
12.03.2026
அன்பார்ந்த உழைக்கும் மக்களே!
கிருஷ்ணகிரி அருகே காட்டிநாயனப்பள்ளி ஊராட்சி, பூம்பூம் மாட்டுக்காரன் கொட்டாய் கிராமத்தில், ஆதியன் பழங்குடி மக்கள், 45 ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர். சுமார் 80 குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இவர்கள் பல தலைமுறைகளாக அலங்கரிக்கப்பட்ட மாடுகளை வீடு வீடாக அழைத்துச் சென்று உருமி மேளம் முழங்க குறி சொல்லுதல், பழைய பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தல் போன்ற தொழில்களைச் செய்து வருகின்றனர்.
பழங்குடியினத்தைச் சேர்ந்த இம்மக்கள் பல ஆண்டுகளாக முயன்றும் சாதி சான்றிதழ் கிடைக்காத காரணத்தால், இவர்களின் பிள்ளைகள் பள்ளிக் கல்வியில் அரசின் நலத் திட்டங்களைப் பெற இயலாத நிலையே உள்ளது. தற்போது ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் 60-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். மேற்கொண்டு படிப்பதற்கு சாதி சான்றிதழ் இல்லாத காரணத்தால் படிப்பைப் பாதியில் கைவிடும் அவல நிலையில் உள்ளனர். படிப்பை நிறுத்திவிட்டு பூம்பூம் மாடு வேடிக்கை காட்டும் தொழிலுக்குள் பலர் தள்ளப்படுகின்றனர்.
சாதி சான்றிதழ் இல்லாததால், நல்ல மதிப்பெண் எடுத்தாலும் அரசுக் கல்லூரிகளில் பயில வாய்ப்பில்லாமல் போகும் அவல நிலை உள்ளது. ஒரு சிலர் வேறு வழியின்றி கடன் வாங்கி, தனியார் கல்லூரிகளில் அதிக கட்டணம் செலுத்திப் படிக்க வேண்டிய கட்டாய நிலை.
தமிழ்நாட்டில் தருமபுரி, திண்டிவனம், விழுப்புரம், திருவண்ணாமலை, மதுரை, திருச்சி, நாகை, கடலூர் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் ஆதியன் பழங்குடி சமூகத்தினர் வாழ்ந்து வருகின்றனர். பிற மாவட்டங்களில் வாழும் ஆதியன் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு பழங்குடியினர் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆனால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பழங்குடியின (ST) சாதி சான்றிதழ் தர முடியாது என அரசு அதிகாரிகள் இழுத்தடித்து வருவதாகக் கூறுகின்றனர் அம்மக்கள்.

“கடந்த 25 வருடங்களாகப் பழங்குடியினர் (ST) சாதி சான்றிதழ் வழங்கக் கோரி போராடி வருகிறோம். ஒவ்வொரு தேர்தலின் போதும் அரசியல் கட்சியினர் எங்களது கோரிக்கையை நிறைவேற்றித் தருவதாகக் கூறி ஓட்டுக்களை வாங்குகின்றனர்.
“ஆனால், தேர்தல் முடிந்த பின்னர் எங்களைக் கண்டு கொள்வதில்லை. எனவே தற்போது ஆதியன் பழங்குடியினர் (ST) சாதி சான்றிதழ் உடனடியாக வழங்க வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்து, வருகின்ற சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிக்கும் முடிவை எடுத்துள்ளோம். வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றிப் போராடுகிறோம்” என அம்மக்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
ஆதியன் பழங்குடி மக்களின் வாழ்வுரிமைக்கான போராட்டத்தை மக்கள் அதிகாரக் கழகம் ஆதரிக்கிறது!
தமிழ்நாடு அரசே!
- கிருஷ்ணகிரி மாவட்டம், காட்டிநாயனப்பள்ளி ஆதியன் பழங்குடி மக்களுக்கு பழங்குடியின (ST) சாதி சான்றிதழ் உடனே வழங்கு!
- பழங்குடியின (ST) சாதி சான்றிதழ் வழங்காமல் இழுத்தடிக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடு!
![]()
இவண்,
தோழர் இரஞ்சித்,
கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்.
8754674757
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads





