privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்இதர நாடுகள்கென்யாவின் பாக்சிங் பெண்கள் - படக்கட்டுரை

கென்யாவின் பாக்சிங் பெண்கள் – படக்கட்டுரை

-

ரியோபாங்கி. கென்யா – நைரோபியில் உள்ள கரியோபாங்கி ஒரு ஆபத்தான சேரிப் பகுதி. குற்றங்கள் மலிந்த இப்பகுதியில் ஏராளமான மதுபானக் கூடங்கள் உண்டு. கரியோபாங்கியில் உள்ள பாக்சிங் பயிற்சி நிலையம் ஒன்று இப்பகுதியில் உள்ள பெண்களுக்கு பாக்சிங் பயிற்சி மட்டுமின்றி, சுயமரியாதையாக வாழ்வதையும், பொருளாதார ரீதியில் சுயேச்சையாக இருப்பதற்கும், கௌரவமான வாழும் நிலையை அடையவும், வன்முறையிலிருந்து காத்துக் கொள்ளவும் பயிற்சியளித்து வருகின்றது.

”பாக்ஸ் கேர்ல்ஸ்” என்கிற இந்தப் பயிற்சி நிலையத்தை 2008-ல் அல்ஃப்ரெட் அனலோ என்பவர் தோற்றுவித்தார். இப்பகுதியில் ஆல்ஃப்ரெட்டை சமயகுரு எனும் பொருள்பட “குரு” (Priest) என்றே அழைக்கின்றனர்.

தற்காப்பு முறைகளைப் பயிற்றுவிப்பதன் ஊடாக, பெண்கள் தன்னிறைவாக வாழ்வதற்கும் உணர்வுப்பூர்வமாகவும், உடல்ரீதியிலும் உறுதியாக இருப்பதற்கும் கற்றுக் கொடுக்கிறது இந்தப் பயிற்சி நிலையம். இதன் மூலமாக இங்கே பயிற்சி பெறும் பெண்கள் பாதுகாப்பாக உணர்வதாகவும், பாலியல் ரீதியிலான ஒடுக்குமுறைகளை எதிர்த்து நிற்பதற்கான மனவுறுதியைப் பெறுவதாகவும் குறிப்பிடுகிறார் பயிற்சியாளர் ஆல்ஃப்ரெட்.

”சேரிகளில் உள்ள கடுமையான வாழ்க்கையை எதிர்கொள்ளும் உள்ளத் துணிவையும் உடல் உறுதியையும் எங்கள் பயிற்சி நிலையம் வழங்குகின்றது” என்கிறார் பயிற்சி மையத்தின் நிறுவனர் ஆல்ஃப்ரெட் அனாலோ (அல்லது குரு)
2007-2008 பொதுத் தேர்தல்களுக்குப் பிந்தைய கலவரங்களைத் தொடர்ந்து வெறும் 19 பெண்களுடன் துவங்கப்பட்டது தான் கரியோபாங்கியில் உள்ள பாக்சிங் பயிற்சி மையம். இன்று சுமார் 1500 பெண்கள் பயிற்சி பெறுகின்றனர்.
“பெண்கள் பாக்சிங் கற்றுக் கொள்வது குறித்து ஏராளமான அவதூறான தகவல்களும், அவநம்பிக்கையும் இருந்ததால் ஆரம்பத்தில் பெண்களுக்குப் பயிற்சியளிப்பது கடினமாக இருந்தது” என்ற ஆல்ஃப்ரெட், குறிப்பாக பெற்றோர்கள் பாக்சிங் என்பது ஆண்களுக்கானது என்றும் அது பெண்களை மூர்க்கமாக்கி விடுமென்றும் தவறான நம்பிக்கைகளைக் கொண்டிருந்ததையும் துவக்கத்தில் வெகுசில பெண்களைக் கொண்டே பயிற்சிகளைத் துவங்கி பின்னர் மற்றவர்கள் பயிற்சியில் சேர்ந்ததையும் நினைவுகூர்கிறார்.
அதிகாலையில் ஆண் பாக்சர்களோடு பயிற்சி எடுத்துக் கொள்ளும் டமாரிஸ் என்கிற இந்தப் பெண் பின்னர் அக்கம்பக்கத்தில் இருக்கும் பள்ளிகளுக்கு பயிற்சியளிக்கச் செல்கிறார். விளையாட்டுக்களும், உடற்பயிற்சியும் பெண்களுக்கு வாழ்நிலை சார்ந்த கல்வியளிக்க உதவியாக இருக்கும் என்று “பாக்ஸ் கேர்ல்ஸ்” மையம் நம்புகிறது.
மேலே உள்ள படத்தில் உள்ளவர் ஜேன். இவரை சோன்க்கோ என்று அழைக்கிறார்கள். மற்ற பயிற்சியாளர்களுக்கு பயிற்சியளிக்கும் சோன்க்கோ, தினசரி தவறாமல் பயிற்சி செய்கிறார்.
“பாக்சிங் என்பதை இன்னமும் ஆண்களுக்கானதாகவே பார்க்கிறார்கள்” என்கிறார் ”பாக்ஸ் கேர்ல்ஸ்”ல் ஒருங்கிணைப்பாளராக உள்ள ஃப்ளோரன்ஸ். ”பாக்சிங் கற்றுக் கொள்வது பெண்களை மூர்க்கமானவர்களாக்கி பெற்றோர் மற்றும் கணவரின் மேல் அவர்கள் வன்முறை செலுத்தச் செய்து விடும் என்றே மக்கள் நினைத்தனர். ஆனால், நீண்ட காலமாக பெண்கள் பாக்சிங் கற்றுக் கொள்வதைக் கண்டவுடன் அவர்களது எண்ணங்களில் நிறைய மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால், இன்னமும் கூட எங்களுக்கு நிறைய சவால்கள் இருக்கத் தான் செய்கின்றன” என்கிறார் ஃப்ளோரன்ஸ்.
ஆதரவற்ற சிறார்களுக்கான பள்ளியில் பாக்சிங் கற்றுக் கொள்வதற்கு முன் செய்யப்படும் வார்ம்-அப் பயிற்சிகளில் ஈடுபடும் மாணவர்கள். பெண்கள் பாக்சிங்கின் அடிப்படைகளான நிற்கும் நிலை, கால்களை நகர்த்துவது, அடிப்படையான குத்து முறைகளையும் கற்றுக் கொண்டு பின்னர் வேகத்தையும், துல்லியமாக தாக்கும் ஆற்றலையும், விளையாடும் போது உடலைச் சமநிலையுடன் பராமரிப்பதையும் கற்றுக் கொள்கின்றனர்.
நைரோபியின் கிழக்குப் பகுதியில் உள்ள பள்ளிச் சிறுமிகளுக்கும் பாக்ஸ் கேர்ல்ஸ் பயிற்சியளிக்கின்றது. இந்தச் சிறுமிகள் தற்காப்பு முறைகளைக் கற்றுக் கொள்கின்றனர். அவர்கள் இயல்பாகவும், பாதுகாப்பாகவும் உணர வேண்டும் என்பதற்காக பாக்சிங் பயிற்சிகள் அவர்கள் படிக்கும் பள்ளி மைதானத்திலேயே வழங்கப்படுகின்றன.
சோன்கோவிடம் பயிற்சி பெறும் ஆதரவற்றோருக்கான ரெஹெமா பள்ளியைச் சேர்ந்த சிறுமி பாக்சிங்கின் அடிப்படை நிலைகளைக் கற்றுக் கொள்கிறார்.
 “நான் முன்பெல்லாம் நிறைய வெட்கப்படுவேன். ஆனால், பாக்சிங் கற்றுக் கொள்ள துவங்கிய பின் எனக்கு நிறைய தன்னம்பிக்கை பிறந்துள்ளது. இப்போதெல்லாம் நான் உறுதியாகவும், நம்பிக்கையோடும் பேசுகிறேன்” என்கிறார் பயிற்சி பெறும் பெண் ஒருவர்.
ரெஹெமா ஆதரவற்றோர் பள்ளி மாணவர்களுக்கு வார்ம்-அப் மற்றும் தசைகளை இலகுவாக்கும் பயிற்சிகளை முன்னின்று நடத்துகிறார் சோன்கோ. குறிப்பிட்ட சமூகப் பிரிவில் இருக்கும் பெண்களைக் கொண்டே மற்ற இளம் பெண்களுக்கு பயிற்சியளிக்கும் அணுகுமுறை சாதகமான முறையில் பலனளிக்கின்றது.
கோரொகொச்சோவில் உள்ள ரெஹெமா மையத்தில் உள்ள சிறுமிகளுக்கு அடிப்படையான வாழ்வியல் பாடங்களை நடத்துகிறார் பயிற்சியாளர் டமாரிஸ். “இளம் பெண்களுக்கு பயிற்சியளிக்க பெண் பயிற்சியாளரையே பயன்படுத்துவதால் அவர்கள் இயல்பாக தங்கள் பிரச்சினைகளைக் குறித்துப் பேசுகின்றனர். மாணவிகள் தங்களது பெற்றோரிடமோ, ஆசிரியர்களிடமோ தங்களுடைய பிரச்சினைகளைக் குறித்து பேசுவதால் தீர்வு கிடைக்காது என்று நினைக்கிறார்கள். எங்கள் பயிற்சிகளின் போது பேசுவதற்கான தயக்கங்கள் மறைந்து எங்களது பெண் பயிற்சியாளர்களிடம் மனம் விட்டுப் பேசுகின்றனர்” என்கிறார் ஆளுமைத் திறன் பயிற்சிகளை ஒருங்கிணைக்கும் ஃப்ளோரன்ஸ்.
வாழ்வியல் பயிற்சிப் பட்டறைகளின் மூலம் பெண்கள் தங்களது அனுபவங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கின்றனர். இதன் மூலம் ஒருவருக்கொருவர் அணுசரணையாக இருப்பது சாத்தியமாகின்றது. இந்தப் பயிற்சிகளின் மூலம் பெண் குழந்தைகளின் தன்நம்பிக்கை அதிகரிப்பதுடன், பெண்ணுரிமைகள் குறித்தும் கற்றுக் கொள்கின்றனர். இந்தப் பயிற்சிகளில் மொழித் திறன், சிக்கலான சமயங்களில் முடிவெடுக்கும் திறன், பிரச்சினைகளை தீர்க்கும் ஆற்றல், சுயேச்சையாக முடிவுகள் எடுப்பது போன்ற ஆற்றல்கள் வளர்கின்றன.
ஆர்வமுள்ள பையன்களுக்கும் பயிற்சிகளில் கலந்து கொள்ள அனுமதி உண்டு.
“பயிற்சியில் முக்கியமானது என்னவென்றால், உறுதியாக இருப்பது எப்படி, எங்கள் குறிக்கோள்களைச் சாதிப்பது எப்படி என்று கற்றுக் கொள்வது தான்” என்கிறார்கள் பயிற்சிபெறும் சிறுமிகள்.

– நன்றி: அல்ஜசிரா
தமிழாக்கம்: முகில்
மூலக்கட்டுரை: The boxing girls of Kenya

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க