மகாராஷ்டிரா சாதிப் பஞ்சாயத்து: பெண் அரை நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக இழுத்துச் செல்லப்பட்ட கொடூரம்!

வெளிப்படையாக, தங்களின் கண்முன்னே நடைபெற்ற இக்கொடூரத்தை யாரும் தடுக்காமல் வேடிக்கை பார்த்துள்ளனர் என்பதே மிகப்பெரிய வேதனையாகும். அதிலும் அதனை காணொளியாகப் பதிவு செய்து சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்துள்ளனர். அந்தக் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி மனித நேயத்தையும், மனித உணர்வுகளையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

0

பா.ஜ.க ஆட்சி செய்கின்ற மகாராஷ்டிர மாநிலத்தில் வழிபாட்டு உரிமை குறித்து கேள்வி எழுப்பியதற்காக சாதி கும்பலால் பெண் ஒருவர் அரை நிர்வாணமாக்கப்பட்டு, தலைமுடி வெட்டப்பட்டும், ஊர்வலமாக இழுத்துச் செல்லப்பட்ட கொடூரச் சம்பவம் குறித்த காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகி மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தானே மாவட்டம் உல்லாஸ் நகரில், வாக்ரி நகர் உள்ளது. இங்கு காந்த பிரேம் ராஜ்புத் என்பவரின் குடும்பம் சாதி பஞ்சாயத்தால் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது. இவர்களின் குடும்பம், கோவிலில் நடைபெறும் பூஜை உள்ளிட்ட பிற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மே 15 ஆம் தேதி அன்று அப்பகுதியில் உள்ள கோவிலில் சமய நிகழ்ச்சி மற்றும் பக்தர்களுக்கு விருந்தும் வழங்கப்பட்டுள்ளது . அப்போது பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர் “நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. நாங்கள் கோவிலுக்குள் செல்ல ஏன் அனுமதி மறுக்கிறீர்கள்?” என்று சாதி பஞ்சாயத்து கட்டுப்பாட்டிற்கு எதிராகக் கேள்வி எழுப்பியுள்ளார். பின்னர் அந்த இளைஞர் கோவிலுக்குள் நுழைந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சாதி கும்பல் ஒன்று தடிகள் மற்றும் கம்பிகளுடன் சென்று இளைஞரின் வீட்டைத் தாக்கியுள்ளது. அதோடு வீட்டிலிருந்த ஆண்களையும் கொடூரமாகத் தாக்கியுள்ளது. மேலும் போலீசில் புகார் அளித்தால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று பெண்களை மிரட்டியுள்ளது.

ஆனால் மிரட்டல்களையும் மீறி பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த காந்த பிரேம் ராஜ்புத் (50) தன் சகோதரி கீதா ராஜ்புத் மற்றும் மகள் அஞ்சாலியுடன் போலீசில் புகார் அளிப்பதற்குச் சென்றுள்ளார். இந்த தகவலை அறிந்த அக்கும்பல் அவர்களை வழிமறித்து சாலைக்கு இழுத்து வந்து பிரேம் ராஜ்புத்தின் ஆடைகளைக் கிழித்து அரை நிர்வாணமாக்கி, கத்தரிக்கோலால் தலைமுடியை வெட்டி, கழுத்தில் செருப்பு மாலை அணிவித்து இரண்டு கிலோமீட்டர் தூரம் சாலை வழியாக இழுத்துச் சென்று, வழியில் உள்ளவர்களின் கால்களில் விழ வைத்து அப்பட்டமான வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளது. மேலும் அக்கும்பல் மூன்று பெண்கள் மீதும் தடிகளைக் கொண்டு கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளது.

வெளிப்படையாக, தங்களின் கண்முன்னே நடைபெற்ற இக்கொடூரத்தை யாரும் தடுக்காமல் வேடிக்கை பார்த்துள்ளனர் என்பதே மிகப்பெரிய வேதனையாகும். அதிலும் அதனை காணொளியாகப் பதிவு செய்து சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்துள்ளனர். அந்தக் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி மனித நேயத்தையும், மனித உணர்வுகளையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

பின்னர் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட பெண்கள் போலீஸ் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்துள்ளனர். போலீசார் வழக்குப் பதிவு செய்யாமலும் பாதிக்கப்பட்ட பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்காமலும், பல மணி நேரம் அலைக்கழித்துள்ளனர். மேலும் பெண்கள் மீதான வன்முறைகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யாமல் சாதாரண பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளதாகப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

உல்லாஸ்நகர் மத்திய போலீசார் ஜூலி வாக்ரி, வினு வாக்ரி, பப்பி வாக்ரி, நிதின் தோரட், ரோஹித் வாக்ரி, சோனு என்ற பாலு வாக்ரி, மகேஷ் வாக்ரி மற்றும் பலர் மீது பாரதிய நியாய சன்ஹிதா, 2023 (BNS)-இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது; தாக்குதல் நடத்தியவர்களில் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். முதன்மை குற்றவாளி மற்றும் பலர் இன்னும் கைது செய்யப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர்.


படிக்க: உ.பி: பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான தலித் சிறுமி தற்கொலை!


ஆரம்பத்திலிருந்தே தாக்குதல் நடத்தியவர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்ட போலீஸ் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் உள்ளிட்டு இருதரப்பு குடும்பத்தினர் மீதும் வழக்குகள் பதிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

குறிப்பாக அரசியலமைப்புச் சட்டம் பிரிவுகள் 14 மற்றும் 21 சாதி, மதம், இனம் கடந்து அனைவரும் சமத்துவத்துடனும், கண்ணியத்துடனும் வாழ்வதற்கான உரிமையினை வழங்குகின்றன. எனவே சாதி அடிப்படையில் மக்களைப் பிரிப்பதற்கும் ஊரை விட்டு ஒதுக்கி வைப்பதற்கும் அபராதம் விதிப்பதற்கும் சாதி பஞ்சாயத்துகளுக்கு எந்தவித அதிகாரமும் கிடையாது. அது சட்டப்படி குற்றமாகும். இதனை உச்சநீதிமன்ற தீர்ப்புகளும் உறுதிப்படுத்தியுள்ளன.

ஆனால் சாதி பஞ்சாயத்துகள் சாதி கட்டமைப்பைப் பாதுகாப்பதற்கும், தங்களுடைய அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவும் இதுபோன்ற சமூகவிரோத நடவடிக்கைகளிலும், வன்முறைகளிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. இவை பா.ஜ.க ஆட்சி செய்கின்ற மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் சட்டவிரோதமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே சாதி ரீதியாக மக்களைப் பிளவுபடுத்துகின்ற, தீண்டாமைக் கொடூரங்களை அரங்கேற்றுகின்ற சாதி பஞ்சாயத்துகளையும் இவற்றைத் தன்னுடைய வாக்கு வங்கி அரசியலுக்குப் பயன்படுத்திக் கொள்கின்ற ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க-வையும் தடை செய்வதன் மூலமே இதுபோன்ற சமூக அவலங்களைக் கட்டுப்படுத்தி, அனைவருக்கும் கண்ணியமான வாழ்க்கை வழங்குகின்ற சமுதாயத்தை நோக்கி முன்னேற முடியும்.


ஆசாத்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க