ஹெப்டெத்லான் என்பது அத்தனை சுலபமான விளையாட்டு அல்ல. ஹெப்டா என்றால் கிரேக்க மொழியில் ஏழு எனப் பொருள். ஏழு தடகள விளையாட்டுக்கள் சேர்ந்ததே ஹெப்டெத்லான் விளையாட்டு. நூறு மீட்டர் தடை ஓட்டம், உயரம் தாண்டுதல், குண்டு எரிதல், 200 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், ஈட்டி எரிதல் மற்றும் 800 மீட்டர் ஓட்டம் என இதே வரிசையிலான போட்டிகளில் பங்கு பெற்று புள்ளிகள் பெற வேண்டும்.  இது பெண்கள் பிரிவு ஹெப்டெத்லான் விளையாட்டில் உள்ள வரிசை. இதே போல் ஆண்கள் பிரிவுக்கும் தனி விளையாட்டு வரிசை ஒன்று உண்டு.மிக அதிகபட்ச உடல் தகுதியையும் ஆற்றலையும் கோரும் இந்த விளையாட்டில் பல் வலியுடனும், முதுகு வலியுடனும், ஆறு விரல்கள் கொண்ட கால்களுடனும், அந்தக் கால்களுக்குத் தனிச் சிறப்பான காலணிகள் இல்லாமலும் வெற்றி பெறுவதும் அப்படிப் பெற்ற வெற்றியில் இந்திய அளவில் அதிகபட்ச சாதனைப் புள்ளிகளைக் கடப்பதும் கற்பனைக்கே எட்டாத சாதனை. அப்படி ஒரு சாதனையைச் செய்திருக்கிறார் ஸ்வப்னா பர்மன். மேற்கு வங்க மாநிலம் ஜல்பய்குரி மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்வப்னா பர்மன், சமீபத்தில் இந்தோனேசியாவின் ஜகார்தாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான ஹெப்டெத்லான் விளையாட்டில் கலந்து கொண்டு தங்கம் வென்றுள்ளார்.

ஜல்பய்குரியை அடுத்த கோஷ்பாரா கிராமத்தில் பிறந்த ஸ்வப்னா, தனது பால்ய பருவத்தை கொடும் வறுமையில் கழித்துள்ளார். ரிக்சா இழுக்கும் தொழிலாளியான தந்தை பல ஆண்டுகளுக்கு முன் தாக்கிய பக்கவாதத்தால் படுத்த படுக்கையாகி விட்ட நிலையில், ஸ்வப்னாவின் தாயார் அருகில் உள்ள டீ எஸ்டேட்டில் கூலியாக வேலை பார்த்து வருகிறார். இவரோடு பிறந்தவர்கள் மூன்று பேர். ஆறு பேர் கொண்ட அந்தக் குடும்பத்தால் ஸ்வப்னாவின் தாயாரின் கூலியைக் கொண்டு இரண்டு வேளை உணவு மட்டுமே சாப்பிட முடியும்.

ஸ்வப்னாவின் சிறிய வயதில் அவருக்கு ஓட்டப் பந்தயத்தில் இருந்த திறமையைக் கண்டு வியந்த பயிற்சியாளர் சுபாஷ் சர்கார், இவருக்குப் பயிற்சியளிக்க முன்வருகிறார். எனினும், பிறவியிலேயே இவரது கால்கள் ஒவ்வொன்றிலும் ஆறு விரல்கள் உண்டு. இதற்கென தனிச்சிறப்பான காலணிகள் இருந்தால் தான் ஓட முடியும். ஆனால், குடும்பத்தில் நிலவிய வறுமையின் காரணமாக தனிச்சிறப்பான காலணிகள் வாங்க நிதியின்றி சாதாரணக் காலணிகளுடனேயே ஓடிப் பயிற்சி பெற்றுள்ளார். இப்போது ஜகார்தாவிலும் அவர் சாதாரணக் காலணிகளையே பயன்படுத்தியுள்ளார்.

“எனது கால்களில் எப்போதும் தீராத வலி இருந்து கொண்டே இருக்கும். இப்போது வரை நான் பொறுத்தமான காலணிகள் வாங்கப் போராடிக் கொண்டு தான் இருக்கிறேன்” எனக் குறிப்பிடும் ஸ்வப்னா, ”காலணிகள் ஒரு தொல்லை என்றால், அதன் அடிப்புறத்தில் இருக்கும் ஸ்பைக்குகள் மாபெரும் தொல்லை” என்கிறார். பொறுத்தமற்ற காலணிகளோடு ஓடும் போது அதன் கீழ்புறத்தில் இருக்கும் ஸ்பைக்குகளால் பாதம் முழுக்க வலி பரவும். இத்தனை இடர்பாடுகளைத் தாண்டியே அவர் ஹெப்டெத்லான் விளையாட்டில் படிப்படியாக முன்னேறினார்.

2013 -ஆம் ஆண்டு பெங்களூருவில் நடந்த தேசிய ஜூனியர் அத்லெடிக் போட்டிகளில் ஹெப்டெத்லான் விளையாட்டில் உயரம் தாண்டுதலில் முந்தைய தேசிய சாதனையை முறியடித்து வெற்றி வெற்றி பெற்றார்.  அதன் பின் 2014-ஆம் ஆண்டு கொரியாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு ஐந்தாம் இடம் பிடித்தார். அந்தப் போட்டிகளின் போது தான் முதன் முறையாக அவரது முதுகுத் தண்டுவடத்திலும் கணுக்காலிலும் காயம்பட்டது. அதைத் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

ஸ்வப்னாவின் வெற்றியைக் கொண்டாடும் கிராமத்தினர்.

இரண்டு ஆண்டுகள் கழித்து கடுமையான பொருளாதார நெருக்கடிகளுக்கு இடையேயும், போதிய மருத்துவ சிகிச்சைகள் இன்றியும் பயிற்சிகள் மேற்கொண்டு 2017-இல் நடந்த ஆசிய அத்லெடிக் போட்டியில் களம் புகுந்த ஸ்வப்னா தங்கப்பதக்கம் வென்றார். முதுகு வலிக்கு நிரந்த தீர்வு இன்றி இப்போது வரை தொடர்ந்து மும்பைக்குச் சென்று வலிநிவாரணி ஊசி போட்டு வருகிறார். இத்தனை வலிகளோடும் தான் இந்தாண்டு இந்தோனேசியாவில் நடக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இறங்கினார் ஸ்வப்னா.

”இங்கே வந்த முதல் நாளே என்னால் போட்டிகளில் கலந்து கொள்ள முடியுமா என்கிற சந்தேகம் வந்தது. ஆனால் நான் இறங்கியே ஆக வேண்டும் என நினைத்துக் கொண்டேன். ஒருவேளை கலந்து கொள்ளவில்லை என்றால் நான் எடுத்துக் கொண்ட பயிற்சிகளுக்கும் உழைப்புக்கும் அர்த்தமின்றிப் போயிருக்குமே” என்கிறார் ஸ்வப்னா. இந்தோனேசியா சென்ற போது ஏற்கனவே இருந்த வலிகளுடன் புதிதாக பல்வலியும் சேர்ந்து கொண்டது. பல்வலியின் காரணமாக இறுதிப் போட்டிக்கு முந்தைய நாள் காய்சலும் இணைந்து கொண்டது.

”எனது வலது தாடையில் கடுமையான வலி இருந்தது. ஆனால், இங்கே ஊக்க மருந்து சோதனைகள் கறாராக இருக்கும் என்பதால் வலிநிவாரணிகள் கூட எடுத்துக் கொள்ளவில்லை. கொல்லும் வலியோடு சிறப்பான விளையாட்டுத் திறனை வெளிப்படுத்த முடியுமா என்று முதலில் சந்தேகமாகத் தான் இருந்தது. எனினும், கடந்த இரண்டு நாட்களாக எனக்கு நானே நம்பிக்கை அளித்து தேற்றிக் கொண்டேன்” எனக் குறிப்பிடும் ஸ்வப்னா, “வெல்ல வேண்டும் என்றால், வலியை மறக்க வேண்டும் என எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். வலது முட்டியிலும் கூட வலி இருக்கத் தான் செய்தது.. அதையும் சமாளித்துக்  கொண்டேன்” என்கிறார்.

ஸ்வப்னா பர்மனின் வெற்றி ஏராளமான உண்மைகளை நமக்கு வெளிப்படுத்துகின்றது. நூறு கோடிக்கும் மேலான இந்திய மக்கள் தொகையில் திறமைக்குப் பஞ்சமில்லை; ஆனால், அந்த திறமை யாரும் அறியாத திசைகளில் அரசால் கண்டு கொள்ளப்படாமல் விடப்பட்டுள்ளது; அதில் விதிவிலக்காய் ஒளிரும் வைரங்களில் ஒன்று தான் ஸ்வப்னா. மேலும், தன்னை பின்னுக்கு இழுக்கும் அத்தனை சூழலையும் மீறிப் போராடி வெல்லும் இந்தப் போர்க்குணம் உழைக்கும் வர்க்கத்துக்கே உண்டு. விளையாட்டு வீரர்களை மேட்டுக்குடி கிளப்புகளில் தேடுவதை விடுத்து, உழைக்கும் மக்கள் திரளில் இருந்து தேடினால் கோடிக்கணக்கானவர்களைக் கண்டுபிடிக்க முடியும்.

– வினவு செய்திப் பிரிவு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க