லகக்கோப்பை கால்பந்து போட்டி ரசியா – 2018-ன் இறுதிக் கட்டம் இது.  ஊடகங்களில் அன்றாடம் ஆயிரத்தெட்டு கோணங்களில் வீரர்கள், நாடுகள், போட்டிகள் குறித்து அலசல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்தியாவில் காலபந்து ஆர்வம் கொண்டவர்கள் குறைவு. கேரளா, வடகிழக்கு போன்ற மாநிலங்கள் தவிர்த்து இங்கே விளையாட்டு குறித்த ஆர்வமே பொதுவில் இல்லை. எனினும் இந்த ஏழை நாட்டில் ஆங்காங்கே விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் சிலர்.

சென்னை வியாசர்பாடி அப்படிப்பட்ட பகுதி. எந்த விளம்பரமுமின்றி சத்தமில்லாமல் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள், இப்பகுதி கால்பந்து வீரர்கள். இங்கு ஒவ்வொருவருமே தங்களுக்கான தனிச்சிறப்பை வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர், முல்லை நகர் கால்பந்து மைதானத்தில்…

அவர்களுடையை வாழ்க்கையில் வலிகளே நிரம்பியிருந்தாலும் அவர்கள் காலபந்தை நேசிக்கிறார்கள். அவர்களோடு உரையாடுவோம்.

ஒவ்வொரு நாளும் ஒன்றாக நின்று உறுதிமொழி எடுத்து விட்டுத்தான் விளையாட ஆரம்பிக்கிறார்கள்.

உறுதிமொழி எடுக்கும் வீரர்கள்…

தாரள மனது எங்களுக்கு தாரும்!
காயங்களுக்கு அஞ்சாமல் நற்போர் புரிவோம்!
ஓய்வு தேடோம்!
கஷ்டங்களுக்கு தயங்காத தைரியம் தாரும் !
பதில் சன்மானத்தை எதிர்பாரோம்!
மற்றவர்களை நேசிக்கிற எங்களுக்கு
அன்பு, அமைதி, ஆற்றல், ஆனந்தம்,
நல்ல சிந்தனை, போராட்ட குணம் அள்ளி தாரும்!
குழந்தை தொழில் எதிர்ப்போம்!
குழந்தை உரிமை காப்போம்!

கிருத்திகா, ஜெயஶ்ரீ, பூஜா, காயத்திரி, தேவிஶ்ரீ ஆகியோரிடம், “பள்ளி, கல்லூரி மாணவிகளிடம் பசங்களோடு சேர்ந்து விளையாடுவதற்கு வீட்டில் என்ன சொன்னார்கள்?” என்றோம்.

“வீட்டைக்கூட சமாளித்து விட்டோம். பக்கத்து வீடு, தெரு, ஊர் வாயைதான் மூடமுடியவில. பக்கத்து வீட்டு ஆண்டி’ங்கதான் ரொம்ப படுத்துறாங்க. கட்டிக்குடுக்கிற பொண்ண இப்படி கால் டவுசரோட அலையவுடலமா? இதுங்க இன்னா ஊரு மேயவா போகுது? இப்படி போனா இதுங்க கழுத்துல எவனா தாலி கட்டுவானா? என்று டிசைன் டிசைனா கேட்பாங்க. டவுசர், பனியன் போட்டு ரோட்டில் இறங்கினால் போதும் முறைத்து நம்மைப் பற்றிதான் பேசுவார்கள்.

வேலைவெட்டி இல்லாதவர்களுக்கு பொழுதுபோவது எப்படி? நாங்கள் அதையெல்லாம் கண்டுக்கிறதில்லை.இப்போது அவர்களுக்கும் செம கடுப்பு. காதில் வாங்காமல் போகிறார்களே என்று.

எங்களோட அம்மாக்கள் எங்களை செமையாக டீல் பண்ணுவாங்க. ஏன்…டீ…பரிச்சையில மார்க் எடுக்கலனு வைச்சுக்க…வீட்டிலேயே அடைச்சிடுவேன். வெளையாட போ…முடியாது! வீட்டு வேலை எதுவும் செய்யலண்ணா..உன்னை வெளிய…வுடமாட்டேன் என்று டெர்ரர்ராக…டார்ச்சர் செய்து எங்களுக்கு தெரியாமலேயே எங்களை நல்லப் பெண்ணாக்கி விடுவார்கள்.

மற்றபடி மைதானத்தில் ஆண், பெண் என்ற நினைப்போடு யாரும் விளையாடுவது கிடையாது. இங்கு அணிக்கு என்று விதிகள் உண்டு. விளையாட்டு அடுத்துதான். ஒழுக்கம்தான் பர்ஸ்ட். சிறுவனாய் இருந்தாலும் பெரியவனாய் இருந்தாலும் நண்பா என்றுதான் எல்லோரையும் அழைக்க வேண்டும்.

சீனியர்களாய் இருக்கும் அண்ணன்கள்அவர்களுக்கு தெரிந்தது எல்லாம் கற்றுக் கொடுப்பார்கள். சின்னவர்கள், பெண்கள் என்றெல்லாம் வித்தியாசம் பார்க்க மாட்டார்கள். அவர்கள் உதவி இல்லையென்றால் இந்த அளவுக்கு எங்களால் வளரவே முடியாது.

அவர்கள் தப்பாக நடந்தால் அல்ல, நினைத்தால்கூட எங்களால் கண்டுபிடித்து விடமுடியும். அப்படி சின்ன அறிகுறியைக்கூட நாங்கள் இதுவரை யாரிடமும் பார்த்தது இல்லை.

வல்லரசு, ஜுலை 14 அன்று நடந்த போட்டி ஒன்றில் வெற்றி பெற்ற ஜுனியர் அணியின் கேப்டன்! ”எங்க அப்பா ஒரு ஃபைல் கம்பனியில கூலிக்கு வேலை செய்யிறாரு. கால்பந்து விளையாட போறேன்னு வீட்டுல சொன்னேன். விளையாட்டெல்லாம் அப்புறம் இருக்கட்டும் மொதல்ல படிக்கிற வேலையா பாருடான்னு சொல்லிட்டாங்க.” அப்புறம் தங்கராஜ் மாஸ்டர்தான் வீட்டுல பேசி கூட்டி வந்தாரு. இங்க வந்தப்புறம் வீட்டோட கஷ்டம்.. சரியா விளையாட முடியல.. ஒருமாறி டிஸ்டர்ப்பா இருந்துச்சி.. இருந்தாலும் கொஞ்சம் கான்சன்ரேட் பண்ணேன்.

“நான், டிபன்ஸ் பிளேயர். ஒரு முறை என்னோட ஆட்டத்தை பத்தி மாஸ்டர் உற்சாகமா சொன்ன பிறகுதான் எனக்கு நம்பிக்கையே வந்துச்சி… அதுக்கப்புறம் தான் கால்பந்து மைதானமே வாழ்க்கையா மாறிடுச்சி… ஆறு வருஷமா பயிற்சி எடுக்கிறேன்… இதுவரைக்கும் நாங்க 7 வெற்றிக்கோப்பைகளை வாங்கியிருக்கோம்” என்று சொல்லிக்கொண்டே பந்தை உதைத்து தள்ளுகிறார்.

சஞ்சய்குமார், கோல்கீப்பர்.. எங்க அப்பா ரோப் கம்பனியில வேலை பாக்குறாரு… நா…இந்தப் பக்கம் வரும்போது..போம்போதெல்லாம் பார்ப்பேன். ஆசையா இருக்கும்… அதனாலதான் இங்க வந்தேன்.. எங்க மாஸ்டர் உமாபதி அண்ணன்தான் நீ நல்லா சேவ் எடுக்கிறன்னு சொன்னார். பெஸ்ட் கோல் கீப்பர்னு பாராட்டினார். “நான் ரொனால்டோவோட கோலை தடுக்கனும்”னு அசால்டாக சொல்கிறார்.

விரல் நுனியில் பந்தை சுழற்றும் ரஃபிக்……!

“கால்பந்து வீரராக வேண்டும் என்ற கனவுகளுடன்”.. நான் ஆட்டோகிராஃப் போடுறேன்…..ஒரேயொரு போட்டோ எடுங்கண்ணா…!

தியாகு, முல்லை நகர் கால்பந்து அணியின் கேப்டன், பயிற்சியாளர், அணி நலம் விரும்பி என பன்முக உதவிகள் செய்யும் கால்பந்து வீரர். இவர் தலைமையில்தான் இவ்வணி ஸ்வீடன் சென்று 2010-ம் ஆண்டு 1-0 என்ற கோலில் வெற்றி பெற்றது.

“படிப்பு ஏறவில்லை. 10 வயதிலேயே விளையாட்டுக்கு வந்துவிட்டேன். கால்பந்தே கதி என்று கிடந்தேன். என் சீனியர்கள் என்னை விளையாட்டு வீரனாக்கினார்கள். அப்போது ஜெர்சி, டீசர்ட் வாங்க என்னிடம் பணம் இல்லை. வெறும் காலில் பந்தை உதைத்து கற்றுக் கொண்டேன். நான் மட்டுமல்ல, என் நண்பர்கள் எல்லோரும் அப்படித்தான். பந்துகூட எங்களிடம் சொந்தமாக இல்லை.

வெளி கிளப்புகளில் கெஞ்சினால் சனி, ஞாயிறு இரண்டு லீவு நாட்கள் மட்டும் பந்து கடனாக கொடுப்பார்கள். 20 ஆண்டுகளாக கால் பந்து விளையாடுகிறேன். இப்போதும் அண்ணன் பராமரிப்பில்தான் வாழ்கிறேன். படிப்பு இல்லாததால் வேலை கிடைக்கவில்லை. வீடுகளுக்கு தண்ணீர் கேன்கள் போடுகிறேன். அது கைச்செலவுக்கு ஆகிறது.

இங்கு வரும் குழந்தைகள் காலணி வாங்கக்கூட வசதியில்லாமல் வருகிறார்கள். அவர்களுக்கு தேவையானது செய்ய முடியவில்லை. நான் வேறு எப்படி தனியாக சம்பளம் கேட்பது? திடீர் கஸ்டம் என்றால் அணி பொறுப்பாளர்கள் எனக்கு உதவுவார்கள்” என்கிறார் அமைதியாக!

தங்கராஜ், குடிசைவாழ் குழந்தைகள் விளையாட்டுத் திறமை மற்றும் கல்வி மேம்பாட்டு சங்கம். (Slum Children Sports Talent and Education Development Society)அணியின் ஆரம்பகால அமைப்பாளர், கோச்சர். அணி வீரர்கள் அனைவருக்கும் அன்பான “அண்ணா”. இந்நிறுவனம் உலகளவில் குடிசைப் பகுதி குழந்தைகளின் விளையாட்டுத் திறனை வெளிக் கொண்டு வருவதற்காக நடத்தப்படுகிறது. உண்மையில் பெரும் வணிகமாகிவிட்ட விளையாட்டுப் போட்டிகளின் வர்த்தகம் கொஞ்சம் மனிதாபிமானத்தோடு இருப்பதாக காட்டிக் கொள்ள இந்த முயற்சிகள் கார்ப்பரேட்டுகளுக்கு உதவுகின்றன.

“3 வயது குழந்தைகள் முதல் 30 வயது வாலிபர்கள் வரை இங்கு பயிற்சி எடுக்கிறார்கள். வயதுக்கு தகுந்த மாதிரி அணிகள் பிரித்து பெயரிட்டு அழைக்கிறார்கள்.

2 வயது முதல் 4 வயது வரை உள்ள குழந்தைகள் முயல்குட்டி அணி, 5 வயது முதல் 10 வயது வரை உள்ள சிறுவர்கள் மான்குட்டி அணி, 10 வயது முதல் 13 வயது வரை சப்-ஜூனியர் அணி, 14-லிருந்து 16 வயது ஜூனியர் அணி, 17-லிருந்து 18 வயது இன்டர் லெவல், 18-லிருந்து 26வயது வரை சீனியர் லெவல் என்று தரம் வாரியாக பயிற்சி தருகிறார்கள். பல குழந்தைகளின் அப்பாக்களும் கால்பந்து வீரர்களாக இருக்கிறார்கள்.

இரண்டாவது தலைமுறையை சேர்ந்தவர்கள் இவர்கள். பாதிக்கு மேற்பட்ட குழந்தைகளின் அப்பா, அம்மாக்கள் தினக்கூலிகள். வீட்டு வேலை, மூட்டை தூக்குபவர், தள்ளுவண்டியில் கூலி வேலை செய்பவர்கள், லேத் பட்டறையில் வேலை பார்ப்பவர்கள் என வாழ்க்கையின் ஆகக் கடைக்கோடியில் இருப்பவர்கள். பல குழந்தைகளின் வீட்டில் இலவச கலைஞர் டிவிகூட இல்லை. நடை பாதை தடுப்புகளில் வசிக்கிறார்கள்.

அப்பாக்கள், பல குற்றங்கள் புரிந்து சிறையில் வாழ்கிறார்கள். சில குழந்தைகளுக்கு பெற்றோர் இல்லை. எனக்கு அம்மா இல்லண்ணா… அப்பா இல்லண்ணா என்று சதாரணமாக சொல்கின்றனர்.

இங்கு பிள்ளைகளுக்கு விளையாட்டு மட்டுமே நாங்கள் கற்றுக் கொடுக்கவில்லை. முதலில் அவர்களுக்கு தன்னம்பிக்கையும் சுயமரியாதையும் ஏற்படுத்துகிறோம். அதற்கு துணை செய்யதான் இங்கு விளையாட்டு. வட சென்னை, குறிப்பாக வியாசர்பாடி மக்கள் கொலை, கொள்ளைக்கு அஞ்சாதவர்கள் என்று முத்திரைக்குத்தப்பட்ட பகுதி.

20 ஆண்டுகளுக்கு முன் இங்கு படிப்பறிவு ஏறக்குறைய பூஜ்ஜியம். அவர்களின் குழந்தைகளும் சம்மந்தமே இல்லாமல் அப்பழியைச் சுமந்தன. இதனால் பல குழந்தைகள் அவமானத்தால் போக்கிடம் இல்லாமல் தற்கொலை செய்து கொண்டன. வெளியில் இருந்து குடியேறிய சில பெரும் தாதாக்கள் கடும் வறுமையில் ஊழலற்ற, படிப்பறிவுவற்ற இம்மக்களை கூலிக்கு கிரிமினல் வேலையை செய்யத் தூண்டியது. அவர்கள் கொழுக்க, இவர்கள் போலீசு இலக்காக குறிவைக்கப்பட்டார்கள். அவமானப்படுப்படுத்தப்பட்டார்கள். நடைபிணங்களாக வாழ்ந்தவர்களுக்கு நம்பிக்கையூட்ட பல சமூக நடவடிக்கைகளை முன்னேடுத்தோம். அதில் ஒன்று கால்பந்து.

இவ்விளையாட்டு நாங்கள் எதிர்பார்த்தற்கு மேல் இளைஞர்களை நல்வழிப்படுத்தியது. தன்னை, தன் உடலை, தன் அறிவை, தான் நிற்கும் இடத்தை, தன்னை சுற்றியிருப்பவரின் உளவியலை தொடர்ந்து கண்காணிப்பதை முன் நிபந்தனையாகக் கொண்டது இவ்விளையாட்டு. கால் பந்து இளைஞர்களை பண்படுத்தியது. அவர்களது அறிவு வழி பயணம் அதிசயங்களை நிகழ்த்துகிறது. படிப்பிலும் இப்போது அவர்கள் கில்லி. இங்கு பல அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் 100 சதத்தை தொட்டுவிட்டன.

பெற்றோர்களே பிள்ளைகளை இங்கு அழைத்து வருகிறார்கள். இப்போது தேவையான அளவு மைதானங்களையும் விளையாட்டுகளை விரிவுப்படுத்த உதவியின்றி தடுமாறுகிறோம். அப்படியும் இங்கிருந்து 200-க்கும் மேற்பட்ட மாவட்ட, மாநில, தேசிய வீரர்களை உருவாக்கியிருக்கிறோம் என்கிறார்.

-வினவு புகைப்படச் செய்தியாளர்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க