Saturday, May 25, 2024
முகப்புசமூகம்விளையாட்டுஹரியானாவின் குத்துச் சண்டை வீரர் குல்ஃபி விற்கும் அவலம் !

ஹரியானாவின் குத்துச் சண்டை வீரர் குல்ஃபி விற்கும் அவலம் !

ஒரு விபத்தினால் தொடர்ந்து என்னால் விளையாடமுடியாத நிலை ஏற்பட்டது. என் தந்தை வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தவே நான் குல்ஃபி விற்கிறேன்.

-

“குத்துச் சண்டை வீரர்களை அதிகளவில் உருவாக்கி வரும் மாநிலமான  ஹரியானாவில், குத்துச் சண்டை வீரர் தினேஷ்குமார் குல்ஃபி ஐஸ் விற்கிறார்” என்ற செய்தி தற்பொழுது சமூக ஊடகங்களின் வாயிலாக தெரியவந்துள்ளது. குல்ஃபி ஐஸ் விற்பது ஒன்றும் இழிவானது அல்ல. ஆனால் ஒரு விளையாட்டு வீரர் அப்படி தொழில் மாற வேண்டிய அவசியம் என்ன?

குத்துச்சண்டை வீரர் தினேஷ்குமார் இதுவரை சர்வதேச அளவில் இந்தியாவிற்காக விளையாடி 17 தங்கப் பதக்கம், ஒரு வெள்ளிப் பதக்கம் மற்றும் ஐந்து வெண்கலப் பதக்கமும் பெற்றிருக்கிறார். இவருடைய திறமையை பாராட்டி இந்தியாவின் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான அர்ஜுனா விருதை கடந்த 2010 ஆம் ஆண்டு மத்திய அரசு வழங்கியிருக்கிறது.

இத்தனை தகுதிகளையும் உடைய ஒரு வீரர் குல்ஃபி ஐஸ் விற்கும் தொழிலை ஆரம்பித்ததற்கு காரணம், கடந்த 2014-ஆம் ஆண்டு தினேஷ்குமார் சென்ற கார் லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகச்சை பெற்றிருக்கிறார். அத்துடன் முடிவுக்கு வந்தது அவரது குத்துச்சண்டை கனவு. விபத்தில் சிக்கிய தினேஷ்குமாரை அரசோ, விளையாட்டுத்துறையோ கண்டு கொள்ளவில்லை.

ஏற்கனவே, சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்வதற்காக வாங்கிய கடனே ஏராளமாக இருந்திருக்கையில், அவருடைய சிகிச்சைக்கு வேண்டிய செலவுகளையும் கடன் வாங்கியே காப்பாற்றியிருக்கிறார் அவருடைய தந்தை. கடுமையான காயத்திலிருந்து மீண்டு வந்த தினேஷால் தன் தந்தை வாங்கிய கடனில் இருந்து மீண்டு வர முடியவில்லை.

படிக்க :
ஸ்வப்னா பர்மன் : ஒளிரும் வைரங்களில் ஒன்று
ஆசிய விளையாட்டுப் போட்டி இந்திய அணியை நிர்வகிக்கும் கிரிமினல்கள் !

தற்பொழுது உடல்நிலை முன்னேற்றமடைந்து மீண்டும் குத்துச்சண்டை போட்டியில் பங்கெடுக்கும் அளவுக்கு தினேஷ்குமார் தயாரானாலும், கடனுக்கான வட்டியே பெரும் தொகையாக மாதாமாதம் கட்டவேண்டிய நிலையில்தான் அவர் குல்பி ஐஸ் விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

ஒரு குத்துச் சண்டை வீரனாவதற்குரிய தகுதி சாதரணமாக வந்து விடாது. பாக்சிங் கற்றுக் கொள்வதற்கு முன் செய்யப்படும் வார்ம்அப் பயிற்சிகளில் ஈடுபட வேண்டும். பாக்சிங்கின் அடிப்படைகளான நிற்கும் நிலை, கால்களை நகர்த்துவது, அடிப்படையான குத்து முறைகளையும் கற்றுக் கொண்டு பின்னர் வேகத்தையும், துல்லியமாக தாக்கும் ஆற்றலையும், விளையாடும் போது உடலைச் சமநிலையுடன் வைத்துக்கொள்ள தயார்படுத்தியிருக்க வேண்டும். அதற்குறிய பயிற்சியை முடிக்கவே பல ஆண்டுகள் கடின உழைப்பு தேவைப்படும்.

அந்த உழைப்பின் பலனாக பெற்ற அனைத்து தகுதியையும் ஒரு விபத்தின் மூலம் இழந்துள்ளார் என்பதாக மட்டும் நாம் பார்க்க முடியாது. விளையாட்டுப் போட்டிகளையும், வீரர்களையும் ஊக்குவிப்பதற்கு தகுதியான அரசு இல்லை என்பதுதான் உண்மை.

“தேசிய மற்றும் சர்வதேசப் போட்டிகளில் கலந்துகொண்டு பல பதக்கங்களை வென்றுள்ள நான் ஒரு விபத்தினால் தொடர்ந்து என்னால் விளையாடமுடியாத நிலை ஏற்பட்டது. என் தந்தை வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தவே நான் குல்ஃபி விற்கிறேன். முன்பு இருந்த மத்திய அரசும் தற்போதுள்ள உள்ள அரசும் என்னைக் கண்டு கொள்ளவில்லை. பல வீரர்களைச் சர்வதேசப் போட்டிகளுக்காகத் தயார் செய்யும் திறன் என்னிடம் உள்ளது.  எனக்கு உதவிகள் கிடைத்தால் நான் நிச்சயம் செய்வேன்” எனப் பத்திரிக்கைகளிடம் தெரிவித்திருக்கிறார் தினேஷ்.

திறமையான ஆட்டக்காரராக மட்டுமில்லாமல் ஒரு பயிற்சியாளராகவும் இருந்திருக்கிறார். “தன்னிடம் பயிற்சி பெற்ற பலர் தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டுள்ளனர் என்றும், அவர்களிடம் பணம் பெறாமல் இலவசமாக பயிற்சியும் அளித்ததாகவும்” கூறியிருக்கிறார்.

பொதுவாக இந்த மாதிரியான குத்துச் சண்டை விளையாட்டை அதிகம் தேர்ந்தெடுப்பவர்கள் வறிய நிலையில் இருப்பவர்கள்தான். மேல்தட்டு வர்க்கத்தில் இருந்து வரக்கூடிய யாரும் இந்த விளையாட்டை தேர்ந்தெடுப்பதில்லை. காரணம் ஒருபொழுதும் தங்களை வருத்திக் கொள்ளுவதை அவர்கள் விரும்புவதில்லை. அதனால்தான் கிரிக்கெட் பல நடுத்தர கோமான்களால் ரசிக்கப்படுகிறது. தோனி ஓய்வு பெறுவதையும், விராட் கோலி சதம் அடிப்பதையும் விவாதமாக்கும் ஊடங்கங்கள் தினேஷ்குமாரின் அவல நிலையை ஒரு பரிதாபத்திற்குரிய செய்தியாக சொல்லிவிட்டுக் கடந்து செல்கின்றன.

பன்னாட்டு நிறுவங்களின் விளம்பரத்திற்காகவும், வர்த்தக ஆதாயத்திற்காகவும் நடத்தப்படும் கிரிக்கெட்டைத் தவிர வேறு எந்த விளையாட்டிற்கும் இந்தியாவில் முக்கியத்துவம் தரப்படுவதில்லை. அதாவது கார்ப்பரேட்டுகளின் விளம்பர நோக்கதிற்கு பயன்படாத ஹாக்கி, கால்பந்து முதற்கொண்டு தடகளப் போட்டி வரை அனைத்தும் இரண்டாம்பட்சம்தான்.

எந்த விளையாட்டிற்கும் உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை என்பதோடு தேசிய அணி வீரர்களுக்கே அடிப்படையான பாதுகாப்பு உபகரணங்கள் கூட போதுமான அளவுக்கு இல்லை. விஞ்ஞானபூர்வமாக பயிற்சியளிக்கத் தகுதியான பயிற்சியாளர்களும் இல்லை. இன்னமும் பழைய முறையிலான பயிற்சியைத்தான் ஹாக்கி மற்றும் கால்பந்து உள்ளிட்ட விளையாட்டிற்கு வழங்கிக் கொண்டு இருக்கிறார்கள். மற்றொருபுறம் பார்ப்பன விழுமியங்களால் கட்டப்பட்டிருக்கும் சாதி ஆதிக்கம் விளையாட்டுகளில் அதிகம் கோலோச்சுகிறது.

விளையாட்டு வீரர்கள் முதற்கொண்டு சங்கத்தலைவர்கள் வரை ஆதிக்க சாதி பெரிச்சாளிகள்தான். குறிப்பாக ஒலிம்பிக் கமிட்டி குழுவில் இருக்கும் தலைவர்கள் எல்லாம் ஊழல், சுரண்டல், கொள்ளை என அனைத்திலும் கரை கண்டவர்கள். இவர்களுக்கும் விளையாட்டிற்கும் எந்த சம்பந்தமும் இருக்காது. ஆனால் இவர்கள்தான் விளையாட்டு வீரர்கள் தேர்வுகுழுவில் ஆதிக்கம் செலுத்துவார்கள்.

படிக்க :
வீராங்கனை காஞ்சனமாலாவை பிச்சைக்காரியாய் பெர்லினில் அலைய விட்ட பாஜக அரசு !
ஆண்ட பரம்பரையால் அழிக்கப்படும் இந்திய விளையாட்டு !

எந்தவொரு பின்புலமும் இல்லாத ஏழை-எளிய ஒடுக்கப்பட்ட இளைஞர்கள் இதனையெல்லாம் தாண்டித்தான் தங்களுடைய திறமையாலும் விடாமுயற்சியாலும் ஜொலிக்கிறார்கள். அவர்களையும் ஓரம்கட்டி மூலையில் உட்காரவைத்து விடும் பார்ப்பனிய கட்டமைப்பு இருப்பதால், அவர்களும் நட்சத்திரங்களாக நீண்ட நாட்கள் ஜொலிப்பதில்லை. இறுதியாக விளையாடுவதற்கான வாய்ப்பு எதுவும் கிடைக்காமல் “ஸ்போர்ட்ஸ் கோட்டாவில்” அரசு வேலையை எதிர்பார்த்து…. அதுவும் கிடைக்காமல் விளையாட்டிலிருந்தே வெளியேறி விடுகிறார்கள். அல்லது திட்டமிட்டே வெளியேற்றப்படுகிறார்கள்.

இதற்கு முன்னோடியாக ஹாக்கி வீரர் பல்ஜித் சிங் , தமிழகத்தை சேர்ந்த தன்ராஜ் பிள்ளை, ஆஷா ராய் பி.டி உஷா, டிங்கோ சிங் போன்றோர்கள் ஓரம் கட்டப்பட்டிருக்கிறார்கள்.

அந்த வரிசையில் தற்பொழுது தினேஷ்குமார் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்!  நாக்பூரைச் சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளியான நீச்சல் வீராங்கனை காஞ்சனமாலாவையும் இரக்கமில்லாமல் பெர்லினில் அலையவிட்ட நாடு இந்தியா என்பதையும்,  நாம் மறந்து விடக்கூடது!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க