மத்தியப்பிரதேச மாநிலத்தின் டமோ மாவட்டத்தில் உள்ள பிஜோரி பதக் கிராமத்தில் திருமண ஊர்வலத்தின் போது மாற்றுத்திறனாளி தலித் இளைஞரை ஆதிக்கச் சாதிவெறியர்கள் கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.
கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி கோலு அஹிர்வார் என்ற தலித் இளைஞர் தனது திருமணத்திற்கு முன்பாக குதிரையில் அமர்ந்து தனது குடும்பத்துடன் கிராமத்தின் தெருக்களில் ஊர்வலமாகச் சென்றுள்ளார். இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத ஆதிக்கச் சாதிவெறியர்களான குட்டு சிங், கிருஷ்ணா, ஹகம் மற்றும் பால்டு லோதீ ஆகியோர் ஊர்வலம் செல்லும் பாதையில் வாகனத்தை நிறுத்தியுள்ளனர். மணமகனின் குடும்பத்தினர் வாகனத்தை நகர்த்தும்படி அவர்களிடம் தெரிவித்துள்ளனர். ஆனால், ஆதிக்கச் சாதிவெறியர்கள் இளைஞரை குதிரையிலிருந்து இழுத்து கீழே தள்ளி கம்பு மற்றும் தடிகளால் அவரை கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இத்தாக்குதல் தொடர்பான காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
இத்தாக்குதல் திடீரென நடத்தப்பட்டதல்ல, அப்பட்டமான சாதி வெறுப்பின் விளைவு என்று மணமகன் கோலு அஹிர்வாரின் குடும்பத்தினர் கூறியுள்ளனர். தனது சகோதரனுக்கு நேர்ந்த கொடூரத்தை நினைவுகூர்ந்த கோலுவின் சகோதரி மனிஷா அஹிர்வார், “நாங்கள் சென்று கொண்டிருந்தபோது, அவர்கள் ஒரு வாகனத்தைச் சாலையில் நிறுத்தி எங்கள் பாதையை மறைத்தனர். அதை அகற்ற சொல்லியதும் அவர்கள் எங்களைத் தாக்கத் தொடங்கினர். என் சகோதரரைக் குதிரையிலிருந்து கீழே தள்ளி எங்களை அடித்தனர். நால்வர் எங்களைத் தாக்கினர். இந்த தெருவில் குதிரை வரக்கூடாது, உங்களை இங்கே செல்ல அனுமதிக்கமாட்டோம். இந்த மாதிரி குதிரை ஊர்வலம் உங்களுக்கு கிடையாது என்று வெளிப்படையாகக் கூறினர்” என்று ஆதிக்கச் சாதிவெறியர்களின் வெறியாட்டம் குறித்து விவரித்துள்ளார்.
படிக்க: நாங்குநேரி சாதிவெறியாட்டம்: தேர்தலைப் புறக்கணிக்கும் பெரும்பத்து மக்கள்!
தன்னுடைய மகன் உடல் மாற்றுத்திறனாளியாக இருந்த போதிலும் தாக்குதல் நடத்தியவர்கள் எந்த இரக்கமும் காட்டவில்லை என்று வேதனையுடன் தெரிவித்த கோலுவின் தாய் வித்யா அஹிர்வார், “அவர்கள் என் மகனைக் குதிரையிலிருந்து இழுத்து கீழே தள்ளி, எந்த தயவும் இல்லாமல் கொடூரமாக அடித்தனர். என் மகள் தடுக்க முயன்றபோது அவளையும் தாக்கினர்” என்று கூறியுள்ளார். மேலும், அத்தாக்குதலில் தனது மகளின் சில தங்க நகைகளும் காணாமல் போனதாகத் தெரிவித்துள்ளார்.
இக்கொடூரத் தாக்குதலையடுத்து, பாதிக்கப்பட்ட கோலுவின் குடும்பத்தினரும் திருமண ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களும் நேராக ஹட்டா போலீசு நிலையத்துக்குச் சென்று புகார் அளித்தனர். அதனடிப்படையில், குற்றம்சாட்டப்பட்ட நான்கு பேர் மீதும் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
வடமாநிலங்களில் திருமணத்திற்கு முன்பாக மணமகன் குதிரையில் ஏறி ஊர்வலமாகச் செல்வது ஒரு சடங்காகப் பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால், குஜராத், மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பா.ஜ.க. ஆட்சி செய்யும் மாநிலங்களில் இவ்வாறு ஊர்வலமாகச் செல்லும் தலித் சமூக மணமகன்கள் மீது ஆதிக்கச் சாதிவெறியர்கள் சாதியத் தாக்குதல்களில் ஈடுபடுவது தொடர்கதையாகி வருகிறது. இது தலித் மக்கள் கண்ணியத்துடன் வாழ்வதைச் சகித்துக்கொள்ள முடியாத ஆதிக்கச் சாதிவெறியைத் தோலுரித்துக் காட்டுகிறது. ஆனால், இத்தாக்குதல்களை நடத்திய ஆதிக்கச் சாதிவெறியர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் போலீசும் அதிகார வர்க்கமும் பாதுகாக்கிறது. ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. பாசிச கும்பல் வேரூன்றுகின்ற மாநிலங்களில் இத்தகைய தாக்குதல்கள் தீவிரமடைந்து வருகிறது.
![]()
இன்குலாப்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads





