உ.பி, ஹரியானாவைத் தொடர்ந்து, ராஜஸ்தானிலும் தொழிலாளர் போராட்டம் மாபெரும் வெற்றி!

வேறு வழி இல்லாமல் அரசுடன் முத்தரப்பு பேச்சு வார்த்தைக்கு நெட்டித் தள்ளப்பட்டது நேப்பினோ நிர்வாகம். பேச்சுவார்த்தை முடிவில் தொழிற்சங்க உறுப்பினர் ஆறு பேர் இடை நீக்கத்தை உடனடியாக ரத்து செய்வதாகவும் ஊதிய உயர்வு ஒப்பந்தத்தைக் கூடிய விரைவில் முடித்துத் தருவதாகவும் ஒப்புக்கொண்டது. உடனடியாக தற்காலிகப் பொருளாதாரப் பலன்களாக சில கூடுதல் படிகளைத் தருவதாகவும் ஏற்றுக் கொண்டது.

ரியானா மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களின் எல்லைகளை ஒட்டிய ராஜஸ்தானின் அல்வார், பிவாடி ஆகிய தொழில் மண்டலங்களில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கான முக்கிய உதிரிப் பாகங்கள் உற்பத்தி செய்யும் ஏராளமான சிறு, குறு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.

நாட்டு மக்களின் வாகனத் தேவை அதிகரித்து வரும் அதே வேகத்திற்கு, உற்பத்தியின் வேகமும் அதிகரித்து, அந்த வேகத்துக்கு ஏற்ற வகையில் தொழிலாளர்களின் உழைப்பு சுரண்டலும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்தது.

பிவாடி தொழில் மண்டலத்தில் இயங்கி வரும் நேப்பினோ ஆட்டோ மற்றும் எலக்ட்ரானிக்ஸ் (Napino Auto and Electronics Ltd.) தொழிற்சாலையின் முக்கிய துணை நிறுவனத்தில் உற்பத்தியின் வேகம் தொடர்ந்து அதிகரித்து வந்தாலும் தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்தம் மட்டும் நீண்ட காலமாகக் கிடப்பில் போடப்பட்டு தேங்கிக் கிடந்தது.

இதோ மூன்றே மாதம், இன்னும் நான்கே மாதம் என்று தள்ளிப்போட்டுக் கொண்டே வந்த நிர்வாகம் நான்கு ஆண்டுகளாகியும் புதிய ஊதிய ஒப்பந்தம் போடவேயில்லை. நான்கு ஆண்டுகளாக தொழிலாளர்கள் அதே பழைய ஊதியத்தில் கிடந்து அல்லல் பட்டு வந்தனர்.

இனியும் பழைய ஊதியத்தைக் கொண்டு குடும்பத்தை ஓட்ட முடியாது என்கிற நிலை ஏற்பட்டபோது உடனே புதிய ஊதிய ஒப்பந்தம் நிறைவேற்றக் கோரியும், தொழிலாளர்களின் மீதான பல்வேறு ஒடுக்குமுறைகள் மற்றும் பழிவாங்கலுக்கு எதிராகவும் வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கியது.

நிர்வாகம் தனது லாப வெறியினால் புதிய ஊதிய ஒப்பந்தம் போடாமல் நான்காண்டுகளாகத் திட்டமிட்டுத் தாமதப்படுத்தி வந்தது. தொழிலாளர்களிடையே பரவிய இந்த அதிருப்தியும் அதனால் எழுந்த கோபமும் ஆங்காங்கே தொழிலாளர் எதிர்ப்பாக வெடிக்கத் தொடங்கவே நிர்வாகம் தொழிற்சங்க உறுப்பினர்கள் 6 பேரை தன்னிச்சையாக வேலையிலிருந்து இடை நீக்கம் செய்தது.

நிர்வாகத்தின் இந்த திமிர்த்தனமான நடவடிக்கையினால் கொதிப்படைந்த தொழிலாளர்களிடையே இவ்வளவு காலமாக நீறு பூத்த நெருப்பாக இருந்து வந்த வர்க்கக் கோபம் உருத்திரண்டு வேலை நிறுத்தப் போராட்டமாக வெடித்தது. இருசக்கர வாகனங்களுக்கான மின்சார மற்றும் மின்னணுப் பாகங்களைத் தயாரிப்பதில் முன்னணியில் இருக்கும் நேப்பினோ நிறுவனத்தின் பிவாடி தொழிற்சாலையில் கடந்த ஏப்ரல் மாதம் இறுதியில் தொடங்கி நடத்தப்பட்ட இந்த வேலைநிறுத்தப் போராட்டம் உற்பத்தி சங்கிலியை முற்றிலுமாக முடக்கிப் போட்டது.


படிக்க: டெல்லி நொய்டாவைச் சுற்றி வீசிய தொழிலாளர் போராட்ட அலை


இதற்கிடையே அண்டை மாநிலங்களான அரியானா மற்றும் உத்தரப் பிரதேசத்தில் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி நடந்து முடிந்த தொழிலாளர் போராட்டங்களின் விளைவாக அம்மாநில அரசுகள் தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்தின. தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை அரியானா மாநிலம் 35 சதவீதமும் உத்தரப்பிரதேசம் 21 சதவீதமும் உயர்த்தி உத்தரவிட்டன.

இது பிவாடியில் போராடும் தொழிலாளர்களுக்கு மேலும் நம்பிக்கையை அளித்தது. ராஜஸ்தானின் எல்லையோரப் பகுதிகளில் உள்ள பிற தொழிற்சாலைகளிலும் 8 மணி நேர வேலைக்கு 20,000 குறைந்தபட்ச மாத ஊதியம் என்கிற கோரிக்கையை முன்வைத்து தொழிலாளர்கள் போராட்டங்களைக் கையிலெடுத்தனர். மதர்சன் சுமி, நிப்பான், ரிலாக்சோ ஆகிய தொழிற்சாலைகளின் தொழிலாளர்கள் ஒன்றிணைந்து தொடர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் மானேசரில் உள்ள நேப்பினோ நிறுவனத்தின் முதன்மை தொழிற்சாலையில் முத்தரப்புப் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்ததையடுத்து ஏப்ரல் 13 அன்று அங்கு வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கியது.

அதேபோது பிவாடி நேப்பினோ ஆலையில் வேலை இல்லையேல் கூலி இல்லை (No work. No pay.) என்கிற நிலையில் ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் அதிகாரப்பூர்வமாகப் பங்கேற்கவில்லை. ஆலைத் தொழிலாளர்களில் 60 சதவீதமாக உள்ள ஒப்பந்த தொழிலாளர்களைக் கட்டாயப்படுத்தி, வேலை போய்விடும் என்று மிரட்டி உற்பத்தியைத் தொடர முயன்றது நிர்வாகம். ஆனால் நிர்வாகத்தின் சூழ்ச்சிக்கும் மிரட்டலுக்கும் பணிய மறுத்தனர் ஒப்பந்த தொழிலாளர்கள். “நாங்கள் ஒருபோதும் போராட்டத்தை உடைக்கும் கருங்காலித்தனத்தில் ஈடுபட மாட்டோம்” என்று கூறி விலகிக் கொண்டனர்.

எப்படியும் போராட்டத்தை முறியடித்து விட வேண்டும் என்று மண்டையைக் குடைந்த அதிகார வர்க்கத்தினர் அடுத்து ஏப்ரல் 18 அன்று ஏற்கெனவே தயாரிக்கப்பட்டு உற்பத்திக் கிடங்குகளில் சேமித்து வைக்கப்பட்டிருந்த உதிரிப் பாகங்களை வெளியே கொண்டு வந்து விநியோகித்துவிட ரகசியமாகத் திட்டமிட்டனர்.

இதனை அறிந்து கொண்ட தொழிலாளர்கள், தங்களுடன் ஒப்பந்த தொழிலாளர்களையும் இணைத்துக் கொண்டு ஆலை வாயிலில் ஒன்று திரண்டு மனிதச் சங்கிலி அமைத்து லாரிகள் உள்ளே நுழைவதையும் வெளியேறுவதையும் முற்றிலுமாக தடுத்து நிறுத்தினர். உடனே ஆலையின் முன்பு போலீஸ் பட்டாளம் குவிக்கப்பட்டுத் தொழிலாளர்கள் அச்சுறுத்தப்பட்டனர். இருப்பினும் தங்களின் வர்க்க ஒற்றுமையால் அதிகாரிகளின் திட்டத்தைக் கைகூடவிடாமல் தடுத்து முறியடித்தனர். இதன் உடனடி விளைவாக 100 சதவீத உற்பத்தியும் முடங்கியது.

இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனத் தயாரிப்புக்கான உதிரிப்பாகங்கள் இருவார காலம் வரத்தில்லாமல் நின்று போனதால் ஹீரோ, ஹோண்டா, மாருதி உள்ளிட்ட பல்வேறு வாகன உற்பத்தி நிறுவனங்களின் உற்பத்திச் சங்கிலி முழுவதும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. வாகன உற்பத்தியில் எதையும் முழுமையாக முடிக்க முடியாமல் எல்லாமும் அரைகுறையாக நின்று போனதால் வாகன உற்பத்தி சார்ந்த எல்லா தொழிற்சாலைகளும் உற்பத்தியைத் தொடர முடியாத நெருக்கடியை எதிர்கொண்டன.

மேலும் போராடுகின்ற பிவாடி நேப்பினோ தொழிலாளர்களுக்கு ஆதரவாக அந்தப் பகுதி முழுவதிலும் உள்ள ஆலைத் தொழிலாளர்கள் ஒன்று திரண்டு ரிலாக்சோ சவுக் (Relaxo chowk) போன்ற பல முக்கிய சாலை சந்திப்புகளில் கூடி ஆர்ப்பாட்டங்களை நடத்தியதில் அப்பகுதி முழுவதுமே ஸ்தம்பித்துப் போனது. இதனால் ஆலை நிர்வாகங்கள் அனைத்துமே பொது மக்களின் கடும் கோபத்துக்கு உள்ளாகின.

இறுதியாக வேறு வழி இல்லாமல் அரசுடன் முத்தரப்பு பேச்சு வார்த்தைக்கு நெட்டித் தள்ளப்பட்டது நேப்பினோ நிர்வாகம். பேச்சுவார்த்தை முடிவில் தொழிற்சங்க உறுப்பினர் ஆறு பேர் இடை நீக்கத்தை உடனடியாக ரத்து செய்வதாகவும் ஊதிய உயர்வு ஒப்பந்தத்தைக் கூடிய விரைவில் முடித்துத் தருவதாகவும் ஒப்புக்கொண்டது. உடனடியாக தற்காலிகப் பொருளாதாரப் பலன்களாக சில கூடுதல் படிகளைத் தருவதாகவும் ஏற்றுக் கொண்டது.

ஒப்பந்த தொழிலாளர்களைப் பொருத்தவரை ராஜஸ்தான் அரசு இன்னும் குறைந்தபட்ச ஊதிய உயர்வு எதையும் மாற்றி அறிவிக்காத நிலையில் நேப்பினோ நிர்வாகம் 8 மணி நேர வேலைக்கட்டுப்பாட்டை மட்டும் அமல்படுத்துவதாக ஏற்றுக் கொண்டுள்ளது. இதன் மூலம் இரண்டு வாரக் கால தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது.

ராஜஸ்தானின் பிவாடி தொழில் மண்டலத்தில் தொழிலாளர்கள் பெற்றிருக்கும் இந்த வெற்றி வர்க்க ஒற்றுமைக்குக் கிடைத்த வெற்றி ஆகும். வர்க்க ஒற்றுமையின் பலத்தை உணர்ந்து விட்டால் தொழிலாளி வர்க்கம் வெல்ல முடியாத சக்தி ஆகிவிடும் என்பதற்கு இன்னொரு சான்றாக உயர்ந்து நிற்கிறது நேபினோ தொழிலாளர் போராட்ட வெற்றி.

நன்றி: தி லெப்ட் வியூஸ்


சுந்தரம்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க