செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு 2026: டிஜிட்டல் காலனியாகும் இந்தியா

எப்படி காலனியாதிக்க காலகட்டத்தில் மூலப்பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு தொழில்துறைப் பொருளாக இறக்குமதி செய்யப்பட்டதோ அப்படி இப்பொழுது தரவுகளை இலவசமாக ஏற்றுமதி செய்து, ஏ.ஐ. சேவைகளை இறக்குமதி செய்யலாம் என இந்திய மோடி அரசு வரைப்படம் அமைத்துக் கொடுத்திருக்கிறது.

செயற்கை நுண்ணறிவு காலத்தில் அடிமை வர்த்தகம் எப்படி நடத்தப்பட வேண்டும்? இப்படிதான் என உலகுக்கே எடுத்துக் காட்டியிருக்கிறது மோடி தலைமையிலான பார்ப்பனிய பாசிச பா.ஜ.க அரசு.

டெல்லியிலுள்ள பாரத் மண்டபத்தில் “இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாடு 2026” (India AI Impact Summit 2026) பிப்ரவரி 16-இல் தொடங்கி, பிப்ரவரி 21 அன்று நிறைவடைந்தது. ஆறு நாட்கள் நடைபெற்ற இந்த மாநாட்டில் 118-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களும் வருகைத் தந்ததாக செய்திகள் அறிவிக்கின்றன.

இந்த ஏ.ஐ. தாக்க உச்சி மாநாடு இதற்கு முன் 2023-ஆம் ஆண்டு இங்கிலாந்தின் பிளெட்ச்லி பூங்காவிலும், 2024-ஆம் ஆண்டு தென் கொரியாவின் சியோலிலும், 2025-ஆம் ஆண்டு பிரான்சின் பாரிஸிலும் நடைபெற்றிருக்கிறது. இந்த மூன்று உலகளாவிய ஏ.ஐ. உச்சி மாநாடுகளும் ஏகாதிபத்திய மற்றும் வளர்ந்த நாடுகளில் நடைபெற்ற நிலையில், நான்காவது ஏ.ஐ. உச்சி மாநாடு முதல் முறையாக உலகின் தெற்குப் பகுதியில், மூன்றாம் உலக நாடுகளில் ஒன்றான இந்தியாவில் நடைபெறுகிறது என்பது ஊடகங்களால் ஊதிப் பெருக்கப்பட்டது.

சங்கிக் கும்பலோ “தெற்குலகிற்கான குரலாக இந்தியா ஒலிக்கிறது. மேற்கத்திய நாடுகள் மற்றும் சீனாவுக்கு மாற்றாக ஒரு மூன்றாவது தொழில்நுட்ப பாதையை இந்தியா உருவாக்குகிறது” என தம்பட்டமடிக்கின்றன. ஆனால், ஏ.ஐ. மாநாட்டில் அரங்கேறிய கல்கோத்தியாஸ் பல்கலைக்கழகத்தின் ஏமாற்று வேலையும் கோமாளித்தனங்களும், மாநாட்டில்  இந்திய இளைஞர் காங்கிரசு  நடத்திய போராட்டம், காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த பொருட்கள் திருட்டுப்போனது போன்றவை  மோடிக் கும்பலை சந்தி சிரிக்க வைத்தன.

அதேசமயம் செயற்கை நுண்ணறிவு என்பது மனித உழைப்பைத் தானியக்கமாக மாற்றித் தரவுகளை (DATA) மூலதனமாகத் திரட்டுகின்றன; அறிவு உழைப்பை அல்காரிதம் (Algorithm) வழிமுறையாக்குகின்றன என்ற அடிப்படை உண்மையை டெல்லி ஏ.ஐ. மாநாடு தெளிவுபடுத்தியுள்ளது. உலகின் அதிக டிஜிட்டல் பயனர்களைக் கொண்ட (95.8 கோடி) இந்தியாவின் தரவு சந்தையைப் பன்னாட்டுக் கார்ப்பரேட்டுகளுக்குத் திறந்துவிடுவதற்கான ஏற்பாடாக இம்மாநாடு அமைந்துள்ளது.

மோடியின் ”டிஜிட்டல் இந்தியா” திட்டம்
இந்தியாவை டிஜிட்டல் காலனியாக்கும் சதி

மோடி அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து “டிஜிட்டல் இந்தியா” என்ற பெயரில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. அதில் முக்கியமானது டிஜிட்டல் அடையாள அட்டையான ஆதார் (Aadhar). இந்த ஆதார், ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கு உட்பட பலவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளன. இதேபோல், பணப் பரிவர்த்தனையை விட கூகுள் பே (Google Pay), பே.டி.எம். (Paytm) மாதிரியான யு.பி.ஐ. (UPI) டிஜிட்டல் பரிவர்த்தனையை பாசிச பா.ஜ.க. அரசு பரவலாக்கியுள்ளது. இவையில்லாமல், கல்வி, மருத்துவம், சுகாதாரம், வேலைவாய்ப்பு எனப் பல துறைகளுக்கான டிஜிட்டல் சேவைத்தளங்களை உருவாக்கியுள்ளது. இவையெல்லாம் அரசு மக்களுக்குச் சேவைகளை வழங்குவதற்காக உருவாக்கிய பொதுக் கட்டமைப்பை ஒட்டுமொத்தமாக டிஜிட்டல்மயமாக்கும் நடவடிக்கையாகும்.

இவ்வாறு உருவாக்கப்பட்ட டிஜிட்டல் பொதுக் கட்டமைப்புடன் (Digital public Infrastructure) செயற்கை நுண்ணறிவை இணைப்பது குறித்து நடந்துமுடிந்த ஏ.ஐ. உச்சி மாநாட்டில் விவாதிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு டிஜிட்டல் பொதுக் கட்டமைப்புடன் ஏ.ஐ. இணைக்கப்பட்டால் அதன் மூலம் திரட்டப்படும் தரவுகள் பாசிச மோடி அரசிடமும் பன்னாட்டு கார்ப்பரேட்டுகளின் பிடியிலும் குவிக்கப்படும். பாசிச மோடி அரசு இத்தரவுகளை பயன்படுத்தி ஒட்டுமொத்த சமூகத்தைக் கண்காணிப்புக்கு உட்படுத்துவதுடன் கட்டுப்படுத்தத் தொடங்கும். அதேசமயம், இத்தரவுகள் பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களின் கொள்ளை நோக்கத்திற்காக பயன்படுத்தப்படும்.

இவ்வாறு ஆப்பிரிக்க மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகள் போன்ற மூன்றாம் உலக நாடுகளின் தரவுகளை கொள்ளையிடுவதற்கான சிறந்த முன்மாதிரியை இந்தியா உருவாக்கியிருக்கிறது. பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மாக்ரோன் “உலகில் வேறு எங்கும் சாதிக்கப்படாத, 1.4 பில்லியன் மக்களுக்கு டிஜிட்டல் அடையாள அமைப்பை இந்தியா உருவாக்கியுள்ளது” என்று மோடி அரசை உச்சிமுகர்ந்து பாராட்டுவதற்கான காரணமும் இதுதான்.

அதேபோல், ஏகாதிபத்திய நாடுகளில் மட்டுமல்ல, உலகம் முழுக்கவே தரவுகள் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே திரட்டப்படுகின்றன. இதனால் உள்ளூர் மொழி, உள்ளூர் கலாச்சாரம், உள்ளூர் மக்களின் உழைப்புச் சக்தி குறித்தான தரவுகளை திரட்ட முடிவதில்லை. இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்காக, தற்போது நடந்து முடிந்த மாநாட்டில் இந்திய மொழிகளுக்கென பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ஏ.ஐ. மாதிரிகள் அரசு, கார்ப்பரேட் நிறுவனங்களால் வெளியிடப்பட்டுள்ளன.

ஆந்திரப் பிரதேச அரசு ஐ.பி.எம். (IBM), நெக்ஸ்ட்ஜென் (NextGen), பாரத் ஜென் (BharatGen) ஆகியவற்றுடன் இணைந்து தெலுங்கு மற்றும் மற்ற உள்ளூர் மொழிகளுக்கான சுதேசி ஏ.ஐ. ஸ்டேக் (Swadeshi AI Stack) எனும் கட்டமைப்பை உருவாக்கியுள்ளது. இதேபோல், இந்திய “ஸ்டார்ட்-அப்” (Startup) நிறுவனமான “சர்வம் ஏ.ஐ.”, இந்திய மொழிகளுக்காக பிரத்தியேகமாகப் பயிற்சி பெற்ற இரண்டு உள்நாட்டுப் பெரிய மொழி மாதிரிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்திய அரசின் பாரத் ஜென் அமைப்பு 17 பில்லியன் அளவுருக்களைக் (Parameters) கொண்ட 22 இந்திய மொழிகளுக்கான ஏ.ஐ. மாதிரியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால், இந்தியாவிலுள்ள எந்த மொழி பேசும் மக்களையும், எந்தக் கலாச்சாரத்தை சேர்ந்த மக்களாக இருந்தாலும், அவர்கள் ஒவ்வொருவரின் நடமாட்டத்தையும் தரவுகளாகத் திரட்ட முடியும்.

இவ்வாறு இந்தியர்களின் அனைத்து தரவுகளும் ஏ.ஐ. சந்தைக்கான பண்டமாக மாற்றப்படும். கிராமப்புற மக்கள் முதல் நகர்ப்புறத் தொழிலாளர்கள் வரை என்ன செலவு செய்கிறார்கள், என்ன நோய்க்கு என்ன மருந்து எடுத்துக் கொள்கிறார்கள், விவசாயம் எப்படிச் செய்கிறார்கள், என்ன உடை வாங்குகிறார்கள், கல்விக்காக எவ்வளவு செலவழிக்கிறார்கள், உணவுக்காக என்னென்ன வாங்குகிறார்கள், நாள் ஒன்றுக்கு எவ்வளவு தேநீர் குடிக்கிறார்கள், சமூகவலைத்தளத்தில் எதை எதைப் பார்க்கிறார்கள், தேர்தலில் எப்படி ஓட்டுப் போடுகிறார்கள்… என அனைத்தும் தரவுகளாக சேகரிக்கப்பட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரைவார்க்கப்படும்.

இந்தத் தரவுகள்தான் பன்னாட்டு நிதியாதிக்கக் கும்பலுக்கான மூலப் பொருட்கள். சான்றாக, இந்திய மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளின் நோய் தொடர்பான தரவுகள், அவர்களது மரபணுவில் இருக்கும் செய்திகள் ஏகாதிபத்திய நாடுகளிலுள்ள மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்துக்கு இலவசமாகச் செல்லும். அவர்கள் இந்தத் தரவுகளை அடிப்படையாக வைத்து மருந்துகளைக் கண்டுபிடிப்பார்கள். அந்த மருந்துகள் மீண்டும் இந்தியா உள்ளிட்ட மூன்றாம் உலக நாடுகளில் அதிக விலைக்கு விற்பனைக்கு வரும்.

இப்படியாக கல்வி, விவசாயம், உணவு, குடிநீர்… என அனைத்தின் விலைகளையும் சம்பந்தப்பட்ட நாடுகளால் தீர்மானிக்கவே முடியாது. ஏகாதிபத்திய பன்னாட்டு நிதியாதிக்க கும்பலே தீர்மானிக்கும். ஒரு ரூபாய் மாத்திரையை ரூ.100-க்கு விற்க வேண்டும் என கட்டளையிடும். தொடர்புள்ள நாடுகளும் கையைக் கட்டி வாயைப் பொத்தி அதை நிறைவேற்றும். குறிப்பாக, ஒவ்வொரு நாட்டிலும் எப்படி தேர்தல் நடத்தப்பட வேண்டும், யார் யார் போட்டியிட வேண்டும், யார் ஆட்சிக் கட்டிலில் அமர வேண்டும்… என்பதையெல்லாம் தரவுகளை வைத்து இனி நிதியாதிக்க கும்பல் தீர்மானிக்கும்.

இதற்கான ராஜபாட்டையைத்தான் ஏ.ஐ. தாக்க உச்சி மாநாடு மூலம் அமைத்துக் கொடுத்திருக்கிறது, பாசிச பா.ஜ.க. அரசு.

ஒரு அடிமை வியாபாரி மேடையில் அடிமைகளை நிற்க வைத்து, ஏலம் விடுவது போல இந்திய மக்களின் தரவுகளை ஏகாதிபத்திய நிதியாதிக்க கும்பலுக்கு மோடி அரசு ஏலம் விட்டிருக்கிறது.

தரவு மையங்களும்
சூழலியல் பேராபத்தும்

ஏ.ஐ. துறையில் ஏகாதிபத்திய நாடுகளான அமெரிக்காவும் சீனாவுமே முன்னணியில் இருக்கின்றன. மேக உள்கட்டமைப்பும் (Cloud infrastructure), ஏ.ஐ-கான அடிப்படை மாதிரிகளும் (AI foundation models) மேற்கத்திய நிதியாதிக்க நிறுவனங்களாலேயே கட்டுப்படுத்தப்படுகின்றன. இந்தியா உள்ளிட்ட மற்ற நாடுகளிடம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துக்கான இப்படிப்பட்ட அடித்தளம் இல்லை.

இச்சூழலில் காலனியாதிக்க காலகட்டத்தில் என்ன முறை மேற்கொள்ளப்பட்டதோ அதையே இந்த மறுகாலனியாதிக்கச் சூழலில் செய்யும்படி ஏகாதிபத்தியங்களுக்கு மோடி அரசு  வழிகாட்டியிருக்கிறது.

எப்படி காலனியாதிக்க காலகட்டத்தில் மூலப்பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு தொழில்துறைப் பொருளாக இறக்குமதி செய்யப்பட்டதோ அப்படி இப்பொழுது தரவுகளை இலவசமாக ஏற்றுமதி செய்து, ஏ.ஐ. சேவைகளை இறக்குமதி செய்யலாம் என வரைப்படம் அமைத்துக் கொடுத்திருக்கிறது.

இன்றைய டிஜிட்டல் பொருளாதாரத்தின் இதயமே தரவு மையங்கள்தான் (Data Centre). இந்த தரவு மையங்களை அமைக்க பல்லாயிரம் ஏக்கர் நிலம், 24 மணி நேரமும் தடையற்ற மின்சாரம், அதிக வெப்பத்தை வெளியிடும் தரவு மையங்களைக் குளிர்விக்க டிரில்லியன் லிட்டர் நீர் வேண்டும். சூழலியல் ஆபத்துகள் நிறைந்த இத்தகைய இத்தரவு மையங்களை ஏகாதிபத்தியங்கள் தங்கள் நாடுகளில் அமைக்க விரும்பாது.  ஏற்கெனவே, அமெரிக்காவில் அமேசான் (Amazon) நிறுவனத்தின் தரவு மையங்களுக்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன.

எனவே, அமேசான் வெப் சர்வீஸஸ் (Amazon Web Services), மைக்ரோசாஃப்ட் அஸூர் (Microsoft Azure), கூகுள் க்ளவுட் (Google Cloud), ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ் (Reliance Industries), அதானி குரூப் (Adani Group) ஆகிய கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளிலேயே தங்களுடைய தரவு மையங்களை நிறுவுகின்றன.

இவ்வாறு தரவு மையங்களை இந்தியாவில் அமைப்பதற்கு சுமார் 20 ஆண்டுகளுக்கு வரிவிலக்கு உட்பட பல்வேறு சலுகைகளை வாரி வழங்கி வருகிறது மோடி அரசு.

எப்படி ஆலைகளில் இருந்து புகை வெளியேறுமோ அப்படி தரவு மையங்களில் அதிகளவான மின்சாரம் உபயோகத்தால் அவை வெப்பத்தை உமிழும். அதைக் கட்டுப்படுத்தாவிட்டால் சர்வர் (Server) வேலை செய்யாது. இதனால் தரவுகள் அனைத்தும் அழியும் வாய்ப்புள்ளது.

எனவே, தரவு மையங்களை எப்பொழுதும் குளிர்ச்சியாக வைத்திருக்க வேண்டும். ஒரு சிறிய தரவு மையத்தை குளிர்விக்கவே நாள் ஒன்றுக்கு 50 ஆயிரம் முதல் 5 லட்சம் லிட்டர் வரை தண்ணீர் தேவைப்படும். இது பல ஆயிரம் குடும்பங்களுக்கான தினசரி நீர் பயன்பாட்டுக்குச் சமமானது. அப்படியானால் பெரிய தரவு மையங்களை குளிர்விக்க ஒவ்வொரு நாளும் எத்தனைக் கோடி லிட்டர் தண்ணீர் தேவைப்படும்? அது எத்தனைக் கோடி மக்களின் அன்றாட வாழ்வுக்கு பயன்படும்?

இது எதைப் பற்றியும் துளியும் அக்கறை கொள்ளாமல் பா.ஜ.க. அரசு தரவு மையங்களை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருகிறது. இதன் வழியாக ஒட்டுமொத்த இந்தியாவையே பாலைவனமாக மாற்றும் செயலில் இறங்கியிருக்கிறது.

ஒட்டுமொத்தத்தில், இந்த ஏ.ஐ. தாக்க உச்சி மாநாடு தொழில்நுட்ப முன்னேற்றத்தைக் காட்சிப்படுத்தவில்லை. மாறாக, இது உற்பத்தி முறையில் ஏற்பட்டுவரும் மாற்றம், மூலதன சுரண்டலின் புதிய வடிவம், தரவு ஆதிக்கம் ஆகியவற்றை படம் பிடித்துக் காட்டியிருக்கிறது. மேலும், ஏகாதிபத்தியத்தின் டிஜிட்டல் மேலாதிக்க நலனுக்காக இந்தியாவை அவற்றின் டிஜிட்டல் காலனியாக மாற்றும் வேலையில் மோடி அரசு ஈடுபட்டு வருவதை அம்பலப்படுத்திக் காட்டியிருக்கிறது. ஒட்டுமொத்த இந்தியர்களின் தனியுரிமையை குழிதோண்டிப் புதைக்கும் பாசிச மோடி அரசின் இப்பயங்கரவாத நடவடிக்கைக்கு எதிராக அனைவரும் குரலெழுப்ப வேண்டும்.

***

பா.ஜ.க. ஊட்டி வளர்த்த திருடன்

சீனாவின் ரோபோவை தங்கள் கண்டுபிடிப்பு என மாநாட்டில் அறிவித்து அம்பலப்பட்டுப் போன கல்கோத்தியாஸ் பல்கலைக்கழகம், பா.ஜ.க-வால் வளர்த்துவிடப்பட்ட ஒரு நிறுவனம்தான்.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் டெல்லி கன்னாட் பிளேசில் சிறிய புத்தகக் கடையாகத் தொடங்கப்பட்டதுதான் கல்கோத்தியா நிறுவனம். 1980-களில் சுனீல் கல்கோத்தியாவின் நிர்வாகத்தில் பதிப்பகம் ஒன்றை தொடங்கினார்கள். எந்தக் காப்புரிமையும் பெறாமல் கணினி சம்பந்தப்பட்ட நூல்களையும் பொறியியல் துறை நூல்களையும் அச்சிட்டுக் கள்ளச்சந்தையில் விற்றனர். 90-களின் பிற்பகுதியில் தனியார்மயக் கொள்கைகளின் விளைவாக நாடு முழுவதும் கல்லூரிகள் பெருகின. கள்ளச் சந்தையில் இவர்களுக்கு லாபமும் பெருகியது.

வாஜ்பாய் பிரதமரானதும் “கல்கோத்தியாஸ் கல்லூரி” நிறுவப்பட்டது. அடுத்தப் பத்தாண்டுகளிலேயே அது கல்கோத்தியாஸ் பல்கலைக்கழகமாக உருமாறியது. 2014-ஆம் ஆண்டு பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு சுனீல் கல்கோத்தியாவின் சொத்து மதிப்பு பல மடங்கு உயர்ந்து தற்போது சுமார் மூவாயிரம் கோடி ரூபாயாக உள்ளது.

அதேபோல், 2014-ஆம் ஆண்டு சுனீல் கல்கோத்தியாவின் மனைவி மற்றும் மகன் மீது வங்கிக்கடன் வாங்குவதற்காகப் போலி ஆவணங்களைத் தயார் செய்து மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக வழக்கு ஒன்று பதியப்பட்டுள்ளது. இவ்வழக்கு இப்பொழுதும் நிலுவையில் உள்ளது.

ஒட்டுமொத்தத்தில் பா.ஜ.க கும்பலே ஏ.ஐ மாநாட்டில் கல்கோத்தியாஸ் பல்கலைக்கழகம் அரங்கேற்றிய மோசடிக்கான ஊற்றுக்கண்ணாக இருந்திருக்கிறது.


கவின்

(புதிய ஜனநாயகம் – மார்ச் 2026 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க