பாசிஸ்டுகளே! நாங்க எதையும் இன்னும் மறக்கல… | கவிதை

ருப்புப் பணத்தை ஒழிக்கிறேனு சொல்லிபுட்டு
கடுகு டப்பா, பருப்பு டப்பாள சேர்த்து வைத்த
காசை எல்லாம் களவாடி போயிட்டு
கருப்புப் பணத்தை மட்டும் கடைசி வரை ஒழிக்காததை
நாங்க இன்னும் மறக்கல!

செத்துப்போன காசை எடுத்துக்கிட்டு
போன வழியிலேயே சுருண்டு விழுந்து
மாண்டு போன எங்க கதையெல்லாம்
நாங்க இன்னும் மறக்கல!

கொரோனா காலத்துல
ஒரு வேளை சோத்துக்கு கையேந்தி
நாங்கள் நிற்கையில
அதானி, அம்பானி மட்டும் சொத்து சேர்த்து
உலக பணக்கார வரிசையில் முந்தி வந்து
முன் வரிசையில் நின்னதெல்லாம்
நாங்க இன்னும் மறக்கல!

பட்டதாரி இளைஞர் கூட்டமெல்லாம்
படிச்ச படிப்புக்கு வேலை கிடைக்காம
பத்தாயிரம் சம்பளத்துக்கு
கொத்தடிமையாய் மாறிப்போன கதையெல்லாம்
நாங்க இன்னும் மறக்கல!

வடக்கிருந்து வாழ வழி தேடி வந்த
வடமாநில தொழிலாளர் கூட்டம்
கூட்டம் கூட்டமா நடந்து போன பாதையெல்லாம்
ரத்தம் வடிந்த பாத தடங்கள் படிஞ்சு
பாதையெல்லாம் சிவந்து தான் கிடந்ததை
நாங்க இன்னும் மறக்கல!

கடன உடன வாங்கி
காக்கா குருவி போல சேத்த காசை எல்லாம் வச்சு
தொழில் தொடங்கினா

ஜிஎஸ்டி வரியைப் போட்டு
வாங்கின கடனை கட்ட முடியாம
குடும்பத்தோட நாங்க தூக்குல தொங்குன கதை எல்லாம்
நியூஸ் பேப்பர் முழுக்க நிறைஞ்சு தான் கிடந்ததை
நாங்க இன்னும் மறக்கல!

ஒலிம்பிக்ல தங்க மெடல ஜெயிச்சு வந்து
மொத்த நாட்டுக்கும்
பெருமை சேர்த்த மல்யுத்த வீரமங்கைகள்
நீதிக்காக போராட வீதியில நின்னு,
நீதி கிடைக்காததை
நாங்க இன்னும் மறக்கல!

விலைவாசி உயர்வு விண்ணை முட்ட
வாங்கும் போதே கண்ணீரோடு வாங்கிய வெங்காயமும்
தங்கத்துக்கு நிகரா தக்காளி வந்துருமோனு
மனம் தத்தளிச்சது கண்ணமூடுனா
கனவுலயும் தக்காளி வந்துபோனதை
நாங்க இன்னும் மறக்கல!

கந்து வட்டிக்கு கடன் வாங்கி
பத்தாத காசுக்கு
தாரத்தோட தாலியை வித்து
விதை வாங்கி, உரம் வாங்கி களைப்பறிச்சி
அறுத்ததெல்லாம் வித்து பார்த்தா
உழுத கணக்கு அழுது தான் தீர்ந்துச்சு!
வாங்குன கடனுக்கு வழி தெரியாம
எங்க குடும்பங்கள் எல்லாம் பால்டாயிலோட
வாழ்க்கையை முடிச்சுக்கிட்டதை
நாங்க இன்னும் மறக்கல!

மலையோடு மழையா மகிழ்ச்சியா வாழ்ந்த மணிப்பூர் மக்கள் கூட்டம்
சங்கி கூட்டம் புகுந்து
இனவெறியை தூண்டிவிட்டதால
குக்கிப் பெண்களை அடித்து ஆடைகளை அவிழ்த்து
கூட்டம் கூட்டமாய் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்தை கண்டு
மொத்த உலகமே அதிர்ச்சியில் உறைந்து போனதை
நாங்க இன்னும் மறக்கல!

குஜராத்தில் கொத்து கொத்தா
முஸ்லிம் மக்களை கொன்னது பத்தாதுன்னு
CAA ,NRC சட்ட திருத்தம் கொண்டு வந்து
முஸ்லிம் மக்களையும் ஈழத் தமிழர்களையும்
நிரந்தர அகதிகளாக்க திட்டம் போட்டிருக்கிறதை
நாங்க இன்னும் மறக்கல!.

நம்மோட  வரிப்பணத்தில் உருவான
அரசோட சொத்துக்களை
அதானிக்கும் அம்பானிக்கும்
கொஞ்சம் கொஞ்சமா தாரைவார்க்கிறதை
நாங்க இன்னும் மறக்கல!

சங்கிகளே,
நீங்க எங்களை பிளக்க
அற்பத்தனமாக மதத்தை வைத்து
கலவரத்தை தூண்டிவிட முயற்சி செய்தாலும்
நாங்க எதையும் மறக்கல!

மோடி,
நான் கடவுள் அவதாரமுனு
சொல்லிக்கிட்டு திரிந்தாலும்
நாங்க நம்பப்போறதில்ல!

பாசிஸ்டுகளே,
மீண்டும் ஒருமுறை கூறுகிறோம்
நாங்க எதையும் இன்னும் மறக்கல!


செந்தாழன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTubeவிவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க