சென்னை போரூர் அருகில் உள்ள கெருகம்பாக்கம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு புறநகர். அங்கே ஆளுயர மைக் செட்டுகள், மைதானம் முழுக்க பல வண்ணங்களில் கபடி விளையாட்டு எற்பாடு அறிவிப்புகள், நிகழ்ச்சி மேடையில் அலங்கார தோரணங்களுக்கு பதிலாக கட்டி தொங்கவிடப்பட்ட பரிசுப் பொருட்கள்; சில்வர் தவளை, மின்விசிறிகள் போன்றவை புதிதாக பார்ப்போருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும்.

கபடி விளையாட்டுப் போட்டியில் அங்கே இருந்த இளைஞர்களின் கொண்டாட்டம், ஆடுகளத்தையே அதகளப்படுத்தியது. ஐ.பி.எல் இறுதி போட்டி நாளன்று (27.05.2018 – ஞாயிறு) இப்படி ஒரு காட்சியா? விளையாட்டு வீரர்களின் பரவசம் நம்மையும் தொற்றிக் கொள்கிறது.

அருகில் சென்று விளையாட்டு வீரர்களிடம் பேசினோம். அவர்கள் அடுத்தடுத்த போட்டிக்கான தயாரிப்பில் சுறுசுறுப்பாக இருந்தனர். கிடைத்த நேரத்தில் பேசுவதற்கு “அவசரம்… அவசரம்… சீக்கிரம் கேளுங்கள்” என்று உடல்மொழியில் பேச்சை தவிர்த்தனர்.

கிடைத்த நேரத்தில் சாலையோரங்களிலேயே துரித உடற்பயிற்சியை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் பேசிய பேச்சும், சொன்ன தகவல்களும் கபடி விளையாட்டில் தங்கள் வாழ்க்கையை எப்படி கரைத்துக் கொண்டுள்ளனர் என்று மிரள வைத்தனர்.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களிலிருந்து 70-க்கும் மேற்பட்ட கபடி விளையாட்டு அணிகள் போட்டியில் கலந்துள்ளனர். ஒவ்வொரு அணியிலும் விளையாட்டு வீரர்கள் 10-க்கும் மேற்பட்டோர் வந்துள்ளனர். இதில் டாப் 10 அணிகளுக்குள் தாங்களும் நிற்க வேண்டும், அதை தவறவிடக் கூடாது என்று குழு உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் எச்சரிக்கின்றனர். தற்போது இருக்கும் வரிசையில் இன்னும் எப்படி முன்னேறுவது என்று தங்கள் பலம் – பலவீனங்களை அலசுகின்றனர்.

அரகம்தென், பாலவேடு, விருகை, கெருகை, அனகை, தண்டலம், மலையம்பாக்கம், சின்ன போரூர் அணிகள் மற்ற வீரர்கள் மத்தியில் மதிப்போடு வலம் வருகின்றனர். டாப் 10 வரிசையில் அவர்கள்தான் “கெத்து” என்றனர்.

களத்தில் இறங்கும் ஒவ்வொரு அணியும் திறமையானவர்கள் 7 பேரை போட்டியில் அனுமதிக்கின்றன. களத்தில் இறங்கும் வீரர்கள் ஒவ்வொருவரும் பொதுவில் கபடி விளையாட்டில் சிறந்தவர்கள் மட்டுமல்ல, களத்தில் எதிரியை வீழ்த்துவதற்கு 7 நிலைகளில் இருந்து தாக்கக்கூடிய தனிச்சிறப்பு பெற்றவர்கள்.

வலது மூலையிலிருந்து தாக்கும் வீரர், இடது மூலையிலிருந்து தாக்கும் வீரர், இவர்களுக்கு துணையாக உள்ளிருந்து உதவும் வீரர்கள் இருவர், அவர்களுக்கு பின்னால் “ஆல்டர் இன்” என்று சொல்லக்கூடிய எதிரியின் கடைசி தப்பித்தலுக்கு முட்டுக்கட்டை போடும் ஒருவர் – என்று கபடி விளையாட்டை ஒரு யுத்தக்களம் போலவே வியூகம் வகுத்து விளையாடுகின்றனர்.

பாடிவரும் எதிரணி வீரரை எல்லைக்குள் உள்ளிழுத்து, அதே நேரத்தில் கோட்டைத் தொடவிடாமல் போக்குக் காட்டி, திடீரென அவரை முடக்கி நிலைகுலைய வைப்பது, வென்று அடக்குவது ஒரு கலை.

ஒவ்வொரு மணித்துளியும் திடீர் திடீரென புதிய வியூகங்கள் வகுப்பதும், அதை தன்னுடைய உடல்மொழியின் மூலம் சக வீரர்களுக்குப் புரியவைப்பதும், ஏழு வீரர்களும் ஒரே மூளையாக மாறி அடக்குவதும், மின்னலடிக்கும் நேரத்தில் நடக்கும் அற்புதம் – ஒரு குழு சாகசம்.

தனிநபர் திறமைகள் இங்கு குழுவின் துரித உதவியின்றி முழுமை அடையாது. ஒரு நூல் பிசகினாலும் பார்வையாளர்களின் விமர்சனங்கள் எதிரொலிக்கும்.

பொருளாதார ரீதியிலும் சமூகரீதியிலும் அடித்தட்டில் உள்ளவர்களே  கபடி விளையாட்டில் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர்.

*****

“உயிருக்கு பயந்த தயிறு கும்பல் (பார்ப்பனர்கள்)தான் கபடி விளையாட்டை தீண்டத்தகாத விளையாட்டாக ஒதுக்கியது. அது மலையேறிவிட்டது. இனி கபடியும் ஐ.பி.எல் மாதிரி உலகம் முழுக்க ரசிக்கப்படும். அதன் ஆரம்பம்தான் “புரோ கபடி”. தமிழக வீரர்கள் பிரதாப் பிரபஞ்சன், திவாகர், அருண், ஜீவ குமார், சுரேஷ்குமார், வினோத் ஆகியோர் ஜெய்ப்பூர், மும்பை, உ.பி., ஹைதராபாத், டில்லி அணிகளில் விளையாடுகின்றனர்” என்றார் ஒரு கபடி வீரர்.

சென்னையைச் சுற்றிய மாவட்டங்களில் மட்டும் 350-க்கும் அதிகமாக பதிவு செய்யப்பட்ட விளையாட்டு அணிகள் இருக்கின்றன. இவர்கள் தங்களுக்குள் இணைந்து ஆண்டு முழுவதும் கபடி போட்டிகள் நடத்துகின்றனர். சுற்று முறையில் ஒவ்வொரு வாரமும் சனி, ஞாயிறுகளில் போட்டிகளை மாறி மாறி நடத்துகின்றனர். ஆண்டு முழுக்க வீரர்கள் பயிற்சி மேற்கொள்வதற்கும், தனித் திறமைகளை மேம்படுத்திக் கொள்வதற்கும் இப்போட்டிகள் உதவுகின்றன.

ஒவ்வொரு போட்டியிலும் முதல் இரண்டு என்ற தர வரிசைப்படி நான்கு அணிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. வெற்றிபெறும் அணிகளுக்கு ரூ.25,000 முதல் 10,000 வரை பணமும் கேடயமும் வழங்கப்படுகின்றன. இந்தப் பரிசுப் பொருட்களை ஊரில் உள்ள வசதிபடைத்த பிரமுகர்களிடம் நன்கொடையாகப் பெறுகின்றனர்.

“ஹோம் கிளப்” என்ற உள்ளூர் அணி, “செட்டிங்க் கிளப்” என்ற வெளியூர் அணி என இருபெரும் பிரிவாக போட்டிகளை நடத்துகின்றனர். இதற்கென்று தனித்தனி விதிமுறைகளை வகுத்துக் கொண்டுள்ளனர்.

குறிப்பாக உள்ளூர் அணிதான் பகுதிவாழ் இளைஞர்களின் தேர்வாக இருக்கிறது. இவ்வணியின் வீரர்கள் வட்டார அளவில் வெற்றிப்பெற்று புகழ் பெற்றவுடன், தனியார் கல்லூரிகள், பெயரும் புகழும் சம்பாதிக்க அவ்வீரர்களுக்கு பல சலுகைகளைக் கொடுத்து தங்கள் கல்லூரிகளில் சேர்த்துக்கொள்ள போட்டிபோடுகின்றன. வறுமையில் வாடும் இவ்விளைஞர்களும் அதை ஒரு வரப்பிரசாதமாகக் கருதுகின்றனர்.

தங்கள் விளையாட்டுத் திறனை மேம்படுத்தி, மாவட்ட, மாநில, தேசிய அளவில் வெற்றிபெற்று போலீசு வேலையிலும், தனியார், பொதுத்துறை நிறுவனங்களிலும் வேலைக்குச் செல்லலாம் என்ற கனவோடு இருக்கின்றனர். இதையே தங்கள் பெற்றேர்களிடம் சொல்லி அவர்களது எதிர்ப்பை சமாளிக்கிறோம் என்கின்றனர்.

“எனக்கு படிக்கவே தெரியாது. இருந்தாலும் ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் சேர்த்துக் கொண்டார்கள்” என்று வெடித்துச் சிரிக்கிறார், கபடி வீரர் சிவா.

விழா ஏற்பாட்டாளர்கள், வேதனையுடன் “எங்கள் ஊரில் பிழைக்கவந்த அடுக்குமாடி குடியிருப்புவாசிகள், பொதுத் திடலில் போட்டிகள் நடத்தினால்கூட போலீசுக்கு புகார் கொடுக்கிறார்கள். விழாக்கூட்டமும், சத்தமும் தொந்தரவாக இருக்கிறது என்று எங்கள் மீது வழக்கும் தொடுக்கிறார்கள். போலீசாரும் இதையே காரணம் காட்டி விழாவையே முடக்க நினைக்கிறது. அவர்களை சமாளிக்க போலீசாரை விழாக்களுக்கு அழைத்து உபசரித்து அனுப்புகிறோம்” என்கின்றனர். அடுக்கு மாடி குடியிருப்பில் அடைந்து கிடைக்கும் நடுத்தர வர்க்கம் சின்னத்திரையில் பெருஞ்சத்தத்துடன் ஐ.பி.எல் கிரிக்கெட் பார்க்கும். அவர்களின் வாரிசுகளோ வீடியோ கேம்களில் மூழ்கி இருக்கும். அவர்களது உலகில் கபடியும் கபடிப் போட்டியும் இழிவான தொந்தரவான ஒன்றாக இருப்பதில் ஆச்சரியமில்லை.

*****

சென்னை போரூர் அருகே இருக்கும் புறநகர் பகுதி கெருகம்பாக்கம். ஒரு மாநகரத்தின் பகுதி போன்று அல்லாமல் கிராம சாயலுடனேயே இருக்கிறது. அடுக்குமாடிக் குடியிருப்புகள் மட்டுமே அதன் அடையாளத்துடன் ஒட்டாமல் தனித்து நிற்கிறது. மண்ணின் மைந்தர்களும், அடுக்குமாடிக் குடியிருப்புவாசிகளும் தண்ணீரில் எண்ணெயாக வாழ்வதாகவும் சொல்லலாம். இரண்டு நாள் தொடர் கபடி போட்டியின் இரண்டாம் நாள்தான் மே 27.

ராஜலிங்கம் (வெள்ளை சட்டை), கெருகை கபடி அணியின் முன்னாள் கேப்டன்.

நான்காவது தலைமுறையினர் இப்போது களத்தில் விளையாடுகின்றனர். இளைஞர்களை விளையாட்டில் ஊக்கப்படுத்துவதுதான் எங்கள் விருப்பம். இரண்டு மாதங்கள் இதற்கான தயாரிப்பு வேலைகளை செய்வோம்.

பணம் சேகரிப்பதும், 100-க்கும் மேற்பட்ட விளையாட்டு குழுக்களுக்கு அழைப்பிதழ் அனுப்பி, சம்மதம் பெறுவதும் அவர்களை வரவேற்று உபசரித்து வழியனுப்பி வைப்பது மிகப்பெரும் வேலை.

எந்த அசம்பாவிதமும் இல்லாமல் இதை செய்ய வேண்டும் என்ற கவலை கடைசிவரை எங்களை வாட்டும். வீரர்கள் அந்தந்த அணி சார்பாக வரும் அணி நிர்வாகிகள், ரசிகர்கள், பார்வையாளர்கள், பகுதி மக்கள், அடுக்குமாடி குடியிருப்புவாசிகள், போலீசு என ஒவ்வொருவரையும் சமாளிக்க வேண்டும்.

சதீஷ், கபடி வீரர், கெருகை

நான் 10-வதுதான் படிச்சிருக்கேன். எங்க ஊரு சீனியர்களைப் பாத்து எனக்கு சின்ன வயசிலேயே கபடி மேல ஆசை. பல போட்டிகளுக்கு பத்துக்கும் மேற்பட்ட ஊர்களுக்கு போய் வெளையாடியிருக்கேன். பலமுறை உடம்புல காயம், ரணமாயிடும். அதுக்காக வெளையாடுறத நிறுத்தமாட்டோம். அந்த நேரம் வெளையாட முடியலேன்னுதான் வருத்தமாயிருக்கும்.

பாடிக்கின்னு ரெய்டு போவும்போது ஆப்போனன்ட் (எதிர் அணி வீரர்) புடிச்சான். அவனுக்கு மேலே டைவ் அடிச்சி கோட்ட தொட்டேன். அவ்ளோதான் எழுந்திருக்க முடியல. இடது கை மணிக்கட்டு உடைஞ்சி தொங்குது. ஜி.எச்-ல ஒரு மாசம் வைத்தியம், 2 வருஷம் வேலையே செய்ய முடியல. திரும்பவும் வெளையாட வந்துட்டேன்.

ராஜ்கமல், கபடி வீரர்

நானும் பத்தாவதுதான் படிச்சேன். அதுக்கு மேல படிப்பு வரல. விளையாட்டே கதின்னு இருந்துட்டேன். எனக்கு எத்தனையோ தடவ விளையாடும்போது செம அடி. பாடிக்கினே ரெய்டு போவும்போது ஆப்பனட் (எதிரணி வீரர்) நம்ம மேலே பச்சாதபமே பாக்க மாட்டான். அவனுக்கு தேவை பாயிண்ட். நம்ம மேல பாசம் காட்டுற நேரமா அது?

அவன் கண்ணுக்கு நாம பாயிண்ட். கொலைவெறியோட லாக் பண்ணுவான். கண்ணு தெறக்குற நேரத்தில எல்லாம் முடிஞ்சிடும். எழுந்திருக்க முடியாது. சோல்டர் இறங்கும். நாலு பேர் மேல வுழும்போது பாதுகாப்பாவா வுழுவான். கழுத்து நரம்பு ஜிவ்வுனு இழுக்கும். அது கொஞ்ச நாளுக்குதான், திரும்பவும் கபடி ஆட ஓடியாந்துருவோம்.

மூவேந்தன், கபடி வீரர்

“படிப்ப பத்தி கேக்காதீங்க. எல்லாரும் படிச்ச படிப்புதான். 10-வது. அப்ப… கரெக்டா சொல்ட்டனா?

எங்களுக்கு போலீசு ஆவுறதுதான் லட்சியம். மத்த வேலை எல்லாம் எங்களுக்கு கிடைக்காது. சின்ன பையனிலிருந்து இந்த வெளையாட்டுதான். மூக்க தொட்டு பாருங்க கொளகொளன்னு இருக்கும். மூக்கு தண்டு உடைஞ்சே போச்சு. எதிரியை லாக் பண்ணும் போது கட்டுமேனிக்கு உதைப்பான். பாயிண்ட் அவனுக்கா, நமக்கா? இதுதான் அங்க.

ஆளெல்லாம் அப்ப கண்ணுக்கு தெரியாது. முட்டிமேல உதைச்சா, முட்டியே கழண்டிடும். தொடை ஜவ்வு அறுந்துறும். எதுவும் நடக்கும். அடுத்தது எப்படி ஜெயிக்கிறதுன்னுதான் அப்பவும் யோசிப்போம். அடிபத்தி பெருசா அலட்டிக்க மாட்டோம்.”

சுரேஷ், தனுஷ், சுபாஷ் – முறையே 7-வது, 10-வது, 8-வது படிக்கும் மாணவர்கள்.

“நாங்க எல்லாம் சி செட் பிளேயர்ஸ். சீனியர் எங்களுக்கு சொல்லி தருவாங்க. நாங்க பக்கத்தில, மாந்தோப்பு, கொளப்பாக்கம், அனகாபுத்தூர் போய் வெளையாடுவோம். எங்களுக்கு ஆப்பனட் தண்டலம், போரூர், மணிமேடு பசங்கதான். நல்லா வெளையாடுனா காலேஜ்ல சீட் கெடைக்குமுன்னு அண்ணங்க சொன்னாங்க.”

அப்பு, ப்ளஸ் 2 படிக்கும் மாணவர்

“இது வீர வெளையாட்டுன்னா, சாம்பார், தயிர் சோறு துன்றவன்லாம் இத கடைசி பெஞ்சு வெளையாட்டுன்னு சொல்வாங்க. உயிருக்கு பயந்தவனுங்க. நாங்க கயிறு போட்ட பசங்களயெல்லாம் இப்படித்தான் கலாய்ப்போம். அவனுங்க கோச்சுக்கினுவாங்க, ஆனா நாங்க விடமாட்டோம். திரும்பவும் அவனுங்கள ஃபிரண்ட் ஆக்கிப்போம்.”

கபடி போட்டி நடுவர்

“கபடி வெளையாட்டுல பல லெவல் இருக்கு. ஒரு டீம்ல மொத்தம் 12 பேர். 7 பேர் களத்துல, 5 பேர் சப்ஸ்டியூட்.

வீரர்கள் களத்துல இறங்கும்போது மது, போதைப் பொருட்கள் எதையும் பயன்படுத்தக் கூடாது. விதியை மீறும் வீரர்களுக்கு முதலில் பச்சை கார்டு காண்பித்து எச்சரிப்போம். திரும்பவும் தவறு செய்தால், மஞ்சள் கார்டு காட்டுவோம்.

குறிப்பிட்ட வீரர் தகாத முறையில் எதிரணி வீரர்களுக்கு உடல் ஊறு விளைவித்தால் சிவப்பு கார்ட் காட்டி வெளியேற்றுவோம். அந்த நபர் விழாவின் எந்த விளையாட்டிலும் கலந்துகொள்ள முடியாது. உயிருக்கு ஆபத்து ஏற்படும்படி நடந்துகொண்டால் அவரை விளையாட்டிலிருந்து விளக்கும்படி மாவட்டத் தலைமைக்கு சிபாரிசு செய்வோம்.”

சாம்ராஜ், விஸ்காம் மாணவர்

கபடி விளையாட்ட ஐ.பி.எல் கிரிக்கெட் மாதிரி ஊடகமோ, அரசோ கண்டுகொள்ளவில்லையே, ஏன் என்று கேட்டோம்.
சட்டென, “மோடி இருக்குற வரைக்கும் கண்டுக்காத இருக்குறதே நல்லதுன்னு நினைங்க. இல்லன்னா விலைவாசி, பெட்ரோல், செல்லாத ரூபா நோட்டு, ஜி.எஸ்.டி மாதிரி கபடியும் கைக்கெட்டாத விளையாட்டா மாறிடும்.

மணிகண்டன், 7வது படித்து முடித்துவிட்டு கொத்தனார் வேலை.

மணிகண்டன்

தங்கள் படிப்பை சொல்லும்போது ஒவ்வொருவரும் வெட்கப்படுகின்றனர். அதேசமயம், அடுத்தவரின் படிப்பு, மார்க், வேலையைச் சொல்லி கிண்டலடித்து, அப்பாவிக் குழந்தைகளாய் நம்மிடம் ஒட்டிக்கொள்கிறார்கள்.

“நாங்க தோத்துட்டோம் அண்ணே, நாங்க நல்லா விளையாடினோமா?” உண்மையில் இவர்கள் அசாதரணமான கபடி வீரர்கள்.

குறைந்த உணவு, அதிக உற்சாகம். கடும் குடும்பச்சூழல், அவற்றின் நடுவே நட்சத்திரங்களாய் ஜொலிக்கிறார்கள்.

கில்லி படத்தில் விஜய் கபடி விளையாடுவது போல் உங்களால் முடியுமா? என்ற கேள்விக்கு வெடித்து சிரிக்கிறார்கள்.

“அது கில்லி இல்லண்ணா, பல்லி” என்று கிண்டலடிக்கிறார்கள். 7 பேர அவுட்டாக்குவாரா…? இங்க வரச்சொல்லுன்னா அவர…”,என்று சிரிக்கிறார்கள்.

சதீஷ், முருகன், விஜய், சமீர் – பெருங்குடி பகுதி கபடி அணியினர்.

கில்லி படத்தில் நடிகர் விஜய் கபடி ஆடும் காட்சிகளை கலாய்க்கும் நிஜ வீரர்கள்.

-வினவு புகைப்படச் செய்தியாளர்கள்

சந்தா