சென்னையின் தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட அனகாபுத்தூரில் டோபிகானா, தாய் மூகாம்பிகை நகர், காயிதே மில்லத் நகர், சாந்தி நகர், ஸ்டாலின் நகர், எம்.ஜி.ஆர். நகர் 3-வது தெரு ஆகிய பகுதிகள் அடையாறு ஆற்றங்கரையையொட்டி அமைந்துள்ளன. இப்பகுதிகளில் உள்ள 700-க்கும் மேற்பட்ட வீடுகள் ஆற்றை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ளதாகக் கூறி கடந்த மே 20-ஆம் தேதியிலிருந்து புல்டோசரைக் கொண்டு அவ்வீடுகளை இடித்து வருகிறது தி.மு.க அரசு. 300-க்கும் மேற்பட்ட போலீசுகளைக் குவித்துப் போராடும் மக்கள் மீது கடும் அடக்குமுறை செலுத்தி இடிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதனால், சுமார் 3,500-க்கும் மேற்பட்ட மக்கள் அப்பகுதிகளிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு அகதிகளாக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது.
கடந்த 2023-ஆம் ஆண்டில் இப்பகுதியில் வீடுகளை இடிக்கும் நடவடிக்கையை தி.மு.க. அரசு மேற்கொண்டது. இதற்கு மக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததால் இடிப்பு நடவடிக்கையை நிறுத்திவைத்திருந்த தி.மு.க. அரசு தற்போது மீண்டும் நடவடிக்கையைத் தொடங்கியிருக்கிறது.
தங்கள் உழைப்பால் கட்டிய வீடுகள் தங்கள் கண்முன்னே இடிக்கப்படுவதைக் காண முடியாத வேதனையில் அனகாபுத்தூர் மக்கள் அழுது புலம்பும் காட்சிகளும், வீடுகள் இடிக்கப்படுவதை எப்படியாவது தடுத்துநிறுத்த முடியாதா என்று சாலையில் உருண்டு புரளும் காட்சிகளும் காணொளிகளாக சமூக வலைத்தளங்களில் வெளியாகிக் காண்போரின் நெஞ்சை உலுக்குகின்றன.
தி.மு.க. அரசின் இந்த அப்பட்டமான மக்கள் விரோத நடவடிக்கையை எதிர்த்து பலரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். பாசிச பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் ஆக்கிரமிப்பு என்ற பெயரில் இஸ்லாமிய மக்களின் வீடுகளை புல்டோசரை கொண்டு இடிக்கும் நடவடிக்கையுடன் இதனை ஒப்பிட்டு சமூக வலைத்தளங்களில் தி.மு.க. அரசை விமர்சித்து வருகின்றனர்.
அதேபோல், மே மாதத் தொடக்கத்தில் வீடுகளை இடிக்கப்போவதாக அனகாபுத்தூர் மக்களை போலீசு அச்சுறுத்தத் தொடங்கியதிலிருந்தே மக்கள் அதிகாரக் கழகம், மே 17 இயக்கத் தோழர்களும் பல்வேறு ஜனநாயக சக்திகளும் அம்மக்களுடன் இணைந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். வீடுகள் ஆறுகளை ஆக்கிரமித்துக் கட்டப்படவில்லை என்பதை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தி வருகின்றனர். தி.மு.க-வுடன் கூட்டணியில் இருக்கும் சி.பி.ஐ., சி.பி.எம்., வி.சி.க., ம.தி.மு.க., ம.ம.க. உள்ளிட்ட கட்சிகளும் வீடுகள் இடிக்கப்படுவதை நிறுத்த வேண்டும் என்று தி.மு.க. அரசை வலியுறுத்தி வருகின்றன.
கார்ப்பரேட்டுகளுக்கு ஒரு நீதி!
ஏழைகளுக்கு ஒரு நீதி!
அனகாபுத்தூரில் இடிக்கப்பட்டுவரும் வீடுகள் அமைந்துள்ள பகுதிகளானது சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தால் (சி.எம்.டி.ஏ) குடியிருப்பு பகுதிகள் என அங்கீகரிக்கப்பட்ட பகுதிகளாகும். இப்பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு 2008-ஆம் ஆண்டில் அப்போதைய மாவட்ட ஆட்சியர் பட்டா வழங்குவதற்கான ரசீதுகளை வழங்கியிருக்கிறார். ஐந்து வீடுகளுக்குப் பட்டாவும் உள்ளது. அப்படியிருந்தும் தி.மு.க. அரசானது மக்களுடைய வீடுகளை ஆக்கிரமிப்பு என்று கூறி இடிக்கிறது. அதேசமயம், இடிக்கப்படும் வீடுகளுக்கு அருகிலுள்ள காசாகிராண்ட் (Casagrand) நிறுவனமானது ஆற்றையே ஆக்கிரமித்து சுற்றுச்சுவரை எழுப்பியிருக்கிறது.

இதுகுறித்து தாம்பரம் மாநகர ஆணையரிடம் கேள்வியெழுப்பிய போது, “காசாகிராண்ட் நிறுவனத்திற்கு ஏற்கெனவே பட்டா கொடுத்துவிட்டார்கள். அதை தாங்கள் எதுவும் செய்ய முடியாது” என்று பதிலளித்ததாக மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கூறுகிறார். மேலும், சி.எம்.டி.ஏ-வால் குடியிருப்பு பகுதியாக அறிவிக்கப்பட்ட வீட்டை ஏன் இடிக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, “தப்பாக கொடுத்துவிட்டார்கள். அதனால் அதனை மாற்றுகிறோம்” என்று கூறியுள்ளார்கள். இதுதான் கார்ப்பரேட்டுகளுக்கு ஒரு நீதி, ஏழைகளுக்கு ஒரு நீதி என்ற தி.மு.க. அரசின் இரட்டை நீதி!
குறிப்பாக, தி.மு.க. அரசு மேற்கொள்ளும் இந்த நடவடிக்கைக்குப் பின்னால், அப்பட்டமான கார்ப்பரேட் சேவை ஒளிந்துள்ளது. தமிழ்நாடு அரசின் கீழ் உள்ள “சென்னை நதிகள் மறுசீரமைப்பு அறக்கட்டளை” (Chennai River Restoration Trust) என்ற தொண்டு நிறுவனத்தால் “சென்னை நதிகள் புனரமைப்பு நிறுவனம்” (Chennai River Transformation Company Limited) ஜூலை 2024-இல் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த நிறுவனம் “பிரைம் மெரிடியன் சர்வேஸ் பிரைவேட் லிமிடெட்” (Prime Meridian Surveys Private Limited) என்ற தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தமிட்டு அடையாறு ஆற்றின் எல்லைகளை மறுவரையறை செய்திருக்கிறது. இதில், சி.எம்.டி.ஏ-வால் குடியிருப்பு பகுதிகள் என அங்கீகரிக்கப்பட்ட பகுதிகள் ஆக்கிரமிப்பு பகுதிகள் என்று அயோக்கியத்தனமாக மறுவரையறை செய்யப்பட்டுள்ளது.
அதேபோல, சி.ஆர்.டி.சி.எல். என்ற புனரமைப்பு நிறுவனம் ஆற்றின் ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு, பூங்காக்கள், நடைபாதைகள், சைக்கிள் பாதைகள், வாகனம் நிறுத்துமிடங்கள் உள்ளிட்ட கட்டுமானங்களை ஏற்படுத்தப் போகிறது என்று செய்திகள் வெளியாகியுள்ளன. அதாவது, ஏழை எளிய மக்களின் குடியிருப்புகளை ஆக்கிரமிப்புகள் என்று அகற்றிவிட்டு, அப்பகுதியில் கட்டப்பட்டுள்ள காசாகிராண்ட் போன்ற சொகுசு அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிக்கும் மேட்டுக்குடி வர்க்கத்தினருக்கான பொழுதுபோக்கு வளாகங்கள் உருவாக்கப் போகிறது ‘சமூக நீதி’ தி.மு.க. அரசு. இந்த அடிப்படையிலிருந்துதான், காசாகிராண்ட் நிறுவனம் சைதாப்பேட்டை, அனகாபுத்தூர் உள்ளிட்ட பல பகுதிகளில் அடையாறு ஆற்றை ஆக்கிரமித்துப் பல கட்டடங்களை நிறுவி வருகிறது.
அதுமட்டுமின்றி, சி.ஆர்.டி.சி.எல். நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் உதயச்சந்திரன் உள்ளிட்ட தமிழ்நாடு அரசின் உயர் அதிகாரிகள் உள்ளனர். இந்நிறுவனம் தொடங்கப்பட்டதிலிருந்து 15 மாதங்களுக்குள்ளாக அடையாறு மறுசீரமைப்பு பணிகளை முடிக்க வேண்டும் என்று தி.மு.க. அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, சுமார் ரூ.1,500 கோடியை ஒதுக்குவதாக அறிவித்திருக்கிறது. நடப்பு நிதியாண்டில் ரூ.300 கோடியை ஒதுக்கியிருக்கிறது. மேலும், இந்நிறுவனத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் பணிகள் அரசு-தனியார் பங்களிப்பு (Public-Private Partnership) திட்டத்தின் அடிப்படையிலேயே நடைபெறப் போகிறது.
தங்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்று கூறுவது தவறு என்று அனகாபுத்தூர் மக்கள் கடந்த 2023-ஆம் ஆண்டில் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளபோதே, அதனையெல்லாம் தூரவீசிவிட்டு தன்னுடைய கைப்பாவையான அரசதிகாரிகள் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது. இனிவரும் காலத்திலும், 42 கி.மீ. நீளமுள்ள அடையாறு ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்று கூறி அவர்களின் வீடுகளையும் இடிக்கும் வேலையில் தி.மு.க. அரசு ஈடுபடும்.
தமிழ்நாடு உழைக்கும் மக்கள்
எதிர்நோக்கியிருக்கும் பேரபாயம்
2015-ஆம் ஆண்டு சென்னை பெருவெள்ளத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளை தொடர்ந்து நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுகளை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படும் வேலையில் தி.மு.க. அரசு ஈடுபட்டு வருகிறது.
தி.மு.க. ஆட்சிக்கு வந்ததிலிருந்து ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் அடையாறு, கூவம், பக்கிங்காம் கால்வாய் கரையோர மக்களின் வீடுகளை இடித்து வருகிறது. சான்றாக, கடந்த 2022-ஆம் ஆண்டில் பக்கிங்காம் கால்வாயை ஆக்கிரமித்து இருக்கிறார்கள் என்று கூறி ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள 625 வீடுகள் இடிக்கப்பட்டன.
இவ்வாறு இடிக்கப்படும் வீடுகளில் உள்ள மக்கள் வசிப்பதற்கு கண்ணகி நகர், பெரும்பாக்கம் உள்ளிட்டு நகரத்திற்கு வெளியே உள்ள பகுதிகளிலேயே வீடுகள் ஒதுக்கப்படுகின்றன. அப்பகுதிகளில் ஒதுக்கப்படும் வீடுகள் மனிதர்கள் வாழத் தகுதியற்ற வகையில் உள்ளதால் அங்கு மக்களால் வசிக்க முடிவதில்லை. வாடகை செலுத்தி வேறு பகுதிகளில் குடியமரும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். வேறுவழியின்றி வசிப்பவர்களும், பிள்ளைகளுக்கான பள்ளி-கல்லூரி கட்டமைப்புகள் போதிய அளவில் இன்றி அவதிப்படுகின்றனர். வேலைக்கு செல்வதற்கு 25 முதல் 30 கி.மீ வரை பயணம் செய்ய வேண்டியிருக்கிறது என்று குமுறுகின்றனர்.
ஆனால், அதைக் காதுகொடுத்துக் கேட்கக் கூட தி.மு.க. அரசு தயாராக இல்லை. வீடுகளை இடிப்பதற்கு எதிராகப் போராடும் மக்களைக் கூட தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் சந்திக்க மறுக்கின்றனர். இது தங்களை நம்பி வாக்களித்த மக்களின் முதுகில் குத்தும் நடவடிக்கையல்லவா?
ஆற்றை ஆக்கிரமித்துள்ளார்கள் என்று கூறி ஏழை, எளிய மக்களை சென்னை நகரத்திலிருந்து விரட்டியடிக்கும் நடவடிக்கையானது, தி.மு.க. அரசு கவர்ச்சிகரமாக அறிவித்துள்ள சிங்கார சென்னை 2.0, ஸ்மார்ட் சிட்டி ஆகிய ‘வளர்ச்சி’த் திட்டங்களின் ஓர் அங்கமாகும். எனவே, இது சென்னை நகர உழைக்கும் மக்கள் மட்டும் எதிர்நோக்கியிருக்கும் பிரச்சினையல்ல. மதுரை, கோவை உள்ளிட்ட பல நகரங்களில் வாழும் உழைக்கும் மக்களின் பிரச்சினையாகும். கடந்த மார்ச் மாதத்தில் தமிழ்நாடு முழுவதுமுள்ள 12 நீர்நிலைகளின் ஆக்கிரமிப்புகளை சி.ஆர்.ஆர்.டி. மூலம் அகற்றிப் புனரமைக்க உள்ளதாக தி.மு.க அரசு அறிவித்திருக்கிறது. அதாவது, லட்சக்கணக்கான மக்கள் ஆக்கிரமிப்பாளர்கள் என்று கூறி தங்களுடைய பூர்வீக இடங்களிலிருந்து அகதிகளாக வெளியேற்றப்படும் பேரபாயம் தமிழ்நாட்டை எதிர்நோக்கியிருக்கிறது.
அதுமட்டுமின்றி, மேற்கூறிய தி.மு.க. அரசின் இந்நடவடிக்கைகளை, ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரக் கனவிற்காக, தமிழ்நாட்டை உற்பத்தியின் குவிமையமாக மாற்றுவது; நகர விரிவாக்கம் என்ற பெயரில் உள்கட்டமைப்புகளை கார்ப்பரேட்மயமாக்குவது – வரிச்சுரண்டலை தீவிரப்படுத்துவது; அரசு-தனியார் பங்களிப்பு ஊக்குவிப்பது என்ற பெயரில் அரசுத்துறைகளை கார்ப்பரேட்மயப்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளின் தொடர்ச்சியாகவே பார்க்க வேண்டியுள்ளது.
பாசிசத்தை எதிர்ப்பதாகக் கூறிக்கொண்டு தி.மு.க. அரசு மேற்கொள்ளும் அப்பட்டமான கார்ப்பரேட் சேவை பா.ஜ.க. கும்பலுக்கும் அதன் அடிவருடிகளுக்கும் சாதகமாகவே அமையும். எனவே, பாசிச எதிர்ப்பு ஜனநாயக சக்திகள் மோடி-அமித்ஷா கும்பலின் பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராகப் போராடுவது மட்டுமின்றி, தி.மு.க. அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டங்களையும் கட்டியமைக்க வேண்டும்.
தலையங்கம்
(புதிய ஜனநாயகம் – ஜூன் 2025 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
ஆம். சமுதாயத்திற்கு இது நல்லது இல்லை. இவர்கள் அனைவரும் வசதியான வாழ்க்கை வாழ்கிறார்கள். பாவம் இவர்களுக்கு வாக்களிக்க ஏழை மக்கள் ஆனால் இவர்கள் பதவிக்கு வந்த்தவுடன் அதே ஏழைகளை நாய் போல கருதி அவர்களின் வாழ்வாதரத்தை பறித்து விடுவார்கள் கேடுகெட்ட அரக்கர்ள். இது கட்டாயமாக உயர்நீதி மன்றமும் உச்சநீதிமன்றம்மும் பதில் அளிக்க வேண்டும்.
திராவிட இயக்கங்கள் எப்போதும் சாமானிய மக்களுக்கான இயக்கங்கள் அல்ல. சாமான்ய மக்கள் ஒரு வைக்கோல் கன்னுக்குட்டி தான்.அதை வைத்து பணக்காரர்களிடம் பணம் சம்பாதிக்க திராவிட இயக்கங்கள் போடும் நாடகம் தான் சமுக நீதி. ஏழை மற்றும் நடுத்தர அளவிலான மக்கள் தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாக்கு வங்கி. ஒவ்வொரு தேர்தலிலும் இவைகள் தான் கடைசி நேரத்தில் வீசப்படும் காசுக்கு தங்கள் வாக்குகளை தானமாக கொடுத்து அடுத்த ஐந்தாண்டுகளுக்கு சொல்லடா துயரங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
File a case if your demand is genuine. Construction on River beds is a crime be it common man or corporate.