கென்-பெட்வா திட்டம்: மக்களின் தாகம் தீர்க்கவா? கார்ப்பரேட்டுகளின் தாகம் தீர்க்கவா?

இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் சுமார் 10 கிராமங்கள் முழுமையாகவும், பல கிராமங்கள் பகுதியளவிலும் நீரில் மூழ்கும். இதனால் ஆயிரக்கணக்கான பழங்குடியின மக்கள் (கோண்ட் மற்றும் கோல் பிரிவினர்) தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து வெளியேற்றப்படுவர்.

மீபத்தில், இந்தியாவின் முதல் பெரிய நதிநீர் இணைப்புத் திட்டமான கென்-பெட்வா நதிநீர் இணைப்புத் திட்டத்தை (Ken-Betwa River Link Project) எதிர்த்து மத்தியப்பிரதேசத்தில் பழங்குடியின பெண்கள், விவசாயிகள் நடத்திய “சிதா அந்தோலன்” (Chita Andolan) போராட்டம் இங்கு குறிப்பிடத்தக்கது. இத்திட்டத்தின் படி, மத்தியப்பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில் கென் நதியின் குறுக்கே 77 மீட்டர் உயரமுள்ள பிரம்மாண்ட அணை கட்டப்பட்டு, அந்த அணையில் இருந்து சுமார் 221 கிலோமீட்டர் நீள கால்வாய் வெட்டப்பட்டு, அதன் வழியாக உபரி நீர் பெட்வா நதிக்குக் கொண்டு செல்லப்படும்.

இதன் மூலம் உத்தரப்பிரதேசத்தின் ஏழு மாவட்டங்கள், மத்தியப்பிரதேசத்தின் ஆறு மாவட்டங்களை உள்ளடக்கிய பாறை நிறைந்த நிலப்பரப்பான “புண்டேல்கண்ட்” பகுதியின் தாகம் தீர்க்கப்படும் என்றும் வறட்சி மிகுந்த புண்டேல்கண்ட் பகுதியின் விவசாயப் பொருளாதாரம் மேம்படும் என்றும் பா.ஜ.க. அரசு கதையளக்கிறது. ஆனால், சமூக ஆர்வலர்கள் இத்திட்டத்தை ஒரு “சூழலியல் பேரழிவு” என்று எச்சரிக்கின்றனர்.

ஏனெனில், கென் நதியே பல கோடை காலங்களில் வறண்டு போய்விடும். காலநிலை மாற்றத்தால் நதிநீர் வரத்து குறைந்துள்ள சூழலில், அங்கு உபரி நீர் இருப்பதாக அரசு காட்டும் தரவுகள் பொய்யானவை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும், அணைக் கட்டப்படுவதால் புகழ்பெற்ற பன்னா புலிகள் காப்பகத்தின் சுமார் 6,000 ஹெக்டேர் நிலப்பரப்பு நீரில் மூழ்கும். இது புலிகள் மற்றும் பல அரிய வகை உயிரினங்களின் வாழ்விடத்தை நிரந்தரமாக அழிக்கும். இத்திட்டத்திற்காகச் சுமார் 23 முதல் 40 லட்சம் மரங்கள் வெட்டப்பட உள்ளன. இது அந்தப் பகுதியின் மழையளவை மேலும் குறைத்து நெருக்கடியைத் தீவிரப்படுத்தும் அபாயத்தைக் கொண்டுள்ளது.

முக்கியமாக, இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் சுமார் 10 கிராமங்கள் முழுமையாகவும், பல கிராமங்கள் பகுதியளவிலும் நீரில் மூழ்கும். இதனால் ஆயிரக்கணக்கான பழங்குடியின மக்கள் (கோண்ட் மற்றும் கோல் பிரிவினர்) தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து வெளியேற்றப்படுவர்.

இந்தியாவின் மிக முக்கியமான ஒரு சூழலியல் மண்டலத்தை சிதைத்து பா.ஜ.க. அரசு இத்திட்டத்தை கொண்டுவரத் துடிப்பதற்கு பின்னால் அப்பட்டமான கார்ப்பரேட் சேவையே அடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் கட்டப்படும் பிரம்மாண்டமான அணை மற்றும் கால்வாய் கட்டுமான ஒப்பந்தங்களால், பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் இலாபமடையும். அதேபோல், அணை அமையும் இடத்தைச் சுற்றியுள்ள நிலங்களும் நீர் ஆதாரங்களும் கார்ப்பரேட் தொழிற்சாலைகளுக்கும் தரவு மையங்களுக்குமே தாரைவார்க்கப்படும்.

(பெட்டி செய்தி)


ஜென்னி லீ

(புதிய ஜனநாயகம் – மே 2026 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க