மக்கள் அதிகாரக் கழகத்தின் ஐந்தாவது பொதுக்குழு கூட்டம் மே 24 அன்று உற்சாகமாக நடந்து முடிந்தது. அதனையொட்டி மே மாத தொடக்கத்தில் ம.அ.க-வின் மாவட்ட செயற்குழு கூட்டங்கள் நடத்தப்பட்டன. அக்கூட்டங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

கடலூர் மாவட்ட தீர்மானங்கள்:

1. கடலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை போதிய மருத்துவர்கள் இன்றியும், மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் இன்றியும் மாவட்ட மருத்துவமனை என்ற தகுதியில் இல்லை. மிகவும் தரம் தாழ்ந்து சின்ன சிக்கல் என்றாலும் அருகாமையில் உள்ள பாண்டிச்சேரி அரசு மருத்துவமனைகள், ஜிப்மர் அல்லது தற்போது சிதம்பரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு அனுப்பி விடுவதையே வேலையாக வைத்துள்ளனர். இதனால் நம்பி வரும் நோயாளிகளை அலைக்கழிப்பது மட்டுமின்றி அந்த நோயாளிகளின் உயிர்களுக்கும் உத்தரவாதமற்ற நிலைமையே நிலவுகிறது.  தமிழ்நாடு அரசாங்கம் பொறுப்பேற்று, மாவட்ட தலைமை மருத்துவமனையின் தரத்தை உடனடியாக உயர்த்த வேண்டும். இதே போலவே விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட மருத்துவமனைகளிலும் நிலைமைகள் உள்ளன. இந்த மாவட்ட மருத்துவமனைகளின் தரத்தையும் உடனடியாக போர்க்கால அடிப்படையில் தரம் உயர்த்த வேண்டும் எனக் கோரிக்கை வைக்கிறோம்.

2. தற்போது கடலூர் பேருந்து நிலையம் மக்கள் எளிதில் வந்து போவதற்கு வசதியாக நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது.  இப்போதுள்ள பேருந்து நிலையம் போதுமான இட வசதியின்றி உள்ளது என்பது உண்மையே. அதிகப்படியான இட வசதி உள்ள வேறு ஒரு இடத்திற்கு பேருந்து நிலையம் மாற்றப்பட வேண்டும் என்பதிலும் யாருக்கும் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை. ஆனால் நகர மக்கள் போய் வருவதற்கு வசதியான பல இடங்கள் நகரின் மையத்திலேயே இருக்கையில் ஆளரவமற்ற கேப்பர் குவாரிக்கு அருகில் பேருந்து நிலையம் அமைக்கும் திட்டத்தை உடனடியாகக் கைவிட்டு நகரின் மையமான ஒரு பகுதியில் அமைத்திட வேண்டும் என மக்கள் அதிகாரக் கழகம் தமிழ்நாடு அரசாங்கத்திடம் கோரிக்கை வைக்கிறது.

3. விருதாச்சலம் நகரில் தென்கோட்டை வீதி பேருந்து நிறுத்தம், கடைவீதி பேருந்து நிறுத்தம், தபால் நிலையப் பேருந்து நிறுத்தம், ஸ்டேட் வங்கி பேருந்து நிறுத்தம் என மக்கள் கூட்டம் மிக அதிகமுள்ள பல பேருந்து நிறுத்தங்களில் ஒரு நிழற்குடை கூட இல்லை. இந்தக் கோடையில் மக்களை வெயில் வாட்டி வதைக்கையில், அரசும் மக்களை இந்த வெப்பத்தில் வாட்டி வதைத்து வேடிக்கை பார்ப்பதை என்னவென்று சொல்வது? உடனடியாக, போர்க்கால அடிப்படையில் நிழற்குடைகள் அமைக்கப்பட வேண்டும் என மக்கள் அதிகாரக் கழகம் கோரிக்கை வைக்கிறது.

4. விருதாச்சலம் நகரைச் சுற்றியுள்ள விவசாயிகள் தங்களின் விளைபொருட்களை சந்தைப்படுத்த நகருக்கு வரும் போது போலீசின் தொல்லை மிக அதிகமாக உள்ளது.  அவர்கள் அன்றாடம் புதிதாகக் கொண்டுவரும் இந்த விளைபொருட்களால் மக்களுக்கு விளையும் நன்மைகள் பலபல. விலையும் மலிவாகவே இருக்கும். ஆனால் போலீசு இந்த விவசாயிகளை விரட்டியடிப்பதில்தான் குறியாக இருக்கிறது. இவர்களுக்கு என இடம் ஒதுக்கி, அவர்களது விளைபொருட்களை சந்தைப்படுத்த உதவுவதோடு, அதற்கு போலீசு பாதுகாப்பும் அளிக்க வேண்டும் என மக்கள் அதிகாரக் கழகம் கோரிக்கை வைக்கிறது.

5. விருதை பாலக்கரை பகுதியில் காலை வேலையில் மட்டுமின்றி இரவு வரை மக்கள் நடமாட்டம் மிக அதிகம் உள்ளது. அம்மக்களின் இயற்கை அழைப்புகளுக்கு விடை தர ஒரு பொதுக் கழிப்பறை கூட இல்லை. இந்தப் பாலக்கரையில் மட்டுமின்றி, மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள புகழ்மிக்க விருதாசலேசுவரர் கோயிலின் வடக்கு கோபுர வாயிலின் இரு மருங்கிலும் நீங்கள் மூக்கைப் பொத்திக் கொள்ளாமல் நடக்கவே முடியாது. தெற்குக் கோபுர வாயிலின் வெளிப்புறப் பகுதி பல நேரங்களில் மலக் கழிப்பிடமாக இருப்பதை நேரில் செல்லும் யாரும் பார்க்க முடியும். விருதை நகராட்சி உடனடியாகவே நகரில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இந்த இரு இடங்களிலும் பொதுக் கழிப்பறைகளைக் கட்டித் தர வேண்டும் என மக்கள் அதிகாரக் கழகம் கோரிக்கை வைக்கிறது.

6. கல்லை மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகர வட்டாரத் தலைமை மருத்துவமனை போதிய மருத்துவர்கள் இன்றியும் உயிர்காக்கும் மருந்துகள், உபகரணங்கள் இன்றியும் உள்ளதை மக்கள் அதிகாரக் கழகம் மிக வன்மையாகக் கண்டிக்கிறது.  தேசிய நெடுஞ்சாலையில் மையமான இடத்தில் உள்ளது இந்த மருத்துவமனை. இந்நகரின் அருகில் விபத்து ஏதும் நிகழ்ந்தால் அருகில் நீண்ட தூரத்திற்கு பெரிய அரசு மருத்துவமனைகள் ஏதும் இல்லை என்பதும் கவனத்தில் கொள்ளப்பட்டு, உடனடியாகவே இந்த உளுந்துர்ப்பேட்டை அரசு மருத்துவமனையின் தரம் உயர்த்தப்பட வேண்டும்.

7. அரசியல் விழிப்புணர்வு மிக்க இப்பகுதியில் உள்ள நகரம் உளுந்தூர்ப்பேட்டை ஆனால் இந்த நகரில் சமூக சீர்திருத்தவாதிகளான பெரியாருக்கும் அம்பேத்கருக்கும் ஒரு சிலை கூட இல்லை. தமிழ்நாடு அரசாங்கம் சமூக சீர்திருத்தவாதிகளான இவ்விரு தலைவர்களுக்கும் சிலைகள் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறது.

8. இந்த உளுந்தூர்பேட்டை நகரில் புதிதாக துவக்கப்பட்ட அரசுக் கல்லூரிக்கு அம்பேத்கர் பெயர் சூட்டப்பட வேண்டும் என மக்கள் அதிகாரக் கழகம் தமிழ்நாடு அரசாங்கத்திற்குக் கோரிக்கை வைக்கிறது.

இவண்
மக்கள் அதிகாரக் கழகம்,
கடலூர் மாவட்டம்.
9443849915

***

புதுச்சேரி தீர்மானங்கள்:

1. புதுச்சேரி மக்களின் நீண்ட காலக் கோரிக்கையான மாநில அந்தஸ்து அங்கீகரிக்கப்பட வேண்டும் என மக்கள் அதிகாரக் கழகம் ஒன்றிய அரசை வலியுறுத்துகிறது.

2. புதுச்சேரியில் இதுவரை தமிழ்நாடு அரசு பாடத் திட்டம் தான் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. என் ஆர் பாஜக கூட்டணி அரசு அமைந்ததும், மாநில உரிமையைப் பறித்து புதிய கல்விக் கொள்கையைத் திணிக்கும் வகையிலும், இந்தியைத் திணிக்கும் வகையிலும் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தைக் கொண்டு வந்து திணித்தது. இந்த ஆங்கில வழிக் கல்வியைக் கற்கும் வகையில் பல பிரிவு மாணவர்களுக்கு புத்தகங்களையும் வழங்கவில்லை, ஆசிரியர்களின் கற்பிக்கும் திறனை உயர்த்தும் வகையில் பயிற்சியும் வழங்கவில்லை. இதனால் 2024ம் ஆண்டில் இந்தக் கல்விமுறை புகுத்தப்பட்ட பின் மாணவர்களின் இடை நிற்றல் அதிகரித்துவிட்டது. இந்த 2026ம் ஆண்டில் இது வரை இருந்து வந்த விருப்ப மொழித் தேர்வான பிரெஞ்சை நீக்கி விட்டு அதற்குப் பதில் இந்தியைத் திணித்துள்ளது. இந்த புதிய கல்விக் கொள்கையைத் திணிக்கும் வகையிலான சிபிஎஸ்இ பாடத் திட்டத்தையும், இந்தித் திணிப்பையும் மக்கள் அதிகாரக் கழகம் மிக வன்மையாகக் கண்டிக்கிறது. இவற்றைக் கைவிட்டு எப்போதும் போல தமிழ்நாடு அரசாங்கப் பாடத் திட்டத்துடன் இணைக்கப்பட வேண்டும் என புதுவை கூட்டணி அரசாங்கத்திற்கு மக்கள் அதிகாரக் கழகம் வலியுறுத்துகிறது.

3. ரேசன் கடைகள் மூலம் மக்களுக்கு அரிசி, பருப்பு, கோதுமை என மளிகைப் பொருட்களை வழங்கி வந்த புதுவை அரசாங்கம் திடீரென ரேசன் கடைகளை மூடி அதற்குப் பதில் பணம் போடுகிறோம் என்று மோசடி செய்தது.  ஒன்றிய அரசு எப்போதுமே புதுவை யூனியன் பகுதியை தனது சோதனைச் சாலையாகவே பாவிக்கிறது. ரேசன் கடைகளை மூடுவதிலும் இதுதான் நடந்தது. ஜனநாயக சக்திகளின் தொடர்ச்சியான போராட்டத்தையும் கோரிக்கைகளையும் கண்டு தற்காலிகமாக ரேசன் கடைகள் மூலம் அரிசியும் பின்னர் பல மாதங்கள் கழித்து கோதுமையும் வழங்கியது.  இதையும் சில மாதங்கள் இடையில் தரவில்லை. இப்போது மறுபடியும் ஒன்றிய அரசு நேரடியாகப் பணம் போடப்போகிறது என மக்களை அலைக்கழிக்கத் துவங்கியுள்ளது. புதுவை அரசாங்கத்தின் இந்த மக்கள் விரோத நடவடிக்கைகளை மிகமிக வன்மையாகக் கண்டிப்பதோடு, ரேசன் கடைகளைத் திறந்து அதன் மூலம் அரிசி, பருப்பு, சர்க்கரை, மண்ணெண்ணெய் முதலிய மளிகைப் பொருட்களை வழங்க வேண்டும் என மக்கள் அதிகாரக் கழகம் வலியுறுத்துகிறது.

4. ஒன்றிய அரசின் சோதனைச் சாலையாக புதுவை யூனியன் பகுதியைப் பாவிக்கும் ஒன்றிய அரசாங்கம் மின்வாரியத்தில் முதலில் ஸ்மார்ட் மீட்டரைப் பொருத்தியது.  இதற்கு எதிராக மக்கள் போராடிய போது கடுமையாக ஒடுக்கியது. தற்போது மின்வாரியத்தை தனியார் மயமாக்கி வருகிறது.  அந்த மின்வாரிய ஊழியர்கள் இதற்கு எதிராகப் போராடிய போது, அவர்களையும் கொடூரமாக ஒடுக்கியது. மின்வாரியத்தை தனியார்மயமாக்குவதை வன்மையாகக் கண்டிக்கிறது மக்கள் அதிகாரக் கழகம். ஒன்றிய அரசின் எடுபிடியாக மாறி, அதன் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் சோதனைச் சாலையாக புதுவையை மாற்றுவதைக் கைவிடு என மக்கள் அதிகாரக் கழகம் வலியுறுத்துகிறது.

இவண்
மக்கள் அதிகாரக் கழகம்,
புதுச்சேரி.
9629606386

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க