பா.ஜ.க ஆட்சி செய்கின்ற உத்தரப் பிரதேசத்தில் மே 13 ஆம் தேதி அன்று மாலை இடி மின்னலுடன் பெய்த ஆலங்கட்டி மழை மற்றும் 130 கி.மீ வேகத்தில் வீசிய புயல் காற்றால் 26 மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
புயல் காற்றால் மின் கம்பங்கள் வேரோடு சாய்ந்து விழுந்ததில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டு மக்கள் இருளில் தவித்தனர். தகவல் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளன. சாலைகளில் உள்ள பெயர்ப் பலகைகள், மரங்கள் விழுந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இக்கோரப் பேரிடரால் 26 மாவட்டங்களில் மின்னல் தாக்கியும், வீட்டின் சுவர் இடிந்து விழுந்து உடல் நசுங்கியும் 111 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்; 72 பேர் காயமடைந்துள்ளனர்; 227க்கு மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன; 179 கால்நடைகள் உயிரிழந்துள்ளன.
நிவாரண ஆணையர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி அதிகபட்சமாக பிரயாக்ராஜ் மாவட்டத்தில் 21 பேரும் அதனைத் தொடர்ந்து மிர்சாபூரில் 19, சந்த் ரவிதாஸ் நகரில் 16 மற்றும் ஃபதேபூரில் 11 பேரும் உயிரிழந்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் பாராபங்கி, பஹ்ரைச், கான்பூர், பஸ்தி, சம்பல், ஹர்தோய் மற்றும் உன்னாவ் மாவட்டங்களில் குறைந்தது தலா நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
பலத்த காற்றினால் பரேலியில் தகரக் கூரையுடன் சேர்ந்து நன்ஹே மியான் என்பவர் 50 அடி உயரத்திற்குக் காற்றில் தூக்கி வீசப்பட்டார். இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தூக்கி வீசப்பட்டதில் அவருடைய கைகளில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அருகிலிருந்த ஒருவரால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கூலித் தொழிலாளியான தனக்கு அரசு உதவ வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
நிலக்கரி வளம் நிறைந்த தொழில்துறை நகரமான சோன்பத்ரா மாவட்டத்தின் ஓப்ராவில் வசிக்கும் அசோக் ராய் “நாங்கள் வசிக்கும் பகுதி முழுவதும் சுமார் அரை மணி நேரம் இருண்டு போய்விட்டது. பலத்த காற்று விளம்பரப் பலகைகளையும் பெயர்ப் பலகைகளையும் தரையிலிருந்த அடர்ந்த நிலக்கரி தூசியையும் மேலே தூக்கி எறிந்து சுழற்றியடித்தது,”என்று புயலின் பாதிப்பு குறித்து விவரித்துள்ளார்.
“காற்றின் காரணமாகச் சுவர்கள் அதிரத் தொடங்கியதும் நாங்கள் அவசரமாக வெளியே ஓடினோம். சில கணங்களிலேயே எங்கள் கூரை இடிந்து விழுந்தது. அன்றிரவு நாங்கள் ஒரு உறவினர் வீட்டில் தங்கினோம்,” என்று பதோஹி மாவட்டத்தைச் சேர்ந்த சாவித்திரி தேவி கூறியுள்ளார்.
பதோஹியின் ராம்பூரில் கங்கைக் கரையிலிருந்த மிதவைப் பாலம் புயலால் சேதமடைந்ததை அடுத்து, பலர் கங்கையில் விழுந்தனர். அவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மிர்சாபூரின் கௌரா பிரமன்பூரிலும் ஒரு மிதவைப் பாலம் சேதமடைந்ததால் 20 கிராமங்களுக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் “அரசு உடனடியாக போர்க் கால அடிப்படையில் நிவாரண மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். காயமடைந்தவர்களுக்கு சிறந்த இலவச சிகிச்சை வழங்கப்பட வேண்டும். உணவு, குடிநீர், தற்காலிக தங்குமிடம் ஆகியவை உடனடியாக ஏற்பாடு செய்யப்பட வேண்டும். உயிரிழந்தவர்களுக்கு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடத்தப்படவேண்டும்.
“பொதுமக்களின் உயிர், சொத்து, பயிர்கள், வாகனங்கள் உள்ளிட்ட இழப்புகள் விரைவாக மதிப்பீடு செய்யப்பட்டு, காப்பீட்டுத் தொகை மற்றும் இழப்பீடு வழங்கப்பட வேண்டும். பாதிக்கப்படாத எங்கள் கட்சி தொண்டர்கள் அனைவரும் இந்த பேரிடர் நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிகளவில் உதவ வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இயற்கைப் பேரிடர்களாலும் காலநிலை மாற்றம் காரணமாகவும் அதிகம் பாதிக்கப்படுவது உழைக்கும் மக்கள்தான் என்பதை இச்சம்பவம் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
இக்கோரப் பேரிடருக்கு ரஷ்யா, சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஆனால் இந்தியப் பிரதமர் மோடி தற்போது வரை ஒரு இரங்கள் செய்தி கூட வெளியிடவில்லை. இது பாசிச பா.ஜ.க அரசின் மக்கள் பற்றிற்குத் தக்க சான்றாகும்.
![]()
இன்குலாப்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











