கோடானுகோடி விவசாயிகளின் வாழ்க்கையை அழித்து கார்ப்பரேட் கொள்ளைக் கும்பலை கொழிக்க வைக்கும் வேளாண் திருத்த சட்டங்களை கிழித்தெறிவோம் !

ன்பார்ந்த விவசாயிகளே ! உழைக்கும் மக்களே !

நாம் மிகப்பெரும் ஆபத்தை எதிர்நோக்கி உள்ளோம். பாசிச பி.ஜே.பி அரசு சமீபத்தில் நாடாளுமன்றத்தில் கொண்டு வந்துள்ள விவசாயம் தொடர்பான சட்டத்திருத்தங்கள், நமது நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தையும், விவசாயிகளையும் அடியோடு அழிப்பதற்கு, அவர்களை ஓட்டாண்டிகளாக ஆக்குவதற்கு திட்டமிட்டு கொண்டு வரப்பட்டுள்ளன.

♠ அத்தியாவசிய பொருட்கள் சட்டத்திருத்தம்
♠ வேளாண் உற்பத்தி பொருட்கள் வணிக ஊக்குவிப்பு அவசரச் சட்டம்
♠ விவசாயிகளுக்கான விலை உத்திரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் மீதான ஒப்பந்தப் பாதுகாப்பு அவசரச் சட்டம்

மேற்கண்ட சட்டத்திருத்தங்களின் பெயர்களை பார்க்கும் போது, தேனொழுகுவது போல் இருக்கும். கொஞ்சம் ஆராய்ந்து பார்த்தால்தான் இது விவசாயிகளுக்கு கொடுக்கப்படும் நஞ்சு என்பது தெரியும்.

அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்திருத்தம் :

இது 1955-ல் கொண்டுவரப்பட்ட சட்டத்தின் மீதான திருத்தம் ஆகும். அதாவது உணவு பொருட்களை பதுக்குதல் மற்றும் செயற்கையாக விலை உயர்த்துவதை தடுக்கும் அந்தச் சட்டத்தில்தான் திருத்தம் கொண்டுவரப்படுகிறது.

இதனடிப்படையில் வெங்காயம், உருளைக்கிழங்கு, சமையல் எண்ணெய், எண்ணெய் வித்துக்கள், தானியங்கள், பயிறு வகைகளுக்கு இச்சட்டத்திருத்தம் விலக்களிக்கிறது.

இதனால் மேற்கண்ட பொருட்களின் விலைகள் தாறுமாறாக உயரும் வாய்ப்புள்ளது. ஏனெனில் இனி இவையனைத்தும் கார்ப்பரேட் கம்பெனிகளின் குடோன்களில்தான் பாதுகாக்கப்பட்டு இருக்கும்.

இவையனைத்துமே அன்றாட உணவு சார்ந்த பொருட்கள் ஆகும். நாடு முழுவதும் பலகோடி மக்கள் வறுமையிலும், வாங்கும் சக்தி இல்லாமலும் வாடுகின்றனர். இச்சட்டத் திருத்தத்தின் மூலம் இந்தியா முழுவதும் கொத்து கொத்தாக பட்டினியால் சாகும் அபாயம் ஏற்படும்.

படிக்க:
♦ கம்யூனிஸ்ட்கள் என்றாலே தவறிழைக்காத முனிவர்களா? | தோழர் மாவோ
♦ சோசலிசத்தைக் கட்டியமைத்தலும் அறிவுஜீவிகளும் | தோழர் மாவோ

வேளாண் உற்பத்தி பொருட்கள் வணிக ஊக்குவிப்பு அவசரச் சட்டம் :

இது மாநில அரசுகளின் அதிகாரத்தை அடியோடு பறிக்கிறது. தமிழக விவசாயிகள் காஷ்மீர் வரை சென்று நேரடியாக கார்ப்பரேட் நிறுவனங்களிடம் விற்றுக் கொள்ளலாமாம். அங்கு உரிய விலை கிடைப்பதை கண்காணித்து அரசு உத்திவாதப் படுத்துமாம். யாரிடம் கதை சொல்கிறார்கள்?

தற்போது அரசே உள்ளூரில் கொள்முதல் செய்து உரிய விலை கொடுப்பது என்ற நிர்வாக முறையுள்ள போதே அதை அதிகாரிகளும், அரசியல்வாதிகளும், வியாபார மாஃபியாக்களும் தங்களுக்கு சாதகமாக வளைத்துக் கொண்டு கொள்ளையடித்து வருகின்றனர்.

இனி அடிமாட்டு விலைக்குத்தான் விவசாயிகளின் விலை பொருட்களை முதலாளிகள் வாங்குவார்கள். கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன், வானம் ஏறி வைகுண்டம் போன கதையை நம்மிடம் சொல்கிறார்கள்.

இனி வேளாண் விளை பொருட்களை கொள்முதல் செய்வதிலிருந்து இந்திய அரசு, மாநில அரசுகள் ஒதுங்கிக் கொள்ளும். கார்ப்பரேட் கொள்ளையர்கள் மட்டுமே விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்வார்கள். இந்திய உணவு கழகம் மூடப்படும். அப்புறம் ரேசன் கடைகளுக்கு என்ன வேலை ? இழுத்துப்பூட்டி திண்டுக்கல் பூட்டை போட்டுவிடுவார்கள்.

கார்ப்பரேட் முதலாளிகள் சந்தையில் வைப்பதுதான் விலை. அதன்பிறகு எந்தக் கொம்பனாலும் கொத்துக் கொத்தான பட்டினிச் சாவுகளை தடுத்து நிறுத்த முடியாது. இது கற்பனை அல்ல. ஆப்பிரிக்க நாடுகளைப் பாருங்கள்.

விவசாயிகளுக்கான விலை உத்திரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் மீதான ஒப்பந்தப்பாதுகாப்பு அவசரச் சட்டம் :

ஏற்கனவே 24 வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை மைய அரசால் நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால் சேமிப்பில் இருப்பது அரிசி, கோதுமை மட்டுமே. அதுவும் அதானி போன்ற முதலாளிகளிடம் இருப்பதை விட குறைவாகவே உள்ளது.

காய்கறிகளுக்கு உரிய விலை நிர்ணயிக்காத அரசைக் கண்டித்து விவசயிகள் நடத்திய போராட்டம் !

எம்.எஸ்.சுவாமிநாதன் தலைமையிலான கமிட்டி, 50% இலாபம் கிடைக்கும் வகையில் விலை நிர்ணயம் அரசு செய்ய வேண்டும் என்று கூறியது. உண்மையில் நடப்பது என்ன ? தமிழக விவசாயிகள் ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.2400 தர வேண்டும் என்று கோரிவரும் நிலையில் அரசோ ரூ.1888 நிர்ணயித்துள்ளது. வெளிச் சந்தையிலும் ஆதார விலைக்கெல்லாம் யாரும் எடுப்பதில்லை.

அரசே நேரடியாக அதிகாரம் செலுத்தும் போதே ஆயிரம் குளறுபடிகளும் ஊழலும் தலைவிரித்தாடுகிறது எனும் போது, இச்சட்டத்திருத்தமானது தனியார் முதலாளிகள் விலையை நிர்ணயிப்பதற்கு முழுச் சுதந்திரம் வழங்குகிறது. அரசு இனி குறைந்த பட்ச ஆதார விலையை நிர்ணயிக்காது. சந்தையில் முதலாளிகள் தீர்மானிக்கும் விலைக்கு விவசாயிகள் இனி விற்றாக வேண்டும். இது விவசாயத்தை விட்டு விவசாயிகளை பிடுங்கி எறிவதன்றி வேறென்ன?

இனி கார்ப்பரேட் கொள்ளையர்களே ஒட்டுமொத்த இந்திய விவசாயத்தையும் தீர்மானிப்பார்கள். சிறு, குறு நடுத்தர விவசாயிகள் சுயசார்பை இழந்து கார்ப்பரேட் நிறுவனங்களின் குத்தகை விவசாயிகளாக மாறுவார்கள். மத்திய காலப் பண்ணையார்களின் இடத்தில் இனி கார்ப்பரேட் முதலாளிகளும், பன்னாட்டு உணவு கழகங்களும் ஓட்டுமொத்த விவசாயிகளையும் சுரண்டிக் கொழுப்பார்கள்.

படிக்க :
♦ விவசாயிகளை காக்க வீதியில் இறங்குவோம் ! மக்கள் அதிகாரம் அறைகூவல் !
♦ 144 தடை உத்தரவை நீக்கு ! விருதையில் அனைத்துக்கட்சி ஆர்ப்பாட்டம் !!

தீர்வு என்ன?

இது விவசாயிகள் பிரச்சனை மட்டுமல்ல, உணவு உண்ணும் ஒட்டுமொத்த உழைக்கும் மக்களின் பிரச்சனை. வாழ்விழந்து வீதிக்கு வந்துவிட்ட விவசாயிகளும், வறுமையால் வாடும் கோடானுகோடி உழைக்கும் மக்களும் போராட்டக்களத்தில் இறங்கினால் அவர்களை ஒடுக்குவதற்கான வேலையை மட்டுமே இனி பாசிஸ்டுகள் செய்வார்கள். கார்ப்பரேட் – காவி பாசிசம் தலைவிரித்தாடும்.

தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் என்ற பன்னாட்டு, உள்நாட்டு கார்ப்பரேட் கும்பலின் இலாபவெறிக்கான கொள்கைகள்தான் விவசாயிகளுக்கு மட்டுமல்ல நாட்டின் ஒட்டுமொத்த பிரச்சனைகளுக்கும் அடிப்படையாக இருக்கிறது. கார்ப்பரேட் காவி பாசிசமானது தனியார்மயம் – தாராளமயம் – உலகமயப் பொருளாதாரக் கொள்கைகளின் மீதுதான் கட்டப்பட்டுள்ளது.

தேர்தல் அரசியலுக்கு வெளியே இந்த மறுகாலனியாதிக்க பொருளாதார கொள்கைகளை ஒழித்துக்கட்டுவதற்கான, கார்ப்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்துவதற்கான மாபெரும் போர்க்குணமிக்க மக்கள்திரள் போராட்டங்களை கட்டியமைப்பதுதான் நாட்டைக் காப்பாற்றுவதற்கான ஒரே தீர்வு!

அதுவே உண்மையான தேசப்பற்று! அமைப்பாய் ஒன்றிணைவோம்! வீதியில் இறங்குவோம்!

இவண்

மக்கள் அதிகாரம்
திருநெல்வேலி-தூத்துக்குடி
தொடர்புக்கு : 93853 53605

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க