கேரளம்: புலம்பெயர் தொழிலாளி கும்பல் படுகொலையும் வேரூன்றத் துடிக்கும் பாசிச கும்பலும்

கேரளத்தில் வேரூன்றுவதற்கு பல்வேறு முனைகளில் முயற்சித்துவரும் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. பாசிச கும்பல், கும்பல் படுகொலைகளை அதற்கான ஆயுதமாகக் கையில் எடுத்துள்ளது. குறிப்பாக, ‘வங்கதேசக் குடியேறிகள்’ எனப் பொய் பிரச்சாரம் செய்து உழைக்கும் மக்களைப் பிரித்தாளத் துடிக்கிறது.

த்தீஸ்கர் மாநிலம் சக்தி மாவட்டத்தைச் சேர்ந்த 31 வயதான தலித் இளைஞர் ராம் நாராயண் பாகேல், புலம்பெயர்த் தொழிலாளியாக கேரளத்திற்குக் குடிபெயர்ந்தார். இவர் கடந்தாண்டு டிசம்பர் 17 அன்று, கேரளத்தின் பாலக்காடு மாவட்டம் வளையார் பகுதியில் ஒரு இந்துத்துவக் கும்பலால் அடித்துப் படுகொலை செய்யப்பட்டார்.

எந்தவொரு ஆதாரமும் இன்றி சந்தேகத்தின் பேரில் அவர் மீது திருட்டுப் பழி சுமத்தி, ‘வங்கதேசக் குடியேறி’ என்று முத்திரை குத்தி காவி கும்பல் அவரை அடித்தே கொன்றது. மேலும், அவரை கடுமையாகத் தாக்கியதையும் தகாத வார்த்தைகளால் திட்டி அவமானப்படுத்தியதையும் காணொளியாகப் பதிவு செய்து வெளியிட்டது.

அப்போதைய கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், “இது ஒரு முற்போக்கான சமூகத்தில் நிகழும் இயல்புக்கு மாறான செயல்” என்று இப்படுகொலையைக் கண்டித்தார். புலம்பெயர்த் தொழிலாளர்களை இலக்காகக் கொண்ட, வெறுப்பு நிறைந்த மதவாதக் கருத்துக்களை உள்ளூர் அரசியல்வாதிகள் பலர் பரப்பி வருவதாக அமைச்சர்கள் குற்றஞ்சாட்டினர்.

ஆனால், பாகேலை தாக்கிக் கொலை செய்த இந்துத்துவக் கும்பல் மீது கேரள போலீசு நடவடிக்கை எடுக்காமல் கால தாமதம் செய்து வந்தது. பொதுமக்களின் தொடர்ச்சியான அழுத்தத்திற்குப் பிறகு வேறுவழியின்றி மேலோட்டமாக நடவடிக்கை எடுத்தது. சிறப்பு அரசு வழக்கறிஞரின் நியமனம் உள்ளிட்டு குடும்பத்தினர் கோரிய நடவடிக்கைகளை எடுக்காமல் வேண்டுமென்றே காலதாமதம் செய்து காவி கும்பலுக்குச் சாதகமாக போலீசு செயல்பட்டது. தொடர் போராட்டங்கள் மற்றும் முறையீடுகளுக்கு பிறகே பாரதிய நியாய சன்ஹிதாவின் கீழ் கும்பல் தாக்குதல் பிரிவில் வழக்குப் பதிந்தது.

இவ்வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க ஒப்புதல் அளித்தது. “மாநிலத்தில் இதுபோன்ற கொடூரமான இனவெறி தாக்குதல் மீண்டும் நிகழாமல் இருப்பதற்கு, கொலைவெறி தாக்குதல் நடத்திய கும்பலின் பக்கம் நிற்காமல் பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நின்று விசாரணையை நேர்மையாகவும் பிழையின்றியும் நடத்தப்பட வேண்டும். அதனைக் கேரள அரசும் போலீசும் உறுதி செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தியது. நீதிமன்றத்தில் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் உள்ள அனைத்துக் குறைபாடுகளையும் சரிசெய்து, சட்டப்படி சரியான முறையில் ஒரு புதிய குற்றப்பத்திரிகையைக் கேரள போலீசு விரைவில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தது.

கடந்த ஜூலை 14 அன்று இவ்வழக்கு தொடர்பாக திருச்சூரில் செய்தியாளர் சந்திப்பு ஒன்று நடைபெற்றது. அதில் போலீசு தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் குறைபாடுகள் இருப்பதாக நீதிமன்றம் கண்டறிந்தது. விசாரணையில் ஏற்பட்ட குறைபாடுகள் குறித்தும் போலீசு தனது பணியிலிருந்து தவறியதையும் நீதிமன்றம் மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டியதாக பாகேல் குடும்பத்தினர் ஊடகங்களிடம் தெரிவித்தனர்.

இடது ஜனநாயக முன்னணி (LDF) அரசாங்கம் ஆரம்பத்தில் அக்குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்குவதாக உறுதியளித்த நிலையில், அத்தொகையை ரூ.25 லட்சமாக உயர்த்த வேண்டும் என கேரள உரிமை அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. மேலும், குற்றத்தில் ஈடுபட்ட ஒவ்வொருவர் மீதும் வழக்குத் தொடரப்பட்டு, சட்டப்படி அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் முற்போக்கு அமைப்புகளும் குடும்பத்தினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கேரளத்தில் வேரூன்றுவதற்கு பல்வேறு முனைகளில் முயற்சித்துவரும் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. பாசிச கும்பல், கும்பல் படுகொலைகளை அதற்கான ஆயுதமாகக் கையில் எடுத்துள்ளதையே இச்சம்பவம் காட்டுகிறது. குறிப்பாக, ‘வங்கதேசக் குடியேறிகள்’ எனப் பொய் பிரச்சாரம் செய்து உழைக்கும் மக்களைப் பிரித்தாளத் துடிக்கிறது.

இத்தகைய தாக்குதல்கள் நிகழும் போது அதற்குக் கண்டனம் தெரிவிக்கும் சி.பி.ஐ., சி.பி.எம். கட்சியினர் களத்தில் ஆர்.எஸ்.எஸ்-ஐ தடுப்பதற்கான உரிய நடவடிக்கைகளை எடுப்பதில்லை. இது, வடமாநிலத் தொழிலாளர்கள் அதிகளவில் புலம்பெயரும் கேரள மாநிலத்தை அத்தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பற்றதாக மாற்றியவரும் அபாயத்தை உணர்த்துகிறது.


காயத்ரி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க