குர்கான் மானேசரில் உள்ள ஹோண்டா பைக் தொழிற்சாலையில் ஏப்ரல் 2 அன்று தொடங்கிய தொழிலாளர் வேலை நிறுத்தப் போராட்டம் அடுத்தடுத்த நாட்களில் டெல்லியைச் சுற்றிலும் உள்ள உற்பத்தித் துறை சார்ந்த பல்வேறு தொழிற்சாலைகளுக்கும் தீயாய்ப் பரவியது.
என்.சி.ஆர் (NCR- National Capital Region) எனப்படும் டெல்லியைச் சுற்றிலும் உள்ள ஹரியானா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த குறிப்பிட்ட வட்டாரத்தில் மட்டும் சிறியதும் பெரியதுமான 15,000 தொழிற்சாலைகள் இயங்குகின்றன. அவற்றில் 45 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.
ரூப் பாலிமர், ருச்சிகா கார்மெண்ட்ஸ், சத்தியம் ஆட்டோ காம்பொனென்ட்ஸ் ரிச்சா குளோபல் மற்றும் மாடலமா எக்ஸ்போர்ட்ஸ் மற்றும் முஞ்சல் ஷோவா உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளில் தற்காலிக தொழிலாளர்கள் மாபெரும் வேலை நிறுத்தத்தில் இறங்கினர்.
ஏப்ரல் மாதத்திலேயே அடுத்தடுத்து அருகாமை பகுதிகளிலிருந்த இன்னும் பல தொழிற்சாலைகளிலும் போராட்டம் பரவியது. ரிக்கோ ஆட்டோ, சுப்ரஜித் என்ஜினியரிங், சிர்மா எஸ்.ஜி.எஸ் டெக், ஃபோர்சா மெடி, ஃபேஷன் பிரைவேட் லிமிடெட், ஆமோ வியோ இந்தியா, பிரிக்கால் லிமிடெட் மற்றும் சரிதா ஹண்டா எக்ஸ்போர்ட்ஸ் ஆகிய பல தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தைக் கையில் எடுத்தனர்.
நொய்டாவில் உள்ள ரிச்சா குளோபல் எக்ஸ்போர்ட்ஸ் என்ற ஆடை உற்பத்தி நிறுவனத்தில் ஏப்ரல் 9 அன்று தொடங்கிய வேலை நிறுத்தம் தொடர்ந்து ஃபரிதாபாத்தில் உள்ள பாரத் கியர்ஸ் லிமிடெட், பானிப்பட்டில் உள்ள குப்தா நூற்பாலை ஆகிய தொழிற்சாலைகளுக்குப் பரவியது. இந்த என்.சி.ஆர். பிராந்தியம் முழுவதிலும் பல தொழிற்சாலைகளில் போராட்டங்கள் வெடித்தன. என்.சி.ஆர் பிராந்தியம் முழுவதும் போராட்டக் களமாகியது.
பல தொழிற்சாலைகளில் தொழிற்சங்கங்களே இல்லை. எனினும் வாட்ஸ் ஆப், பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்கள் வாயிலாகத் தகவல்களைப் பரிமாறிக் கொண்டு தங்களை ஒருங்கிணைத்துக் கொண்டனர். வேலை நிறுத்தம் செய்த தொழிலாளர்கள் ஆங்காங்கேயும் ஒன்று திரண்டு தர்ணா போராட்டங்களில் ஈடுபட்டு நிர்வாகத்துக்கு எதிராகத் தொடர் முழக்கங்களை எழுப்பினர்.
போலீசை கொண்டு போராட்டத்தை நசுக்கிய ஆட்சியாளர்கள்:
போராட்டம் பரவுவதைக் கண்டு பதறிப்போன ஆட்சியாளர்கள் போராட்டங்களை ஒடுக்குவதற்காக ஏப்ரல் 13, 14 தேதிகளில் போலீசை ஏவினர். ஹரியானா மாநில அரசு இந்திய குடிமை பாதுகாப்புச் சட்டத்தின் 163 பிரிவின் கீழ் 5 பேருக்கு மேல் யாரும் கூடக் கூடாது என்று தடை உத்தரவைப் பிறப்பித்தது.
தொழிற்சாலை வாயில்கள் மற்ற பிற பொது இடங்களில் கூடியிருந்த தொழிலாளர்கள் மீது போலீசு தடியடி நடத்தியது. அதில் பலர் காயமடைந்தனர். ஒரு தொழிலாளி படுகாயம் அடைந்தார். தற்காப்புக்காகத் தொழிலாளர்களும் கற்களைக் கொண்டு எதிர்த் தாக்குதல் நடத்தினர். போலீசின் வாகனங்களைப் புரட்டிப் போட்டனர். சில வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. எங்கும் போக்குவரத்து ஸ்தம்பித்துப் பல இடங்களில் நிலைமை களேபரமானது.
உத்தரப்பிரதேச மாநிலம் யோகி ஆதித்யநாத் அரசும் போலீசை ஏவி கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியது. தடியடி நடத்திப் போராடும் தொழிலாளர்களை விரட்டியடித்தது. ஏப்ரல் 9 அன்று மானேசரில் 350 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர் அனைவர் மீதும் வழக்குப் பதிந்து சிறையிடப்பட்டனர். டஜன் கணக்கான தொழிலாளிகள் தடியடியால் காயம் அடைந்தனர். எங்கும் தொழிலாளர்கள் கற்களைக் கொண்டு எதிர்த் தாக்குதல் நடத்தினர். அன்று இரவே தொழிற்சங்க தலைவர்கள் பலர் வீடு புகுந்து கைது செய்யப்பட்டனர். பலர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.
இவற்றுக்கும் முன்பாகவே ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையில் 28க்கும் அதிகமான தொழிலாளர் வேலை நிறுத்தங்கள் நடந்திருக்கின்றன. குறிப்பாக ஆற்றல் துறை சார்ந்த அனல் மின் நிலையங்களில் இப் போராட்டங்கள் பல இடங்களிலும் பற்றிப் பரவி நடந்து முடிந்தன. மேலும் நான்கு தொழிற்சாலை சட்டத் தொகுப்புக்கு எதிராகத் தொழிற்சங்கங்கள் கூட்டாக அறைகூவி இருந்த பிப்ரவரி 12 நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் 10 லட்சக் கணக்கான தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
(தொழிலாளர் விரோத சட்ட நான்கு சட்ட தொகுப்பை உடனடியாக நீக்கக் கோரியும் 8 மணி நேர வேலை நேரம் பாதுகாப்பான பணி நிலைமை கௌரவமான வாழ்வதற்கு போதுமான ஊதியம் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அந்த நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் நடந்தது.)
படுமோசமான தொழிலாளர்களின் வாழ்க்கை நிலைமை:
பல தொழிற்சாலைகளில் உதவியாளர்கள் மெக்கானிக்குகள் போன்ற தற்காலிக மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மாதமொன்றுக்கு 11,000 முதல் 12,000 மட்டுமே ஊதியம் வழங்கப்படுகிறது. மிகை நேரப்பணிக்கும் இதே விகிதப்படிதான் ஊதியம். எந்த சிறப்பூதியமும் கிடையாது. பணி நிரந்தரமும் கிடையாது. ஒப்பந்ததாரர்கள் மற்றும் அதிகாரிகளின் அரட்டல் மிரட்டல்களுக்கும் வசவு பேச்சுகளுக்கும் குறைவில்லை.
மேலும் பல ஆண்டுகளாகவே ஊதியம் உயர்த்தப்படாமல் இருந்து வருகிறது. ஏற்கெனவே தொழில் பிராந்தியம் என்ற வகையில் இங்கு விலைவாசிகள் மகாராஷ்டிரா மாநிலம் அளவுக்கு உயர்ந்தே இருந்தன. பணவீக்கம் அதிகரித்து விலைவாசிகள் உயர்ந்து நிற்கும் இந்த காலத்தில் இவ்வளவு குறைந்த ஊதியத்தில் ஒரு குடும்பம் எப்படி வாழ முடியும்? ஒவ்வொரு நாளையும் கடத்துவது மிகவும் கடினமாகிவிட்டது.
தொழிலாளர்களின் கோரிக்கைகள்:
போராட்டங்களை வழி நடத்தும் குர்கான் தொழிற்சங்கங்களின் கவுன்சில் (மஸ்தூர் ஏக்தா கமிட்டி) ஏப்ரல் 9 அன்று ஹரியானா அரசாங்கத்திடம் பின்வரும் கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றை அளித்துள்ளது.
-
- ஹோண்டா நிறுவனத்தில் தற்காலிகத் தொழிலாளர்களுக்கு ஏற்கெனவே பேச்சுவார்த்தையில் ஏற்றுக் கொண்டுள்ள ஒப்பந்தத்தின்படி (உடனடியாக 5000 ஊதிய உயர்வு, இலவச உணவு, ஊக்கத்தொகை உள்ளிட்ட) கோரிக்கைகளைச் செயல்படுத்த வேண்டும்.
- ஹரியானா மாநிலத்தில் அனைத்து வகை தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச மாத ஊதியம் 33,000 என்று நிர்ணயிக்க வேண்டும்.
- தற்காலிக பணியாளர்கள் நிரந்தரமாக்கப்பட வேண்டும்.
- நிரந்தர பணிகளில் தற்காலிக ஊழியர் நியமிக்கத் தடை விதிக்க வேண்டும்.
- தொழிலாளர் நலச் சட்டங்களை மீறும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
- பாதுகாப்பான சுயமரியாதைக்கு கேடில்லாத பணிச்சூழலை உறுதி செய்ய வேண்டும். தொழிலாளர் இயக்கத்தில் காவல்துறை மற்றும் நிர்வாகத்தின் தலையீடு (அச்சுறுத்தல், அழுத்தம் ஆகியன) நிறுத்தப்பட வேண்டும்.
- தொழிலாளர் நலத்துறை உடனடியாக தலையிட்டு பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வேண்டும்.
மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடந்த தொழிலாளர்களின் இந்த ஒன்றுபட்ட வேலை நிறுத்தப் போராட்டத்தின் விளைவாக நிர்வாகங்கள் தொழிலாளர்களின் கோரிக்கைகள் சிலவற்றை ஏற்றுக்கொண்டு செயல்படுத்தியுள்ளன என்பது குறிப்பிடத் தகுந்ததாகும்.
இந்நிலையில் இந்த புதிய அலை வேலை நிறுத்தப் போராட்டங்களைத் தொடர்ந்து பீதி அடைந்த ஹரியானா மற்றும் உத்தரப்பிரதேச மாநில அரசுகள் உடனேயே குறைந்தபட்ச ஊதிய உயர்வுக்கான உத்தரவைப் பிறப்பித்தன.
மாதாந்திர குறைந்தபட்ச ஊதியம் தேர்ச்சி இல்லாத மற்றும் தேர்ச்சி பெற்ற தொழிலாளர்களுக்கு முறையே 15,220 மற்றும் 19,425 என்று அறிவித்தது. ஆனால் தொழிலாளர்கள் கேட்டிருந்த கோரிக்கையான 25,000 முதல் 30,000 என்பதிலிருந்து இது மிகவும் குறைந்த தொகையாகும். எனவே தொழிலாளர்கள் இதனை ஏற்கவில்லை போராட்டங்களைத் தொடர முடிவு செய்துள்ளனர்.
போலீஸ் தடியடி, கைது, சிறை என்று தொழிலாளர் போராட்டங்கள் ஒடுக்கப்பட்டு தற்காலிகமாகப் பின்னடைவைச் சந்தித்து இருக்கலாம். ஆனால் ஒரு வர்க்கம் என்கிற முறையில் தொழிலாளர்களிடம் ஏற்பட்டிருக்கும் வர்க்கக் கோபம் ஒருபோதும் தடியடி சிறைக் கொட்டிகளால் ஒடுங்கி விடாது என்பதே வரலாறு உணர்த்தும் உண்மை.
![]()
ஆதி
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











