நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே உள்ள ஆவத்திக்குளம் கிருஷ்ணா நகரில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இவற்றில் 55 வீடுகளுக்கு ஐந்தாண்டுகளுக்கும் மேலாக மின் இணைப்பு வழங்கப்படாததால் மக்கள் இருளில் தவித்து வருகின்றனர்.
தங்களின் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கும்படி இப்பகுதி மக்கள் கடந்த ஐந்தாண்டுகளாக அரசியல் கட்சித் தலைவர்கள், மின்சார வாரிய அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர் என அனைவரிடமும் பலமுறை மனு அளித்துள்ளனர். ஆனால், அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
குறிப்பாக, இவ்வீடுகள் அமைந்துள்ள இடம் கோவில் நிலம் என்பதால் அறநிலையத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளிடம் தங்கள் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கும்படி மக்கள் முறையிட்டுள்ளனர். அதற்கு நிலம் தொடர்பாகச் சட்டப் பிரச்சினைகள் இருப்பதாக அதிகாரிகள் அலட்சியமாகத் தெரிவித்துள்ளனர். மக்களுக்குப் பட்டாவும் வழங்காமல் தற்காலிக மின் இணைப்பும் கொடுக்காமல் அறநிலையத்துறை அதிகாரிகளும் கோட்டாட்சியரும் மின்சார வாரிய அதிகாரிகளும் மாறி மாறி மக்களை அலைக்கழிக்கின்றனர்.
இதனால் கர்ப்பிணிப் பெண்களும் முதியவர்களும் குழந்தைகளும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். இரவு நேரத்தில் விசப்பூச்சிகள் கடித்து விடுமோ என்ற அச்சத்திலும், குழந்தைகள் விளக்கின் ஒளியில் படிக்கும் நிலையிலும் இருந்து வருகின்றனர். அதிலும், 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு நடந்துவருவதால் மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் விரக்தியடைந்த மக்கள் கடந்த மார்ச் 16-ஆம் தேதி அன்று தங்கள் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்காததைக் கண்டித்துக் கருப்புக் கொடி ஏந்திப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன் தீப்பந்தம் ஏந்தியும் சாக்கடைக் கால்வாயில் இறங்கியும் தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். மேலும், “அரசு எங்களுக்கு மின் இணைப்பு வழங்கவில்லை என்றால் வருகின்ற சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிப்போம்” என மக்கள் ஆளும் தி.மு.க. அரசை எச்சரித்தனர். மறுநாளும் மக்கள் தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, மார்ச் 17 அன்றிரவு போராட்டம் நடைபெற்ற இடத்திற்குச் சென்ற வருவாய்த்துறை மற்றும் போலீசு அதிகாரிகள் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தித் தேர்தல் முடிந்தவுடன் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று தெரிவித்துள்ளனர். இதனால் மக்கள் தற்காலிகமாகத் தங்களின் போராட்டத்தை நிறுத்தி வைத்துள்ளனர்.
ஐந்தாண்டு கால ஆட்சியில் மின் இணைப்பு வழங்காமல் தேர்தல் முடிந்தவுடன் வழங்குவோம் என்று தெரிவிப்பது மக்களின் எதிர்ப்பை மழுங்கடித்து அவர்களின் வாக்குகளைக் கவரும் தி.மு.க. அரசின் மக்கள் விரோத சந்தர்ப்பவாத நடவடிக்கையாகும். மேலும், தேர்தல் முடிந்தாலும் மக்களுக்கு மின் இணைப்பு வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியே என்பதால் மக்கள் மீண்டும் தங்களின் அடிப்படைத் தேவைகளுக்காகப் போராட வேண்டிய நிலைக்கே தள்ளப்பட்டுள்ளனர்.
இங்கு மட்டுமின்றி, தமிழ்நாடு முழுவதும் சாலை, மின்சாரம், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்காக மக்கள் போராடி வருகின்றனர். ஆனால், ஐந்து ஆண்டுகளாக மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் தி.மு.க. அரசு ஏய்த்து வருகிறது. மக்களின் அடிப்படைக் கோரிக்கைகளைப் புறக்கணித்துவிட்டு, பா.ஜ.க. எதிர்ப்பு – கவர்ச்சிவாத வாக்குறுதிகளின் மூலம் மட்டுமே தேர்தலில் வெற்றி பெற்றுவிடலாம் எனக் கருதுகிறது. ஆனால் இதற்கெதிராகப் பல்வேறு கிராமங்களைச் சார்ந்த மக்கள் தற்போது தேர்தல் புறக்கணிப்புப் போராட்டங்களை அறிவித்துள்ளனர். ஆகவே, மக்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு தி.மு.க. அரசை நிர்ப்பந்தித்து ஜனநாயக சக்திகள் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.
![]()
இன்குலாப்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











