
16.08.2026
த.வெ.க. நூறு நாள் ஆட்சியின் துரோகப் பட்டியல்!
பத்திரிகைச் செய்தி
அன்பார்ந்த உழைக்கும் மக்களே!
த.வெ.க. ஆட்சியமைத்து ஆகஸ்ட் 17-உடன் 100 நாட்கள் நிறைவடைகின்றன.
இந்நாளையொட்டி, சாதனைகள் என்ற பெயரில் ஒரு போலிப் பட்டியலைத் தயாரிக்க முதலமைச்சர் விஜய் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஆனால், உண்மையில் தயாரிக்கப்பட வேண்டியது சாதனைப் பட்டியல் அல்ல… தமிழ்நாட்டு மக்களுக்கு த.வெ.க. அரசு இழைத்த “துரோகப் பட்டியல்”!
இந்த நூறு நாள் ஆட்சியில் போலீசு அராஜகம் தலைவிரித்தாடுகிறது; கல்வி, மருத்துவம் என அனைத்து துறைகளும், இயற்கை வளங்களும் கார்ப்பரேட்டுகளிடம் தாரைவார்க்கப்படுகின்றன; சாதி வெறியாட்டங்களுக்கு முன் அரசு வாய் மூடி மௌனம் காக்கிறது; பெண்களும் குழந்தைகளும் பாதுகாப்பின்றி தவிக்கின்றனர்; மாநில உரிமைகள் ஒவ்வொன்றாக அடகு வைக்கப்படுகின்றன; பாசிச பா.ஜ.க. அரசின் திட்டங்கள் கொல்லைப்புறமாக நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
மாற்று அரசியல் பேசுவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த த.வெ.க. அரசு, இந்த 100 நாட்களில் தமிழ்நாட்டிற்கு இழைத்த துரோகங்கள், மக்கள் விரோத நடவடிக்கைகளின் பட்டியலை சுருக்கமாக கீழே குறிப்பிடுகிறோம்.
போலி வாக்குறுதிகளும் குதிரை பேரமும்
1. “அனைவருக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம்” என்று தேர்தல் மேடையில் முழங்கிய விஜய், ஆட்சிக்கு வந்ததும் “500 யூனிட்டுக்குள் பயன்படுத்துவோருக்கு மட்டுமே அது பொருந்தும்” என மக்களை ஏமாற்றினார்! அது மட்டுமின்றி, பெரும்பாலானோருக்கு மின் கட்டணம் மூன்று மடங்கு வரை உயர்ந்துள்ளதோடு, மாநிலம் முழுவதும் மின்வெட்டு தலைதூக்கியுள்ளது.
2. ஐந்து ஏக்கருக்குக் குறைவாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு முழு பயிர்க்கடன் தள்ளுபடி என்ற வாக்குறுதியை நிறைவேற்றாமல் குறு விவசாயிகளுக்கு ரூ.50,000 வரையிலும், பெரு விவசாயிகளுக்கு வெறும் ரூ.5,000 மட்டுமே தள்ளுபடி என பல நிபந்தனைகளை விதித்து விவசாயிகளுக்குப் பச்சைத் துரோகம் இழைத்துள்ளார்.
3. தேர்தல் பிரசார மேடைகளில் அ.தி.மு.க-வை “ஊழல் அரசியலின் அடையாளம்” என்று கடுமையாக விமர்சித்த விஜய், இன்று அதே அ.தி.மு.க. ஊழல் பெருச்சாளிகளைத் தன் கட்சியில் இணைத்து, அவர்களுக்கு ‘தூய சக்தி’ பட்டம் வழங்கி வருகிறார். தமிழ்நாட்டில் இதுவரை கண்டிராத அளவிற்கு இழிவான குதிரை பேர அரசியல் தலை துக்கியுள்ளது.
4. மகளிருக்கு மாதம்தோறும் ரூ.2,500 உரிமைத் தொகை; ஆண்டுக்கு ஆறு இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள்; அனைத்துப் பேருந்துகளிலும் மகளிருக்கு இலவசப் பயணம் என அள்ளி வீசிய வாக்குறுதிகள் குறித்து இன்று 100 நாட்கள் முடிந்த பிறகும் வாய் திறக்காமல் மௌனம் சாதிக்கிறார்!
போலீசு அராஜகம்
5. த.வெ.க. ஆட்சியில் கன்னியாகுமரி சபரிவர்மன், தூத்துக்குடி அருணாச்சலம், பி.பாலாஜி மற்றும் சென்னை வெங்கடேசன் என ஐந்தே வாரங்களில் நான்கு பேர் போலீசால் கொட்டடிப் படுகொலை!
6. கடந்த தி.மு.க. ஆட்சியில் போலீசால் கொட்டடிப் படுகொலை செய்யப்பட்ட ஆகாஷ் டெலிசனுக்கு நீதிக் கேட்டு 100 நாட்கள் போராடிய பெற்றோருக்குக் கூட காட்டாமல் போலீசே அவரது உடலை வலுக்கட்டாயமாக எரித்த கொடூரம்!
7. நீட் தேர்வை எதிர்த்து போராடிய மாணவர்கள் மீதான தடியடி தாக்குதல், “புதிய தலைமுறை” நிரூபர் விஜயன் மீதான ஒடுக்குமுறை, “திருப்பரங்குன்றம் ஃபைல்ஸ்” ஆவணப்படத் திரையிடலுக்கு தடை, த.வெ.க. அரசை விமர்சிப்போரைக் கைது செய்யும் ஜெயலலிதா பாணி அவதூறு வழக்குகள் என அப்பட்டமான போலீசு ஆட்சியை அரங்கேற்றுகிறது த.வெ.க. அரசு!
தீவிரமடையும் தனியார்மயம்
8. த.வெ.க. ஆட்சிப் பொறுப்பேற்ற உடனே, 8,000 தனியார் கிளினிக்குகள் / மருத்துவமனைகளுக்கு இணையவழியில் அனுமதி! எவ்வித ஆய்வுமின்றி ஒரே நாளில் 848 தனியார் பள்ளிகளுக்கான அங்கீகாரம் புதுப்பிப்பு!
9. தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்திற்கு மாறுவதற்கான தடையில்லாச் சான்றிதழ் வழங்கும் முறையை எளிமையாக்கி, பா.ஜ.க-வின் தேசிய கல்விக் கொள்கைக்கு (NEP) கதவை திறந்து விட்டுள்ளது!
10. மின்சாரத்துறையில் தீவிரமாகும் கார்ப்பரேட்மயமாக்கம். சென்னை உட்பட மாநிலம் முழுவதும் உழைக்கும் மக்களின் தலையில் மின்கட்டணக் கொள்ளையைச் சுமத்தும் 56 லட்சம் ஸ்மார்ட் மீட்டர்களை பொருத்துவதற்கான டெண்டர் அறிவிப்பு!
11. சேலம் மாநகராட்சி குடிநீர் விநியோக ஒப்பந்தம் 25 ஆண்டுகளுக்கு “சூயஸ்” எனும் பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனத்திற்கு தாரைவார்ப்பு!
12. தமிழ்நாட்டின் 12 மாநகராட்சிகளில் தூய்மைப் பணிகளைத் தனியார் வசம் ஒப்படைக்க (PPP முறை) டெண்டர்; எதிர்ப்பின் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைப்பு!
13. “போதையில்லாத தமிழ்நாட்டை உருவாக்குவோம்” என்று கூறி ஆட்சிக்கு வந்துவிட்டு, இன்று டாஸ்மாக் பார்கள் தனியார்மயமாக்கல், இணையவழி மது முன்பதிவு என ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் போதையின் பிடியில் சிக்க வைப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரம்!
சுற்றுச்சூழல் பேரழிவு நடவடிக்கைகள்
14. கன்னியாகுமரியில் அணுக்கனிமச் சுரங்கம் அமைப்பதற்கு ஒன்றிய அரசின் ஐ.ஆர்.இ.எல் (IREL) நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட நில ஒதுக்கீட்டு ஆணை ஓராண்டிற்கு நீட்டிப்பு. தேர்தலுக்கு முன்பு இத்திட்டத்தை எதிர்ப்பது போல நாடகமாடிவிட்டு, ஆட்சிக்கு வந்தவுடன் மக்கள் வாழ்வாதாரத்தையும் சுற்றுச்சூழலையும் பலிகொடுக்கத் துணிகிறது த.வெ.க. அரசு.
15. குவாரிக் கொள்ளையை எதிர்த்து சிவகங்கை, ஈரோடு என தமிழ்நாடெங்கும் மக்கள் போராட்டம் நடைபெறுகிறது. “இயற்கை வளக் கொள்ளையைத் தடுப்போம்” என வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்துவிட்டு, குவாரிகளில் சோதனை என்ற பெயரில் கல்லா கட்டுகிறது த.வெ.க. அரசு.
16. தேர்தல் வாக்குறுதிப்படி பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை இரத்து செய்யாமல், விவசாயிகளிடமிருந்து பலவந்தமாகக் கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் “சிப்காட்” தொழிற்பூங்கா அமைப்பதற்கு முயற்சிக்கிறது.
மாநில உரிமை பறிப்பு
17. சட்டமன்றம் தொடங்கி பல்கலைக்கழகங்கள் உட்பட பல்வேறு அரசு நிறுவனங்களில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் புறக்கணிக்கப்பட்டு மூன்றாவதாகப் பாடப்பட்டு அவமதிக்கப்பட்டது குறித்து கடைசி வரை வாய்திறக்காமல் அமைதிக் காத்த த.வெ.க அரசு, மக்கள் எதிர்ப்பின் காரணமாக தற்போது அரசாணை வெளியிட்டு நாடகமாடுகிறது.
18. பா.ஜ.க-வை கொள்கை எதிரி எனக் கூறிவிட்டு, நூறு நாள் வேலையை ஒழிக்கும் “விபிஜி ராம் ஜி” போன்ற மக்கள் விரோதத் திட்டங்களை எவ்வித எதிர்ப்புமின்றி அமல்படுத்துகிறது.
19. காவிரி மேக்கேதாட்டு அணை விகாரத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், “நடுவர் மன்றம்” அமைக்கும் கோரிக்கை சேர்த்தது; அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டாமல் கர்நாடகா சென்று பேச்சுவார்த்தை நடத்த முயற்சித்தது, என காவிரி மீதான தமிழ்நாட்டின் உரிமைகளை அப்பட்டமாகத் தாரைவார்க்கிறது.
20. தமிழ்நாட்டின் 151 உயர் மருத்துவப் படிப்பு சீட்டுகள் உச்சநீதிமன்றத்தின் துணையுடன் மத்திய அரக்கு தாரைவார்க்கப்பட்ட வழக்கில் தமிழ்நாடு அரசு வழக்கறிஞர்கள் ஆஜராகாவில்லை; த.வெ.க அரசின் அலட்சியத்தால் தமிழ்நாட்டின் மருத்துவ உரிமை பலியிடப்பட்டுள்ளது.
பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை
21. “பெண்கள் பாதுகாப்பிற்காகச் ‘சிங்கப்பெண்’ திட்டம் கொண்டுவந்துவிட்டோம்” என்று விளம்பரம் தேடும் த.வெ.க ஆட்சியில், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ஆயுதப்படைப் பெண் போலீசே கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கொடுமை அரங்கேறியுள்ளது.
22. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டை பகுதியில் மூன்று வயதுப் பிஞ்சுக் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டையும் உலுக்கியது.
23. கடந்த ஜூன் 14 அன்று மட்டும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ஐந்து சிறுமிகள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்பட்ட கொடூரம். குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
24. சேலம் மாவட்டத்தில் த.வெ.க. கட்சியைச் சேர்ந்த மணிகண்டன் என்ற காமவெறியன் 50-க்கும் மேற்பட்ட பெண்களை ஆபாசமாகப் படம் எடுத்து மிரட்டி, பாலியல் வன்கொடுமை செய்து, பாலியல் தொழிலிலும் ஈடுபடுத்திவந்த கொடூரம். த.வெ.க. கட்சியைச் சார்ந்த பலர் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவது அடுத்தடுத்து அம்பலமாகிவருகிறது!
சிறுபான்மையினர் மீதான தாக்குதல்
25. பக்ரீத் பண்டிகைக்கு முந்தைய நாளில், பொது இடங்களில் மாடு மற்றும் கன்றுகளை வெட்டத் தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டபோது, சிறுபான்மை மக்களின் மத உரிமைகளைப் பாதுகாக்க த.வெ.க அரசு சிறு குரல் கூட எழுப்பாமல் முற்றிலும் வாய் மூடி மௌனம் காத்தது.
26. மொஹரம் பண்டிகைக்கு முன்பாக, மதம் மாறிய இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீட்டை (BCM) உயர்நீதிமன்றம் ரத்து செய்தபோது, “சிறுபான்மையினரின் பாதுகாவலன்” என மேடைகளில் மார்தட்டிக் கொள்ளும் த.வெ.க அரசு, எந்த சட்டப் போராட்டமும் நடத்தாமல் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க கும்பலுக்குக் கரசேவை ஆற்றியது! மக்கள் எதிர்ப்பு அதிகரித்த பின்னர் மேல்முறையீடு செய்வதாக நாடகம் ஆடுகிறது.
27. கோயம்புத்தூர் காளப்பட்டியில், கிறிஸ்துவ மக்கள் தேவாலயம் கட்டுவதற்கு “தீய நோக்கம் இருக்கக்கூடும்” என்ற நியாயமற்ற காரணத்தைக் கூறி உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை! மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கும் நோக்கத்தில் மதுரை திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற அனுமதித்த உயர்நீதிமன்றத் தீர்ப்பிற்கு இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு! இவ்வாறு பா.ஜ.க. கும்பலின் பாசிச சதித்திட்டங்களை நீதிமன்றங்கள் மூலம் நடைமுறைப்படுத்தப்படுவதை கைக்கட்டி வேடிக்கை பார்க்கும் த.வெ.க. அரசு!
தொடரும் சாதி வெறியாட்டங்கள்
28. த.வெ.க ஆட்சிக்கு வந்தால் ஆணவப் படுகொலை தடுக்க சிறப்புச் சட்டம் இயற்றுவோம் என்ற வாக்குறுதியை தற்போது வரை நிறைவேற்றவில்லை. மயிலாடுதுறையில் திவ்யதர்ஷினி – பார்த்திபன், தூத்துக்குடி சஞ்சய், நெல்லை சுரேஷ், திருநெல்வேலி இராமலட்சுமி, என கடந்த 75 நாட்களில் மட்டும் எட்டு ஆணவப் படுகொலைகள் அரங்கேறியுள்ளன.
29. தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தாலுகா, நெட்டூர் கிராமத்தில் மறவர் சாதிவெறிக் கும்பலால் தேவேந்திரகுல வேளாளர் மக்கள் மீது நடந்த கொலைவெறித் தாக்குதலில் ஆறு பேர் படுகாயமடைந்தனர்.
30. பள்ளி மாணவர்களின் அடையாள அட்டையில் சாதி விவரம் சேர்க்க முயன்ற அமைச்சர் செங்கோட்டையன், மக்கள் எதிர்ப்பால் மட்டுமே பின்வாங்கினார்!
31. ஆதிதிராவிடர்-பழங்குடியினர் நலத்துறையை “சமூக நீதித்துறை” என பெயர் மாற்றியது பார்ப்பனிய சக்திகளின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு துணைபோகும் வேலை!
32. கடந்த இரண்டு மாதங்களில் ஐந்து அருந்ததியர் இளைஞர்கள் படுகொலை – இதில் வயலில் குதிரை மேய்ந்துவிட்டதாகக் கூறி கொடைக்கானல் பூம்பாறையில் ராமர் என்ற இளைஞர் மறவர் சாதிவெறியர்களால் வெட்டிக் கொலை!
நாளுக்குநாள் இத்தைகைய கொடூரங்கள் தமிழ்நாட்டில் அதிகரித்து வருகின்றன. இத்தகைய சாதிய வன்முறைகளுக்கு காரணமான ஆதிக்கச் சாதி சங்களையும் அதனை பின்னனியிலிருந்து இயக்கும் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க கும்பலை தடை செய்ய வேண்டும் என மக்கள் அதிகாரக் கழகம் போராடி வருகிறது. ஆனால், த.வெ,க அரசோ சாதிவெறியாட்டங்கள் அதிகரிப்பதை வேடிக்கை மட்டுமே பார்த்துவருகிறது.
000
33. ஆட்சிக்கு வந்த நாள் முதல் ஒருமுறை கூட பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தவில்லை முதலமைச்சர் விஜய்! பிரதமர் மோடி எவ்வாறு பத்திரிகையாளர்களைச் சந்திக்காமல் மக்கள் பிரச்சினைகளுக்கு கள்ளமௌனம் காக்கிறாரோ, அதே பாணியில்தான் விஜய்யும் செயல்படுகிறார்!
34. த.வெ.க. நிர்வாகிகளோ, அரசு நிறுவனங்களுக்குள் நுழைந்து ஆய்வு என்ற பெயரில் அட்டூழியம் செய்வது, குவாரிகள் செங்கல் சூளைகளில் பணம் கேட்டு மிரட்டுவது, பதவி-வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி வசூல் செய்வது என அராஜகத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
35. திருவள்ளூர் மாவட்டத்தில் இறால் பதப்படுத்தப்படும் தனியார் தொழிற்சாலையில் அம்மோனியா வாயுக் கசிவினால் உயிரிழந்த 18 தொழிலாளர்களுக்கு ரூ. 2 இலட்சம் என்ற அற்பத் தொகையே த.வெ.க அரசு வழங்கியது; மேலும், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த குமானி ஜுவாங்கா என்ற 15 வயது பழங்குடியின சிறுமியின் உடலை அவரது அண்ணனுக்கே தெரியாமல் திருட்டுத்தனமாக ஒடிசாவிற்கு அனுப்பியது தொழிலாளர் விரோதப் போக்கின் அப்பட்டமான வெளிப்பாடு!
இது வெறும் நூறு நாள் கணக்கு அல்ல — இது ஒரு எச்சரிக்கை! தேர்தல் மேடையில் மாற்று அரசியல் பேசி வாக்கு பெற்ற விஜய், ஆட்சிக்கு வந்ததும் பாசிச பா.ஜ.க-வுக்கும், கார்ப்பரேட் கொள்ளையர்களுக்கும், சாதிய-மத வெறியர்களுக்கும் அடிபணிந்து நிற்பதுதான் இந்த நூறு நாட்களின் உண்மைச் சாதனை!
போலி விளம்பரங்களாலும், கவர்ச்சி நாடகங்களாலும் இந்த நூறு நாள் மக்கள் விரோத ஆட்சியை மூடி மறைக்க முடியாது. கார்ப்பரேட் நலம் பேணும், இந்துத்துவ பாசிசத்திற்குச் சரணடையும், உழைக்கும் மக்களை ஒடுக்கும் இந்த த.வெ.க அரசின் முகத்திரையைக் கிழித்தெறிவோம்! ஓரணியில் திரண்டு வீதிதோறும் போராடுவோம்!
![]()
தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலப் பொதுச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்,
தமிழ்நாடு – புதுவை.
9962366321
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads





