மகாராஷ்டிராவின் அஹில்யாநகர் மாவட்டத்தில் உள்ள சவுண்டாலா கிராமம் தன்னை சாதியற்ற கிராமமாக அறிவித்துக் கொண்டிருப்பது இந்தியா முழுவதுமுள்ள பாசிச எதிர்ப்பு ஜனநாயக சக்திகளுக்கு உற்சாகத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.
கடந்த பிப்ரவரி 5, 2026 அன்று, அக்கிராமத்தின் சர்பஞ்ச் (பஞ்சாயத்துத் தலைவர்) ஷரத்ராவ் அர்கடே, சிறப்பு கிராம சபையைக் கூட்டினர். கூட்டம் தொடங்குவதற்கு முன்பு, தன்னார்வ இரத்த தான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு அதில் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
கிராம மக்கள் சபை கூடியதும், உரையைத் தொடங்கிய சர்பஞ்ச் ஆர்கடே, “நமது இரத்தத்தின் நிறம் பச்சையோ அல்லது நீலமோ அல்ல. அது அனைவருக்கும் சிவப்புதான். அந்த இரத்தம் கலந்துவிட்டால், அதை மீண்டும் யாராலும் பிரிக்க முடியாது.” என்று உணர்வுப்பூர்வமாகப் பேசி, சவுண்டாலா கிராமத்தை “சாதியற்ற” கிராமமாக அறிவிக்க முன்மொழிந்தார்.
“இது எளிய காரியமல்ல என்பதை அர்கடே உணர்ந்திருந்தாலும், கிராமத்தின் சர்பஞ்சாக எனது மூன்று பதவிக்காலத்தில், கிராம மக்களுடன் ஆழமான ஈடுபாட்டைக் கொண்டுள்ளேன். எனவே, எனக்கு நம்பிக்கை இருக்கிறது” என்று கூறினார். அவர் எதிர்பார்த்தது போலவே, இந்த சிறப்புத் தீர்மானம் கிராம மக்களால் நிறைவேற்றப்பட்டது. ‘உயர்’ மற்றும் பகுஜன் சாதிகளைச் சேர்ந்த மக்கள் மற்றும் ஒரு சில இஸ்லாமியர்கள் கூட இத்தீர்மானத்திற்கு ஒருமனதாக ஆதரவளித்தனர்.
மராத்தியில் எழுதப்பட்ட இந்தத் தீர்மானம், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரையில் உள்ள “சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம்” என்பதுடன் தொடங்கியது. “இனிமேல், சவுண்டாலா கிராமத்தில், யாரும் சாதியைப் பின்பற்றவோ அல்லது எந்த வகையான சாதிய நடைமுறைகளிலும் ஈடுபடவோ மாட்டார்கள். மாறாக, கிராம மக்கள் பின்பற்றும் ஒரே மதம் மனிதநேயம்” என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
படிக்க: மகாராஷ்டிராவில் சாதி ஆணவ படுகொலை! | தோழர் அமிர்தா
சவுண்டாலா கிராமம் அமைந்துள்ள – மேற்கு மகாராஷ்டிராவிலுள்ள அஹில்யாநகர் (முன்னர் அகமதுநகர்) மாவட்டத்தில் கடந்த காலத்தில் சாதிய வன்கொடுமைகளும் வகுப்புவாத தாக்குதல்களும் அதிகளவில் நடந்துள்ளன. அதேபோல், தலித் இளைஞர்களின் மீதான சாதிய ஆணவப் படுகொலைகளும் தொடர்ச்சியாக அரங்கேறியுள்ளன. குறிப்பாக, 2013-இல் சோனாய் கிராமத்தில் மூவர் கொலை, 2014-இல் ஜாவ்கேடே கிராமத்தில் மூவர் கொலை மற்றும் 2014-இல் கர்தா எனும் 17 வயது தலித் இளைஞரின் கொலை உட்பட பல கொடூரமான ஆணவப் படுகொலைகள் நடந்துள்ளன. “வன்கொடுமைக்கு ஆளான மாவட்டம்” (Atrocity Prone District) என்ற பட்டியலில் இக்கிராமம் பல ஆண்டுகளாக உள்ளது.
மேலும், சவுண்டலாவிலும் இத்தகைய சாதிய வன்முறைகள் நடந்துள்ளன. இதுகுறித்து அர்கடே பேசுகையில், “இக்கிராமத்தில் சாதிய வன்முறை வழக்குகள் உள்ளன. வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் கூட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால், கிராமவாசிகளின் சமூக விழிப்புணர்வு அதிகரித்ததால், வழக்குகள் மிகவும் குறைந்துவிட்டன. இன்று, மக்கள் ஒருவருக்கொருவர் வீட்டிற்குச் செல்வதையும், விழாக்களில் கலந்துகொள்வதையும், கடினமான நேரத்தில் ஒருவருக்கொருவர் ஆதரவாக நிற்பதையும் நீங்கள் காண்பீர்கள்.” என்றார்.
ஆனால், “சவுண்டாலா கிராமத்தில் சாதி – மத மறுப்புத் திருமணம் போன்ற சம்பவங்கள் இதுவரை நடந்துள்ளனவா?” என்று கேள்வியெழுப்பிய அர்கடே, “இல்லை. ஆனால் இதுபோன்ற ஒரு தீர்மானம் வெவ்வேறு சமூகங்களை அந்த திசையில் செல்ல ஊக்குவிக்கும்” என்று நம்பிக்கையுடன் கூறினார்.
“இத்தீர்மானம் அரசியலமைப்பின் நெறிமுறைகளுக்கு எதிரான எந்தவொரு நடத்தைக்கும் தண்டனை வழங்க வழிவகை செய்கிறது. இங்கே தொடர்ந்து வாழ விரும்பினால், அவர்கள் விதிகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்பதை கிராம மக்கள் முழுமையாக அறிந்திருக்கிறார்கள். இந்த விதிகள் நாட்டின் சட்டங்கள் மற்றும் அரசியலமைப்பிற்கு எந்த வகையிலும் முரணானவை அல்ல. எனவே, அதைச் செயல்படுத்துவது கடினம் அல்ல” என்று அர்கடே தெரிவித்தார்.
சவுண்டாலா கிராமத்தில் இத்தகைய முற்போக்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது இது முதன்முறை அல்ல. குழந்தை திருமணத்தைத் தடை செய்தல், கைம்பெண்களின் மறுமணத்தை அனுமதித்தல், வீட்டு வன்முறை மற்றும் வரதட்சணைக்கு எதிரான நடவடிக்கை, பெண்கள் உயர்கல்வியில் தொடர்வதை உறுதி செய்தல் மற்றும் கிராமத்தில் அரசியல் மற்றும் சமூக நடவடிக்கைகளில் பெண்கள் பங்கேற்பை அதிகரித்தல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கடந்த காலங்களில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
பல்கலைக்கழகங்கள் மற்றும் பிற கல்வி நிலையங்களில் சாதித் தீண்டாமை, வன்முறை, தற்கொலைகளைத் தடுக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்ட யு.ஜி.சி. விதிமுறைகளுக்கு எதிராக நடந்த பார்ப்பன-ஆர்.எஸ்.எஸ். கும்பலின் போராட்டம் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் மீதான பார்ப்பனிய சாதிய வன்மத்தைத் தெளிவாகக் காட்டியது. இத்தகைய சூழலில், சவுண்டலாவை “சாதியற்றது” என்று அறிவிக்கும் தீர்மானத்தை கிராம மக்கள் நிறைவேற்றியிருப்பதானது முக்கியத்துவம் பெறுகிறது.
“ஆளும் கட்சிகள் நாட்டை இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் எனவும் உயர் மற்றும் கீழ் சாதிகள் எனவும் இருமையாகப் பிரிக்க விரும்புகின்றன. மிகச் சிறிய, கிராம மட்டத்தில் அதை நாங்கள் முறியடிக்க முயல்கிறோம்” என்று அர்கடே கூறியிருப்பது இங்கு கவனிக்கத்தக்கது.
இந்தியாவில் ஒன்றியத்திலும் பெரும்பான்மை மாநிலங்களிலும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. பாசிச கும்பல் சாதி-மத முனைவாக்கங்களின் மூலம் மக்களை கூறுபோட்டு வருகிறது. உழைக்கும் மக்களை தங்களுக்குள் மோதவிட்டு, இந்து ராஷ்டிரத்திற்கான பாதையைச் செப்பனிட்டு வருகிறது.
இத்தகைய சூழலில், ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத அமைப்பு தொடங்கப்பட்ட மகாராஷ்டிரா மாவட்டத்திலேயே ஒரு கிராமம் தன்னை சாதியற்றதாக அறிவித்துக் கொண்டிருப்பது, பாசிச கும்பலுக்கு விடுக்கப்பட்ட நேரடி சவாலாகும். சாதி-மத வெறுப்பு என்பது பாசிச கும்பலின் அயுதம் எனில், சமத்துவமும் மனிதநேயமும் அதற்கெதிரான ஆயுதங்கள் என்பதை சவுண்டாலா கிராம மக்கள் உணர்த்தியுள்ளனர்.
சவுண்டாலா கிராமத்தை முன்மாதிரியாகக் கொண்டு இந்திய முழுவதும் இத்தகைய சாதியற்ற கிராமங்களையும் பகுதிகளையும் உருவாக்கி, அவற்றை பாசிச எதிர்ப்பு கோட்டைகளாக வளர்த்தெடுக்க வேண்டியது புரட்சிகர ஜனநாயக சக்திகளின் கடமையாகும்.
![]()
சோபியா
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











