மே 4, 2026 அன்று வெளியான தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம், அசாம் ஆகிய நான்கு மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் தேர்தல் முடிவுகள் பாசிச எதிர்ப்பு அரசியலில் முக்கியமான பரிசீலினைக்குரிய விடயமாக மாறியிருக்கிறது.
இஸ்லாமிய மக்கள் இனப்படுகொலையின் விளிம்பில் நிறுத்தப்பட்டிருக்கும் அசாமில் பாசிச பா.ஜ.க. மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரசு தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணி இரண்டாவது முறையாக ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. மேற்குவங்கத்தில் 15 ஆண்டுகால திரிணாமுல் காங்கிரசு ஆட்சியை வீழ்த்தி, வரலாற்றில் முதன்முறையாக பா.ஜ.க. ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. கேரளாவில் சி.பி.எம்-இன் பத்தாண்டுகால ஆட்சியை வீழ்த்தி காங்கிரசு தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் 59 ஆண்டுகளாக மாறிமாறி ஆட்சி செய்து வந்த தி.மு.க. மற்றும் அ.தி.மு.க-வை ஓரங்கட்டிவிட்டு, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்துள்ளது.
இந்தத் தேர்தல் முடிவுகளை “வரலாற்றுச் சாதனை” என்றும், “கங்கோத்ரி முதல் கங்கா சாகர் வரை எல்லா இடங்களிலும் தாமரை மலர்ந்துள்ளது” என்றும் பிரதமர் மோடி உச்சிமுகர்கிறார்.
பா.ஜ.க. ஆதரவு கார்ப்பரேட் ஊடகங்களோ, இந்தியா பலமுனை அரசியல் சூழலில் இருந்து மாறி, பா.ஜ.க-வை மையமாகக் கொண்ட தேசிய அரசியல் ஒழுங்கிற்கு மாறிவிட்டது என்றும் அதற்கு மோடியே நிகரற்ற தலைவர் என்றும் கூவி வருகின்றன. குறிப்பாக, மேற்குவங்கத்தில் பா.ஜ.க. வெற்றி பெற்றதற்கு மோடி மேஜிக், மோடி அலை போன்றவைதான் காரணம் என்றும் “மாநில அரசியல் வீழ்ந்துவிட்டது, தேசிய அரசியலே வென்றுள்ளது” என்றும் குதூகலித்து வருகின்றன.
எச்.ராஜா போன்ற சங்கிகள் சனாதன தர்மத்தை அழிக்கத் துடித்த தி.மு.க., திரிணாமுல் காங்கிரசு, சி.பி.எம். அதிகாரத்தில் இருந்து அகற்றப்பட்டிருக்கிறது என்று கொக்கரிக்கின்றனர்.

பாசிச கும்பலும் மோடி ஊடகங்களும் இவ்வாறு கொக்கரிப்பதற்கு பின்னாலிருக்கும் சதியை நாம் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. மோடி அலை மீண்டும் வந்துவிட்டது; இனி பா.ஜ.க-வை எதிர்ப்பதற்கு யாருமில்லை என்ற பொய் பிம்பத்தை உருவாக்குவதற்கே இக்கும்பல் தீவிரமாக முயன்று வருகிறது.
அதற்காக, இம்முடிவுகள் பா.ஜ.க-விற்கு சாதகமானதல்ல என்று நாம் கூறவில்லை. பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ். பாசிச கும்பல் தனது இந்துராஷ்டிரக் கனவை நிறைவேற்றுவதற்கும், 2029-இல் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்கு இவ்வெற்றிகள் பா.ஜ.க-விற்கு உதவும். ஆனால், மோடி கூறுவது போல் இவ்வெற்றி ஒரு வரலாற்றுச் சாதனையா அல்லது அப்பட்டமான வரலாற்று மோசடியா; மோடி அலை மீண்டும் வந்துவிட்டது என்பது உண்மைதானா என்பது போன்ற கேள்விகளிலிருந்தே நமது பரிசீலனையைத் தொடங்க வேண்டியுள்ளது.
000
அசாம், மேற்குவங்கம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் பொய், இந்து மதவெறி – இஸ்லாமிய வெறுப்புப் பிரச்சாரங்கள், தேர்தல் ஆணையம், மத்திய புலனாய்வு அமைப்புகள் உள்ளிட்ட அதிகார வர்க்கத்தின் பலம், குதிரை பேரம், தேர்தல் மோசடி, சங்கப் பரிவாரங்களின் துணையுடனே பா.ஜ.க. கும்பல் இவ்வெற்றியை சாதகமாக்கியுள்ளது. மாறாக, பா.ஜ.க-வை மக்கள் விரும்பி தேர்வு செய்யவில்லை.
மேற்குவங்கத்தில் பா.ஜ.க. பெற்றுள்ள வெற்றி என்பது அப்பட்டமாக திருடப்பட்ட வெற்றி. எஸ்.ஐ.ஆர். எனும் பாசிச நடவடிக்கை மூலம் இலட்சக்கணக்கான இஸ்லாமிய மக்களின் வாக்குரிமையை பறித்து, தேர்தல் ஆணையம், மத்திய புலனாய்வு அமைப்புகள், நீதித்துறை உள்ளிட்ட அதிகார வர்க்கத்தின் துணையுடன், இலட்சக்கணக்கான துணை இராணுவப் படையை குவித்து, மக்கள் போராட்டங்கள் மீது கடுமையான ஒடுக்குமுறையை செலுத்திதான் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது.
அதைப்போல், தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டிருந்தாலும், தமிழ்நாட்டு மக்கள் பா.ஜ.க-வையும் அடிமைக் கூட்டமான அ.தி.மு.க-வையும் புறக்கணித்திருக்கிறார்கள். கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் நான்கு இடங்களில் வெற்றி பெற்ற பா.ஜ.க., இத்தேர்தலில் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. கடந்த தேர்தலில் பா.ஜ.க. போட்டியிட்ட தொகுதிகளுடன் ஒப்பிடும்போது கடந்த தேர்தலை காட்டிலும் இத்தேர்தலில் பா.ஜ.க-வின் வாக்கு விகிதம் குறைந்துள்ளது. இது தமிழ்நாட்டு மக்களின் பார்ப்பனிய எதிர்ப்புணர்வைக் காட்டுகிறது.
ஆனால், ஆர்.எஸ்.எஸ்-இன் “ஆர்கனைசர்” இதழில், திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற அனுமதிக்காததால்தான் தி.மு.க. வெற்றி பெறவில்லை என்று பாசிச திமிருடன் எழுதியுள்ளது. ஆனால், அதே திருப்பரங்குன்றத்தில் பா.ஜ.க. வேட்பாளர் ஏன் வெற்றிபெறவில்லை என்பது குறித்து வாய்திறக்கவில்லை. உண்மையில், களத்தில் தமிழ்நாட்டின் புரட்சிகர, ஜனநாயக சக்திகளின் உறுதியான போராட்டம், மதுரை மக்களின் மதநல்லிணக்க மரபு, தமிழ்நாட்டு மக்களின் பார்ப்பனிய எதிர்ப்புணர்வால் திருப்பரங்குன்றத்தில் ஆர்.எஸ்.எஸ். கும்பலின் கலவர முயற்சிகள் மண்ணைக் கவ்வின என்பதே எதார்த்தநிலையாகும்.
புதுச்சேரியிலும் பா.ஜ.க சரிவையே சந்தித்திருக்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலுடன் ஒப்பிடுகையில் அவர்களின் வாக்கு சதவிதமும் தொகுதிகளின் எண்ணிக்கையும் ஒருசேரக் குறைந்துள்ளன. எனினும், கேரளாவில் இம்முறை மூன்று தொகுதிகளில் பா.ஜ.க. வென்றிருப்பது எச்சரிக்கையுடன் அணுகப்பட வேண்டியதாகும்.
ஒட்டுமொத்தத்தில், தென்னிந்தியா மீண்டும் ஒருமுறை பா.ஜ.க-வை புறக்கணித்துள்ளது; பலத்த அடி கொடுத்துள்ளது என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
தொடரும் பாசிச கும்பலின் தோல்வி முகம்!
2024 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. சந்தித்த பின்னடைவிலிருந்து அது மீண்டுவிட்டதாக ஆளும் வர்க்க ஊடகங்கள் பிரச்சாரம் செய்து வருகின்றன. ஆனால், களத்தில் பாசிச கும்பலுக்கு எதிரான மக்கள் போராட்டங்கள் நாளுக்கு நாள் தீவிரமடைந்தே வருகின்றன.
அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்றது முதல், மோடியின் அமெரிக்க அடிமைத்தனம் மக்கள் மத்தியில் அம்பலமாகி, மோடி அரசுக்கு எதிரான எதிர்ப்புணர்வு அதிகரித்து வருகிறது. ஈரான் மீதான அமெரிக்கா – இஸ்ரேலின் அநீதியான போரால், உலகம் முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடும் பொருளாதார நெருக்கடியும் தீவிரமடைந்துள்ளன. இந்தியாவிலும் இந்நெருக்கடி கொதிநிலையை எட்டியுள்ளது. நாடு முழுவதும் வணிக மற்றும் வீட்டு உபயோக எரிவாயு உருளைகளின் தட்டுப்பாடு நிலவுவதுடன், சிறு-குறு தொழில்களும் உணவகங்களும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இத்தகைய தீவிரமான நெருக்கடியைத் தீர்க்க வக்கற்றுப் போயிருக்கும் மோடி அரசுக்கு எதிராக மக்களின் போராட்டங்கள் வலுப்பெற்றுள்ளன.
டிரம்பின் கட்டளைக்கு அடிபணிந்து மோடி அரசு கையெழுத்திடும் அடிமை ஒப்பந்தங்களுக்கு எதிராக விவசாயிகள் தீவிரமான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
அதேபோல், சமீபத்தில் டெல்லி, ஹரியானா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் குறைந்தபட்ச ஊதியம், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தொழிலாளர்கள் நடத்திய போராட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது.
பா.ஜ.க. ஆளும் ஒடிசா மாநிலத்தில் கடந்த ஏப்ரல் மாதம் கொலைகார வேதாந்தா நிறுவனத்திற்கு எதிராக பழங்குடியின மக்கள் தீவிரமான போராட்டங்களை முன்னெடுத்தனர். போராட்டத்தை ஒடுக்குவதற்காக போராடிய பழங்குடியின மக்கள் மீது போலீசு துப்பாக்கிச்சூடு நடத்தியது.
முக்கியமாக, மணிப்பூரில் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல் இனக்கலவரத்தைக் கட்டவிழ்த்துவிட்டு மூன்றாண்டுகள் நிறைவடைந்துவிட்டன. இன்றுவரை அங்கு அமைதி திரும்பவில்லை. மக்கள் போராட்டமும் தொடர்ந்துகொண்டிருக்கிறது.
இவ்வாறு நாடு முழுவதுமே பாசிச மோடிக் கும்பலுக்கு எதிரான மக்கள் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. மோடியின் வளர்ச்சி நாயகன் பிம்பம், விஸ்வகுரு பிம்பத்தை எல்லாம் நம்பி ஏமாறுவதற்கு மக்கள் தயாராக இல்லை. அதனால்தான் மக்களின் அடித்தளத்தை இழந்துவரும் பாசிச கும்பல் தேர்தல் ஆணையம் உள்ளிட்ட அதிகார வர்க்கத்தின் துணையுடனும், சங்கப் பரிவாரக் கும்பலுடன் இணைந்து மோசடிகள், பொய் பிரச்சாரங்கள் மூலம் தேர்தலில் வெற்றிபெற முயற்சிக்கிறது. தொகுதி மறுவரையறை போன்ற இந்துராஷ்டிர அடிக்கட்டுமானங்களை நிறுவுவதற்கு துடிக்கிறது.
எதார்த்தத்திற்கு முகங்கொடுப்போம்!
ஒருபுறம், பாசிச கும்பல் பொய் மற்றும் மோசடிகள் மூலம் பெற்ற இவ்வெற்றியைப் ஊதிப்பெருக்கிக் காட்டி மக்களை அச்சுறுத்துகிறது. மறுபுறம், பா.ஜ.க. எதிர்ப்பாளர்களும் அறிவுத்துறையினரும் இத்தேர்தல் முடிவுகள் வெளியானவுடன், எல்லாம் முடிந்துவிட்டதைப் போன்ற அவநம்பிக்கைக் கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றனர். இனி இந்தியா கூட்டணியின் நிலை என்னவாகும்? பா.ஜ.க-வை எதிர்ப்பதற்கான முகமாக இருந்தவர்கள் எல்லாம் தோற்கடிக்கப்பட்டுவிட்டார்களே எனப் புலம்புகின்றனர். சிலர், தி.மு.க. மற்றும் சி.பி.எம். உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தோற்கடிக்கப்பட்டதற்காக மக்களைத் தூற்றவும் செய்கின்றனர்.
ஆனால், இவர்களுக்குக் களத்தில் பாசிச கும்பலுக்கு எதிராகத் தீவிரமாக மக்கள் போராட்டங்கள் நடந்துவருவது கண்ணுக்குத் தெரிவதில்லை. மக்களுக்குப் பா.ஜ.க-வை வீழ்த்த வேண்டும் என்பதுதான் நோக்கம். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் போராட்டங்களால் பா.ஜ.க. தனிப்பெரும்பான்மையைக் கூடப் பெற முடியாமல் பலத்த அடி வாங்கியது. அதன் பிறகு, பா.ஜ.க. மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்தாலும், மக்கள் போராட்டங்களுக்குப் பணிந்து பல்வேறு சட்டத்திட்டங்களை நிறைவேற்ற முடியாமல் “யூ-டர்ன்” (U-turn) அடித்தது.
ஆனால், இன்றைய நிலை என்ன? 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு இதுவரை மொத்தம் 15 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. இவற்றில், ஜம்மு & காஷ்மீர், ஜார்க்கண்ட், கேரளா, தமிழ்நாடு ஆகியவற்றைத் தவிர இதர 11 மாநிலங்களில் பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளே ஆட்சியைக் கைப்பற்றியுள்ளன. இந்த ஒவ்வொரு தேர்தல் குறித்தும் பாசிச எதிர்ப்பு என்ற அடிப்படையில், ஆழமான பரிசீலனைகளை மேற்கொண்டு “புதிய ஜனநாயகம்” இதழ் தொடர்ச்சியாகக் கட்டுரைகளை வெளியிட்டு வருகிறது. இவ்வாறு பரிசீலித்து அதனடிப்படையில் முன்னேறுவது பாசிச எதிர்ப்பு சக்திகளின் கடமையாகும்.
ஆனால், பாசிசத்தை எதிர்ப்பதாக சொல்லிக்கொள்ளும் எதிர்க்கட்சிகள் இந்தத் தொடர் தோல்விகள் குறித்து மேற்கொண்ட பரிசீலனை என்ன? எதிர்க்கட்சிகளின் “இந்தியா” கூட்டணி ஏறக்குறையச் செயலற்றுக் கிடக்கிறது. இந்த ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதன் நிலை மேலும் மோசமடையும்.
உண்மையில், எதிர்க்கட்சிகளின் மக்கள் விரோதத் தன்மை, சந்தர்ப்பவாதம், பிழைப்புவாதம், மாற்றுத் திட்டத்தை முன்வைத்துப் போராடத் தயாராக இல்லாதது ஆகியவையே பாசிச கும்பல் வளர்வதற்கு அடித்தளமிடுகின்றன. ஆனால், இது எதையும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளாமல், எதிர்க்கட்சிகள் மீண்டும் மீண்டும் மக்களைப் பாசிசத்திற்குப் பலியிட விழைகின்றனவே தவிர, பாசிசத்தை வீழ்த்துவதை நோக்கிச் சிந்திப்பதில்லை என்பதே எதார்த்த நிலை. அதனால்தான், தேர்தல் கட்டமைப்பிற்கு வெளியே நடக்கும் மக்கள் போராட்டங்கள் இவர்களுக்கு நம்பிக்கையூட்டுவதாக இருப்பதில்லை.
ஆகவே, மக்களின் கோரிக்கைகளிலும் போராட்டங்களிலும் தங்களை நிலைநிறுத்திக்கொண்டு பாசிச கும்பலை நேரடியாக எதிர்ப்பதன் மூலமே பாசிச எதிர்ப்பு சக்திகள் பலமடையும்; பாசிசத்தை வீழ்த்துவதை நோக்கி முன்னேறும்.
![]()
அறிவு
(புதிய ஜனநாயகம் – மே 2026 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











