உட்கட்சி ஒற்றுமையில் ஓர் இயங்கியல் அணுகும் முறை
தோழர் மாவோ
(நவம்பர் 18, 1957)


1957-ல் மாஸ்கோவில் நடைபெற்ற கம்யூனிஸ்ட், தொழிலாளர் கட்சிகளின் கூட்டத்தில் தோழர் மாவோ நிகழ்த்திய சிறப்புரை. மா சேதுங்கின் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் 5-ம் தொகுதியிலிருந்து எடுக்கப்பட்டது.


 

அனைத்து நாடுகளின் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் !

ற்றுமை என்ற பிரச்சினையைப் பொறுத்தவரையில், அணுகும் முறையைப் பற்றி நான் சில விஷயங்களைச் சொல்ல விரும்புகிறேன். ஒவ்வொரு தோழரிடமும் அவர் பாதகமான ஒருவராக இல்லாமலிருந்தால், அல்லது நாச வேலைக்காரராக இல்லாமலிருந்தால், அவரோடு ஒன்றுபடுவது என்பதுதான் நமது அணுகும் முறையாக இருக்க வேண்டுமென்று நான் நினைக்கிறேன். நிலையியல் (இயக்க மறுப்பியல்) அணுகும் முறையை அல்ல; ஓர் இயங்கியல் அணுகும் முறையை நாம் அவர்பால் கடைப்பிடிக்க வேண்டும்.

இயங்கியல் அணுகும் முறை என்றால் என்ன?

எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்ப்பது, தவறு செய்து விட்டார் என்ற காரணத்தினால் மட்டும் ஒருவரை முற்றாகப் புறக்கணிக்காமல், எல்லா மனிதர்களும் தவறு செய்கிறார்கள் என்பதை ஏற்றுக் கொள்வது என்பதுதான் இதன் பொருள். “தவறு செய்யாத தனி ஒரு மனிதர்கூட இவ்வுலகில் இல்லை” என்று லெனின் ஒருமுறை கூறினார். ஒவ்வொருவருக்கும் ஆதரவு தேவை. தகுதியுள்ள ஒருவருக்கும் மற்ற மூன்று பேர்களுடைய உதவி தேவை. ஒரு வேலிக்கு மூன்று கால்களின் ஆதரவு தேவை. மிக மிக அழகாக இருக்கும் தாமரை மலர் எழுந்து தன் அழகை எடுத்துக்காட்ட அதன் இலைகளில் பசுமை தேவை. இவைகள் சீனப் பழமொழிகள்.

மற்றொரு சீனப் பழமொழி கூறுவது என்னவெனில், மூன்று செருப்புத் தைப்பவர்கள், அவர்களின் அறிவை ஒன்றிணைத்தபோது பேராற்றல் மிக்க பெருந்திறமைசாலியான ‘சுக்கேலி’யானுக்குச் சமமாகிவிடுகிறார்கள். ‘சுக்கேலியான்’ ஒருபோதும் முழுமையானவராகி விடமுடியாது. அவருக்கு அவருக்கே உரிய எல்லைகள் உண்டு. நம்முடைய பன்னிரெண்டு நாடுகளின் இந்தப் பிரகடனத்தைப் பாருங்கள். நாம் முதலாவது, இரண்டாவது, மூன்றாவது, நான்காவது என்று ஒவ்வொரு நகலாகப் பரிசீலித்தோம். இன்னும் அதை மெருகுக் கூட்டிப் பூர்த்தி செய்யவில்லை. கடவுளைப் போன்று எங்கும் நிறைந்தவனாகவும் எல்லாம் வல்லவனாகவும் இருக்கிறேன் என்று யார் ஒருவர் தன்னைப் பற்றிக் கூறிக்கொண்டாலும் அது வெறும் இறுமாப்பென்றே நான் நினைக்கிறேன்.

எனவே தவறு செய்த ஒரு தோழரின்பால் எத்தகைய அணுகும் முறையை நாம் மேற்கொள்ள வேண்டும்? நாம் ஒரு நிலையியல் (இயக்க மறுப்பியல்) அணுகும் முறையைக் கடைப்பிடிக்காமல் இயங்கியல் அணுகும் முறையைக் கடைப்பிடித்து ஆராய்ந்து அறிபவர்களாக இருக்க வேண்டும்.

எங்களுடைய கட்சி ஒருமுறை நிலையியல், வறட்டுத் தத்துவவாதத்தில் புதைந்தது. அதற்குப் பிடிக்காதவர்கள் யார் இருந்தாலும் அவர்களை முழுமையாக ஒழித்துக்கட்டியது. பிறகு நாங்கள் வறட்டு தத்துவவாதத்தைத் துடைத்தெறிந்தோம். இயங்கியலை மேலும் சிறிது கற்றுக் கொள்ளத் தொடங்கினோம்.

எதிர்மறைகளின் ஒற்றுமை என்பது இயங்கியலின் அடிப்படைக் கோட்பாடு. இந்தக் கோட்பாட்டின்படி தவறுகள் செய்த ஒரு தோழரை நாம் என்ன செய்ய வேண்டும்? நாம் முதலில் அவரிடமுள்ள தவறுகளை அவரிடமிருந்து களைந்தெறிய ஒரு போராட்டத்தை நடத்த வேண்டும். இரண்டாவதாக அவருக்கு உதவியும் செய்ய வேண்டும். முதல்நிலை போராட்டம்; இரண்டாவது நிலை உதவி, அவருடைய தவறுகளைத் திருத்துவதற்கு அவருக்கு உதவி செய்வது. இதனால் அவருக்கு ஒரு வழி கிடைக்கும் என்ற நல்லெண்ணத்திலிருந்து நாம் தொடங்க வேண்டும்.

இருப்பினும் வேறு வகையான நபர்களைச் சந்திக்கும் முறை வேறானது. ரஷ்யாவைச் சேர்ந்த டிராட்ஸ்கி, சீனாவைச் சேர்ந்த சென்டு ஷியூ, செங் கோ-டோ, காவோ – காங் போன்ற நபர்களிடம் உதவி செய்யும் அணுகும் முறையைக் கடைபிடிக்க முடியாது. ஏனெனில் அவர்கள் திருத்தப்பட முடியாதவர்கள்.

இத்தோடு ஹிட்லர், சியாங் கே ஷேக், ஜார் போன்ற தனி நபர்களும் இருக்கிறார்கள். அவர்களும் அதேபோன்று திருத்தப்பட முடியாதவர்கள். அவர்களைத் தூக்கியெறிய வேண்டும். ஏனென்றால் அவர்களும் நாமும் ஒருவருக்கொருவர் முற்றாக வெவ்வேறானவர்கள். இந்த அர்த்தத்தில் அவர்களுடைய இயல்பில் ஒரு அம்சம் மட்டும்தான் இருக்கிறது. இரண்டு அம்சங்கள் இல்லை.

இறுதியாக ஆராய்ந்தால் ஏகாதிபத்தியத்தையும் முதலாளித்துவத்தையும் பொறுத்தவரையில் கூட இதுதான் உண்மை. இவைகள் இறுதியில் சோசலிச அமைப்பால் மாற்றியமைக்கப்படுவது நிச்சயம். இதே வரையறை தத்துவத்திற்கும் பொருந்தும். கருத்துமுதல்வாதத்தை நீக்கி பொருள்முதல்வாதம் நிலைபெறுவதும், ஆத்திகத்தை நீக்கி நாத்திகம் நிலைபெறுவதும் நடந்தே தீரும். இங்கு நாம் யுத்த தந்திரரீதியான, முழுமையான கண்ணோட்டத்திலான குறிக்கோளைப் பற்றித்தான் பேசுகிறோம். ஆனால், செயல்தந்திர ரீதியான (பகுதி நிலையிலான) கட்டங்களின் பிரச்சினை வேறுபட்டது. இந்தக் கட்டங்களில் சமரசங்கள் செய்து கொள்ளலாம்.

கொரியாவில் 38-வது அட்சரேகையின் மீது அமெரிக்கர்களுடன் நாம் சமரசம் செய்து கொள்ளவில்லையா? வியட்நாமில் ஃபிரான்சுடன் சமரசம் நிகழவில்லையா? ஒவ்வொரு செயல்தந்திரக் கட்டத்திலும் சமரசங்கள் செய்து கொள்வதிலும் போராட்டங்கள் நடத்துவதிலும் சிறந்தவர்களாக விளங்குவது அவசியம்.

நாம் இப்பொழுது தோழர்களுக்கிடையிலான உறவுகளைப் பார்ப்போம். தங்களுக்கிடையில் தப்பபிப்பிராயங்கள் உள்ள இடங்களில் தோழர்கள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று நான் ஆலோசனை கூறுவேன். ஒருக்கால் கம்யூனிஸ்ட் கட்சியில் வந்து விட்டாலே அவர்கள் எல்லாம் வேறுபாடுகளும், தப்பபிப்பிராயங்களும் இல்லாத முனிவர்களாகி விடுகிறார்கள்; கட்சி என்பது ஆராய்ந்து பார்க்க வேண்டிய ஒன்றல்ல; அதாவது, அது ஒன்றேயானதாகவும் சீரானதாகவும் இருக்கிறது. எனவே பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய தேவையில்லை என்றெல்லாம் சிலர் நினைப்பதாகத் தெரிகிறது.

கட்சிக்குள் உள்ளவர்கள் 100 சதவீதம் மார்க்சியவாதிகளாக இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள். உண்மையில் எல்லா அளவுகளிலுமான மார்க்சியவாதிகளும் இருக்கிறார்கள். 100 சதவிகிதம், 90, 80, 70, 60 அல்லது 50 சதவிகித மார்க்சியவாதிகளாக இருப்பவர்களும் இருக்கிறார்கள். சிலர் 10 அல்லது 20 சதவிகிதம் மட்டுமே மார்க்சியவாதிகளாக இருக்கிறார்கள்.

நாம் இரண்டு பேர்களோ அல்லது அதற்கு மேற்பட்டோ ஒரு சிறிய அறையில் ஒன்றுசேர்ந்து பேச முடியாதா? ஒற்றுமைக்கான விருப்பத்திலிருந்து துவங்கி ஒருவருக்கொருவர் உதவி செய்வது என்ற உணர்வோடு நாம் பேச்சுவார்த்தை நடத்த முடியாதா?

கம்யூனிஸ்ட் அணிகளுக்குள்ளான பேச்சுவார்த்தையைத்தான் நான் குறிப்பிடுகிறேன், ஏகாதிபத்தியங்களோடு உள்ள பேச்சுவார்த்தையை அல்ல. (அவர்களோடும் நாம் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று இருப்பினும்கூட) நான் ஒரு எடுத்துக்காட்டைத் தருகிறேன். நமது பன்னிரெண்டு நாடுகளின் கம்யூனிஸ்ட் கட்சிகள் தற்போது பேச்சுவார்த்தைகள் நடத்திக் கொண்டிருக்கவில்லையா?

60-க்கு மேற்பட்ட கட்சிகளும்கூட பேச்சுவார்த்தைகள் நடத்திக் கொண்டிருக்கின்றன. வேறு வார்த்தைகளில் கூறினால் மார்க்சிய – லெனினிய கோட்பாடுகளுக்குச் சேதம் ஏற்படாமல் இருந்தால், மற்றவர்களிடமிருந்து நாம் ஏற்றுக் கொள்ளத்தக்க சில கருத்துக்களை ஏற்றுக் கொண்டு கைவிடத்தக்க நமது சொந்தக் கருத்துக்கள் சிலவற்றைக் கைவிடுகிறோம்.

எனவே தவறுகள் செய்த ஒரு தோழரைக் கையாள்வதற்கு நமக்கு இரண்டு கரங்கள் இருக்கின்றன. ஒருகரம் அவரோடு போராடுவதற்கு; மற்றொரு கரம் அவரோடு ஒன்றுபடுவதற்கு. போராட்டத்தின் நோக்கம் மார்க்சியக் கோட்பாடுகளை நிலைநிறுத்துவது. இதன் பொருள் கோட்பாடு தழுவியவராக இருப்பது; இது ஒரு கரம், மற்றொரு கரம் அவருடன் ஒன்றுபடுவதற்கானது. ஒற்றுமையின் நோக்கம், அவருக்கு ஒரு வழியைத் தருவது; அவரோடு சமரசம் செய்து கொள்வது; இதன் பொருள் நெளிவு சுளிவானவராக இருப்பது. கோட்பாட்டோடு நெளிவு சுளிவை ஒன்றிணைப்பது என்பது ஒரு மார்க்சிய லெனினியக் கோட்பாடு; இது எதிர்மறையின் ஒற்றுமையாகும்.

எத்தகைய உலகத்திலும் குறிப்பாக வர்க்க சமுதாயத்தில் முரண்பாடுகள் மிகுந்திருக்கின்றன. சோசலிச சமுதாயத்தில் முரண்பாடுகளைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால் இது பிரச்சினையைத் தவறான வழியில் முன்வைப்பதாகும் என்று நான் கருதுகிறேன். முரண்பாடுகளைக் கண்டுபிடிக்க வேண்டுமென்பதல்ல பிரச்சினை. அங்கு முரண்பாடுகள் மிகுந்திருக்கின்றன என்பதுதான் பிரச்சினை. முரண்பாடுகள் இல்லாத இடமே இல்லை; ஆராய்ந்து அறியப்பட முடியாத எந்த நபருமே இல்லை. அவரை ஆராய்ந்து அறிய முடியாது என நினைப்பது நிலையியல் பார்வையைக் கொண்டது. பாருங்கள்! ஒரு அணு என்பது சிக்கலான எதிர்மறைகளின் ஒற்றுமைகளைக் கொண்டது. இதில் இரண்டு எதிர்மறைகளின் ஒற்றுமை இருக்கின்றது.

அவை மூலக்கருவும் எலெக்ட்ரான்களும் ஆகும். ஒரு மூலக்கருவில் மேலும் ஒரு எதிர்மறைகளின் ஒற்றுமை இருக்கின்றது. அது புரோட்டான்களும் நியூட்ரான்களும் ஆகும். புரோட்டானைப் பற்றிக் கூறினால் புரோட்டான்களும் எதிர் புரோட்டான்களும் இருக்கின்றன. நியூட்ரானைப் பொருத்தவரையில் நியூட்ரான்களும் எதிர் நியூட்ரான்களும் உள்ளன. சுருங்கக் கூறினால் எதிர்மறைகளின் ஒற்றுமை எங்கும் நிலவுகிறது. எதிர்மறைகளின் ஒற்றுமையைப் பற்றிய கோட்பாட்டை அதாவது இயங்கியலை, பரவலாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும். இயங்கியல், தத்துவஞானிகளின் குறுகிய வட்டத்திலிருந்து வெளியேறி பரந்துபட்ட மக்களிடம் செல்ல வேண்டும் என்று நான் கூறுவேன். கம்யூனிஸ்ட் கட்சிகளின் அரசியல் குழுக்களிலும் மையக்குழுக்களின் விரிவுபடுத்தப்பட்ட கூட்டங்களிலும் கட்சிக் கமிட்டிகளின் எல்லா மட்டங்களிலும் இந்தப் பிரச்சினையை விவாதிக்க வேண்டும் என்று நான் ஆலோசனை கூறுகிறேன்.

படிக்க:
♦ சோசலிசத்தைக் கட்டியமைத்தலும் அறிவுஜீவிகளும் | தோழர் மாவோ
♦ பாட்டாளி வர்க்கக் கட்சி குறித்து மார்க்ஸ் – எங்கெல்ஸ்

நமது கட்சிக் கிளைச் செயலாளர்கள் கிளைக் கூட்டங்களுக்கான அறிக்கைகளைத் தயார் செய்யும் பொழுது அவர்கள் தங்களுடைய குறிப்புப் புத்தகங்களில் இரண்டு விஷயங்களை எழுதியிருக்க வேண்டும்; முதலாவது சாதனைகள், இரண்டாவது குறைபாடுகள். அப்படிச் செய்யும் பொழுதுதான் அவர்கள் இயங்கியலை அறிந்திருக்கிறார்கள் என்பது உண்மையாகும்.

ஒன்று இரண்டாகப் பிரிகிறது – இதுவே சர்வ வியாபகமான (எங்கும், எதிலும், எப்பொழுதும் நிகழும்) நிகழ்ச்சி. இதுவே இயங்கியல்.

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க