மோடியின் தொழிலாளர் சட்டத் தொகுப்பு மசோதாக்கள் : தொழிலாளி வர்க்கத்தின் மீதான இறுதிகட்டப் போர் !
பாகம் 1
செப்டம்பர் 21 அன்று, பணியிடப் பாதுகாப்பு, உடல்நலம் மற்றும் வேலைநிலைமைகள் குறித்த சட்டத்தொகுப்பு 2020 – The occupational Safety, Health and Working Conditios Code, 2020, சமூகப்பாதுகாப்பு குறித்த சட்டத்தொகுப்பு 2020 – The Code on Social Security, 2020 தொழிலுறவு குறித்த சட்டத்தொகுப்பு – The Industrial Relations Code, 2020 என்கிற 3 சட்டத்தொகுப்பு குறித்த மசோதாக்களை இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி இருக்கிறது, மோடி அரசு. நடைமுறையில் இருக்கும் 44 தொழிலாளர் சட்டங்களையும் 4 சட்டத் தொகுப்புகளாக (codes) மாற்றி, அந்த சட்டங்களை செல்லாக்காசாக்குவது என்பதுதான் மோடி அரசின் திட்டம். ஏற்கனவே ஊதியம் குறித்த சட்டத்தொகுப்பு – Labour Code on Wages – 2019-ல் ஒரு தொகுப்பு நிறைவேற்றப்பட்டுவிட்டது. இந்த 44 சட்டங்களும் மத்திய அரசால் போடப்பட்டவை. இவை அன்றி, மாநில அரசுகள் போட்டுள்ள சட்டங்கள் 100-க்கு மேல் இருக்கின்றன. இந்தப் புதிய மசோதாக்கள் மூலம் மத்திய சட்டங்கள் காலாவதியாகிப்போனால், மாநில அளவிலான சட்டங்களும் காலாவதியாகிவிடும்.
ஊதியம் மற்றும் நிதி தொடர்பான சட்டங்களை எல்லாம் இணைத்து “Labour Code on Wages” என்கிற தொகுப்பை வெளியிட்டது, மோடி அரசு. குறைந்தபட்ச ஊதியம் குறித்து மத்திய அரசின் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளது முன்மொழிதலைக்கூட மோடி அரசு நிராகரித்துவிட்டது. அதிகாரிகளால் பரிந்துரைக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியத்தைக் கூட கார்ப்பரேட்டுகள் ஒப்புக்கொள்ளவில்லை என்பதே இதன் பின்னணி.
தொழிலாளர் நலச்சட்டங்கள் மத்திய அரசு பட்டியலிலும் இருக்கிறது. அதே போல மாநில அரசு பட்டியலிலும் இருக்கிறது. தற்போதைய, மோடி அரசின் நடவடிக்கையானது மாநில அரசுகளின் உரிமையை பறித்துவிட்டது. (இதே அணுகுமுறையை புதிய கல்விக் கொள்கை உள்ளிட்ட பல துறைகளிலும் கையாண்டு மாநில அரசுகளின் அதிகாரத்தை கேலிப்பொருளாக்கி இருப்பதை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்). தொழிலாளர் சட்டங்களில் கூடுதல் இறுக்கம் தேவைப்படுகின்ற இந்தத் தருணத்தில் தொழிற்சங்கங்களது எதிர்ப்பையோ, ஆலோசனைகளையோ பொருட்படுத்தவில்லை. தொழிலாளர் “நலன்” காக்க உருவாக்கப்பட்ட சர்வதேச அமைப்பான ILO-வின் ஆலோசனையைக் கூட கேட்கவில்லை. இன்னும் ஒருபடி மேலே போய், இந்த சட்டத்திருத்தங்களை பரிசீலிப்பதற்காக அரசே உருவாக்கிய “நாடாளுமன்ற நிலைக்குழு” கூட புறம் தள்ளப்பட்டு, கார்ப்பரேட்டுகளே அனைத்தையும் தீர்மானித்து வருகின்றனர்.
இந்த பின்னணியில், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள 3 தொகுப்புகளும், தொழிலாளர்களது வாழ்வாதார உரிமைகள் மீது நடத்தப்பட்டிருக்கும் உச்சகட்ட தாக்குதலாக பார்க்க வேண்டி இருக்கிறது. தொழில்நிறுவனம் சார்ந்த தொழிலாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் ஆகிய எவரையும் விட்டு வைக்கவில்லை. தொழிற்சங்கம் அமைப்பது, கூட்டுப்பேர உரிமையை நிலைநாட்டுவது, உழைப்புக்கும், இலாபத்துக்கும் ஏற்ற ஊதியம் பெறுவது, பணியிடத்திலும், பணி ஓய்வுக்கு பிந்தைய காலத்திலும் எவ்வித பாதுகாப்பும் அற்ற பலியாடுகளாக்கப்பட்டுள்ளது, தொழிலாளி வர்க்கம்.
படிக்க :
♦ தொழிலாளி வர்க்கத்தின் மீதான இறுதிகட்டப் போர் || தோழர் விஜயகுமார் உரை !
♦ மக்கள் விரோத விவசாய சட்டங்களை வீழ்த்த வீதியில் இறங்குவோம் !
சில முக்கிய தாக்குதல்களை தொழிலாளி வர்க்கத்தின் புரிதலுக்காக தொகுத்தளிக்க வேண்டியிருக்கிறது.
தொழிலாளி / பணியாளர், வேலையளிப்பவர், நிறுவனம், தொழிற்தகராறில் தலையிடும் அதிகாரம் போன்ற கேந்திரமான வரையறுப்புகளில் செய்யப்பட்டிருக்கும் மாற்றம் மிக முக்கியமான அழித்தொழிப்பாக இருக்கிறது.
தொழிலாளர் நலச்சட்டங்களில் ஆகப் பெரும்பான்மையானவை காலனியாதிக்க காலத்தில் போடப்பட்டவை. அந்த காலகட்டத்தில் தொழிலாளி/பணியாளர் என்கிற வரையறுப்பானது அப்போது இருந்த தொழில் உற்பத்தி அடிப்படையில் வரையறை செய்யப்பட்டிருந்தது. உதாரணமாக, ஐ.டி ஊழியர்கள், ஷாப்பிங் மால்கள், கால் டாக்சி மற்றும் இதர வகை வாகன சேவைகள், சுயதொழில் செய்பவர்கள், வீட்டுவேலை செய்பவர்கள், பல்வேறு சேவை நிறுவனங்கள், நடுத்தர – சிறு – குறு நிறுவனங்கள் போன்றவை அப்போது கிடையாது.
ஸ்விக்கி போன்ற உணவு சப்ளை நிறுவனங்கள் கூட பல்லாயிரம் பேரை பணிக்கு வைத்துள்ளன. இத்தகைய சூழலில் தொழிலாளி/பணியாளர் என்கிற வரையறுப்பானது உடலுழைப்பு அல்லது மூளையுழைப்பில் ஈடுபட்டு அதற்கு ஈடாக, ஏதேனும் ஒரு அளவில் பண வடிவிலான பரிவர்த்தனை மதிப்பை பெறுகின்ற எவரும் தொழிலாளி/பணியாளர்தான். ஆனால், இந்த வரையறுப்பை நிச்சயமற்றதாக மாற்றிவிட்டது, தொழிலுறவு குறித்த சட்டத்தொகுப்பு.
வேலையளிப்பவர் என்கிற புதிய வரையறையானது, காண்டிராக்டரை வேலையளிப்பவராக மாற்றிவிட்டது. எந்த ஒரு தொழில் நிறுவனத்திலும் காண்டிராக்டர் என்பவர் அந்த நிறுவனத்துக்கு வேலையாள் சப்ளை செய்பவர் தான். காண்டிராக்ட் தொழிலாளியை காண்டிராகடர் மூலமாக பணியில் அமர்த்தும் நிர்வாகமே முதன்மை வேலையளிப்பவர். காண்டிராக்டர் ஒருபோதும் வேலையளிப்பவராகிவிட முடியாது. காண்டிராக்ட் தொழிலாளிக்கு உரிய சம்பளம், போனஸ் தருவது துவங்கி பணியிடப் பாதுகாப்பு வரையிலான அனைத்துக்கும் முதன்மை வேலையளிப்பவரே பொறுப்பு. ஆனால், மோடியின் புதிய சட்டத்தொகுப்பானது காண்டிராக்டரையும் வேலையளிப்பவர் என்கிற வரையறுப்பில் கொண்டு வந்து விட்டதால், இனிமேல் காண்டிராக்ட் வேலைக்கு வருகின்ற எந்த தொழிலாளிக்கும் ஏற்படக்கூடிய உயிரிழப்பு முதல் முறையான சம்பளம் மறுப்பது வரை எந்த “குற்றத்துக்கும்” முதன்மை வேலையளிப்பவரான நிறுவனம் ஒருபோதும் பொறுப்பேற்க வேண்டியதில்லை.
எங்கெல்லாம் காண்டிராக்ட் முறை செழித்தோங்குகிறது? நடுத்தர நிறுவனங்கள் கூட காண்டிராக்ட் தொழிலாளியை பயன்படுத்துகின்றன. அதன் எண்ணிக்கை கைவிட்டு எண்ணக்கூடியதுதான். ஆனால், கார்ப்பரேட் நிறுவனங்களில்தான் பல்லாயிரக்கணக்கான காண்டிராக்ட் தொழிலாளர்கள் பயன்படுத்தப்படுகின்றனர். நிரந்தரத் தொழிலாளர் எண்ணிக்கையைவிட பன்மடங்கு காண்டிராக்ட் தொழிலாளர்கள்தான் கார்ப்பரேட் நிறுவனங்களில் நேரடி உற்பத்தியில் ஈடுபடுத்தப்படடுகின்றனர். இவ்வாறு நேரடி உற்பத்தியில் காண்டிராக்ட் தொழிலாளியை ஈடுபடுத்துவது முன்பெல்லாம் சட்டவிரோதம் என்று சொல்லப்பட்டது. அந்த சட்டவிரோதத்தையே சட்டமாக்கிவிட்டது, மோடி அரசு. 100 ஆண்டுகளுக்கு முன்னர், காலனிய ஆட்சியில் சுரண்டலின் ஒட்டுமொத்த வடிவமாக இருந்த இத்தகைய காண்டிராக்ட் முறையை தேசபக்த மோடியின் அரசு புதிய வடிவத்தில், காலனியாதிக்க கொடுமையைவிட மிகப்பெரிய கொடுமையான உள்ளடக்கத்தில் துணிந்து செய்திருக்கிறது. இனிவரும் காலங்களில் நிரந்தரத் தொழிலாளி என்கிற வகையினமே இருக்காது.
தனக்கு வேலையளிப்பவர் யார் என்பதை அறியாதது மட்டுமல்ல, அந்த வேலை எவ்வளவு நாட்கள் நீடிக்கும் என்பதைக்கூட அறியாமல் உழைத்துக் கொண்டிருக்கும் ஒரு ‘புதிய’ தொழிலாளர் பிரிவுக்கு அகல கதவைத் திறந்துள்ளனர். பிறக்கும்போதே இறப்புத் தேதி தீர்மானிக்கப்பட்ட குழந்தையைப் போன்றதொரு அவல நிலையைப் போல இந்த புதிய தொழிலாளர் பிரிவுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் பெயர் “தீர்மானிக்கப்பட்ட காலக்கெடு வேலைவாய்ப்பு” (Fixed Term Employment – FTE). இந்த வேலை இழ(ற)ப்பைத் தவிர்க்க வேண்டுமானால், முதலாளி சொல்கின்ற வேலை எதுவாக இருந்தாலும், வேலைநேரம் எவ்வளவாக இருந்தாலும், பணியிட பாதுகாப்பு எத்தனை வேதனை மிக்கதாக இருந்தாலும், கொடுக்கப்படும் கூலி எவ்வளவு அற்பமானதாக இருந்தாலும், அதை செய்துதான் ஆக வேண்டும். சில சட்டப் பாதுகாப்புகள் இருக்கின்ற தற்போதைய சூழலில், தொடர்ச்சியாக உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்ற தொழிலாளிக்கு வருடத்திற்கொரு முறை – ஒரே ஒருநாள் – வேலையிலிருந்து விலக்கி வைக்கப்பட்டு, இரண்டாவது நாள் அதே வேலைக்கு “புதிய” தொழிலாளியாக வேலைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்ற அயோக்கியத்தனம் நடந்து கொண்டிருக்கிறது. மோடி கொண்டு வந்திருக்கும் புதிய சட்டத்தொகுப்பு இந்த அயோக்கியத்தனத்தை சட்டபூர்வமாக்கி இருக்கிறது; கூலி அடிமை முறை மேலும் மேலும் தீவிரமாகி வருகிறது.
வேலை அளிப்பவர் யார் என்று தெரியாது. வேலைக்கோ, உயிருக்கோ எந்த உத்தரவாதமும் கிடையாது என்பது போன்ற எல்லா கொடுமைக்கும் சிகரம் வைப்பதாக இருக்கிறது இன்னொரு வரையறை. “தொழில் நிறுவனம்” என்றால் என்ன என்பதற்கான வரையறைதான் அந்த உச்சகட்டம். அறக்கட்டளைகள், சமூகசேவை அமைப்புகள் கூட இனிமேல் தொழில் நிறுவனம் என்கிற வகைப்பாட்டில் அடக்கப்பட்டிருக்கிறது.
இந்த வகையான அமைப்புகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு உதவுவதே நோக்கம் என்று கூட சொல்லிக் கொள்கின்றனர். மாறாக, கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்த வரையறையை கேடாகப் பயன்படுத்தும் வாய்ப்பை வாரிக் கொடுத்திருக்கிறது, மோடி அரசு. அம்பானி அறக்கட்டளையின் கீழாக ரிலையன்ஸ் தொழில் நடத்தலாம். அதானி சமூக சேவகராக ‘மாறி’ ஒரு பத்தாயிரம் பேரை வேலையில் ஈடுபடுத்தலாம். கோக் நிறுவனம் தாகம் தீர்க்கும் சமூகசேவை அமைப்பாக தன்னை பதிவு செய்து கொள்ளலாம். மருந்து தயாரிப்பு நிறுவனமோ, மின் உற்பத்தி நிறுவனமோ, கார்ப்பரேட் கல்விக்கூடமோ கூட தம்மை சமூகசேவை அமைப்பாக அறிவித்துக் கொள்ள முடியும்.
அறக்கட்டளைகள், சமூக சேவை நிறுவனங்கள் என்றால் இலாப நோக்கம் இல்லாதவை என சட்டம் சொல்வதால் அம்பானி அறக்கட்டளை அல்லது அதானி சமூக சேவை அமைப்பின் பேனரில் வேலை செய்யும் தொழிலாளிக்கு உழைப்புக்கேற்ற ஊதியமோ, இலாபத்துக்கேற்ற சம்பள உயர்வோ கொடுக்க வேண்டியதில்லை. இது கற்பனை அல்ல. பல கார்ப்பரேட் நிறுவனங்கள் நடத்தி வருகின்ற மருத்துவமனைகள், கல்விக்கூடங்களைப் பார்த்தால் உண்மை நன்கு தெரியும். இவை எல்லாம் தர்ம ஸ்தாபனங்களாக கருதப்பட்டு, இலாபம் இல்லா நிறுவனங்களாக பட்டியலிடப்பட்டு, அங்கெல்லாம் வேலை பார்க்கும் இலட்சக்கணக்கான ஊழியர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள் மொட்டை அடிக்கப்படுவர். (இப்போதும் அதுதான் நடக்கிறது. இப்போது நடப்பதை சட்டவிரோதம் என்கிறோம். இனி அவை எல்லாம் சட்டப்படியான செயல் என்றாக்கப்படும்.)
(தொடரும்)
கட்டுரை ஆக்கம்: பா.விஜயகுமார்,
தலைமைக்குழு உறுப்பினர், பு.ஜ.தொ.மு, தமிழ்நாடு-புதுவை