வலுக்கட்டாயமாக அபகரிக்க முயல்வது பழங்குடியினரின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகும். சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சியின் போது, ஹஸ்தியோ காட்டை அழிக்கக்கூடாது என்று சட்டமன்றத்தில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது – ‘ஒருமித்த கருத்து’ என்பது எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைந்த ஒப்புதல், அதாவது பா.ஜ.க-வும் அளித்த ஒப்புதல். ஆனால், அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன், இந்த முன்மொழிவையோ ஹஸ்தியோவின் பூர்வக்குடிகளின் அவல நிலையையும் உரிமைகளையும் அவர்கள் நினைவில் கொள்ளவில்லை,” என்று ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் எழுதியுள்ளார்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியும் “அதானி ஜியின் சுரங்கங்கள் செயல்படுவதற்காக பல நூற்றாண்டுகளாக காடுகளின் உரிமையாளர்களாக இருந்த பழங்குடியினர் வெளியேற்றப்படுகிறார்கள்” என்று கூறியுள்ளார்.

அதானி – அம்பானி – அகர்வால் போன்ற கார்ப்பரேட்களின் கனிமவளக் கொள்ளைக்காக மரங்களை வெட்டுவதையும் பழங்குடி மக்களைக் காடுகளிலிருந்து விரட்டும் நடவடிக்கையையும் பாசிச பா.ஜ.க அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இதனை எதிர்த்து பழங்குடி மக்களும் உறுதியாகப் போராடி வருகின்றனர்.

போராடும் பழங்குடி மக்களை பாசிச பா.ஜ.க அரசு மாநில அரசின் துணைகொண்டு கடுமையாக ஒடுக்கி வருகிறது. மக்களை ஒடுக்குவதற்காக சத்தீஸ்கரின் பல்வேறு பகுதிகளில் போலீசு மற்றும் ராணுவத்தைக் கொண்டு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் “மாவோயிஸ்ட் எதிர்ப்பு நடவடிக்கை” என்ற பெயரில் இந்த முகாம்கள் அமைக்கப்படுகின்றன.

பழங்குடி மக்களின் வாழ்க்கை முறை மற்றும் வாழ்வாதாரம் அனைத்தும் காடுகளைச் சார்ந்தே உள்ளது. காடுகளை விட்டு பழங்குடி மக்களை வெளியேற்றுவது என்பது அவர்களை இனப்படுகொலை செய்வதற்கு ஒப்பாகும்.

எனவே, ஜனநாயக உணர்வுள்ள அனைவரும் பழங்குடி மக்களை ஆதரித்து அவர்களுக்குத் துணைநிற்க வேண்டும்.


பொம்மி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க