பாசிச மோடி அரசு இன்று இந்தியாவின் 80-வது ‘சுதந்திர’ தினத்தை கோலாகலமாகக் கொண்டாடி வருகிறது. ஆனால், மோடி இந்திய பிரதமராகப் பொறுப்பேற்ற முதல் பத்தாண்டுகளில் (2014-2024) நாடு முழுவதும் சுமார் 94 ஆயிரம் அரசுப் பள்ளிகள் மூடப்பட்டு, அதனால் சுமார் 2.26 கோடி மாணவர்களின் சேர்க்கை சரிந்துள்ளது. இதனை தனிநபரோ அல்லது தனியார் நிறுவனமோ அம்பலப்படுத்தவில்லை. இது மத்திய அரசின் கொள்கை ஆலோசனை குழுவான நிதி ஆயோக் முன்வைத்த தரவாகும்.
கடந்த மே 6 அன்று, “இந்தியாவில் பள்ளிக் கல்வி முறை: தர மேம்பாட்டிற்கான காலவரிசை சார்ந்த பகுப்பாய்வு மற்றும் கொள்கை வழிகாட்டி” என்ற தலைப்பிலான அறிக்கையை நிதி ஆயோக் வெளியிட்டது. அவ்வறிக்கையின்படி, 2014–15-ஆம் கல்வியாண்டில் 11.07 லட்சமாக இருந்த அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை, 2024–25-ஆம் ஆண்டில் 10.13 லட்சமாகக் குறைந்துள்ளது. அதாவது, சராசரியாக ஒரு நாளைக்கு 25 பள்ளிகள் இழுத்து மூடப்பட்டுள்ளன; அதைப்போல், அரசு உதவிபெறும் பள்ளிகளின் எண்ணிக்கையும் 83 ஆயிரத்திலிருந்து 79 ஆயிரமாகச் சரிந்துள்ளது.
இதனால், 2014–15-ஆம் ஆண்டில் 26.95 கோடியாக இருந்த பள்ளி மாணவர் சேர்க்கை 2024–25-ஆம் ஆண்டில் 24.69 கோடியாகக் குறைந்துள்ளது.
மேலும், இக்காலகட்டத்தில் பள்ளிகளில் மாணவர்களின் இடைநிற்றல் விகிதமும் அதிகரித்துள்ளது. தொடக்கக் கல்வியில் 0.3 சதவிகிதமாக இருந்த இடைநிற்றல் விகிதம் 3.5 சதவிகிதமாகவும், மேல்நிலைப் பள்ளி நிலையில் 11.5 சதவிகிதமாகவும் உயர்ந்துள்ளது. அதைப்போல், நடுநிலைப் பள்ளியிலிருந்து மேல்நிலைப் பள்ளிக்குச் செல்லும் மாணவர்களின் விகிதம் 2014–15-ஆம் ஆண்டில் 91.58 சதவிகிதமாக இருந்த நிலையில், 2024–25-ஆம் ஆண்டில் 86.6 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.
குறிப்பாக, குறைந்த மாணவர் சேர்க்கை கொண்ட அருகருகேயுள்ள பள்ளிகளை ஒன்றிணைக்கும், பள்ளி ஒருங்கிணைப்பு (School Consolidation) திட்டத்தால் உள்ளூர் பள்ளிகள் மூடப்படுவதே அரசுப் பள்ளிகளை இழுத்து மூடுவதற்கான முக்கியக் காரணமாக மாறியுள்ளது. இதனால், பல மாணவர்கள் பள்ளிப் படிப்பைத் தொடர முடியாமல் படிப்பை இடைநிறுத்தும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். குறிப்பாக, சொந்த ஊர்களில் இருக்கும் பள்ளிகள் மூடப்படுவதாலும் வேறு பள்ளியுடன் இணைக்கப்படுவதாலும் ஏழை மாணவர்கள் உயர்கல்வியைத் தொடர முடியாத நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
படிக்க: அரசு பள்ளிகளில் இந்து மதச் சடங்குகள்: கல்வியைக் காவிமயமாக்கும் சத்தீஸ்கர் பா.ஜ.க. அரசு!
பா.ஜ.க. ஆளும் உத்தரப்பிரதேசம் மற்றும் மத்தியப்பிரதேசத்தில் மட்டும் கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 40 ஆயிரம் பள்ளிகள் ஒன்றிணைக்கப்பட்டுள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது.
அரசுப் பள்ளிகளுக்கு மூடுவிழா நடத்தும் இந்த பள்ளிகள் ஒருங்கிணைப்பு திட்டமானது பாசிச மோடி அரசால் உருவாக்கப்பட்ட தேசியக் கல்விக் கொள்கையின் முக்கிய அம்சமாகும். பள்ளிகளின் தரத்தை மேம்படுத்துவதாகக் கூறி பாசிச மோடி அரசால் முன் தள்ளப்படும் இந்த நயவஞ்சக திட்டம், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் உட்பட இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட்டதன் விளைவை இவ்வறிக்கை நம் கண்முன் கொண்டுவந்துள்ளது.
மறுபுறத்தில், இக்காலகட்டத்தில் நாடு முழுவதும் தனியார்ப் பள்ளிகளின் எண்ணிக்கை 2.88 லட்சத்திலிருந்து 3.39 லட்சமாக உயர்ந்துள்ளதானது மோடி அரசின் அப்பட்டமான கார்ப்பரேட் சேவகத்தைக் காட்டுகிறது.
ஒருங்கிணைக்கப்பட்ட பள்ளிகள், ஏற்கெனவே செயல்படும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் அனைத்திலும் குடிநீர், போக்குவரத்து போன்ற அடிப்படை வசதிகள் அனைத்தும் குதிரைக்கொம்பாகவே இருந்து வருகிறது. இச்சூழலில்தான் மாணவர்கள் தினமும் பயின்று வருகிறார்கள். இந்த இழிந்த கட்டமைப்பை மேம்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்காத ஒன்றிய அரசு, தனியார் நிறுவனங்களுக்கு கல்வித்துறையைத் தாரைவார்த்துக் கொண்டிருக்கிறது.
மேலும், இந்த அறிக்கை 9-ஆம் வகுப்பு மாணவர்களில் பலர் அல்ஜீப்ரா, வடிவியல் போன்ற உயர்நிலை கணிதப் பாடங்கள் மட்டுமல்லாமல், சதவிகிதம், பின்னம், விகிதம் போன்ற அடிப்படை கணிதப் பாடங்களில் கூட சிரமத்தை எதிர்கொள்வதாகச் சுட்டிக்காட்டுகிறது. அடிப்படைக் கற்றல் குறைபாடுகள் மேல்நிலை வகுப்புகளிலும் தொடர்வது கல்வித் தரத்திற்கு பெரும் சவாலாக இருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆகவே மாணவர்களின் கல்வித் தரத்தினை உயர்த்துவதிலும், மாணவர்கள் பள்ளிப் படிப்பைத் தொடர்வதிலும் எந்த அக்கறையும் காட்டாத பா.ஜ.க. அரசு, அரசுப் பள்ளிகளைத் தொடர்ந்து மூடி வருகிறது. மேலும், அதிகப்படியான தனியார் கல்வி நிறுவனங்களை அனுமதித்து அடிப்படை உழைக்கும் மக்கள் கல்வி கற்பதைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.
இத்தனை ஆயிரம் பள்ளிகளுக்கு மூடுவிழா நடத்திவிட்டுதான் மானங்கெட்ட மோடி அரசு இன்று ‘சுதந்திர’ தினத்தைக் கொண்டாடி இந்திய நாட்டு மக்களை முட்டாளாக்க முயல்கிறது.
![]()
ஆண்ட்ரே
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











