மக்கள் அதிகாரக் கழகத்தின் ஐந்தாவது பொதுக்குழு கூட்டம் மே 24 அன்று உற்சாகமாக நடந்து முடிந்தது. அதனையொட்டி மே மாத தொடக்கத்தில் ம.அ.க-வின் மாவட்ட செயற்குழு கூட்டங்கள் நடத்தப்பட்டன. அக்கூட்டங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

தூத்துக்குடி மாவட்ட தீர்மானங்கள்:

1. தூத்துக்குடியில் நாசகார ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு 8 ஆண்டுகள் ஆன பின்னும் நீதி கிடைக்கவில்லை. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக அகற்ற வேண்டும், குற்றவாளிகளான போலீஸ் மற்றும் அரசு அதிகாரிகளைக் கைது செய்து தண்டனை வழங்க வேண்டும், தியாகிகளுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் ஆகிய மக்கள் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்கள் அதிகார கழகம் வலியுறுத்துகிறது.

2. நெல்லை மாவட்டம் நாங்குநேரி பெரும்பத்து, இந்திரா காலனி பகுதிகளில் நடைபெற்ற சாதி வெறி, கொலை வெறியாட்டத்தில் பின்னணியில் இருந்து கொலைகார கும்பலை இயக்கியவர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை. இதுபற்றிய விவரங்களை போலீஸ், மக்களுக்கு தெரிவிக்கவில்லை. கலெக்டர் மற்றும் முதலமைச்சர் நேரில் வந்து தங்களுக்கு ஆறுதல் கூறவில்லை ஆகிய காரணங்களை முன்வைத்து பகுதி மக்கள் சாதி கடந்து ஒற்றுமையாக தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடியின் நெல்லை மாவட்ட மக்கள் அதிகாரக் கழகம் இக்கோரிக்கைகளுக்காக மக்களோடு தொடர்ந்து நிற்கிறது.

3. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் சஞ்சய் என்ற இளைஞர் கடந்த 17.5.2026 அன்று ஆணவ படுகொலை செய்யப்பட்டார். கவின், சிவமதி உள்ளிட்டோர் ஆணவப் படுகொலை செய்யப்பட்டவர்களின் மரணங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை. நடைபெற்று வரும் ஆணவப் படுகொலை தடுத்திட ஆணவப் படுகொலைக்கு எதிரான சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும். ஆணவ படுகொலைக்கு காரணமானவர்களின் சொத்துகளைப் பறிமுதல் செய்ய வேண்டும். ஆதிக்க சாதி சங்கங்களையும், ஆர்.எஸ்.எஸ் – பாஜக பாசிச கும்பல்களையும் தடை செய்ய வேண்டும் என நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்கள் அதிகார கழகம் கேட்டுக் கொள்கிறது.

4. நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் விவசாயிகளின் நெற்கள் உரிய காலத்தில் கொள்முதல் செய்யப்படாமல் மழையில் முளைக்க விட்டு வேடிக்கை பார்க்கிறது தமிழ்நாடு அரசு. போர்க்கால அடிப்படையில் உடனடியாக நெல் கொள்முதல் செய்யப்பட வேண்டும் எனவும், நெல் மற்றும் விளாத்திகுளம் பகுதியில் விளைந்த வத்தல், மக்காச்சோளங்களுக்கு உரிய விலை கிடைத்திட தமிழ்நாடு அரசு ஆவண செய்ய வேண்டும் என்று நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்கள் அதிகார கழகம் வலியுறுத்துகிறது.

5. அரசு மருத்துவமனைகள் மற்றும் மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் உள்ளிட்ட அரசு துறைகளில் காண்ட்ராக்ட்மயம் என்கிற பெயரில் குறைந்து கூலி, 12 மணி நேர வேலை, மரியாதைக் குறைவாக நடத்துதல், பணிப் பாதுகாப்பின்மை உள்ளிட்ட பல பிரச்சனைகள் இருந்து வருகின்றன. இதற்கு எதிராக நெல்லை அரசு மருத்துவமனையிலும், தூத்துக்குடி மாநகராட்சியிலும் தொழிலாளர்கள் பல கட்ட போராட்டங்களை முன்னெடுத்தனர். போராடும் தொழிலாளர்களுக்கு உறுதுணையாக நெல்லை , தூத்துக்குடி மாவட்ட மக்கள் அதிகாரக் கழகம் துணை நிற்கும்.

தமிழ்நாடு அரசு இதில் தலையிட்டு காண்ட்ராக்ட் மயத்தை ஒழித்து, தொழிலாளர்களின் உரிமையை நிலை நிறுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம்.

6. ஆயுஷ் மருத்துவ மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைக்கும் NEXT தேர்வை(தேசிய உரிமத் தேர்வை) உடனடியாக இரத்து செய்ய வேண்டும்.

7. சித்த மருத்துவப் பல்கலைக்கழகத்தை உடனடியாக உருவாக்கிட‌ வேண்டும்.சித்த மருத்துவப் பட்ட மேற்படிப்பில் புதிய துறைகள் உருவாக்கப்படுகிறது.இதனால் 69% இட ஒதுக்கீடு அமல்படுத்த முடியாமல் போகிறது.இதனால் பட்டியல் , பழங்குடி மாணவர்களின் பட்ட மேற்படிப்பு கனவு பறிக்கப்படுகிறது.எனவே புதிய துறைகள் உருவாக்கப்படுவதை நிறுத்த வேண்டும் இல்லையேல் மாணவர் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும்.

ELECTIVES என்னும் இணைய வழி பாடமானது கட்டாயமாகத் திணிக்கப்படுகிறது.இதற்கு வலுக்கட்டாயமாக 1500 ரூபாயும் அதற்கு GST-யாக 275 ரூபாயும் மொத்தம் ஒரு கல்வியாண்டுக்கு 1775 ரூபாயும் வசூலிக்கப் படுகிறது.எனவே இதை இலவசமாக வழங்க வேண்டும் இல்லையேல் நீக்கிவிட வேண்டும்.

சித்த மருத்துவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும்.

சித்தர் யோக மருத்துவம்(பட்ட மேற்படிப்பு) படித்தவர்களுக்கு வழங்கவேண்டிய அரசு வேலைவாய்ப்புக்கள்,BNYS(இயற்கை &யோக மருத்துவம்)படித்தவர்களுக்கு வழங்கப்படுகிறது, இதனைத் தடுக்க வேண்டும்.

அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் சித்த மருத்துவப் பிரிவு உருவாக்கப்பட வேண்டும்.

அரசு சித்த மருத்துவக் கல்லூரிகளில் போதுமான அடிப்படை மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்.முக்கியமாக விளையாட்டு மைதானம் அமைத்துத்தர வேண்டும்.

8. பாளையங்கோட்டை அரசினர் சித்த மருத்துவக் கல்லூரி மாணவியர் விடுதியில் மின்கட்டணம் என்னும் பெயரில் ஆண்டுக்கு சுமார் ரூ.8,000 முதல் ரூ.10,000 வரை ஒரு மாணவியிடம் வசூலிக்கப்படுகிறது.எனவே மின்கட்டணத்தை உடனடியாக குறைக்க வேண்டும்.

9. பன்னாட்டுப் பொருளாதார வளர்ச்சி என்ற பெயரில் வரும் திட்டங்கள், உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்தை அழிப்பதாக உள்ளன. தூத்துக்குடியில் ரூ.40,000 கோடியில் அமையவுள்ள புதிய கப்பல் கட்டும் தளத் திட்டமானது, இப்பகுதியின் பாரம்பரிய தற்சார்பு பொருளாதார ஆதாரங்களான மீன்பிடித் தொழிலையும், உப்பளத் தொழிலையும் முற்றிலுமாக அழித்துவிடும் என்பதால், இத்திட்டத்தை அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் .

10. மாநில உரிமைகளைப் பறித்தும், உள்ளூர் மக்களின் கருத்துகளைப் புறக்கணித்தும், கன்னியாகுமரி மாவட்டத்தின் இயற்கை வளங்களை நாசம் செய்யும் நோக்கில் ஒன்றிய அரசு கொண்டு வரும் ‘அணுக்கனிமச் சுரங்கத் திட்டத்தை’ உடனடியாகக் கைவிடு!

இந்திய அளவில் இயற்கை வளங்களைக் கார்ப்பரேட்டுகளுக்குத் தாரைவார்க்கும் ஒன்றிய அரசின் இந்நடவடிக்கைகளுக்கு எதிராக, உழைக்கும் மக்கள் அனைவரையும் ஒருங்கிணைத்துத் தொடர் களப் போராட்டங்களை முன்னெடுப்போம்!

இவண்
மக்கள் அதிகாரக் கழகம்,
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள்.
9385353605

***

கோவை மாவட்ட தீர்மானங்கள்:

1. குன்னூர், ஊட்டி, கூடலூர், கோத்தகிரி உள்ளிட்ட நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உருளைக் கிழங்குகள் அதிகளவில் விளைவிக்கப்படுகின்றன. உருளைக்கிழங்கு மண்டியில் கிழங்கின் வரத்திற்கு ஏற்ப வியாபாரிகள் ஏல முறையில் வாங்கி செல்கின்றனர். இதனால் நிலையான விலை கிடைக்காததால் விவசாயிகள் விதை, நடவு கூலி, பராமரிப்பு செலவு, உரம், பறிக்கும் கூலி, போக்குவரத்து என தாங்கள் செய்யும் செலவுகள் கூட கிடைப்பதில்லை எனக்கூறி உருளைக்கிழங்குக்குக் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்க வேண்டும் என போராடி வருகின்றனர்.

2. மேட்டுப்பாளையம் நெல்லித்துறை சாலையில், பவானி நதிக்கரையில் UBL (United Bleachers limited) என்கிற தொழிற்சாலை இயங்கி வருகிறது. இத்தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் புகை நச்சுத்தன்மையுடன் உள்ளது, இதனால் காற்று மாசுபட்டு அதனை சுவாசிக்கும் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர் என மக்களும் ஜனநாயக சக்திகளும் தொடர்ச்சியாகப் போராடி வருகின்றனர். தமிழக அரசும், நகராட்சி நிர்வாகமும், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும் முறையாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3. மேட்டுப்பாளையம் நகராட்சிக்குட்பட்ட உழைக்கும் மக்கள் வசிக்கக்கூடிய பகுதிகளில் பொதுக் கழிவறைகள் இல்லாமல் மக்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்

மேலும் பொது கழிவறைகளில் உள்ள பைப் லைன்கள், தண்ணீர் தொட்டிகள் சேதம் அடைந்திருப்பது, தண்ணீர் வசதி, இரவு நேரங்களில் மின்விளக்கு வசதிகள் இல்லாததாலும் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

4. மேட்டுப்பாளையம் நகராட்சியில் பொதுவெளியில் இருந்த குப்பைத் தொட்டிகளை எடுத்துவிட்டு வீடு வீடாகச் சென்று குப்பைகளைச் சேகரித்து வருகிறது. இதனால் குப்பை வண்டி வரும் நேரங்களில் மக்கள் வீடுகளில் இல்லை என்றாலோ அல்லது குப்பைகளைக் கொட்டத் தவறினாலோ பொதுவெளியில் குப்பைகளைக் கொட்ட நேருகின்றது. இதனால் சுகாதாரமற்ற நிலை உருவாகிறது. இதனை நகராட்சி நிர்வாகம் உணர்ந்து தற்போது பின்பற்றும் முறையுடன் கூடுதலாக பொது இடங்களில் குப்பைத் தொட்டிகளையும் வைக்க வேண்டும்.

5. மேட்டுப்பாளையம் தொகுதி வாழ் உழைக்கும் மக்களின் வாழ்வை அழிப்பதில் மது, கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் முக்கியமான பங்காற்றுகிறது. இங்கு அரசு டாஸ்மார்க் கடைகளும் மற்றும் பல தனியார் பார்களும் இயங்குகிறது. இவை உழைக்கும் மக்கள் மண்டியில் மூட்டை தூக்குவது போன்ற பல்வேறு வேலைகளில் கடுமையான உழைப்பைச் செலுத்தி சம்பாதிக்கும் குறைந்தபட்ச வருமானத்தையும் பறிப்பது மட்டுமின்றி, குடும்பங்களின் வாழ்வை அழிக்கிறது. ஆகையால் மேட்டுப்பாளையத்தில் போதைக் கலாச்சாரமானது அனைத்து வகைகளிலும் தடை செய்யப்பட வேண்டும்.

மேட்டுப்பாளையம் தீர்மானங்கள்:

1. மேட்டுப்பாளையம் தொகுதி மக்களின் முக்கிய குடிநீர் மற்றும் பாசன ஆதாரமாக பவானி ஆறு உள்ளது. இந்த ஆற்றுநீரை நம்பி பல ஒருங்கிணைந்த குடிநீர் திட்டங்களும் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஆற்றில் பல தொழிற்சாலைகளின் சாயக் கழிவுநீர் நேரடியாகக் கலப்பது, சுத்திகரிக்கப்படாத நகரங்களின் கழிவுநீர் கலப்பது, பிளாஸ்டிக் மற்றும் குப்பகைள் கொட்டப்படுவது போன்ற செயல்களினால் பவானி ஆறு கடுமையாக மாசடைந்து, மக்கள் குடிப்பதற்கு பாதுகாப்பற்றதாக மாறி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது மற்றும் விவசாயமும் மண்வளமும் பாதிப்புக்குள்ளாகி வருகிறது. தமிழ்நாடு அரசு பவானி ஆற்றில் தொழிற்சாலைகளின் கழிவுநீர் மற்றும் நகரக் கழிவுநீர் கலப்பதை தடுத்து நிறுத்தி, ஆற்றிலுள்ள குப்பைகளை அகற்றி, ஆற்றினை தூர்வாரி தூய்மையாகப் பராமரிக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம்.

2. மேட்டுப்பாளையம் நகரத்திலுள்ள கிழங்கு மற்றும் பூண்டு மண்டியில் தினந்தோறும் டன் கணக்கில் வர்த்தகம் நடைபெறுகிறது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இரவு பகலாக வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் மண்டி பகுதியில் உள்ள குப்பைகளை அகற்றுவது, சாக்கடை கால்வாய்களைத் தூர்வாருவது, சாலைகளைப் பராமரிப்பது போன்றவற்றை அரசு நிர்வாகம் செய்யாததால் காந்தி மைதானம் மிகவும் சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. இங்கு பணி செய்யக்கூடிய தொழிலாளர்களுக்கு சுவாச பிரச்சனைகள் மற்றும் நோய் தொற்றுகளும் ஏற்பட்டு வருகிறது. ஆகையால் காந்தி மைதான கிழங்கு மற்றும் பூண்டு மண்டி பகுதிகளை தூய்மைப்படுத்தி சுகாதாரமான முறையில் பராமரிக்க வேண்டுமென தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறோம்.

3. ஈரோடு மாவட்டம், பெருந்துறை பேரூராட்சி மற்றும் ஈங்கூர் கிராம ஊராட்சிகளில் 2,700 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள தமிழக அரசின் சிப்காட் தொழில் வளர்ச்சி மைய கழிவுகளால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு, குடிநீர் கிடைக்காமல் பெருந்துறையைச் சேர்ந்த 31 கிராம மக்கள் பரிதவித்து வருகின்றனர். இங்குள்ள ‘ஆழ்குழாய் கிணற்று நீர் குடிப்பதற்கு உகந்ததல்ல’ என்று குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் சுகாதாரத்துறை ஆய்வில் உறுதி செய்துள்ளது. உடனடியாக தமிழ்நாடு அரசு இப்பிரச்சனையில் தலையிட்டு மக்களது கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக்கொள்கிறது.

இவண்
மக்கள் அதிகாரக் கழகம்,
கோவை மாவட்டம்.
94889 02202

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க