கடந்த ஜனவரி 30 அன்று அமெரிக்க நீதித்துறையால் வெளியிடப்பட்ட சுமார் 30 லட்சம் பக்கங்கள் அடங்கிய “எப்ஸ்டீன் கோப்புகள்” (Epstein Files) உலக அரசியல் அரங்கில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளன. கார்ப்பரேட் முதலாளிகள் பில்கேட்ஸ் மற்றும் எலான் மஸ்க், அமெரிக்க அதிபர் டிரம்ப், இங்கிலாந்து இளவரசர் ஆண்ட்ரூ தொடங்கி இந்தியாவின் கார்ப்பரேட் முதலாளி அனில் அம்பானி, பிரதமர் நரேந்திர மோடி, பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி எனப் பல்வேறு ஆளும் வர்க்கப் பிரதிநிதிகளின் பெயர்கள் இக்கோப்புகளில் அம்பலமாகியுள்ளன. தாங்கள் எந்தக் குற்றத்திலும் ஈடுபடவில்லை என இவர்கள் தன்னிலை விளக்கம் கொடுத்துத் தங்களது புனிதப் பிம்பத்தைக் காப்பாற்றிக்கொள்ளப் பெரும் போராட்டமே நடத்தி வருகின்றனர்.
கண்துடைப்பு நாடகங்களும்
கறைபடிந்த முகங்களும்
குற்றவாளி என அம்பலப்பட்டுப் போனதால், இந்தியாவில் நடந்த ஏ.ஐ. உச்சி மாநாட்டைத் தவிர்த்த பில்கேட்ஸ், உலகளவில் விமர்சனங்கள் வலுத்ததையடுத்து பிப்ரவரி 24 அன்று தனது அறக்கட்டளை ஊழியர்களிடம் ஒரு கண்துடைப்பு நாடகத்தை அரங்கேற்றினார். பாலியல் குற்றவாளி எப்ஸ்டீனைச் சந்தித்தது மாபெரும் தவறு எனப் பகிரங்கமாக மன்னிப்புக் கோரிய அவர், இரண்டு ரஷ்யப் பெண்களுடன் தனக்கிருந்த திருமணத்தைத் தாண்டிய உறவையும் வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார். “சுகாதாரப் பணிகளுக்காகவே எப்ஸ்டீனைச் சந்தித்தேன்” என்று கூறிவந்த பில்கேட்ஸின் இந்த வாக்குமூலம், கார்ப்பரேட் ‘ஆளுமை’களின் புனிதப் பிம்பங்களுக்குப் பின்னால் உள்ள அழுகி நாறும் ஒழுக்கக்கேட்டை அப்பட்டமாக வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் இக்கோப்புகளின் அடிப்படையில் சிலர் கைது செய்யப்பட்டாலும், சர்வதேச ஊடகங்கள் எப்ஸ்டீனை வெறும் தனிப்பட்ட பாலியல் குற்றவாளியாகவே சுருக்கிக் காட்டுகின்றன. ஆனால், எப்ஸ்டீன் வெறும் பாலியல் தரகன் கிடையாது; நமது புலன்களுக்கு அப்பாற்பட்டுத் திரைமறைவில் இயங்கும் இலாபவெறி பிடித்த ஏகாதிபத்திய கார்ப்பரேட் நிழல் அரசின் அங்கமே எப்ஸ்டீன்.
ஏகாதிபத்திய நிழல் அரசுத் தரகன் எப்ஸ்டீன்

நமது கண்ணுக்குத் தெரியும் சட்டமன்ற, நாடாளுமன்றங்கள்தாம் நம்மை ஆட்சி செய்கின்றன என்று நாம் நம்ப வைக்கப்பட்டுள்ளோம். அவற்றின் மூலமாகத் திட்டங்களும் வரவு-செலவு அறிக்கைகளும் அறிவிக்கப்படுவதால், அவற்றை அதிகாரப் பீடங்களாக நாம் நம்பிக் கொண்டிருக்கிறோம். ஆனால், அறிவிக்கப்படும் திட்டங்களும் கையெழுத்தாகும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் இந்த நாடாளுமன்றத் திரைகளுக்குப் பின்னால், இரகசியமாக விவாதிக்கப்பட்டே இறுதி செய்யப்படுகின்றன.
இந்தத் திரைமறைவு கார்ப்பரேட் லாபியையும், அதன் கட்டமைப்பையும் எப்ஸ்டீன் கோப்புகள் தோலுரித்துக் காட்டுகின்றன. ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் மத்திய கிழக்குப் பகுதியில் உள்ள ஏழை நாடுகளுக்கான ‘வளர்ச்சித்’ திட்டங்கள் அனைத்தும் இத்தகைய நிழல் அரசுகளால்தான் (Deep State) உருவாக்கப்படுகின்றன. கார்ப்பரேட் முதலாளிகள், அரசியல்வாதிகள், அதிகாரிகளை ஒருவருக்கொருவர் சந்திக்க வைப்பது, அவர்களுக்குத் தேவையான பணம், பதவி மற்றும் பாலியல் வக்கிரத்திற்குப் பெண்களை இரையாக்குவது, கார்ப்பரேட் திட்டங்களை முடித்துக்கொடுப்பதுதான் இந்த நிழல் அரசுத் தரகர்களின் முதன்மையான வேலையாகும்.
இந்த நிழல் அரசில் இயங்கும் பல்வேறு தரகர்களில் ஒருவன்தான் ஜெப்ரி எப்ஸ்டீன். இத்தகைய சர்வதேசத் தரகு வேலைகளுக்காகவே, கரீபியன் கடலில் “லிட்டில் செயிண்ட் ஜேம்ஸ்” (Little Saint James) என்ற பெயரில் தனக்கென ஒரு தீவையும் உல்லாச விடுதிகளையும் உருவாக்கிக்கொண்டான் எப்ஸ்டீன். அவனது தனி விமானம் மூலம் இத்தீவிற்குப் பல ஆளும் வர்க்கப் “பிரபலங்கள்” சென்றுள்ளனர். அங்குதான் இந்தப் பாலியல் வெறிகொண்ட மிருகங்களுக்கு ஆயிரக்கணக்கான பதின்ம வயதுச் சிறுமிகள் இரையாக்கப்பட்டும், கொல்லப்பட்டும் உள்ளனர்.
இவ்விடுதிகளின் படுக்கையறைகளிலும் கழிப்பறைகளிலும் இரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. அங்குச் சென்றவர்களின் பாலியல் வக்கிரங்கள் அனைத்தும் காணொளிகள் மற்றும் புகைப்படங்களாகவும், எப்ஸ்டீனுடன் அவர்கள் செய்த மின்னஞ்சல் தொடர்புகளாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு பதிவு செய்யப்பட்ட தரவுகளைத் துருப்புச் சீட்டுகளாக வைத்து மிரட்டியே, சம்பந்தப்பட்ட அதிகார வர்க்கத்தினரை கார்ப்பரேட் நலன்களுக்கேற்ப வளைத்துள்ளனர்.
மனிதகுல விரோதச் சித்திரவதைகளும்
பாலியல் குற்றங்களும்
ஏகாதிபத்தியக் கட்டமைப்பின் ஆணாதிக்க மற்றும் இலாபவெறியின் உச்சக்கட்டக் கொடூரமே எப்ஸ்டீன் தீவுகளில் அரங்கேறிய பாலியல் வன்கொடுமைகளாகும். ஆயிரக்கணக்கான இளம்பெண்களும் சிறுமிகளும் இந்தக் கடத்தல் வலைப்பின்னல் மூலம் வேட்டையாடப்பட்டனர்.
இதற்காக “பல அடுக்கு வியாபார உத்தி” (MLM) பயன்படுத்தப்பட்டுள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் பொருட்களை விற்க அடுத்தடுத்த நபர்களை அறிமுகப்படுத்தும் சங்கிலித்தொடர் முறையைப் பயன்படுத்துவது போலவே, பெண்களைப் பாலியல் வலைப்பின்னலுக்குள் கொண்டுவரவும் இம்முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. “பிரபலமாகலாம், குறுகிய காலத்தில் முன்னேறலாம்” என்று மூளைச்சலவை செய்யப்பட்டுப் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய சிறுமிகள் இந்த இருண்ட உலகத்திற்குள் தள்ளப்பட்டுள்ளனர். எப்ஸ்டீனின் தோழியான கிஸ்லெய்ன் மேக்ஸ்வெல் இந்த வலைப்பின்னலை முன்னின்று நடத்தியிருக்கிறாள். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளியில், புதிய சிறுமிகளை அறிமுகப்படுத்தும் மாணவிகளுக்கு 200 டாலர் வழங்கி, இத்தகைய கிரிமினல் சங்கிலித்தொடரை மிக வேகமாகப் பரவச் செய்துள்ளனர்.
பெண்களையும் சிறுமிகளையும் அடிபணிய வைப்பதற்காக நெஞ்சைப் பதைபதைக்க வைக்கும் சித்திரவதைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஒரு குழந்தையைக் கொடூரமாகச் சித்திரவதை செய்து மற்றவர்களை அடிபணிய வைப்பது, நாய் குரைக்கும் சத்தங்கள், இருட்டறையில் அடைப்பது, அதீத வெளிச்சம் மற்றும் பற்களைப் பிடுங்குவது போன்ற ஈவிரக்கமற்ற கொடூரங்களுக்குச் சிறுமிகள் உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
எப்ஸ்டீன் கோப்புகள் வெளியான பிறகு, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இழைக்கப்பட்ட இந்தக் கொடூரங்களை “மனிதகுலத்திற்கு எதிரான குற்றம்” என்று ஐ.நா. சபை வரையறுத்துள்ளது. ஆனால், இத்தகைய மனிதகுல விரோதமான மாபாதகச் செயலைத் தனியொரு நபர் மட்டும் செய்தார் என்பதும், எப்ஸ்டீனும் அவனது தோழி மேக்ஸ்வெல்லும் மட்டுமே குற்றவாளிகள் என்று கூறுவதும் பிரச்சினையைத் திசைதிருப்புவதாகும். இக்கொடூரங்களைத் தனிமனிதக் குற்றமாகச் சுருக்கிவிடுவதன் மூலம், இம்மாபாதகங்களுக்கு ஆணிவேரான இந்த ஏகாதிபத்தியக் கட்டமைப்பைக் காப்பாற்றுவதே ஆளும் வர்க்கத்தின் தந்திரமாகும்.
உண்மையில், ஏகாதிபத்தியங்களின் கட்டற்ற இலாபவெறிக்காக மனித உழைப்பு, இயற்கை வளங்கள் மட்டுமின்றிப் பெண் உடலும் ஒரு பாலியல் சதைப்பண்டமாகச் சூறையாடப்படுகிறது. ஏகாதிபத்தியத்தின் ‘நெறி’ என்பது எங்கும் இலாபம், எதிலும் இலாபம் என்னும் இலாபவெறிதான். இந்த ஏகாதிபத்திய இலாபவெறியின் விளைபொருள்தான் எப்ஸ்டீன், இந்தியாவின் நீரா ராடியா போன்ற நிழல் அரசுத் தரகர்கள்.
அதிகார வர்க்கத்தின் அரவணைப்பும்
உளவுத்துறையும்
1990-களிலிருந்தே எப்ஸ்டீன் இத்தகைய தரகு வேலைகளில் ஈடுபட்டு வந்துள்ளான். 1996-இல் மரியா ஃபார்மர் என்பவர் தன்னையும் தன்னுடைய தங்கையையும் எப்ஸ்டீன் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியது தொடர்பாகப் புகார் அளித்துள்ளார். ஆனால், அப்புகாரின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அதன்பிறகு, அவன் மீது போடப்பட்ட வழக்குகளின் அடிப்படையில், 2008-ஆம் ஆண்டு புளோரிடா நீதிமன்றம் அவனுக்கு 18 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்தாலும், வாரத்திற்கு ஆறு நாள் பகல் முழுவதும் அவன் சுதந்திரமாக வெளியே சுற்றித்திரிய அனுமதிக்கப்பட்டான். “எப்ஸ்டீன் உளவுத்துறையின் அதிகாரப்பூர்வமற்ற சொத்து” என மேலிடத்து அழுத்தங்கள் வந்ததாகப் பின்னாளில் அரசு வழக்கறிஞர் அலெக்சாண்டர் அகோஸ்டா கூறியது, எப்ஸ்டீனுக்கும் அதிகார வர்க்கத்திற்குமான நகமும் சதையுமான உறவை நிரூபிக்கிறது.
அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏ. மற்றும் இஸ்ரேலிய மொசாட் ஆகியவற்றுடன் நெருங்கிய தொடர்பிலிருந்த எப்ஸ்டீன் ஓர் உளவாளியாகவே செயல்பட்டுள்ளான். இஸ்ரேலிய முன்னாள் பிரதமர் எஹுட் பராக், ஆயுத வியாபாரி டக்ளஸ் லீஸ் போன்றோருடனான எப்ஸ்டீனின் நெருக்கமும், அவனது லிட்டில் ஜேம்ஸ் தீவு மொசாட்டின் “ஹனிபாட்” (Honeypot) வலையாகச் செயல்பட்டிருக்கலாம் என்ற குற்றச்சாட்டுகளும் இதனை உறுதிப்படுத்துகின்றன.
வங்கிகளின் குற்றப் பின்னணியும்
கறுப்புப் பணமும்
சாதாரண நிதி ஆலோசகராக இருந்த எப்ஸ்டீனை, ஒரு நிழல் அரசுத் தரகனாக வளர்த்தெடுத்ததே நிதியாதிக்கக் கும்பல்தான். “விக்டோரியாஸ் சீக்ரெட்” நிறுவனரான லெஸ்லி வெக்ஸ்னர், ஜே.பி. மார்கன் மற்றும் டாய்ச் வங்கி ஆகியவற்றின் அரவணைப்பால் எப்ஸ்டீன் உருவாக்கப்பட்டுள்ளான். அவனது குற்றப் பின்னணியைப் பற்றிக் கவலைப்படாமல், பல லட்சக்கணக்கான டாலர்களை ரொக்கமாக எடுக்க இவ்வங்கிகள் அனுமதித்துள்ளன. குற்றங்களில் இவர்களுக்கும் பொருளாதாரப் பங்களிப்பு இருப்பதால்தான், பாதிக்கப்பட்ட பெண்களுக்குச் சில கோடி டாலர்களை இழப்பீடாக வழங்க இவ்வங்கிகள் பின்னர் ஏற்றுக்கொண்டுள்ளன.
தங்களது அரசியல் அதிகாரத் தரகுகளுக்கும் சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனைகளுக்கும் எப்ஸ்டீனை இக்கும்பல் பயன்படுத்தியுள்ளது. “டவர்ஸ் ஃபைனான்சியல் கார்ப்பரேஷன்”, “ஜே.எப்ஸ்டீன் & கம்பெனி”, “சதர்ன் டிரஸ்ட் கம்பெனி”, “ஃபைனான்சியல் டிரஸ்ட் கம்பெனி” போன்ற அவனது பினாமி நிறுவனங்கள் மூலமாக, சுமார் 1.5 பில்லியன் டாலர் கறுப்புப் பணம் சட்டவிரோதமாக அமெரிக்கா, இசுரேல், சவுதி, ரஷ்யா மற்றும் சீன நாடுகளுக்குக் கைமாறியுள்ளது. இந்த நிழல் உலகப் பணப் பரிவர்த்தனைகளே அவனது பாலியல் குற்றங்களுக்கும் முதன்மை நிதி ஆதாரமாக இருந்துள்ளன.
மொத்தத்தில், எப்ஸ்டீன் என்பவன் தனி ஆள் கிடையாது; ஏகாதிபத்திய நிதி மூலதனக் கும்பல்களால் தங்கள் நலனுக்காகத் திட்டமிட்டு வளர்க்கப்பட்ட தரகன். அவனது மர்ம மரணத்திற்கு பிறகு இந்தக் கோப்புகளை வெளியிட்டுத் தங்களை ‘நீதியின்’ காவலர்களாக ஏகாதிபத்தியக் கட்டமைப்பு வேடமிடுகிறது. எப்ஸ்டீன் பாலியல் குற்றவாளி என்றால், அவனை உருவாக்கிய ஏகாதிபத்தியக் கட்டமைப்புமே முழுமுதல் குற்றவாளியாகும்.
ஆயுதமாகப் பயன்படுத்தப்படும்
எப்ஸ்டீன் கோப்புகள்
2019-ஆம் ஆண்டு நியூயார்க் சிறையில் எப்ஸ்டீன் ‘தற்கொலை’ செய்துகொண்டதாகக் கூறப்படும் நிலையில், நவம்பர் 2025-இல் அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட “எப்ஸ்டீன் கோப்புகள் வெளிப்படைத்தன்மைச் சட்டம்” மூலம் தற்பொழுது இந்த ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இக்கோப்புகள் வெளியிடப்பட்டதற்குப் பாதிக்கப்பட்ட பெண்களின் உறுதியான போராட்டமும் மக்களிடையேயான கொந்தளிப்புமே முக்கியக் காரணம்.

ஆனால், இக்கோப்புகளை வெளியிடுவதன் மூலம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்பது அமெரிக்க அரசின் நோக்கமாக இல்லை. மாறாக, அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்குப் பிடிகொடுக்காத நாடுகளை மிரட்டி வழிக்குக் கொண்டுவருவதே அதன் நோக்கமாகும்.
டாலருக்கு மாற்றாகப் பிரிக்ஸ் நாடுகள் உள்ளூர் நாணயங்களில் வர்த்தகம் மேற்கொள்வதும், ஆசியா மற்றும் மத்திய கிழக்கில் ரஷ்யா-சீனாவின் கை ஓங்குவதும் அமெரிக்காவை அச்சுறுத்துகின்றன. ஈரான், வெனிசுலாவைக் குறிவைத்துத் தாக்குவதன் மூலம் ரஷ்யா-சீனாவை முடக்குவது ஒருபுறமிருக்க, தனது செல்வாக்கின் கீழ் உள்ள நாடுகளைக் கட்டுப்பாட்டில் வைக்க எப்ஸ்டீன் ஆவணங்களை அமெரிக்கா ஓர் ஆயுதமாகப் பயன்படுத்துகிறது.
இந்த ஆவணங்கள் வெளிவந்த பிறகுதான், அவசர அவசரமாக இந்திய-அமெரிக்க ஒப்பந்தம் கையெழுத்தானது. ஐரோப்பிய நாடுகள் தங்களது எரிசக்தித் தேவைக்காக ரஷ்யாவைச் சார்ந்துள்ளன. அமெரிக்க ஏகாதிபத்தியம் சரிந்தால், அவை ரஷ்யா-சீனாவுடன் பொருளாதாரப் பிணைப்பை ஏற்படுத்திக்கொள்ளும் என்பதை அறிந்தே அமெரிக்கா இந்த ஆவணங்களை வெளியிட்டது. இதனால், இங்கிலாந்து இளவரசர் ஆண்ட்ரூ, தொழிலாளர் கட்சித் தலைவர் பீட்டர் மாண்டல்சன் ஆகியோர் அம்பலப்பட்டுள்ளனர். நார்வே முன்னாள் பிரதமர் தோர்ப்யோர்ன் யாக்லான்ட் மீதான குற்றச்சாட்டு, ஐ.நா-விற்கான நார்வே தூதர் மோனா ஜூல் மற்றும் பிரான்ஸ் முன்னாள் அமைச்சர் ஜாக் லாங் ஆகியோரின் பதவிச் சிக்கல்கள் என ஐரோப்பிய அரசியலில் பெரும் புயல் வீசிக்கொண்டிருக்கிறது.
ஆகையால், சரிந்துவரும் அமெரிக்க மேலாதிக்கத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்கான தற்காலிகத் துருப்புச் சீட்டாக எப்ஸ்டீன் ஆவணங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஏகாதிபத்திய நலனுக்குச் சிறுமிகளை இரையாக்கிய இக்கும்பல் இன்று அந்த ஆதாரங்களையும் ஏகாதிபத்திய நலனுக்கே பயன்படுத்துகிறது. மறுபுறத்தில் இதனை அமெரிக்க மக்கள் போராட்டத்தைத் திசைதிருப்பும் உத்தியாகவும் டிரம்ப் பயன்படுத்தி வருகிறார்.
எப்ஸ்டீன் கோப்புகளும்
இந்திய ஆளும் வர்க்கங்களும்
எப்ஸ்டீன் கோப்புகளில் பிரதமர் மோடி, அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, இந்தியத் தரகு முதலாளி அனில் அம்பானி உள்ளிட்டோரின் பெயர்கள் அம்பலமாகியுள்ளன. குறிப்பாக, 2017-2019 காலகட்டத்தில் அனில் அம்பானிக்கும் எப்ஸ்டீனுக்கும் இடையிலான 87 குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் உரையாடல்கள் வெளியாகியுள்ளன. பாதுகாப்புத் துறையில் நுழைய, டிரம்பின் ஆலோசகர் ஜாரெட் குஷ்னரைச் சந்திக்க எப்ஸ்டீனிடம் அனில் அம்பானி உதவி கேட்டுள்ளார்.
இதன் பின்னணியில்தான் ரஃபேல் ஒப்பந்தம் அரங்கேறியுள்ளது. முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் 126 விமானங்கள் வாங்குவதற்கும், அரசு நிறுவனமான ஹிந்துஸ்தானுக்குத் (HAL) தொழில்நுட்பம் மற்றும் 50 சதவிகிதம் ஈடு முதலீடு (Offset Obligation) கிடைப்பதற்கும் ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால், மோடி அரசு இதை இரத்து செய்துவிட்டு, 36 விமானங்கள் வாங்கும் புதிய ஒப்பந்தத்தைப் போட்டது. இதில் ஹிந்துஸ்தானுக்குப் பதிலாக, எந்த முன் அனுபவமும் இல்லாத, ஒப்பந்தத்திற்குச் சற்றுமுன் தொடங்கப்பட்ட அனில் அம்பானியின் “ரிலையன்ஸ் டிஃபென்ஸ்” நிறுவனம் புகுத்தப்பட்டு, ஈடு முதலீடு மூலம் ரூ.36,000 கோடி தொகை மடைமாற்றப்பட்டது. “ரிலையன்ஸை இந்திய அரசுதான் பரிந்துரைத்தது” என பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலண்டே கூறியதும், எப்ஸ்டீன் அனில் அம்பானியை “மோடியின் ஆள்” எனக் குறிப்பிட்டதும், திவாலான அனில் அம்பானியை ரஃபேல் ஒப்பந்தம் மூலம் மோடி அரசு எப்படி கைதூக்கிவிட்டது என்பதைத் தெளிவாக விளக்குகின்றன.
அதேபோல, 2015-ஆம் ஆண்டு மோடி அரசால் பெரும் ஆரவாரத்துடன் “டிஜிட்டல் இந்தியா” திட்டம் தொடங்கப்பட்டது. ஆனால், இத்திட்டம் தொடங்கும் பல மாதங்களுக்கு முன்பே, எந்தவொரு அரசுப் பதவியிலும் இல்லாத ஹர்தீப் சிங் பூரி, எப்ஸ்டீனுடனும் லிங்க்டு-இன் நிறுவனர் ரீட் ஹாஃப்மேனுடனும் இரகசியமாக விவாதித்துள்ளார். “இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதார வாய்ப்புகள் குறித்துப் பேசினேன்” என பூரியே ஒப்புக்கொண்டுள்ளதன் மூலம் இந்திய மக்களின் தரவுகளை ஏகாதிபத்திய கார்ப்பரேட்டுகளுக்குத் தாரைவார்க்கும் இந்த அப்பட்டமான தேசவிரோத நடவடிக்கை அம்பலமாகியுள்ளது.
எப்ஸ்டீன் ஆவணங்கள் என்பது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கையில் உள்ள ஒரு மிரட்டல் ஆயுதம் என்பதற்கு, அண்மையில் அவசரகதியில் கையெழுத்தான அமெரிக்க-இந்திய ஒப்பந்தமே மிகச்சிறந்த சான்றாகும். இந்தியப் பிரதமர் மோடி, அமைச்சர்கள் மற்றும் தரகு முதலாளிகளின் பெயர்கள் இக்கோப்புகளில் இடம்பெற்றுள்ளதைத் துருப்புச்சீட்டாகப் பயன்படுத்தியே, அமெரிக்கா இந்தியாவை மிரட்டித் தனக்குச் சாதகமான இந்த ஒப்பந்தத்தை ஈவிரக்கமின்றித் திணித்துள்ளது. விவசாயிகளின் நலனை உத்தரவாதப்படுத்தித்தான் இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என்று பா.ஜ.க அமைச்சர்கள் பொய்ப் பிரச்சாரம் செய்கின்றனர். ஆனால், இந்த ஒப்பந்தத்தின் சரத்துகள் என்னவென்று இதுவரை நாட்டு மக்களுக்குத் தெரியப்படுத்தாமல் இருட்டடிப்புச் செய்யப்பட்டுள்ளன.
உண்மையில், இந்த இந்திய-அமெரிக்க ஒப்பந்தத்தால் இந்தியாவின் விவசாயம், குறிப்பாகப் பருத்தி, சோயாபீன்ஸ், மக்காச்சோளம் மற்றும் கரும்பு விவசாயிகளும், விவசாயத்தின் துணைத் தொழிலான பால் உற்பத்தியாளர்களும் மிகக்கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். அமெரிக்கப் பெருநிறுவனங்களின் சந்தை ஆக்கிரமிப்பால் நமது சிறு, குறு தொழில்கள் அவர்களுடன் போட்டியிட முடியாமல் அடியோடு அழிந்து போகும் பேராபத்து எழுந்துள்ளது.
ஒருபுறம் ஏகாதிபத்தியத்தின் மிரட்டலுக்கு அடிபணிந்து நாட்டின் வளங்களை அமெரிக்கக் கார்ப்பரேட்டுகளுக்குத் தாரைவார்க்கும் இந்திய ஆளும் வர்க்கம், மறுபுறம் அதே கார்ப்பரேட் லாபி முறையைத் தானும் கையாள்கிறது. பன்னாட்டு மற்றும் உள்நாட்டுத் தரகு முதலாளிகளின் கொள்ளை நலனுக்காக வெளிநாடுகளில் லாபியில் ஈடுபடுவதற்காகவே, எஸ்.எச்.டபிள்யூ. பார்ட்னர்ஸ் (SHW Partners) என்ற பன்னாட்டு லாபி நிறுவனத்துடன் இந்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்காக, மக்களின் வரிப்பணத்திலிருந்து ஆண்டுக்கு 1.8 மில்லியன் டாலர்களை (சுமார் 15 கோடி ரூபாய்) கட்டணமாக வாரி இறைக்கிறது இந்திய அரசு. ஒரு நாட்டின் சட்டங்களையும் திட்டங்களையும் தீர்மானிப்பது நாடாளுமன்றங்களோ மக்களோ அல்ல; எப்ஸ்டீன்கள் மற்றும் எஸ்.எச்.டபிள்யூ. பாட்னர்ஸ் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபிகளே என்பதை இது மீண்டும் ஒருமுறை அப்பட்டமாக நிரூபிக்கிறது.
கார்ப்பரேட் நிறுவனங்களும் தரகர்களுமே ஒரு நாட்டின் சட்டத்திட்டங்களைத் தீர்மானிக்கிறார்கள் என்றால் “இறையாண்மை” என்பது ஓர் அலங்காரச் சொல்லே. இந்தக் கார்ப்பரேட் லாபிகளை மறைக்கவே, எப்ஸ்டீன் விவகாரத்தை வெறும் பாலியல் வழக்காகச் சுருக்க ஆளும் வர்க்கம் துடிக்கிறது. பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் அம்பானி-அதானிகளின் நலன்தான் தேச நலன், இந்த ஆளும் வர்க்கங்களின் நலனுக்கான கருவிதான் இந்திய அரசு என்பது வெட்டவெளிச்சமாகியிருக்கிறது.
ஏகாதிபத்தியக் கட்டமைப்பை வீழ்த்தாமல்
“நீதி” இல்லை
எப்ஸ்டீன் கோப்புகள் வெறும் பாலியல் குற்றங்களின் பட்டியல் அல்ல; அவை நாடுகளின் இறையாண்மையைக் குழிதோண்டிப் புதைத்து, உழைக்கும் மக்களின் வளங்களைச் சூறையாடும் கார்ப்பரேட் லாபிகளின் அப்பட்டமான வாக்குமூலம். பெருநிறுவனங்கள் தங்களின் கொள்ளை இலாபத்திற்காகவும், அரசியல் அதிகாரத்தைத் தங்கள் பிடிக்குள் வைப்பதற்காகவுமே, பெண்களைப் பாலியல் பகடைக்காயாகப் பயன்படுத்தி வலைகளை விரித்துள்ளன. உழைக்கும் வர்க்கப் பெண்களின் உடல்களும் வாழ்வும் இந்தக் கார்ப்பரேட் கொள்ளையை ஈடேற்றுவதற்கான வெறும் உபகரணங்களாகவே இங்குச் சிதைக்கப்பட்டுள்ளன.
நாட்டை விற்கும் இந்தக் கார்ப்பரேட் கும்பல்களிடமும், அதைத் தாங்கிப்பிடிக்கும் அரசுக் கட்டமைப்பிடமுமே நீதியையும் கருணையையும் எதிர்பார்த்துக் காத்திருப்பது என்பது மாபெரும் அரசியல் முரண். ஏகாதிபத்திய நிதி மூலதனக் கும்பல்களே இந்த மாபாதகங்கள் அனைத்திற்கும் முழுமுதல் குற்றவாளிகள்.
ஆளும் வர்க்கத்தின் இரகசியங்கள் இதற்கு மேலும் அம்பலமாகிவிடக் கூடாது என்பதற்காகவே, எப்ஸ்டீன் சிறையில் ‘மர்மமான’ முறையில் இறந்துவிட்டான் என்று அறிவித்துவிட்டது அமெரிக்க அதிகார வர்க்கம். ஒருவேளை அவன் உயிரோடு இருந்து, எப்ஸ்டீன், இளவரசர் ஆண்ட்ரூ, டிரம்ப், எலான் மஸ்க் என இந்தக் கோப்புகளில் உள்ள அனைவரையும் தூக்கிலேற்றினாலும் பிரச்சினை தீர்ந்துவிடப் போவதில்லை. கார்ப்பரேட் கொள்ளை தடையின்றித் தொடர, இந்த ஏகாதிபத்தியக் கட்டமைப்பு ஆயிரம் புதிய எப்ஸ்டீன்களை உருவாக்கிக் கொண்டேதான் இருக்கும். அப்படியானால், மக்களின் உழைப்பையும், நாட்டின் வளங்களையும் சூறையாடி, பெண்களை வக்கிரமாகச் சுரண்டிக் கொழுக்கும் இந்த ஏகாதிபத்தியக் கட்டமைப்பிற்கு என்ன தண்டனை?
ஏகாதிபத்தியம் என்பது அடிப்படையில் இலாபவெறியையும் சுரண்டலையும் மட்டுமே நோக்கமாகக் கொண்டது. மனித உழைப்புச் சுரண்டலும் இயற்கை வளச் சூறையாடலும் நீடிக்கும் வரை, ஒரு நாட்டில் உண்மையான இறையாண்மையோ, பொருளாதாரச் சமத்துவமோ ஒருபோதும் சாத்தியமில்லை. உழைக்கும் மக்களின் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம் நிலைநாட்டப்படும் போதுதான், நாட்டின் வளங்களைக் கொள்ளையடித்த பெருநிறுவன முதலாளிகளுக்கும், பாலியல் தரகர்களுக்கும் தகுந்த தண்டனை கிடைக்கும். அத்தகைய சோசலிசச் சமூகத்தில்தான் உழைப்புச் சுரண்டல், இயற்கை வளச் சுரண்டல் மற்றும் அதற்குத் துணையாக்கப்பட்ட பாலியல் சுரண்டல் என அனைத்திற்கும் நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, மக்கள் நலன் காக்கப்படும், உண்மையான ஜனநாயகம் மலரும்.
![]()
அப்பு
(புதிய ஜனநாயகம் – மார்ச் 2026 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











