நீட் தேர்வின் உண்மை முகத்தை அம்பலப்படுத்திய ஏ.கே.ராஜன் குழு அறிக்கை

மாநிலக் கல்வி வாரியத்தின் கீழ் பயிலும் மாணவர்கள், தமிழ் வழி மாணவர்கள், முதல் தலைமுறை பட்டதாரிகள் மற்றும் கிராமப்புற மாணவர்கள் போன்றவர்களுக்கு மருத்துவக் கல்வி கற்கும் கனவு என்பது எட்டாக்கனியாகவே இன்று வரை இருந்து வருகிறது என்பதை ஏ.கே. ராஜன் குழுவின் அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது.

நீட் தேர்வு மோசடிகளுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்த மாணவர் போராட்டம் ஒட்டுமொத்த மாணவர் எழுச்சியாக எழுந்து பாசிச கும்பலைப் பின்வாங்கச் செய்துள்ளது.

அவ்வாறு, நாடு முழுவதும் பரவிய நீட் தேர்விற்கு எதிரான போராட்டங்களில் உறுதியான ஆதரவு கிடைத்த நகரங்களில் தமிழ்நாடும் ஒன்றாகும். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைமையகமான பாலன் இல்லத்தில் மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் முற்போக்கு அமைப்புகள் திரண்டு நீட் தேர்விற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்தனர்.

மதுரை, கோயம்புத்தூர், புதுக்கோட்டை, விழுப்புரம், திருவள்ளூர் மற்றும் திருச்சி உள்ளிட்ட பிற நகரங்களிலும், கடுமையான போலீசு அடக்குமுறைகளையும் மீறி, புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக இளைஞர் சங்கம், அகில இந்திய மாணவர் சங்கம் மற்றும் அகில இந்திய இளைஞர் சங்கம் போன்ற மாணவர் இளைஞர் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன.

சென்னையில் நீட் எதிர்ப்புப் போராட்டத்தின் மையமாக உருவெடுத்த பாலன் இல்லத்திற்கு, தினமும் வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெரும்பாலான இளைஞர்கள், இதற்கு முன்பு போராட்டத்திற்கு வந்திராத புதிய இளைஞர்களே.

நீட் தேர்விற்கு எதிராகக் கண்டனம் தெரிவித்துப் பேசிய இளைஞர்களில் பலர், முதல் முறையாக ஒலிவாங்கியைப் பிடித்து பொது மேடையில் பேசினர். அதிலும், பல மாணவர்கள், இளைஞர்கள் சமூக ஊடகங்களில் பதிவுகளைப் பார்த்து போராட்டத்தில் ஈடுபட்டதாகத் தெரிவித்திருந்தனர்.

டெல்லியின் ஜந்தர் மந்தரில் நடந்ததைப் போலவே, வழக்கமான போராட்ட வடிவங்களுக்குப் பதிலாக, கானா பாடல்கள், ராப் பாடல்கள், ஸ்டாண்ட்-அப் காமெடி, நாடகம், ஓவியம் மற்றும் முற்போக்கு தத்துவங்கள் எனத் தங்களுக்குப் பரிச்சயமான கலை வடிவங்கள் மூலம் அவர்கள் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்திருந்தனர்.

நீட் தேர்விற்கான எதிர்ப்பை நடைமுறையில் எளிதாக மக்களுக்குப் புரியும் வகையில் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சாதி-மத  வேற்றுமையுமின்றி மாணவர்கள், இளைஞர்கள் தங்களுடைய உரிமைப் போராட்டத்தில் உறுதியாக நின்றனர்.

இருப்பினும், பாலன் இல்லத்திலும் தமிழ்நாடு முழுவதிலும் போராட்டக்காரர்களால் எழுப்பப்பட்ட முழக்கங்கள், டெல்லியில் எழுப்பப்பட்ட முழக்கங்களிலிருந்து வேறுபட்டவை. குறிப்பாக, தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு எதிராக நடந்த போராட்டங்களில், தற்காலிக சீர்திருத்தக் கோரிக்கைகளாக அல்லாமல், நீட் தேர்வை ஒழிக்க வேண்டும் என்பதே முதன்மை கோரிக்கையாக இருந்தது.

நீட் தேர்வை ஒழிக்க வேண்டும் என்ற மாணவர் – இளைஞர்களின் இக்கோரிக்கை மாணவர்களின் உணர்ச்சிவசத்தால் எழுந்ததல்ல. மாறாக, நீட் தேர்வு முறையே சமத்துவமற்றது; நீட் தேர்வு முறைகேடுகளில் நிரந்தரத் தீர்வைக் கொண்டு வர வேண்டுமெனில், அதற்கு நீட் தேர்வை முற்றிலுமாக இரத்து செய்ய வேண்டும் என்பதை உணர்ந்ததன் வெளிப்பாடு!

.கே ராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு

மருத்துவக் கல்லூரிகளில் சேர மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நிபந்தனையை அது கொண்டுவரப்பட்ட போதே தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் கடுமையாக எதிர்த்தன.

நீட் தேர்வை இரத்து செய்து விடுவதாகக் கூறி கடந்த 2021-ல் ஆட்சிக்கு வந்த தி.மு.க., ஜூன் 2021-இல் தமிழ்நாட்டில் மருத்துவச் சேர்க்கைகளில் நீட் தேர்வின் தாக்கத்தை ஆய்வு செய்வதற்காக, ஓய்வு பெற்ற நீதிபதி. ஏ.கே.ராஜன் தலைமையில் ஒன்பது பேர் கொண்ட குழுவை அமைத்தது.

அக்குழுவின் முதன்மையான நோக்கம், நீட் தேர்வின் அடிப்படையில் மாணவர்களை மருத்துவப் படிப்பிற்குத் தேர்ந்தெடுப்பது சமத்துவமான முறையா என்பது குறித்து ஆராய்வதாகும். மேலும், நீட் அடிப்படையிலான மாணவர் சேர்க்கை நடைமுறையானது சமூக, பொருளாதார மற்றும் ‘கூட்டாட்சி அரசியலை’யும், தமிழ்நாட்டின் கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை மாணவர்களையும், அரசுப் பள்ளிகளில் பயின்றவர்களையும், தமிழ் வழியில் பயின்றவர்களையும், வேறு எந்தப் பிரிவு மாணவர்களையும் பாதித்துள்ளதா என்பதையும் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

நீட் சமூக நீதிக்கு எதிரானது!
பறிக்கப்படும் தமிழ்நாட்டின் உரிமை!

இக்குழுவானது, நீட் தேர்வின் வரலாறு, நடைமுறைகள் மற்றும் குறைபாடுகள் உள்ளிட்டு பல்வேறு கூறுகளைத் தீவிர ஆய்வுக்கு உட்படுத்தியது. மேலும், தபால் மற்றும் மின்னஞ்சல் வழியாக மொத்தம் 86,342 பேரிடமிருந்து அக்குழு கருத்துக்களைச் சேகரித்தது. இவர்களில், 65,007 பேர் நீட் தேர்வை எதிர்த்தனர். இத்தரவுகளின் அடிப்படையில், இக்குழு 2021 ஜூலையில் தனது 165 பக்க விரிவான அறிக்கையைச் சமர்ப்பித்தது.

2010–2011-ஆம் ஆண்டில், மாநிலக் கல்வி வாரியத்தின் (STATE BOARD) கீழ் படித்த 2,332 மாணவர்கள் மருத்துவக் கல்வியில் இடங்களைப் பெற்றனர்; அதேசமயம் சி.பி.எஸ்.இ. (CBSE) மாணவர்கள் 14 பேர் மட்டுமே எம்.பி.பி.எஸ். (MBBS) படிப்பில் சேர்ந்தனர். ஆனால், நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, இந்த நிலை தலைகீழாக மாறி 2020–2021 ஆம் ஆண்டில், சி.பி.எஸ்.இ-யின் கீழ் படித்த 1,604 மாணவர்கள் எம்.பி.பி.எஸ் (MBBS) இடங்களைப் பெற்றனர்.

இந்தப் புள்ளிவிவரம், சி.பி.எஸ்.இ-யின் கீழ் படித்தவர்களுக்கு மட்டுமே நீட் தேர்வு அதிக அளவில் பயனளித்துள்ளது; மாநிலக் கல்வி வாரியத்தின் கீழ் படித்தவர்களை முற்றிலுமாகப் பாதித்துள்ளது என்பதைத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.

நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு, கிராமப்புற மாணவர்கள் எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்பில் பெருமளவில் இடத்தை பெற்றனர். 2016-2017-ஆம் ஆண்டில், அரசு கல்லூரிகளிலிருந்த இடங்களில் 65.17 சதவிகித இடங்களைக் கிராமப்புற மாணவர்கள் பெற்றனர். ஆனால், நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு 2020-2021-ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை வெறும் 49.91 ஆகக் குறைந்துவிட்டது.

நீட் தேர்வு கட்டாயமாக்கப்படுவதற்கு முந்தைய காலகட்டத்தில், தேர்வு எழுதுபவர்களின் சராசரி சேர்க்கை விகிதம் 8.12-ஆக இருந்தது. நீட் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, 2020-2021-ஆம் ஆண்டில் இந்த விகிதம் 71.42-ஆக உயர்ந்தது. அதேசமயம், முதல் முறை தேர்வு எழுதுபவர்களின் விகிதம், நீட் தேர்வுக்கு முந்தைய சராசரி விகிதமான 91.87 சதவிகிதத்திலிருந்து 2020–2021-ஆம் ஆண்டில் 28.58 சதவிகிதமாக அடிமட்டத்திற்குச் சரிந்தது.

பயிற்சி மையங்களில் சேர்ந்து, பெரும் தொகையைச் செலவழித்து, மீண்டும் மீண்டும் தேர்வை எழுதுபவர்களுக்கு மட்டுமே அதாவது பணம் படைத்த பிரிவினருக்கு மட்டுமே நீட் தேர்வில் வெற்றி பெறுவது சாத்தியம் என்பதை இத்தரவுகள் மிகவும் தெளிவாகக் காட்டின.

நீட் தேர்வானது, எம்.பி.பி.எஸ். மற்றும் உயர் மருத்துவப் படிப்புகளில் சமூகத்தின் சமத்துவத்தை முற்றிலுமாக சீர்குலையச் செய்கிறது. நீட் தேர்வானது சமுதாயத்தில் வசதி படைத்த, நிரந்தரமாக வருமானம் கொண்ட ஒரு பிரிவினருக்கு மட்டுமே சாதகமாக அமைந்துள்ளது.

மாநிலக் கல்வி வாரியத்தின் கீழ் பயிலும் மாணவர்கள், தமிழ் வழி மாணவர்கள், முதல் தலைமுறை பட்டதாரிகள் மற்றும் கிராமப்புற மாணவர்கள் போன்றவர்களுக்கு மருத்துவக் கல்வி கற்கும் கனவு என்பது எட்டாக்கனியாகவே இன்று வரை இருந்து வருகிறது என்பதை அக்குழுவின் அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது.

நீட் தேர்வு இன்னும் சில ஆண்டுகளுக்குத் தொடர்ந்தால், தமிழ்நாட்டின் சுகாதார அமைப்பு மிக மோசமாகப் பாதிக்கப்படும் என்றும் பல்வேறு ஆரம்ப சுகாதார மையங்களில் பணியமர்த்த போதுமான மருத்துவர்கள் இல்லாமல் போகலாம் என்றும் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய போதுமான நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்கள் இல்லாமல் போகலாம் என்றும் அக்குழு எச்சரித்தது.

ஏ.கே. ராஜன் குழு முன்வைத்த பரிந்துரைகள்:

அந்தவகையில், தமிழ்நாடு அரசு கேட்டுக்கொண்டதற்கு இணங்க, இந்த ஆய்வின் அடிப்படையில் முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் குழு பரிந்துரைகளை முன்வைத்தது.

  • தேவையான சட்ட அல்லது சட்டமன்ற நடைமுறைகளைப் பின்பற்றி அனைத்து மட்டங்களிலும் நீட் தேர்வினை அரசு ஒழிக்க வேண்டும்.
  • மருத்துவக் கல்விக்கான நீட் தேர்வை நீக்குவதன் அவசியத்தைக் குறிப்பிடும் ஒரு சட்டத்தை மாநில அரசு இயற்றி, அதற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறலாம்.
  • நீட் தேர்வை நீக்குவது, “சமூக நீதியை உறுதி செய்வதோடு, மருத்துவக் கல்வித் திட்டங்களில் சேர்க்கையின்போது அனைத்து பின்தங்கிய மாணவர் சமூகங்களும் பாகுபாட்டிற்கு உள்ளாவதிலிருந்தும் பாதுகாக்கும்” என்று அந்தக் குழு கூறியது.
  • இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கு, மாணவர்கள் மேல்நிலைப் பள்ளித் தேர்வில் பெறும் மதிப்பெண்களே ஒரே தகுதியாக நடைமுறைப்படுத்த வேண்டும். இதனால், வெவ்வேறு கல்வி வாரியங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு வாய்ப்பில் சமத்துவத்தை உறுதி செய்வதற்காக, மேல்நிலைப்பள்ளி மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு சேர்க்கை முறையை பின்பற்றலாம் என்று அக்குழு கூறியது.
  • நீட் தேர்வு இன்னும் சில ஆண்டுகளுக்குத் தொடர்ந்தால், தமிழ்நாட்டின் சுகாதார அமைப்பு மிக மோசமாகப் பாதிக்கப்படும். பல்வேறு ஆரம்ப சுகாதார மையங்களில் பணியமர்த்துவதற்குப் போதுமான மருத்துவர்கள் இல்லாமல் போகலாம். அரசு மருத்துவமனைகளில் பணியமர்த்துவதற்குப் போதுமான நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்கள் இல்லாமல் போகலாம். இறுதியில், தமிழ்நாடு ‘சுதந்திர’த்திற்கு முந்தைய நாட்களுக்குத் திரும்பக்கூடும். மருத்துவ மற்றும் சுகாதாரப் பராமரிப்பு அமைப்பில், ஒரு மாநிலமாகத் தமிழ்நாடு மற்ற மாநிலங்களின் தரவரிசையில் பின்தங்கிவிடும் என்று அந்த 165 பக்க அறிக்கை கூறியது.
  • மேல்நிலைப் பள்ளித் தேர்வில், முக்கியமாக பின்தங்கிய மற்றும் வாய்ப்பற்ற மாணவர்கள் உட்பட, சம்பந்தப்பட்ட அனைத்து மாணவர்களின் மோசமான செயல்திறனுக்குக் காரணமான சமூக, பொருளாதார மற்றும் மக்கள்தொகை சார்ந்த “பாதகங்களை” அடையாளம் கண்டு, அந்தப் பாதகங்களின் தீவிரத்தின் அளவிற்கு ஏற்ப, முன்னரே உருவாக்கப்பட்ட “பாதக மதிப்பெண்” (Grace Mark) என்ற கட்டமைப்பைப் பயன்படுத்தி மதிப்பெண்களை மறுசீரமைக்கலாம் என்று பரிந்துரையில் கூறப்பட்டுள்ளது.
  • மேல்நிலை வரையிலான பள்ளிக் கல்வியானது, “பயிற்சி” அளிப்பதற்குப் பதிலாக “கற்றலை” வளர்க்கும் வகையில் சீர்திருத்தப்பட வேண்டும்; மாணவர்களுக்குப் பாட அறிவு மற்றும் பகுத்தறிவு, முடிவெடுத்தல், சமூக மனப்பான்மை போன்ற உயர்நிலைத் திறன்களை அளித்து அவர்களை மேம்படுத்தும் வகையில் பாடத்திட்டங்கள் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தேசிய நீட் தேர்வானது மருத்துவக் கல்வியில் சமூக மற்றும் மக்கள்தொகைக் குழுக்களின் பிரதிநிதித்துவத்தை முற்றிலுமாகப் புறக்கணித்துள்ளது. இதனால், பெரிதும் பாதிக்கப்பட்ட சமூகக் குழுக்கள், தமிழ் வழிக் கல்வி பயிலும் மாணவர்கள், கிராமப்புறப் பின்னணியைக் கொண்டவர்கள், அரசுப் பள்ளிகளில் படிப்பவர்கள், பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கும் குறைவாக உள்ளவர்கள் மற்றும் மிகவும் பின்தங்கிய மாணவர்களே ஆவர். எனவே, நீட் தேர்வு இந்தப் பின்தங்கிய சமூகங்களுக்கு எதிரானது என்று குழு முடிவு செய்கிறது என ஏ.கே.ராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு தெரிவித்தது.

இந்நிலையானது, இந்த ஐந்தாண்டுகளில் மேலும் மோசமடைந்துள்ளது. குறிப்பாக, நீட் தேர்வு என்பது முற்று முழுதாகக் கார்ப்பரேட் கொள்ளைக்கானதாக மாற்றப்பட்டு அது இந்தியாவின் ஒட்டுமொத்த மாணவர் விரோதத் தேர்வாக பரிணமித்துள்ளது. இதன் வெளிப்பாடே டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்த மாணவர் போராட்டமாகும்.

இதன் முன்னுணர்ந்தே நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது முதல் தமிழ்நாடு அதற்கெதிராகப் போராடி வந்தது. ஆனால், நீட் தேர்வு விவகாரத்தில் அ.தி.மு.க. முகத்தில் குத்தியது எனில், தி.மு.க. மக்களை நம்ப வைத்து முதுகில் குத்தியது. இன்று, த.வெ.க. அரசு நீட் தேர்வை எதிர்ப்பதாகக் கூறிக்கொண்டே அதற்கெதிரான போராட்டங்களை மோடி அரசிற்கு கரசேவையாற்றுகிறது. ஆகவே, இக்கட்சிகளின் சந்தர்ப்பவாதத்தைத் திரைக்கிழித்து, நீட் தேர்வை இரத்து செய்யக்கோரி தமிழ்நாடு ஒரே குரலில் முழங்க வேண்டும்!


காதர்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க