இத்தாலியில் மூடப்பட்ட “மிடேனி” (Miteni) எனும் நச்சு ரசாயன நிறுவனத்தை இந்தியாவின் “லக்ஷ்மி ஆர்கானிக் இண்டஸ்ட்ரீஸ்” (Laxmi Organic Industries) நிறுவனம் வாங்கி இயக்கி வருவதாக கடந்த ஆண்டு இறுதியில் கார்டியன் பத்திரிக்கையின் புலனாய்வு அறிக்கை அம்பலப்படுத்தியது. இதற்குப் பின்பு ரசாயன உற்பத்தி ஆலைக்கு எதிராக இந்தியா முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.
இத்தாலியின் விசென்சா (Vicenza) நகரில் மிடேனி எனும் ஆலை பி.எஃப்.ஏ.எஸ் (Perfluoroalkyl and Polyfluoroalkyl Substances) எனும் நச்சு ரசாயனத்தை உற்பத்தி செய்து வந்தது. இது மண்ணிலோ, தண்ணீரிலோ கலந்தால் சிதைவதற்குப் பல நூறு ஆண்டுகள் ஆகும். மனித உடலுக்குள் சென்றால் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும்.
இந்த நச்சு ரசாயனம் ஐரோப்பாவின் முக்கிய நீர்நிலைகளில் ஒன்றையும் மாசுபடுத்தியுள்ளது. இதனால் விசென்சா (Vicenza), வெரோனா (Verona) மற்றும் படுவா (Padua) ஆகிய மாகாணங்களைச் சேர்ந்த 3,50,000-க்கும் மேற்பட்ட மக்கள் குடிநீர் மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக ஆலை தொழிலாளர்களே கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். முன்னாள் தொழிலாளி ஒருவரின் ரத்தத்தில் மனித வரலாற்றிலே இதுவரை இல்லாத அதிகப்படியான பி.எஃப்.ஏ.எஸ் (PFAS) நச்சு ரசாயனம் கலந்திருப்பது சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.
ரத்தத்தில் பி.எஃப்.ஏ.எஸ் ரசாயன அளவு அதிகமாக இருந்தால் இதய நோய், புற்றுநோய், கல்லீரல் மற்றும் சிறுநீரக பாதிப்பு, மலட்டுத்தன்மை போன்ற கடுமையான பாதிப்புகள் ஏற்படும்.
எனவே, சுற்றுச்சூழல் மாசுபாட்டை ஏற்படுத்துவதாலும், மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருப்பதாலும் 2018 ஆம் ஆண்டு இத்தாலிய அரசாங்கம் அந்த நிறுவனத்தை மூடியது. நிறுவனத்தின் முதலாளிகள் குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்டு 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அந்நாட்டின் நீதிமன்றம் தண்டனையும் வழங்கியிருக்கிறது.
இந்நிலையில் இத்தாலிய அரசாங்கத்தால் மூடப்பட்ட ஆலையின் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் பிரித்து கப்பலின் மூலம் இந்தியாவிற்குக் கொண்டு வரப்பட்டன. அவை மகாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு தெற்கே உள்ள லோட்டே பரசுராம் (Lote Parshuram) பகுதியில் மீண்டும் நிறுவப்பட்டன. இத்தாலியின் நிறுவனம் தயாரித்த அதே பி.எஃப்.ஏ.எஸ் ரசாயனம் இங்கே “லக்ஷ்மி ஆர்கானிக் இண்டஸ்ட்ரீஸ்” நிறுவனத்தால் தயாரிக்கப் படுகிறது.
முன்பு மிடேனி நிறுவனம் தயாரித்த அதே சில தயாரிப்புகளை தங்களின் பட்டியலிலும் லக்ஷ்மி நிறுவனம் சேர்த்துள்ளதாகவும், இத்தாலிய நிறுவனத்திடமிருந்து முன்பு பொருட்களை வாங்கிய வாடிக்கையாளர்களுடன் தொடர்ந்து வணிகத் தொடர்பைப் பராமரித்து வருவதாகவும் கார்டியனின் புலனாய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டின் தொடக்கம் முதல் லக்ஷ்மி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இது பூச்சிக்கொல்லிகள், மருந்துகள், ரசாயனங்கள் அழகுசாதனப் பொருட்கள் மற்றும் பிற ரசாயனப் பொருட்களைத் தயாரித்து வருகிறது.
தி கார்டியனின் புலனாய்வு அறிக்கை வெளியான பிறகு, ஜனவரி 8 ஆம் தேதி அன்று, லக்ஷ்மி ஆலையின் வாயிலுக்கு வெளியே பொதுமக்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பல தொலைக்காட்சிகளில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது.
பிப்ரவரி 2 ஆம் தேதி அன்று மாநிலங்களவையில் நாடாளுமன்ற உறுப்பினர் பிரமோத் திவாரி, இந்த ஆலைக்கு அனுமதி வழங்கப்பட்ட செயல்முறை குறித்து மத்திய அரசின் விசாரணைக்கு உத்தரவிடக் கோரினார்.
இதற்கு எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்த சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங், இந்தியாவில் பி.எஃப்.ஏ.எஸ் உற்பத்தியைத் தடை செய்வதற்கான குறிப்பிட்ட சுற்றுச்சூழல் விதிமுறைகள் எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். இதனை நிறுவனம் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
படிக்க: மானாமதுரை: சிப்காட் வளாகத்திலிருந்து மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு நச்சு ஆலையை வெளியேற்று!
குறிப்பாக தி கார்டியன் ஆவணங்களின்படி, இத்தாலிய ஆலை மூடப்படுவதற்கு சில மாதங்களுக்கு முன்பே, அதாவது மார்ச் 2018-க்கு உள்ளேயே, இந்தியாவில் இந்த ஆலையை அமைப்பதற்கான திட்டங்கள் தயாராகிவிட்டன. மேலும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை (EIA) மற்றும் கட்டுமான அனுமதிகளுக்கான விண்ணப்பப் பணிகளும் தொடங்கிவிட்டன என்பது அம்பலமாகியுள்ளது.
மேலும் இத்தாலிய ஆலை மூடப்படுவதற்கு எவ்வளவு காலத்திற்கு முன்பிருந்து, அதன் செயல்பாடுகளை ஐரோப்பாவிலிருந்து இந்தியாவிற்கு மாற்றுவதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டு வந்தன என்ற கேள்வியை இந்த ஆவணங்கள் எழுப்புகின்றன.
மார்ச் மாத தொடக்கத்தில், ஒரு காணொளி வாயிலாக இந்திய சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், ஐரோப்பாவில் இந்த ஆலையால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் பிரதிநிதிகள், விஞ்ஞானிகள் மற்றும் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் (MEPs) ஆகியோர் முதன்முறையாக ஒன்றிணைந்து ஆலோசனை நடத்தினர். பி.எஃப்.ஏ.எஸ் இரசாயனங்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் கொண்டு வரவிருக்கும் முழுமையான தடை குறித்த விவாதங்களின் ஒரு பகுதியாக இக்கூட்டம் அமைந்தது.
மார்ச் 5 அன்று, பெல்ஜியத்தின் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் உள்ள ஐரோப்பிய ஆணையத்தின் தலைமையகத்திற்கு வெளியே ஆர்வலர்கள் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது இந்த விவகாரத்தைச் சர்வதேச அளவிலும், இந்திய அளவிலும் உற்றுநோக்க வைத்தது.
லக்ஷ்மி நிறுவனம் ஏப்ரல் 3 அன்று ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தி, “நாங்கள் இந்திய சட்ட திட்டங்களுக்கும் சுற்றுச்சூழல் விதிமுறைகளுக்கும் உட்பட்டே செயல்படுகிறோம்; எங்கள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் தவறானவை” என்று பொய்யான விளக்கத்தை அளித்துள்ளது.
ஆலை நிர்வாகத்தின் விளக்கத்தை ஏற்க மறுத்து, ஏப்ரல் மாதத்தில் ஆயிரக்கணக்கான உள்ளூர் மக்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் லோட்டே பரசுராம் பகுதியில் மீண்டும் வீதியில் இறங்கிப் பிரம்மாண்ட போராட்டங்களை நடத்தினர். பி.எஃப்.ஏ.எஸ் உற்பத்திக்கு உடனடியாகத் தடை விதிக்க வேண்டும் என்றும், இதற்கான சட்டங்களைக் கொண்டு வர வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இது குறித்து, எழுத்தாளரும் திரைப்பட இயக்குநரும், ‘தி நெக்ஸ்ட் இந்தியன்ஸ்’ (The Next Indians) என்ற புதிய சமூக அமைப்பின் நிறுவனருமான வருண் சுக்ராஜ் உணர்வுப்பூர்வமாகக் கூறியுள்ளதாவது: “இத்தனை காலமும் ‘தொழிற்சாலைகளும் மாசுபாடும் நாட்டின் வளர்ச்சிக்காக நாம் கொடுக்கும் விலை’ என்று நமக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்டது. ஆனால் எந்தவொரு சமூகமும் தங்களின் வேலைவாய்ப்புக்காகத் தங்கள் ஆரோக்கியத்தையோ, உயிரையோ பலி கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படக் கூடாது. ஐரோப்பிய நாடுகள் தங்களுக்கு ஆபத்து என்று நிராகரித்த ஒரு நச்சுப் பொருளை, நம் நாட்டிற்குள் கொண்டு வந்து ‘வளர்ச்சி’ என்ற பெயரில் மீண்டும் விற்க அனுமதிக்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.
இத்தாலிய நாட்டில் மூடப்பட்ட நச்சு ஆலையை மற்றொரு நிறுவனத்தின் பெயரில் செயல்பட இங்கு அனுமதி அளித்துள்ளது பாசிச மோடி அரசு. இதன் மூலம் பி.எஃப்.ஏ.எஸ் எனும் நச்சு ரசாயனத்தினால் மக்களுக்கு ஏற்படப் போகும் பாதிப்புகளை எல்லாம் புறந்தள்ளி தனது கார்ப்பரேட் விசுவாசத்தைக் காட்டியுள்ளது பாசிச மோடி அரசு
கராரான சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டங்களை தங்களது நாடுகளில் நடைமுறைப்படுத்தும் ஏகாதிபத்திய நாடுகள் தங்களின் நாடுகளிலுள்ள அதிக மாசுபாட்டை ஏற்படுத்துகின்ற நிறுவனங்களையும் அவற்றிலிருந்து வெளியேறுகின்ற கழிவுகளையும் இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்கின்றன. அதாவது, இந்தியா ஏகாதிபத்திய நாடுகளின் குப்பைத் தொட்டியாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது.
![]()
ஆசாத்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











