- அமெரிக்க கார்ப்பரேட் முதலாளி எலான் மஸ்க் தொடங்கி இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி, எல்-அண்ட்-டி (L&T) நிறுவனத் தலைவர் எஸ்.என்.சுப்ரமணியன் வரை வேலை நேரத்தை வாரத்திற்கு 70 முதல் 90 மணி நேரமாக உயர்த்த வேண்டுமென பேசி வருகிறார்கள். இதன்மூலம் கடுமையான விமர்சனங்களுக்கும் உள்ளாகி வருகிறார்கள்.
- இப்படி பேசுவதால் விமர்சனங்கள் எழும் என்பது அவர்களுக்கு தெரியாதா? தெரியும். இருப்பினும் முதலாளித்துவ பொருளாதாரம் வழக்கம்போல் முட்டுச்சந்தில் (நெருக்கடியில்) நிற்கிறது; அதிலிருந்து மீளும் முயற்சிகளில் ஒன்றாகத்தான் தங்களது இந்த தொழிலாளர் விரோதத் திட்டத்தை வெளிப்படையாக பேசி வருகிறார்கள்.
- அதீத இலாபத்திற்காக அதிகமாக உற்பத்தி செய்து சந்தையை திணறடித்து விட்டு, தேக்கம் – மந்தம் என்று ஊடகங்களில் ஒப்பாரி வைப்பார்கள், வைத்தார்கள்!
- 2019-இல் இப்படி ஒப்பாரி வைத்து கார்ப்பரேட் வரியை 30 சதவிகிதத்திலிருந்து 22 சதவிகிதமாக குறைத்துக் கொண்டார்கள். இதனால் அரசுக்கு ஆண்டுக்கு 2.5 லட்சம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
- மேலும், கார்ப்பரேட் இலாப வெறிக்காக அரசு – பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கி ஒவ்வொன்றாக விழுங்கிக் கொண்டிருக்கிறார்கள். இன்றோ கார்ப்பரேட்மயமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இந்தப் பசி அடங்கப்போவதில்லை.
- முதலாளித்துவத்தின் கோரப்பசிக்கு புதிய பொருளாதாரக் கொள்கை, தனியார்மயம், 2020-இல் இந்தியா வல்லரசு என்று மக்கள் இரையாக்கப்பட்டார்கள். இப்போது உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியாவை உருவாக்கப் போவதாக கதை சொல்கிறார்கள்.
- மற்றொரு பக்கம், கார்ப்பரேட் கொள்கைக்கேற்ப நாட்டின் ஆட்சிக் கட்டமைப்பை பாசிசமயமாக்கி கொண்டிருக்கிறார்கள். ஏனெனில், ஜனநாயகமான சூழ்நிலையில் கார்ப்பரேட்களின் லாபவெறி பசியை தீர்க்க முடியாது என்பதையும் தாண்டி, இன்று போலி ஜனநாயக கட்டமைப்பே அதற்கு பற்றாக்குறையாக மாறிவிட்டது. அதற்காகவே சட்டங்கள், திட்டங்கள் திருத்தப்பட்டு அரசுக் கட்டமைப்பே முற்றிலும் பாசிசமயமாகிக் கொண்டிருக்கிறது.
- இந்தியாவில் புதிய பொருளாதாரக் கொள்கை அமல்படுத்தப்பட்ட 35 ஆண்டுகளில் உத்திரவாதமான வேலைவாய்ப்பின்மை, வறுமை, பட்டினி, கிரிமினல் குற்றங்கள், பெண்கள் பாதுகாப்பின்மை தீவிரமாகிக் கொண்டே செல்கின்றது.
- மேலும், இயற்கை வளங்கள் சூறையாடல் – வெப்பநிலை உயர்வு – சூழலியல் மாற்றம் என நெருக்கடி தீவிரமாகிக் கொண்டிருக்கிறது!
- இந்தப் போக்கில் கடந்த நான்கு ஆண்டுகளில், பணி நிரந்தர உரிமைகள் – ஊதிய உயர்வு ஆகிய எதையும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வழங்காமல், புதிய தலைமுறை இளைஞர்களை நாடோடிகளாக்கி அவர்களின் வாங்கும் திறனை முடக்கிவிட்டு, ஓட்டி வருகிறார்கள்.
- ஆண்டுதோறும், முதலாளிகளின் இலாப விகிதத்தை உயர்த்திக் கொள்வதன் விளைவாக விலைவாசி உயர்ந்து கொண்டே செல்கிறது. கூலியாக வழங்கப்படும் பணத்தின் மதிப்பும் குறைந்துகொண்டே வருகிறது. சந்தையில் பொருட்களை வாங்க முடிவதில்லை.
- மக்களின் பொருள் வாங்கும் திறன் குறைந்து கொண்டே வருவதால் லாபவிகிதம் உயரும் என்கிற உத்திரவாதத்ததை சந்தை உத்தரவாதம் தருவதாக இல்லை. இந்த காரணங்களால் அடுத்த தாக்குதலாக தொழிலாளர் வேலை நேரத்தை உயர்த்தி அதிக லாபத்தை உத்திரவாதம் செய்ய கார்ப்பரேட் கும்பல் முயன்றுகொண்டு இருக்கிறது.
- ஓட்டைப் பானையில் தண்ணீர் நிற்கப்போவதில்லை. அது போல, முதலாளித்துவ பொருளாதாரக் கொள்கையால் மக்களின் நெருக்கடிகளும் தீரப் போவதில்லை!
- ஒருவேளை தினசரி வேலைநேரம் உயர்த்தப்பட்டால், ஞாயிறு விடுமுறையும் பறிபோனால், தொழிலாளர் வர்க்கம் ஆரோக்கியத்தை இழப்பதோடு பொறுமை இழந்து மனநலம் சார்ந்த பிரச்சினையை சந்திக்கும். குழந்தை பராமரிப்பு முதல் பெற்றோர் பராமரிப்பு, குடும்ப பராமரிப்பு வரை பாதிக்கப்பட்டு குடும்ப கட்டமைப்பே சீரழியும்!
- அதோடு மட்டுமல்லாமல், சரிபாதி தொழிலாளர்களுக்கு தற்போதுள்ள உத்திரவாதமில்லாத வேலைவாய்ப்பும், அற்பக் கூலியும் கூட பறிபோய்விடும்.
- முதலாளித்துவ லாபவெறிக்காக மக்கள் ஏதோ ஒரு வகையில் பலியிடப்பட்டு கொண்டே இருக்கிறார்கள். இதை புரிந்து கொள்வதுதான் இன்றைய முதன்மை தேவையாகும்!
- எக்காலத்திற்கும் சொத்துடைமை சமுதாயத்தில் அதிதீவிர சுரண்டலுக்காகவும், அதிகாரத்துக்காகவும் மக்களை பிரிக்கும் அடக்குமுறைதான் பார்ப்பனியம் – மனுதர்மம் என்பதாகும். இதையும் மறந்துவிடாதீர்கள்!
- பிரச்சினைகளை பற்றி பேசிக் கொண்டிருக்கும் அதேசமயம், பிரச்சினைகளுக்கு பின்னுள்ள அடிப்படைக் காரணங்களையும் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்!
- 150 கோடி மக்கள் பிரச்சினையை தீர்க்காமல், மாண்டேகு-செம்ஸ்போர்ட் உருவாக்கிய இந்த சுரண்டலுக்கான நாடாளுமன்றக் கட்டமைப்பு 76 ஆண்டுகளில் தோற்றுப்போய் அம்பலப்பட்டு நிற்கிறது.
- சுரண்டலையும், இலாபத்தையும் உயிர் மூச்சாக கொண்ட முதலாளித்துவ உற்பத்தி முறைக்கு மாற்றாக மக்கள் தேவைக்கான உற்பத்தி முறையும் கொள்கையும்தான் தீர்வாகும்!
– தொழிலாளர் ஒருங்கிணைப்பு சிந்தனைகள்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
மத்திய அரசே
நீங்கள் கார்ப்ரேட்டுக்கு லோன் மற்றும் சப்சிடி
அனைத்தையும் வாரி வழங்கிவிட்டு, தொழிலாளர்களின் நலச்சட்டங்கைள கார்ப்ரேட்களுக்கு ஏற்றவாறு மாற்றி
அமைத்து , வரிச்சுமைகளை பொதுமக்களிடம் வசூலித்து கார்ப்ரேட்டுகைள காப்பாத்துகின்றன,
இந்நிலை நீடிப்பின் நாடு பொருளாதார வளர்ச்சி
அடையளாம், ஆனால் நாட்டில் உள்ள மக்கள்
எந்தவிதமான வளர்ச்சியும் காணப் போவதில்லை,
தொழிலாளர்களுக்கு ஊதியத்தை லாபத்தின்
அடுப்படையில் சதவீதத்தில் ஊதிய உயர்வை கொடு