ஆந்திரா: எஸ்.இ.ஐ.எல். அனல் மின் உற்பத்தி நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்!

மே 22 தொடங்கிய வேலைநிறுத்த போராட்டம் பத்து நாட்களைக் கடந்த நிலையில் இதுவரை நிர்வாகம் இப்போராட்டம் பற்றி எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியிடவில்லை. பேச்சுவார்த்தை முயற்சிகளும் மேற்கொள்ளவில்லை. அரசின் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளோ அனைத்தையும் வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

ந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் முதுக்கூர் மண்டலம் நெலட்டூரில் அமைந்துள்ளது எஸ்.இ.ஐ.எல். எனர்ஜி இந்தியா லிமிடெட் எனப்படும் இந்த தனியார் அனல் மின் உற்பத்தி நிலையம். இதன் இயக்கத்திலும், பராமரிப்பிலும் எல்லா வகையிலும் கடும் உடல் உழைப்பைக் கோரக்கூடிய ‘உதவிப் பணிகளில்’ ஈடுபடக்கூடிய ஒப்பந்த தொழிலாளர்கள் சற்றேறக்குறைய 400 பேர் மே 22 முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

இந்தத் தனியார் நிறுவனம் 2,640 மெகாவாட் திறன் கொண்டதாகும். ஆந்திர மாநிலத்தில் இயங்கி வருகின்ற பல தனியார் மின் உற்பத்தி நிலையங்களில் இது மிகப்பெரியதாகும்.

வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் பலரும் 10-15 ஆண்டுகளாகத் தொடர்ந்து பணி செய்து வருகின்றனர். ஆனால் ஆண்டு முழுவதும் அவசியப்படும் இந்த பணிகளில் இது நாள் வரையிலும் எந்த வேலை உத்தரவாதமுமற்ற முறையில் ஒப்பந்த கூலிகளாகவே தொடர்ந்து வருகின்றனர். அதேசமயம் வாய்க்கும் வயிற்றுக்குமான மிகக் குறைந்த கூலிக்கு கடுமையான உழைப்பு சுரண்டலினால் துன்புற்று வருகின்றனர்.

நுட்பத் திறன் குறைந்த (Unskilled) தொழிலாளர்களுக்கு ரூ.12,000, பகுதி அளவு நுட்ப திறன் (Semi skilled) பெற்ற தொழிலாளர்களுக்கு ரூ.13,000, மற்றும் நுட்ப திறன் பெற்ற (Skilled) தொழிலாளர்களுக்கு ரூ.15,000 முதல் ரூ.18,000 என்கிற அளவில் மாத ஊதியம் தரப்படுகிறது.

விலைவாசிகள் தொடர்ந்து உயர்ந்து வருகிற நிலையில் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஊதிய உயர்வு எதுவும் வழங்கப்படவில்லை என்கின்றனர். ஒப்பந்ததாரர்கள் தொழிலாளர்களின் பி.எஃப். மற்றும் இ.எஸ்.ஐ. க்கு முறையாகப் பணம் செலுத்துவதில்லை. பணியிடங்களில் சட்டப்பூர்வமான பாதுகாப்பு ஏற்பாடுகள் எதையும் மேற்கொள்வதில்லை. அதனால் அவசியமற்ற விபத்துகளில் சிக்கி இழப்புகளைச் சந்திக்க வேண்டி நேருகிறது. முறையான, நிரந்தரமான கேட் பாஸ், அடையாள அட்டைகூட தங்களுக்குக் கிடையாது என்று குமுறுகின்றனர் தொழிலாளர்கள்.

“இவர்கள் மேற்கொள்ளுகின்ற நிலக்கரியைக் கையாளுதல், இன்ன பிற இயந்திரங்களின் பராமரிப்புகள் ஆகிய பணிகள் உற்பத்திக்கு நேரடித் தொடர்பில்லாதவை என்றாலும் உற்பத்திக்கும் அதன் தொடர் இயக்கத்துக்கும் மிகவும் அத்தியாவசியமானவை. கடுமையான உடல் உழைப்பைக் கோருகின்றவை. உயிரைப் பணயம் வைத்துச் செய்யக்கூடியவை. ஆனாலும் கேட்பார் இல்லை என்ற காரணத்தினாலேயே அவர்களின் ஏழ்மை நிலையைப் பயன்படுத்திக் கொண்டு இவ்வளவு காலமாக ஒப்பந்த கூலிகளாகவே வைத்திருக்கிறது நிர்வாகம்” என்கிறார் சி.ஐ.டி.யூ. தொழிற்சங்க தலைவர் அங்கைய்யா.

இத்தொழிலாளர்களில் பெரும்பாலானோர் தங்கள் இளமைக் காலத்தை இந்நிறுவனத்தின் வளர்ச்சிக்காகவே செலவழித்து இப்போது 40 – 50 வயதைக் கடந்தவர்களாக இருக்கின்றனர். இப்போதும் தொழிலாளர்களின் கோரிக்கை என்பது அடிப்படை வாழ்வுச் செலவுகளை ஈடு செய்யும் வகையிலான குறைந்தபட்ச ஊதியம் மட்டுமே. வேலை நிறுத்தத்தில் இறங்கி இருக்கும் இந்த ஒப்பந்த தொழிலாளர்கள் மாத ஊதியம் ரூ.26,000 இல்லாமல் இனிமேல் வேலையைத் தொடர முடியாது என்பதில் மட்டும் உறுதியாக இருக்கின்றனர்.


படிக்க: உ.பி, ஹரியானாவைத் தொடர்ந்து, ராஜஸ்தானிலும் தொழிலாளர் போராட்டம் மாபெரும் வெற்றி!


மே 22 தொடங்கிய வேலைநிறுத்த போராட்டம் பத்து நாட்களைக் கடந்த நிலையில் இதுவரை நிர்வாகம் இப்போராட்டம் பற்றி எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியிடவில்லை. பேச்சுவார்த்தை முயற்சிகளும் மேற்கொள்ளவில்லை. அரசின் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளோ அனைத்தையும் வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கின்றனர். சிக்கலைத் தீர்க்க எந்த முயற்சியும் மேற்கொள்ள மறுக்கின்றனர்.

இப்போராட்டம் இதுவரையிலும் மின் உற்பத்தியை நிறுத்திவிடவில்லை என்பதனாலும், அத்துக்கூலிகளால் எவ்வளவு காலம் போராடி விட முடியும் என்கிற பண்ணை ஆதிக்க எண்ணத்தினாலும் இவ்வளவு அகம்பாவத்துடனும் அலட்சியமாகவும் நடந்து கொள்கின்றனர். இப்படியே கொஞ்ச காலம் இழுத்தடித்தால் ஒப்பந்த கூலிகள் பணிந்து விடுவார்கள் என்ற திமிருடன் இருக்கின்றனர். ஆனாலும் ஒப்பந்த தொழிலாளர்களின் உழைப்பு இல்லாமல் இன்னும் நீண்ட நாட்களுக்கு உற்பத்தியைத் தொடர முடியாது என்பது அவர்களுக்கும் தெரியும்.

இந்த முறை நாங்கள் விட்டுக் கொடுப்பதாய் இல்லை. இந்த ஒற்றுமையை உருவாக்க நாங்கள் பெரும்பாடு பட்டு இருக்கிறோம். இன்னும் அதிக காலம் அவர்களால் மெத்தனமாக இருக்க முடியாது. பராமரிப்பு பணிகள் மற்றும் நிலக்கரி தேவை என்று வரும்போது அவர்களால் சமாளிக்க முடியாது. எங்களைத் தேடி வந்தாக வேண்டும். எங்கள் பணிகள் இல்லாமல் அவர்களால் மின்சார உற்பத்தியைத் தொடர்ந்து நடத்த முடியாது. எனவே எங்கள் போராட்டத்திலிருந்து நாங்கள் பின்வாங்கப் போவதில்லை என்று தொழிலாளர்கள் தங்கள் வர்க்க ஒற்றுமையில் ஊன்றி நிற்கின்றனர்.

கனரகத் தொழில் நிறுவனங்கள் பலவும் இவ்வாறே உயர் தொழில் நுட்பத்துடன் கூடிய பணிகளுக்கு மட்டும் நிரந்தர பணியாளர்களை பணியமர்த்திக் கொண்டு கடும் உடல் உழைப்பு சார்ந்த பிற பணிகளை சிறு சிறு துண்டு துண்டான திறன் சாரா (unskilled) வேலைகளாகப் பிரித்து அவற்றை அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த ஒப்பந்ததாரர்களிடம் ஒப்படைத்து விடுகின்றன. இந்த முறை சில பத்தாண்டுகளாகவே தனியார் அரசுத் துறை பொதுத்துறை என்று வேறுபாடில்லாமல் இந்தியாவின் பல மாநிலங்களிலும் பின்பற்றப்பட்டு வருகிறது.

இந்த ஒப்பந்தச் சுரண்டல் முறைக்கு எதிராக தொழிலாளர்கள் ஒன்று திரண்டு எதிர்த்து வருகின்றனர். சென்ற பிப்ரவரி மாதத்தில் தொடங்கி அரியானா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இதேபோன்ற மின் உற்பத்தி நிலையங்களிலும் பிற தொழிற்சாலைகளிலும் தொழிலாளர் போராட்டங்கள் வெடித்தெழுந்த நிலையில் மிரண்டு போன நிர்வாகங்களும் நிர்வாகங்களுக்குத் துணை நின்ற அரசாங்கங்களும் தொழிலாளர் போராட்டங்களுக்குப் பணிந்தன.

இங்கும் ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, ஒடிசா, மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் நிலக்கரி சுரங்கங்களும் அனல் மின் உற்பத்தி நிலையங்களும் குவிந்திருக்கின்றன. நாட்டின் முக்கிய மின் உற்பத்தி பிரதேசமாக இவை விளங்குகின்றன. எல்லா இடங்களிலும் இந்த ஒப்பந்த சுரண்டல் முறைதான் நீக்கமற நிறைந்திருக்கின்றது. இதற்கெதிராகத் தொழிலாளர்கள் போராடத் தொடங்கி விட்டனர். இந்த எஸ்.சி.ஐ.எல். எனர்ஜி இந்தியா நிறுவனத் தொழிலாளர் போராட்டம் நிச்சயம் இந்த பிராந்தியமெங்கும் பற்றி படரும்.

வாய்க்கும் வயிற்றுக்குமே போதாத மிகக்குறைந்த கூலி, கூடுதல் வேலை நேரம், எந்த உரிமைகளும் இல்லாத அழுத்தம் மிகுந்த கடுமையான வேலை நிலைமைகள் என துயரம் மிகுந்த வாழ்க்கை நிலையினால் ஏற்பட்ட பெருங்கோபத்தின் விளைவாய் ஒன்றிணைந்து உருவானது இந்த மாபெரும் வேலை நிறுத்த போராட்டம். இது ஓய்ந்து விடாது நிச்சயம் வெற்றி பெறும். எஸ்.சி.ஐ.எல். எனர்ஜி இந்தியா தொழிலாளர் போராட்டம் வெல்லட்டும்!


சுந்தரம்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க