ஆப்பிரிக்கா: கடும் வெயிலால் உயிரிழக்கும் ஒட்டகங்கள்

காலநிலை மாற்றத்தின் தாக்கம் மனிதர்களை மட்டுமின்றி விலங்குகளையும் கடுமையாகப் பாதித்து வருகிறது. ஆப்பிரிக்காவில் வறட்சி, தீவிர வெப்ப அலை, மேய்ச்சல் நிலங்கள் வறண்டு போகுதல் மற்றும் குடிநீர் பற்றாக்குறை காரணமாகக் கால்நடைகள் மற்றும் வனவிலங்குகளின் உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது.

ல் நினோ, புவி வெப்பமயமாதல் போன்ற காரணங்களால் ஏற்படும் அதீத வெப்பம் மற்றும் வறட்சியால் உலகின் மிகக் கடுமையான வெப்பத்தைத் தாங்கிக் கொண்டும், நீண்ட நாட்கள் தண்ணீர் இல்லாமலும் வாழக்கூடிய ஒட்டகங்கள் ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் தொடர்ந்து உயிரிழந்து வருவதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வெளிப்புற வெப்பநிலையைச் சமாளிப்பதற்காக, ஒட்டகங்கள் நாள் முழுவதும் தங்கள் உடல் வெப்பநிலையைச் சில டிகிரி அளவுக்கு மாற்றி அமைப்பதன் மூலம் சுமார் 40°C வரையிலான வெப்பத்தை எளிதாகத் தாங்கிக்கொள்ளும் திறனைப் பெற்றுள்ளன. ஆனால், ஒட்டகங்கள் தாங்கக்கூடிய வரம்பைத் தாண்டி வெப்பநிலை உயரும்போது வெப்ப அழுத்தத்திற்கு உள்ளாகி நீரிழப்பு, உடல் எடை குறைதல், அழற்சி, தசை மற்றும் எலும்பு தொடர்பான நோய்கள், சிறுநீரக செயலிழப்பு, ஒட்டுண்ணிகளால் ஏற்படும் தொற்று நோய்கள் என பல காரணங்களால் இவை உயிரிழக்கும் அபாயம் அதிகரித்துள்ளது.

இதைத் தொடர்ந்து டோக்கியோவின் மிகப்பெரிய மிருகக்காட்சிசாலையான டாமா விலங்கியல் பூங்காவில் வெப்ப அலை தாக்கத்தால் மூன்று வயது பெண் சிங்கமான முகி, 11 வயது சிங்கமான இச்சிகோ, 15 வயது சிங்கமான லுயேனா ஆகிய மூன்று சிங்கங்கள் ஒரே வாரத்தில் அடுத்தடுத்து உயிரிழந்தன.

உலக வானிலை ஆய்வு நிறுவனம் (WMO) – 1981-ஆம் ஆண்டு முதல் வெப்ப அலைகள் மேல்நோக்கிய போக்கில் அதிகரித்து வருகிறது எனவும், 2024-ஆம் ஆண்டில் பல நாடுகளில் வெப்பநிலை 50°C-க்கு மேல் பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அது மட்டுமல்லாமல் 2025-ஆம் ஆண்டில் ஆப்பிரிக்காவில் ஏற்பட்ட தீவிர வானிலை மற்றும் காலநிலை மாற்றத்தால் குறைந்தது 1.3 கோடி மக்கள் பாதிக்கப்பட்டதுடன், 3,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகக் கூறுகிறது.

2024-ஆம் ஆண்டில், வளிமண்டலத்தில் உள்ள கார்பன் டையாக்சைடு (CO₂) செறிவு கடந்த 20 இலட்சம் ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிக உயர்ந்த நிலையை எட்டியுள்ளது.

அதேபோல், மீத்தேன் (CH₄) மற்றும் நைட்ரஸ் ஆக்சைடு (N₂O) வாயுக்களின் செறிவும் கடந்த 8 இலட்சம் ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உச்சத்தை எட்டியுள்ளது.

1991 மற்றும் 2025-க்கு இடையில், ஆறு துணைப் பிராந்தியங்களில் வட ஆப்பிரிக்கா பத்தாண்டுகளுக்குள் 0.43°C என்ற அளவில் மிக வேகமாக வெப்பமயமாதலைப் பதிவு செய்துள்ளது என உலக வானிலை அமைப்பின் (WMO) ‘ஆப்பிரிக்காவின் காலநிலை நிலை 2025’ அறிக்கை தெரிவித்துள்ளது.


படிக்க: எல் நினோ வெப்பத்தால் பலியாகும் உழைக்கும் வர்க்கம்!


கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் வெளியிட்ட ஓர் அறிக்கையில், இந்தியாவின் வெப்பத்தால் ஏற்படும் இறப்புகளைக் கணக்கிட்டது.  அதன்படி, இந்தியாவில் ஒரு நாள் கடுமையான வெப்பம் நிலவினாலும் நாடு முழுவதும் சுமார் 3,400 பேர் வரை கூடுதலாக உயிரிழக்க நேரிடும் என்றும், வெப்ப அலை தொடர்ந்து ஐந்து நாட்கள் நீடித்தால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 30,000-ஆக உயரும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

ஜெர்மனியின் நோய்க் கட்டுப்பாட்டு மையமான ராபர்ட் கோச் நிறுவனம், இந்த ஆண்டு ஜூலை மாதத் தொடக்கம் வரை வெப்பத்தின் காரணமாக 6,830 பேர் உயிரிழந்ததாகவும், பிரிட்டனின் தேசிய வானிலை ஆய்வு நிறுவனமான மெட் ஆஃபீஸ், மே மற்றும் ஜூன் மாதங்களில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் ஏற்பட்ட வெப்ப அலைகளின் போது, வெப்பம் தொடர்பான காரணங்களால் 2,700 பேர் உயிரிழந்திருப்பதாகவும், பிரான்ஸில் ஜூன் 22-28 வரையிலான வாரத்தில் குறைந்தது 2,000 பேர் உயிரிழந்ததாக பிரான்சின் பொதுச் சுகாதார ஆணையமும் தெரிவித்துள்ளன.

காலநிலை மாற்றம் குறித்த “காலநிலை மாற்றங்களுக்கான பன்னாட்டு அரசாங்கங்களின் குழு” (Intergovernmental Panel on Climate Change) உள்ளிட்ட அறிவியல் அமைப்புகள், நிலக்கரி, பெட்ரோலியம், இயற்கை எரிவாயு போன்ற புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாடே பசுமைக்குடில் வாயுக்கள் அதிகரிப்பதற்கான முக்கிய காரணம் என தொடர்ந்து எச்சரித்து வருகின்றன.

சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகையில், பல பத்தாண்டுகளாகப் பெரிய எண்ணெய் மற்றும் எரிபொருள் நிறுவனங்கள் லாபத்தை முன்னிறுத்தி எரிபொருள் உற்பத்தியை விரிவுபடுத்தியதுடன், காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் பல நாடுகளில் போதுமான அளவில் முன்னெடுக்கப்படவில்லை. இதுவே தற்போதைய காலநிலை நெருக்கடியைத் தீவிரப்படுத்தியுள்ளது எனவும் கூறுகிறது.

இதன் தாக்கம் மனிதர்களை மட்டுமின்றி விலங்குகளையும் கடுமையாகப் பாதித்து வருகிறது. ஆப்பிரிக்காவில் வறட்சி, தீவிர வெப்ப அலை, மேய்ச்சல் நிலங்கள் வறண்டு போகுதல் மற்றும் குடிநீர் பற்றாக்குறை காரணமாகக் கால்நடைகள் மற்றும் வனவிலங்குகளின் உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது.

இலாபத்தை முன்னிலைப்படுத்தும் வளர்ச்சிகள் தொடருமானால், காலநிலை நெருக்கடி மேலும் தீவிரமடையும் என்றும், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், கார்பன் உமிழ்வைக் குறைத்தல் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாக வலுப்படுத்த வேண்டிய அவசியம் குறித்தும் காலநிலை ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

ஆனால் இலாப வெறிபிடித்த, ஏகாதிபத்திய – கார்ப்பரேட் அரசுகளோ கட்டற்ற முறையில் இயற்கை வளங்களைச் சுரண்டி காலநிலை மாற்றத்தைத் தீவிரப்படுத்தி மனிதர்களையும் ஏனைய உயிரினங்களையும் கொன்று வருகின்றன. இயற்கைக்கும் ஏகாதிபத்தியத்துக்கும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்தப் போரை எதிர்த்து உலகெங்கும் உள்ள மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.


நற்சோணை

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க