இந்தோனேசியாவில் புதியதாக கொண்டுவரப்பட்ட தொழிலாளர் சட்டங்களை எதிர்த்து தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் வீதியில் இறங்கிப் போராடத் துவங்கியுள்ளனர். இப்போராட்டங்களைக் கடுமையான முறையில் போலீசு ஒடுக்கி வருகிறது.
இந்தோனேசிய நாடாளுமன்றத்தில் “பல அம்சங்களைக் கொண்ட” வேலை உருவாக்கச் சட்டத்தை இந்தோனேசிய அரசு கடந்த திங்கள் கிழமை (05-10-2020) அன்று நிறைவேற்றியது.
தொழிலாளர்கள் மற்றும் சுற்றுச் சூழலுக்கு விரோதமான பல்வேறு அம்சங்களைக் கொண்ட இச்சட்டத்துக்கு இந்தோனேசியத் தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இச்சட்டத்திற்கு எதிராக தொடர்ந்து 3 நாட்களுக்கு தேசிய அளவிலான போராட்டத்துக்கு அந்நாட்டு தொழிற்சங்கங்களும் பல்வேறு அமைப்புகளும் அறைகூவல் விடுத்துள்ளனர்.
படிக்க :
♦ தொழிலாளர் சட்டத் திருத்த மசோதா : ஒரு பார்வை | பா. விஜயகுமார்
♦ தொழிலாளி வர்க்கத்தின் மீதான இறுதிகட்டப் போர் || தோழர் விஜயகுமார் உரை !
இதனையொட்டி, கடந்த செவ்வாய்க் கிழமை (06-10-2020) முதல், ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் மாணவர்களும் ஒன்று திரண்டு நீண்ட பேரணிகளை நடத்தினர். பேரணியில் கலந்து கொண்டவர்கள் மீது தடியடி, தண்ணீர் பீரங்கி மற்றும் கண்ணீர் புகை குண்டுகள் மூலம் தாக்குதலைத் தொடுத்தது இந்தோனேசிய போலீசு. பல இடங்களில் கொரோனா பெருந்தொற்று பரவலைக் காரணம் காட்டி போராட்டத்திற்கு அனுமதி மறுத்துள்ளது.
வேலைவாய்ப்பைப் பெருக்குவதுதான் இந்தச் சட்டத்தின் நோக்கம் என அந்த நாட்டின் அதிகார வர்க்கத்தினர் கூறிவருகின்றனர். இந்தியாவிலும் கூட தொழிலாளர் நலச் சட்டங்களில் கார்ப்பரேட் ஆதரவு திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் போது அரசால் சொல்லப்படும் காரணமும் இதுதான். ஆனால் உண்மையில் இந்தச் சட்டம் என்ன செய்யவிருக்கிறது ?
இந்தோனேசியாவின் தொழிலாளர்களுக்கான சம்பளம், வேலை நிலைமைகளில் உள்ள பாதுகாப்பை ரத்து செய்துள்ளது. துறைவாரியான குறைந்தபட்ச ஊதியத்தை அகற்றுகிறது.
இதற்கு முன்னர், ஒரு நிறுவனத்திலிருந்து தொழிலாளர் வெளியேறும் போது அவருக்குக் கொடுக்க வேண்டிய பிரிவுத் தொகை, அதிகபட்சமாக 32 மாதச் சம்பளமாக இருந்தது. இது அவர் எவ்வளவு காலம் அந்த நிறுவனத்தில் பணியாற்றினார் என்பதைப் பொருத்து மாறுபடும். ஆனால் தற்போது இந்தப் புதிய சட்டம் அதிகபட்ச தொகையை 19 மாதச் சம்பளமாக சுருக்கிவிட்டது.
அனுமதிக்கப்பட்ட கூடுதல் உழைப்பு நேரத்தை (Overtime) நாளொன்றுக்கு 4 மணிநேரமாக உயர்த்தியிருக்கிறது இந்தச் சட்டம். வாரத்திற்கு 18 மணிநேரம் அதிகபட்ச கூடுதல் உழைப்பு நேரமாக வரம்பு வைத்திருக்கிறது.
வேலையை வெளியே கொடுப்பதற்கான கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளன.
இந்தச் சட்டம் நிறுவனங்களுக்கான சுற்றுச்சூழல் கட்டுப்பாடுகளில் பெருமளவிலான தளர்வுகளை அனுமதிக்கிறது.
இந்தப் புதிய சட்டம் பெரு முதலாளிகளுக்குப் பெரும் ஆதாயமாக இருக்கும் நிலையில் இந்தோனேசிய பங்குச் சந்தை புள்ளிகள் 1.31% அளவிற்கு உயர்ந்துள்ளன.
தங்களது உரிமைகளுக்காகப் போராடும் இந்தோனேசிய தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களின் போராட்டத்தை ஆதரிப்போம் !
போராட்டப் புகைப்படங்கள் !
சரண்
நன்றி : ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், த வயர்