ஹாக்கி சீருடை காவி நிற மாற்றம்: விளையாட்டுத்துறையில் காலூன்றும் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. கும்பல்!

2019 ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் விளையாட்டு வீரர்கள் இடையில் மாற்றிக் கொள்ளும் சீருடை நிறத்தைக் காவி நிறமாக மாற்றியது; 2023 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் விளையாட்டு வீரர்களின் சீருடை நிறத்தைக் காவியாக மாற்ற முயன்றது ஆகியவற்றின் தொடர்ச்சியாகவே தற்போது ஹாக்கி அணியின் சீருடை நிறமும் காவியாக மாற்றப்பட்டுள்ளது.

ந்திய ஆடவர் மற்றும் மகளிர் ஹாக்கி அணிகளின் சீருடை நிறத்தை நீலத்திலிருந்து காவிக்கு மாற்றுவதாக கடந்த ஜூலை 27 அன்று ஹாக்கி இந்தியா நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது ஹாக்கி விளையாட்டை அவமதிக்கும் நடவடிக்கை என இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் தலைவர்கள் பலரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். மேலும், ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. பாசிச கும்பல் மேற்கொண்டுவரும் காவிமயமாக்கலின் மற்றொரு நடவடிக்கை இது எனப் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்திய ஹாக்கி அணி 1928 முதல் தற்போது வரை கிட்டத்தட்ட 98 ஆண்டுகளாக நீல நிற சீருடை அணிந்து பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வந்துள்ளது. இந்த நீல நிற சீருடைதான் இந்திய விளையாட்டு வீரர்களின் அடையாளமாக இருந்து வந்தது. இந்நிலையில்தான், இந்தக் காவிமயமாக்கல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை வெளியிட்ட இந்தியாவின் ஹாக்கி விளையாட்டுத்துறை தலைவர் திலீப் டிர்க்கி, இம்மாற்றம் குறித்து முன்கூட்டியே எந்தத் தகவலும் வழங்கப்படவில்லை என்றும் தன்னிடமோ அல்லது அணியில் இருக்கும் மற்றவர்களிடமோ நிர்வாகக் குழுவிடமோ எந்த விதமான ஆலோசனையும் நடத்தப்படவில்லை என்றும் அம்பலப்படுத்தியுள்ளார். திலீப் டிர்க்கியின் இக்கூற்று பெரும் விவாதத்தைக் கிளப்பிய நிலையில், இது நிர்வாகக் குழுவில் கலந்தாலோசிக்கப்பட்ட முடிவுதான் என இந்தியாவின் ஹாக்கி விளையாட்டுத்துறையின் செயலாளர் போலேநாத் சிங் சமாளித்துள்ளார். இந்த போலேநாத் சிங், இந்திய மல்யுத்த வீராங்கனைகளைப் பாலியல் வன்கொடுமை செய்த பாலியல் பொறுக்கி ப்ரிஜ் பூஷன் சரண் சிங்குடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய தேசியக் கொடியில் உள்ள நிறமான காவி, தைரியத்தையும் தியாகத்தையும் வெற்றியையும் குறிக்கிறது என்றும் இந்தியக் கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் கொண்டாடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் இந்திய ஹாக்கி அணியின் தலைமையும் சங்கி கும்பலும் கூறி வருகிறது. ஆனால், இது பாசிச கும்பலின் காவிமயமாக்கலை மறைப்பதற்கான பொய் பிரச்சாரமே ஆகும்.

மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததிலிருந்து காவிமயமாக்கலும் இந்துராஷ்டிரத்திற்கான முனைவாக்கலும் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. எல்லாத் துறைகளிலும் காவியைத் திணிப்பது, இந்து மதவெறியைத் தூண்டுவது போன்ற பாசிச வழிமுறைகளை மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

இஸ்லாமியர்களைத் தவறாகவும் அரக்கர்கள் போலவும் சித்தரிக்கும் வகையில் வரலாற்றைத் திரிப்பது; அரசு கட்டடங்களுக்குக் காவி நிறமடிப்பது; இஸ்லாமியப் பெயர்களில் இருக்கும் ஊர்களின் பெயர்களை இந்து பெயராக மாற்றுவது; திருவள்ளுவருக்குக் காவி நிறம் பூசுவது; தேசிய மருத்துவ ஆணையத்தின் இலட்சிணையில் தன்வந்திரியைப் புகுத்துவது போன்ற பல்வேறு நடவடிக்கைகளின் மூலம் இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒழித்துவிட்டு இந்துமயமாக்கலை திணித்து வருகிறது. இப்பின்னணியில்தான், இந்திய ஹாக்கி அணியின் சீருடையின் நிற மாற்றத்தையும் பார்க்க வேண்டியுள்ளது.

குறிப்பாக, காவி நிறமானது இந்துத்துவத்தைக் குறிப்பதற்கும் இந்து மதத்தின் குறியீடாகவும் தொடர்ந்து கட்டமைக்கப்பட்டு வந்துள்ளது. 1980-களின் நடுப்பகுதியில் பாபர் மசூதியை வைத்து ஆர்.எஸ்.எஸ். கும்பல் மதவெறியூட்டிவந்த சமயத்திலிருந்தே, காவி இந்துத்துவத்தின் ஓர் அடையாளமாகப் பறைசாற்றப்பட்டு வந்தது. அப்போதிருந்தே காவி என்பது சாதாரணமான நிறம் என்ற நிலையிலிருந்து இந்து மதத்தின் அடையாளம் என்ற நிலையைப் பெற்றது. அந்தவகையில், இந்துராஷ்டிரத்தை நிறுவுவதில் காவிமயமாக்கலை மிகவும் முக்கியமான ஒரு படியாக பாசிச கும்பல் கருதுகிறது. காவியை எல்லா இடங்களிலும் திணிப்பதை இந்துத்துவம் எல்லா இடங்களிலும் ஊடுருவுவதோடு பொருத்திப் பார்க்க வேண்டியுள்ளது.

அதிலும் இந்த நிற மாற்றமானது நெதர்லாந்தில் நடக்கவிருக்கும் 2026 உலகக் கோப்பை போட்டிக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் நோக்கம், உலக அரங்கில் காவியை இந்தியாவின் அடையாளமாக முன்னிறுத்துவதும், அதன் மூலம் இந்துத்துவத்தை இந்தியாவின் அடையாளமாக முன்னிறுத்துவதும் ஆகும்.

மறுபுறம், ஹாக்கி சீருடையின் இந்த நிற மாற்றமானது பாசிச கும்பல் விளையாட்டுத்துறையில் காலூன்றத் துடிப்பதை துலக்கமாக வெளிக்காட்டுகிறது. 2019 ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் விளையாட்டு வீரர்கள் இடையில் மாற்றிக் கொள்ளும் சீருடை நிறத்தைக் காவி நிறமாக மாற்றியது; 2023 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் விளையாட்டு வீரர்களின் சீருடை நிறத்தைக் காவியாக மாற்ற முயன்றது ஆகியவற்றின் தொடர்ச்சியாகவே தற்போது ஹாக்கி அணியின் சீருடை நிறமும் காவியாக மாற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு, ஒவ்வொரு விளையாட்டிலும் காவிமயமாக்கல் புகுத்தப்பட்டு வருவதும், ஆர்.எஸ்.எஸ். குண்டர்கள் முக்கியப் பொறுப்புகளில் அமர்த்தப்பட்டு வருவதும், இந்திய விளையாட்டுத்துறையில் பாசிச கும்பலாட்சி நிறுவப்பட்டு வருவதையே காட்டுகிறது. ஆகவே, ஹாக்கி சீருடை நிற மாற்றத்திற்கு எதிராகக் குரல் கொடுப்பவர்கள் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. பாசிச கும்பல் விளையாட்டுத்துறையில் காலூன்றுவதற்கு எதிராகவும் பாசிச கும்பலாட்சி நிறுவப்படுவதற்கு எதிராகவும் குரல் கொடுக்க வேண்டும்.


மாயவள்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க