மானாமதுரை ஆகாஷ் லாக்கப் படுகொலைக்கு நீதி வேண்டும்!

சட்டத்தின் ஆட்சி, நீதியின் ஆட்சி, ஜனநாயகத்தின் ஆட்சி “இங்கு அனைவருக்கும் ஜனநாயகம் உள்ளது. இங்கு அனைவரும் சமம்" என்று பேசுவதெல்லாம் வெறும் ஏமாற்று என்பதையே ஆகாஷின் லாக்கப் படுகொலை நமக்கு எடுத்துக்காட்டுகிறது.

ன்பார்ந்த உழைக்கும் மக்களே!

மானாமதுரையைச் சேர்ந்த ஆகாஷ் டெலிசன் என்ற இளைஞர் போலீசாரால் கொடூரமாகத் தாக்கப்பட்டு மார்ச் 8 அன்று உயிரிழந்தார். சாத்தான்குளம் ஜெயராஜ் பென்னிக்ஸ், மடப்புரம் அஜித்குமார் ஆகியோர்களின் லாக்கப் படுகொலைகள் தமிழ்நாட்டில் மிகப்பெரியக் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஜெயராஜ் பென்னிக்ஸ் கொடூரமாகத் தாக்கப்பட்டதை அருகில் இருந்து பார்த்தப் போலீஸ்காரர்கள் சிலர் மீடியாக்களில் பேசியது மூலமாகவும் மடப்புரம் அஜித் தாக்கப்பட்டதைச் சமூக வலைதளங்களில், தொலைக்காட்சிகளில் பார்த்த மக்கள் தங்கள் கடுமையானக் கண்டனங்களைப் பதிவு செய்தனர். பல இடங்களில் போராட்டங்களை முன்னெடுத்தனர். இவ்வளவு கொடுமைகள் எல்லாம் இனிமேல் நடக்கக்கூடாது என மக்கள் நினைத்தனர்.

ஆனால் அதை எல்லாம் சாதாரணமாகக் கடந்து அடுத்த வாக்கப் படுகொலையைச் செய்துள்ளது போலீசு. அதன் நீட்சிதான் இன்று மானாமதுரை ஆகாஷ் டெலிசன் லாக்கப் படுகொலை.

கடந்த மார்ச் 6 அன்று ஆகாஷ் கைது செய்யப்பட்டார். அவருடையப் பெற்றோருக்கு கைது செய்த விவரத்தைத் தெரிவிக்காமல் இருந்தது போலீசு. ஆனால் காட்டுப்பகுதிக்கு ஆகாஷ் டெலிசனை இழுத்துச் சென்று அவருடைய கால்களின் இரண்டு ஓரங்களிலும் கற்களை வைத்து காலில் ஈரத்துணியைச் சுற்றி இரும்புக் கம்பியை வைத்து கொடூரமாகத் தாக்கியுள்ளார்கள்.இதில் கால் எழும்புகள் உடைந்து அதிகமான இரத்தம் வெளியேறியுள்ளது. இளைஞர்கள் இடையில் நடந்த மோதலுக்காக ஆகாஷை கைது செய்வதாக சொன்ன போலீசு மருத்துவமனையில் தாமதமாகச் சேர்த்த பிறகுதான் அவருடைய அம்மாவிற்கு தகவல் சொல்லியது மேலும் உடலில் பல இடங்களிலும் பலத்தக் காயங்கள் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, நுரையீரல் இதயம் மார்புப் பகுதிகள் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளது. ஆகவே ஒரு இளைஞனைக் கொடூரமாக சித்ரவதை செய்துக் கொன்றுள்ளார்கள்.

இப்படுகொலையை அரங்கேற்றியவர்கள் திருப்புவனம் காவல் ஆய்வாளர் திலீபன் மற்றும் மானாமதுரை சார்பு ஆய்வாளர் குகன் ஆகியோர் தலைமையில் இருந்த 16 போலீசார்கள் ஆகாஷ் பாலத்தில் இருந்து தவறி விழுந்து கால் உடைந்து இறந்து போனார் என கட்டுக்கதையை கட்டினார்கள்.

ஆனால் இதனை ஏற்காத மானாமதுரை கிருஷ்ணராஜபுரம் காலனியைச் சேர்ந்த மக்கள் நான்கு வழிச்சாலையை மறைத்து 5 நாட்களுக்கும் மேலாகப் போராடினர். அப்போதுதான் ஆகாஷ் நீதிபதியிடம், வழங்கிய மரண வாக்குமூலம் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஈரத் துணியைச் சுற்றி காலை உடைத்தும் கடுமையாக தாக்கியது பற்றியும் சாதி ரீதியாக இழிவுபடுத்தியது பற்றியும் தனது மரண வாக்குமூலத்தை கொடுத்துள்ளார். இதன் பிறகு தான் போலீஸ் பேசியது பொய் என்பது உறுதியானது.

பிறகு, மதுரை உயர்நீதிமன்றத்தால் கொலை வழக்காகவும், வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்குப்பதிவு செய்யச் சொல்லி உத்தரவிட்டது. மேலும் ஆகாஷை அடித்துக் கொன்ற போலீஸ்காரர்கள் யார் என்பதை கண்டறிய சிபிசிஐடி விசாரணைக்கும் உத்தரவிட்டது. அதுபோக நான்கு வழிச் சாலையில் நடைபெற்றப் போராட்டத்தை அப்புறப்படுத்தி மானாமதுரை பழையப் பேருந்து நிலையம் அருகே போராட்டம் நடத்த அனுமதி வழங்கியது உயர்நீதிமன்றம்.

அன்றிலிருந்து இன்று வரை 90 நாட்களுக்கும் மேலாக மானாமதுரை பழையப் பேருந்து நிலையத்தின் அருகில் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஆனால் சிபிசிஐடி போலீஸ் இதுவரை கொலை வழக்கில் யார் பெயரையும் சேர்க்காமல் குற்றவாளிகளைக் கண்டறிந்து குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யாமல் உள்ளனர்.

காட்டில் வாழும் ஒரு மானை சுட்டால் கூட உடனே வழக்குப் பதிவு செய்து கைது செய்கிறது வனத்துறை போலீசு. அந்த விலங்குக்கு இருக்கும் மரியாதை கூட இந்த நாட்டில் ஒரு மனிதனுக்கு இல்லை எனும் அளவிற்கு தான் சட்டம் ஒழுங்கு உள்ளது. இது ஆகாஷின் படுகொலைக்கு நீதி வழங்க மறுக்கும் அரசு எந்திரத்தின் ஆட்சியாளர்களின் அலட்சியத்தைக் காட்டுகிறது.

மானாமதுரையில் 90 நாட்களுக்கும் மேலாக தொடர்ப் போராட்டங்கள் நடைபெற்றது. அதில் நூற்றுக்கணக்கான இயக்கங்கள் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர். தமிழ்நாடு முழுவதும் உள்ள பல ஜனநாயக சக்திகள் பல மாவட்டங்களில் ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்களை முன்னெடுத்தனர். இது போன்ற பல நடவடிக்கைகளுக்குப் பிறகும் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால் இவர்கள் யாருக்கானவர்கள்? இவர்கள் குற்றவாளிகளைப் பாதுகாக்கிறார்கள் என்று தானே அர்த்தம்.

யார் ஆகாஷை கைது செய்தார்கள்? யார் கட்டுப்பாட்டில் ஆகாஷ் இருந்தார்? யாரால் அடித்துக் கொல்லப்பட்டார்? என்ற சாதாரண விவரங்கள் கூட சிபிசிஐடி போலீசால் கண்டுபிடிக்க முடியாதா?

ஆகாஷ் டெலிசன் தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால் சாதிய மனநிலையுடனே இந்த அரசு எந்திரம் அவருக்கான நீதியை வழங்க மறுக்கிறது. சாதியைச் சொல்லி ஆகாஷை அடித்துக்கொன்ற போலீசுக்கு இன்று வரை காவல் காத்து உறுதுணையாக நிற்கிறது.நீதிமன்றமும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் ஆகாஷின் லாக்கப் படுகொலைக்கு அநீதி இழைத்து வருகிறது.

வருகிற ஜூன் 15ஆம் தேதியுடன் உடலை வாங்காமல் நடத்தப்படும் போராட்டம் 100 நாட்களைத் தொடுகிறது. தனது மகனின் உடலை வாங்காமல் நீதி வேண்டி ஆகாஷின் தாய் அன்றாடம் அழுது புலம்பி நிம்மதியற்று மிகப் பெரிய மன அழுத்தத்தில் வாழ்ந்து வருகின்றார். அந்தத் தாயின் கதறல் அரசின் காதுகளில் விழவில்லையா? பல்வேறு நெருக்கடிகளையும் தாண்டி ஆகாஷிற்கு நீதி வேண்டும் குற்றவாளி காவலர்கள் 16 பேரை கைது செய்ய வேண்டும் என உறுதியாக நிற்கின்றார். அந்தத் தாய்க்கு நீதி இல்லையா?

தி.மு.க. ஆட்சியின் கடைசி கால கட்டத்தில் தேர்தலுக்கு முன்பு நடந்த இந்த லாக்கப் படுகொலையில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்தது தி.மு.க. அரசு. நான்கு வழிச்சாலையை மறைத்த மானாமதுரை மக்களின் போராட்டத்தில் கலந்து கொண்ட விஜயின் த.வெ.க. கட்சி இப்போது ஆட்சிக்கு வந்த பிறகும் எந்த நடவடிக்கையும் இல்லாமல் வேடிக்கை பார்க்கிறது. உடலை வாங்கிக் கொள்ளுங்கள் பிறகு நடவடிக்கை எடுக்கிறோம் என த.வெ.க. அமைச்சர்கள் வாக்குறுதி கொடுத்தாலும் நடவடிக்கை எடுங்கள் நாங்கள் காத்திருக்கிறோம் என ஆகாஷின் தாய் உறுதியாக பதில் அளித்து விட்டு வந்தார். அந்தத் தாய்க்கு நீதி இல்லையா?

ஆகவே ஆகாஷின் உடல் நீதி கேட்டு இன்றுவரை போராடுகிறது. நாம் என்ன செய்யப் போகிறோம்? நம்மில் யாருக்கும் இப்படிப்பட்ட பிரச்சனைகள் வராமல் இருக்காதா?

அனைத்து ஆட்சியிலும் தொடர்ந்து நடக்கும் லாக்கப்படுகொலைகள் போலீசின் கொடூரத்தைக் காட்டுகிறது. சாத்தான் குளம் ஜெயராஜ் பென்னிக்ஸ் மற்றும் மடப்புரம் அஜித்குமார் லாக்கப் படுகொலைகளுக்கு எதிராக நடந்த மக்கள் போராட்டங்கள் தான் போலீஸ் குற்றவாளிகள் மீது வழக்குப் பதிவு செய்து தண்டனை பெற்றுக் கொடுக்க காரணமாக இருந்தது. போலீசின் அதிகார அத்துமீறல்கள் அடாவடிகள் ஒவ்வொரு நாளும் மக்கள் மீது நடந்து கொண்டிருக்கையில் இது போன்ற லாக்கப் படுகொலைகள் நமக்கும் நடக்காது என கடந்து செல்ல முடியுமா? போராடாமல் நீதியைத்தான் வாங்கி விட முடியுமா?

சட்டத்தின் ஆட்சி, நீதியின் ஆட்சி, ஜனநாயகத்தின் ஆட்சி “இங்கு அனைவருக்கும் ஜனநாயகம் உள்ளது. இங்கு அனைவரும் சமம்” என்று பேசுவதெல்லாம் வெறும் ஏமாற்று என்பதையே ஆகாஷின் லாக்கப் படுகொலை நமக்கு எடுத்துக்காட்டுகிறது.

சாதிய மனநிலையுடன் நீதியை மறுக்கும் இந்தப் போலி ஜனநாயக அரசு கட்டமைப்பிற்கு எதிராக, மாபெரும் மக்கள் போராட்டங்களை முன்னெடுத்து தான் நமக்கான உரிமையை நிலைநாட்ட முடியும். இந்தப் போராட்டம் ஆகாஷின் நீதிக்கானது மட்டுமல்ல நாம் ஒவ்வொருவரும் பயமின்றி சுதந்திரமாக மரியாதையுடன் வாழ்வதற்கான போராட்டம். ஆகவே இதனை அனைவரும் ஆதரித்து களத்திற்கு வரும்படி கேட்டுக்கொள்கிறோம்.

தமிழ்நாடு அரசே!

திருப்புவனம் காவல் ஆய்வாளர் திலீபன், மானாமதுரை காவல் சார்பு ஆய்வாளர் குகன் உட்பட 16 போலீஸ் காவலர்களின் பெயர்களை கொலை வழக்கில் சேர்த்து கைது செய்!

மக்கள் அதிகாரக் கழகம்
மதுரை கிழக்கு மாவட்டம்,
சிவகங்கை, மானாமதுரை.
8438631587, 94422 69220

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க