ரோக்கியம் நிறைந்த மனிதவள ஆற்றல் தான் ஒரு நாட்டின் உண்மையான செல்வாதாரம். விளையாட்டு என்பது மனிதர்களின் உடல் வலிமைக்கும் மன மகிழ்ச்சிக்கும் திறமைக்கும் அடிப்படையான ஒரு கலை. ஒரு நாட்டின் இளைஞர் பட்டாளத்தின் ஆற்றலின் மகத்துவத்தை அகிலம் அறிய பறைசாற்றும் அரிய வாய்ப்பு ஒலிம்பிக் போட்டிகள்.

உலக மக்களில் ஆறில் ஒருவர் இந்தியர்; சீனாவிற்கு அடுத்தபடியாக உலகிலேயே நமது நாட்டில் தான் இளைஞர் ஆற்றல் அதிகமாக உள்ளது. மனித வளத்தை பயன்படுத்துவதில் சீனாவிற்கும் இந்தியாவிற்கும் மலைக்கும் மடுவுக்குமான வேறுபாடு உள்ளது. கியூபா, அர்ஜென்டினா உள்ளிட்ட சின்னஞ் சிறிய நாடுகள் கூட ஒலிம்பிக் போட்டிகளில் அளப்பரிய சாதனைகளை நிகழ்த்தி ஏராளமான பதக்கங்களை பெற்றுள்ளன.

படிக்க :
♦ ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா ஜொலிப்பது இல்லையே ஏன் ?
♦ ஹரியானாவின் குத்துச் சண்டை வீரர் குல்ஃபி விற்கும் அவலம் !

32-வது ஒலிம்பிக் தொடர் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 22-ம் தேதி துவங்கி ஆகஸ்ட் 8-ம் தேதி நிறைவுற்றுள்ளது. இந்திய வரலாற்றில் முதன்முதலாக தடகளத்தில் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். பதக்கப் பட்டியல் தரவரிசையில் இந்திய துணை கண்டம் 48-வது இடத்தில் உள்ளது. 40 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு தங்கப் பதக்கம் இரண்டு வெள்ளிப் பதக்கம் நான்கு வெங்கல பதக்கத்தை இந்திய விளையாட்டு வீரர்கள் பெற்றுள்ளனர்.

ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா பின்தங்கியிருப்பதன் காரணம் என்ன ?

ஒலிம்பிக் போட்டிகளில் மட்டுமல்ல, கிரிக்கெட் தவிர வேறு எந்த சர்வதேச விளையாட்டுப் போட்டிகளிலும் இந்தியா பின் தங்கியே இருப்பதற்கான காரணங்கள் பல இருக்கின்றன. அவற்றில் முதன்மையானது போட்டியாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் இருக்கும் சாதிய – வர்க்கப் பாகுபாடுகளே. அடுத்ததாக பிற எல்லா துறைகளைப் போலவே விளையாட்டுத்துறையிலும் ஊறிப் போயிருக்கும் இலஞ்ச ஊழல் முக்கியப் பங்காற்றுகிறது.

இங்கு நமது சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் சாதி ஆதிக்க வக்கிர மனநிலை பல் திறன்மிக்க வீரர்களை பயிற்சித்தடங்களிலேயே குழிதோண்டி புதைத்துவிடுகிறது

வெற்றி பெறவும் சாதிக்கவும் திறமையானவர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன. ஏழை எளிய தாழ்த்தப்பட்ட; பிற்படுத்தப்பட்ட குடும்பங்களில் பிறந்தவர்கள் திறமைகள் பல பெற்றிருந்த போதும் புறக்கணிக்கப்படுகிறார்கள். சிறந்த விளையாட்டு வீரர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு ஆக்கமும் ஊக்கமும்; உதவியும் அளித்து சர்வதேச தரத்திற்கு நிகராக விளையாட்டு வீரர்களின் ஆற்றலை வளர்த்தெடுக்க நேர்மையான அமைப்புகள் இங்கு இல்லை.

தரமான பயிற்சியாளர்கள்; உள்கட்டமைப்பு வசதிகள் எதுவும் இந்தியாவில் கிடையாது. மீனவர் சமுதாயத்தில் அசுர வேகத்தில் நீச்சலில் ஈடுபடும் இளைஞர்கள் உள்ளனர். அவர்களை ஏறெடுத்தும் பார்க்க நாதியில்லை ஐந்து நட்சத்திர விடுதிகளில் உள்ள நீச்சல் குளங்களில் பயிற்சி எடுத்த கோடீஸ்வரர் குலக்கொழுந்து நீச்சல் வீரர்களாக தேர்வு செய்யப்படுகின்றனர். நல்ல உடற்கட்டும் வலிமையும் கொண்ட உள்ள கிராமப்புற இளைஞர்கள் தங்களது திறமைகளை வளர்த்துக் கொள்ள வசதி வாய்ப்புகள் கிடைப்பதில்லை.

தலித் சமூகத்தை சார்ந்த வந்தனா கட்டாரியா பங்கேற்ற ஹாக்கிப் போட்டியின் தோல்வியை வெடி வைத்து கொண்டாடிய ஆதிக்க சாதிவெறியர்களின் குரூரம் ! 

ஒலிம்பிக் விளையாட்டு வீரர்களை தேர்வு செய்வதில் அரசியல் செல்வாக்கும்; சாதி ஆதிக்கமும் பிரதான பங்கை வகிக்கின்றன. இந்திய துணை கண்டத்தின் தலைசிறந்த ஹாக்கி விளையாட்டு வீராங்கனை வந்தனா கட்டாரியா உத்தரகாண்ட் மாநிலத்தின் ஹரித்துவார் பகுதியை சேர்ந்தவர். இந்திய ஹாக்கி அணியின் அடையாளமாய் திகழ்பவர். ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் மூன்று கோல்களை போட்டு சாதனை படைத்த அற்புதமான ஹாக்கி விளையாட்டு வீராங்கனை. அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்று அதன்மூலம் இந்திய மகளிர் அணியின் வரலாற்றில் திருப்புமுனையை ஏற்படுத்திய வீரமங்கை.

எவ்வித வசதிகளும் இல்லாத தலித் மக்கள் வாழ்கின்ற குடிசைப்பகுதியில் வந்தனா கட்டாரியா வசித்து வந்த கட்டாரியா தனது கடுமையான முயற்சியால் சாதனை படைத்தாலும், அரையிறுதிப் போட்டியில் அர்ஜெண்டினா நாட்டுடன் போட்டியிட்டு இந்திய அணி தோல்வியடைந்தது.

மொத்த இந்தியாவே இந்திய அணியின் தோல்வியைக் கண்டு வருந்தியதோடு, அணி வீரர்களின் கடும் உழைப்புக்குப் பாராட்டு தெரிவித்துக் கொண்டிருந்த வேளையில், விஜய்பால் என்கின்ற ஆதிக்க சாதி வெறியன் தலைமையில் ஒரு கும்பல், இந்திய ஹாக்கி அணியின் தோல்வியை, பட்டாசு வெடித்துக் கொண்டாடி சாதி வெறியில் கொக்கரித்துள்ளது.

வந்தனா கட்டாரியா தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதாலும்; அவரது தலைமையிலான ஹாக்கி அணியில் தலித் சமூகத்தவர்கள் இருப்பதாலும் ஒலிம்பிக்கில் தோல்வியடைந்ததாக கூறி; வந்தனா கட்டாரியா மற்றும் தலித் சமூகத்தையும் இழிவுபடுத்தும் வகையில் கூக்குரலிட்டு உள்ளனர்.

இந்திய துணை கண்டத்தின் மாபெரும் விளையாட்டு வீராங்கனை சாதியின் பெயரால் இழிவுபடுத்தப்பட்ட இந்த செயலை, ஒன்றிய அரசும் மாநில அரசும் கண்டுகொள்ளாமல் வாய் மூடி மௌனியாக இருக்கின்றனர். எல்லா விளையாட்டுகளில் இருந்தும் பட்டியல் இனத்தவரை வெளியேற்ற வேண்டும் என்று சாதிவெறியர்கள் கூச்சலிட்டு உள்ளனர்.

பாகிஸ்தானுடனான இந்திய கிரிக்கெட் போட்டியின் போது, பாகிஸ்தான் அணியினரின் திறனை ஏதேனும் முசுலீம் ஒருவர் பாராட்டினாலோ, அல்லது பாகிஸ்தான் அணியின் வெற்றியை ஒரு முசுலீம் புகழ்ந்தாலோ, உடனேயே கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்கிறது போலீசு. இங்கு இந்திய அணியின் சர்வதேசத் தோல்வியை ஒரு கிரிமினல் சாதிவெறிக் கும்பல் கொண்டாடியிருக்கிறது. இதில் வழக்கு பதிவு செய்வதற்கே பலர் போராட வேண்டியது இருக்கிறது.

சாதி ஆதிக்க வெறியர்களின் முகத்தில் காரி உமிழுவதைப்போல் வந்தனா கட்டாரியா “நான் தலித் சமூகத்தில் பிறந்ததற்காக பெருமை கொள்கிறேன்” என்று நெஞ்சு நிமிர்த்தி கூறியிருக்கிறார். “ஒடுக்கப்பட்ட மக்களின் வீரம் நான், குரல் அற்ற மக்களின் நம்பிக்கை நான்” என்று கூறுகிறார். பாலின ஒடுக்குமுறை நிலவுகின்ற நாட்டில்; சாதி ஆதிக்க வெறி புரையோடிப்போயுள்ள நாட்டில்; வறுமை ஏழ்மை உள்ளிட்ட பல தடைகளை தாண்டி ஒரு பெண் வீராங்கனை இவ்வாறாக உருவாவது எளிதான காரியம் அல்ல.

கிரிக்கெட் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் பார்ப்பன சாதி ஆதிக்க கும்பல்தான் ஆக்கிரமித்துள்ளனர். கேவலமான தோல்வியை பல்வேறு விளையாட்டுகளில் இவர்கள் அடைந்தபோதும் யாரும் இவர்களுடைய பிறப்பு குறித்து; தோல்விக்கு காரணம் இவர்களுடைய சாதிதான் என்று யாரும் கருத்து சொல்லவில்லை. இந்திய துணை கண்டம் முழுவதும் குறுக்கும் நெடுக்குமாக புரையோடிக் கிடக்கும் சாதி ஆதிக்க உணர்வை இந்த சம்பவம் காட்டுகிறது.

சூதாட்டமயமாகும் விளையாட்டுத்துறை :

உற்பத்தியில் ஈடுபடும் உழைப்பு நேரம்போக எஞ்சிய ஒரு சில மணி நேரத்தில் தான்; விளையாட்டில் ஈடுபடுவது அல்லது அதை பார்த்து ரசிப்பது இயலும். மற்ற விளையாட்டுகளைப்போல் இல்லாமல் இந்தியாவின் கிரிக்கெட் விளையாட்டுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. பார்ப்பன உயர் சாதி கும்பல்தான்; இவ்விளையாட்டில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. தொலைக்காட்சி ஊடகத்தின் விளைவாய் சிற்றூர்களிலும் கூட மட்டைப் பந்து பார்ப்பது ஒரு நாகரிக செயல்பாடாக மக்கள் கருதுகிறார்கள். நாட்டுப்புற சிறுவர்கள் கூட மட்டைப் பந்து தவிர வேறு விளையாட்டில் ஈடுபடுவதில்லை.

விளையாட்டு மனித சமூகம் தொடர்புடைய எளிய உறவு என்ற நிலை இன்று மாறிவிட்டது. மக்கள் தங்கள் உழைப்பு சாதனங்களில் இருந்தும் ஏற்கனவே செய்து வந்த உற்பத்தி உறவுகளில் இருந்தும் இன்று அன்னியமயமாக்கப்பட்டு விட்டனர். விளையாட்டும் இன்று அந்நியமயம் ஆக்கப்பட்டுவிட்டது. கிரிக்கெட்டை தலையில் வைத்துக் கொண்டாடும் கார்ப்பரேட் நிறுவனங்களும்; நடுவண் – மாநில அரசுகளும் ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதி உள்ள விளையாட்டு கலைகளை வளர்ப்பதில் போதுமான அக்கறை காட்டுவதில்லை.

கிரிக்கெட் விளையாட்டும் பங்கேற்கும் விளையாட்டு வீரர்களும் கார்ப்பரேட் ஏகபோக நிறுவனங்களின் விசுவாச அடிமைகளாகி விட்டனர். இத்தகைய விளையாட்டு வீரர்களின் சுதந்திரம் என்பது சந்தையின் சுதந்திரம்தான். சுயநலம் மிகுந்த தனிமனித வழிபாடுதான் அவனிடமிருந்து வெளிப்படுமே தவிர நாட்டுப்பற்றுக்கு இங்கே இடம் கிடையாது. சந்தைக்கு தான் அங்கே இடம் இருக்கிறது.

அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்துள்ள லஞ்ச ஊழல் முறைகேடுகள் ஒலிம்பிக் வீரர்களை தேர்வு செய்வதிலும் முக்கியப் பங்காற்றுகிறது. 2008-ம் ஆண்டு இந்திய ஹாக்கி அணிக்கு வீரர்களை தேர்வு செய்வதற்கு கையூட்டு வாங்கியதை; அஸ்தக் ஹாட் லைன் டுடே தொலைக்காட்சி அப்பட்டமாக ஒளிபரப்பியது.

கிரிக்கெட் ஏகபோக நிறுவனங்களின் வர்த்தக சூதாட்டக்களமாக மாறிவிட்டது. காலனிய ஆட்சியாளர்கள் உருவாக்கிய கிரிக்கெட் மோகம், இன்று சூதாட்டத்திற்கும், விளையாடுபவர்களின் ஏலத்திற்கும் வந்தடைந்து இருக்கிறது. கூட்டுழைப்பு சிந்தனையையும், உடல் ஆரோக்கியத்தையும் வலுப்படுத்தும் விளையாட்டுக்களில் இளைஞர்கள் ஈடுபடுவதை ஊக்குவிப்பதும் அதில் திறனுள்ள மாணவர்களை வளர்ப்பதும் மிகவும் அவசியமாகும். கிரிக்கெட்டிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை, இத்தகைய விளையாட்டுத்துறைக்கு கொடுத்து, சாதிய பாகுபாடுகளற்ற தேர்வுமுறை மற்றும் பயிற்றுவிக்கும் திட்டத்தையும் முன்னெடுக்கும் போதுதான், ஒலிம்பிக் தரப்பட்டியலில் கவுரவமான இடம கிடைக்கும்.

படிக்க :
♦ ஆசிய விளையாட்டுப் போட்டி இந்திய அணியை நிர்வகிக்கும் கிரிமினல்கள் !
♦ வீராங்கனை காஞ்சனமாலாவை பிச்சைக்காரியாய் பெர்லினில் அலைய விட்ட பாஜக அரசு !

வருணாசிரம கொடுங்கோல் ஆட்சியை மீண்டும் புதிய வடிவத்தில், கார்ப்பரேட் முதலாளித்துவ கும்பலின் நலன் ஒன்றையே குறிக்கோளாய் கொண்ட ஒரு பாசிச ஆட்சியை நிறுவ இந்திய ஆட்சியாளர்கள் முயலும் இந்த நேரத்தில் வர்க்கப் போராட்டத்திற்கு இணையாகவும் துணையாகவும் சாதி ஆதிக்கத்தை எதிர்த்த போராட்டத்தை முன்னெடுக்க வேண்டியுள்ளது. வந்தனா கட்டாரியா எழுப்பிய உரிமைக்குரலை நாடெங்கும் எதிரொலிக்கச் செய்வோம்.

சமத்துவ சமூகம் உருவாக்குவதற்கான போராட்டத்தின் வாயிலாகத்தான் ஒலிம்பிக்கில் நாம் சாதனைகளை படைக்க முடியும்.


இரணியன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க