பொதுவுடைமைவாதப் பத்திரிகை கட்சியால் சோர்வின்றி பேரூக்கத்துடன் வளர்க்கப்பட வேண்டும். கட்சியின் ஆணைகளுக்குக் கீழ்ப்படியாத எந்தப் பத்திரிகையும் பொதுவுடைமைவாதப் பத்திரிகை என்று அங்கீகரிக்கப்படலாகாது.
கூடுதலான பத்திரிகைகளைப் பெற்றிருப்பதைக் காட்டிலும் சிறந்த, தரமான பத்திரிகைகளைப் பெற்றிருக்க கட்சி கூடுதலான கவனம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு பொதுவுடைமைக் கட்சியும் தரமானதொரு மையப் பத்திரிகையை – சாத்தியமானால் தினசரிப் பத்திரிகையைப் பெற்றிருக்க வேண்டும்.
முதலாளித்துவப் பத்திரிகைகளைப் போல, ஏன், “சோசலிஸ்ட்” பத்திரிகையைப் போல, பொதுவுடைமைப் பத்திரிகையானது முதலாளித்துவ நிறுவனமாக இருக்கக் கூடாது. முதலாளித்துவக் கடன் வழங்கும் நிறுவனங்கள் அனைத்திலிருந்தும் நமது பத்திரிகை சுயேட்சையானதாக இருக்க வேண்டும். சட்டபூர்வமான மக்கள்திரள் கட்சிகள் நமது பத்திரிகை இருப்பதைத் தெரிந்து கொள்ள சாத்தியமாக்குகின்ற வகையில் தேர்ச்சியான விளம்பர ஏற்பாடுகள் அவசியம். ஆனால், இது எந்த விதத்திலும் நமது பத்திரிகை பெரிய விளம்பரதாரர்களைச் சார்ந்திருப்பதாக இருக்கக் கூடாது. மாறாக, சமூகப் பிரச்சினைகள் அனைத்திலுமான இதன் பாட்டாளி வர்க்க நோக்கு, இதற்கு மக்கள்திரள் கட்சிகள் அனைத்திலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
பொது மக்களின் பரபரப்பான அல்லது பொழுதுபோக்கான விருப்பங்களை நிறைவு செய்வதாக நமது பத்திரிகைகள் இருக்கக் கூடாது. “மதிப்புக்குரியதாக” ஆகும் முயற்சியில் அவை குட்டி முதலாளித்துவ எழுத்தாளர்கள் அல்லது பத்திரிகை நிபுணர்களின் விமர்சனங்களுக்குப் பணிந்துவிடக் கூடாது.
படிக்க :
♦ மத்தியக் கமிட்டியும் அரசியல் தலைமைக் குழுவும் | லெனின்
♦ கட்சி அமைப்பில் இரகசியத் தன்மையின் அவசியம் பற்றி | லெனின்
ஒடுக்கப்பட்டவர்கள் மற்றும் போராடும் தொழிலாளர்களின் நலன்களைப் பற்றி அக்கறை கொள்வதைப் பொதுவுடைமைவாதப் பத்திரிகை முதன்மையானதாக எடுத்துக்கொள்ள வெண்டும். பத்திரிகையானது பாட்டாளி வர்க்கப் புரட்சியின் மிகச் சிறந்த கிளர்ச்சியாளனாகவும் தலையாயப் பிரச்சாரகனாகவும் விளங்க வேண்டும்.
கட்சி உறுப்பினர்களுடைய நடவடிக்கைகளின் மதிப்பிடற்கரிய அனைத்து அனுபவங்களையும் சேகரித்து அவற்றைத் தோழர்களுக்கு எடுத்துக் காட்டி இந்த அனுவபங்களைக் கொண்டு பொதுவுடைமைவாத வேலைமுறையைத் தொடர்ச்சியாக மாற்றி முன்னேற்றத்தைக் கொண்டுவருவது நமது பத்திரிகையின் நோக்கமாகும். இவ்வாறு நமது புரட்சி வேலையின் மிகச் சிறந்த அமைப்பாளனாக பத்திரிகை விளங்கும்.
பொதுவுடைமைவாதப் பத்திரிகையின், குறிப்பாக நமது பிரதான பத்திரிகையின் அனைத்தும் தழுவிய நிறுவன வேலையின் மூலம்தான், நிச்சயமான இந்த நோக்கத்தினைக் கொண்டுதான், நாம் ஜனநாயக மத்தியத்துவத்தை நிறுவுவதும், பொதுவுடைமைக் கட்சியின் வேலைகளில் சிறப்பான பகிர்ந்தளித்தலைச் செய்வதும் முடியும். இவ்வாறுதான் பத்திரிகையானது, தனது வரலாற்றுக் கடமையை ஆற்ற முடியும்.
ஒரு பொதுவுடைமைவாதப் பத்திரிகையை நிறுவுவது
பொதுவுடைமைவாதப் பத்திரிகை ஒரு பொதுவுடைமைவாத நிறுவனமாக ஆக முயற்சிக்க வேண்டும். அது ஒரு பாட்டாளி வர்க்கப் போரிடும் நிறுவனமாக இருக்க வேண்டும். பொதுவுடைமைவாதப் பத்திரிகையானது புரட்சிகரத் தொழிலாளர்களின், பத்திரிகைக்குத் தொடர்ச்சியாகப் படைப்புகளைத் தரும் எழுத்தாளர்கள் அனைவரின், ஆசிரியர்களின், அச்சுக் கோர்ப்பவர்களின், அச்சிடுபவர்களின், விநியோகிப்பவர்களின், உள்ளூர் விசயங்களைச் சேகரித்து பத்திரிகைக்குத் தந்து அவற்றைப் பற்றி பத்திரிகைகளில் விவாதிப்பவர்களின், பத்திரிகைக்காக நாள்தோறும் ஊக்கமாகப் பிரச்சாரம் செய்பவர்களின், இன்னும் பத்திரிகையோடு தொடர்புடையோரின் கூட்டு முயற்சியில் இயங்கும் நிறுவனமாகும். ஒரு பத்திரிகையை உண்மையான போரிடும் நிறுவனமாக, பொதுவுடைமையாளர்களின் பலமிக்க கூட்டு நிறுவனமாக மாற்றுவதற்கு பல நடைமுறை ரீதியிலான நடவடிக்கைகள் தேவை.
ஒரு பொதுவுடைமைவாதி தனது பத்திரிகையுடன் நெருக்கமான தொடர்பு கொண்டிருக்க வேண்டும். அதற்காக அவர் வேலை செய்யவும், தியாகங்கள் புரியவும் வேண்டும். பத்திரிகை அவரது அன்றாட ஆயுதமாகும். சிறப்பாகப் பயன்படுத்துவதற்குத் தகுதியுடையதாக்க அதை நாள்தோறும் உறுதிப்படுத்தவும், கூர்மைப்படுத்தவும் வேண்டும். பொதுவுடைமைவாதப் பத்திரிகை நிலைத்திருக்க வேண்டுமானால், அதற்குத் தொடர்ச்சியாக அதிக அளவிலான பொருள் மற்றும் நிதியைத் தியாகம் செய்ய வேண்டும். அதன் வளர்ச்சி மற்றும் செழுமைக்கான சாதனங்கள் கட்சி உறுப்பினர்களான அணிகளிடமிருந்து இடையறாது அளிக்கப்பட வேண்டும். பத்திரிகையானது, உறுதியான நிறுவனமாக நிறுவப்படும் நிலைமைக்கு, சட்டபூர்வ மக்கள்திரள் கட்சிகளில் போதுமான எண்ணிக்கையில் பிரதிகள் விற்கப்பட்டு பொதுவுடைமை இயக்கத்திற்கு அதுவே ஒரு பலமிக்க ஆதரவு சக்தியாக வளரும் நிலையை அடையும்வரை இவ்வாறு கீழிருந்து ஆதரவு பெறுவது நீடிக்கும்.
ஒருவர் பத்திரிகையின் ஊக்கமான சந்தா சேகரிப்பவராகவும் அதற்காகப் பிரச்சாரம் செய்பவராகவும் இருப்பது மட்டும் போதாது. அதற்கு படைப்புகள் தருபவராகவும் இருக்க வேண்டும்.
தொழில் நிலையங்களில் நிகழ்கின்ற சமூக அல்லது பொருளாதார முக்கியத்துவமுடைய நிகழ்ச்சி ஒவ்வொன்றும் – ஒரு சாதாரண விபத்து முதல் தொழிலாளர்களின் பொதுக்கூட்டம் வரை, ஒரு பயிற்சியாளரை மோசமாக நடத்துவது முதல் நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கை வரை – பத்திரிகையில் உடனடியாகத் தெரிவிக்கப்பட வேண்டும். தொழிற்சங்க பிராக்சன் தனது கூட்டங்கள் மற்றும் செயலாளர்களின் முக்கியமான முடிவுகள் மற்றும் தீர்மானங்கள் பற்றியும் நமது எதிரிகளின் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளைப் பற்றியும் செய்திகள் தர வேண்டும். வீதிகளிலும் கூட்டங்களிலும் நிகழ்கின்ற பொது வாழ்க்கை பற்றிய விவரங்கள் உன்னிப்பாக கட்சி உறுப்பினர்களுக்குச் சமுதாயத்தைப் பற்றி விமர்சிக்க வாய்ப்புகைள அளிக்கும். இந்த விவரங்கள் நமது கட்சிப் பத்திரிகையில் வெளியிடப்படும்போது, அவை ஏற்கெனவே நாம் எவ்வாறு வாழ்க்கையின் அன்றாடத் தேவைகள் மீது கவனம் செலுத்தி வருகிறோம் என்பதைப் பற்றி மேலோட்டமான வாசகர்களுக்குக்கூட தெளிவாகக் காட்டும்.
தொழிலாளர்களுடன் தொடர்புகள்
தொழிலாளர்களிடமிருந்தும் தொழிலாளர் வர்க்க அமைப்புகளிடமிருந்தும் தொழிலாளர்களது வாழ்க்கையைப் பற்றி வரும் செய்திகள் ஆசிரியர் குழுவால் மிகுந்த கவனத்துடனும் அக்கறையுடனும் கையாளப்பட வேண்டும். இந்தச் செய்திகள் சிறு தகவல்களாகப் பயன்படுத்தப்பட வேண்டும். இவை பத்திரிகைக்கும் தொழிலாளர் வாழ்க்கைக்கும் நெருக்கமான பிணைப்பு இருக்கும் உணர்வை வெளிப்படுத்தும். அல்லது தொழிலாளர்களின் அன்றாட வாழ்க்கையின் நடைமுறை உதாரணங்களில் இருந்து பொதுவுடைமைவாதக் கொள்கைகளை விளக்குவதற்காகப் பயன்படுத்த முடியும். ஆசிரியர் குழுவானது தம்மைச் சந்திக்க வரும் தொழிலாளர்களைச் சந்திக்க ஒவ்வொரு நாளும் வசதியான ஒரு நேரத்தை ஒதுக்க வேண்டும். அப்போது அவர்களது விருப்பங்கள் அல்லது வாழ்க்கைப் பிரச்சினைகள் பற்றிய புகார்கள் பற்றிக் கேட்டறிந்து அவற்றைக் குறித்துக் கொண்டு கட்சிக்குத் தெளிவுபடுத்துவதற்கு இவற்றைப் பயன்படுத்த வேண்டும்.
“பிராவ்தா”வின் முன்னுதாரணம்
முதலாளித்துவக் கட்டமைவின் கீழ் நம்முடைய பத்திரிகைகள் முழுக்கவும் பொதுவுடைமைவாத ஊழியர்களின் கூட்டு நிறுவனமாக ஆவது சாத்தியமில்லை என்பது உண்மையே. எப்படி இருப்பினும் மிகமிகக் கடுமையான சூழ்நிலைகளிலும் கூட இத்தகைய புரட்சிப் பத்திரிகை ஒன்றை நிறுவி அமைப்பதில் குறிப்பிடத்தக்க அளவு வெற்றி ஈட்டுவது சாத்தியமே. 1912-13 காலத்தில் ரஷ்யத் தோழர்களின் “பிராவ்தா”-வால் இது நிரூபிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவினுடைய மிகமிக முக்கியமான மையங்களின் ஊணர்வுபூர்வமான புரட்சிகரத் தொழிலாளர்களின் நிரந்தரமான மற்றும் ஊக்கமான நிறுவனத்தை இது உண்மையில் பிரதிநிதித்துவப்படுத்தியது. பத்திரிகையின் படைப்புகளை மேற்பார்வையிட்டுத் தீர்மானிப்பது, வெளியிடுவது, விநியோகிப்பது ஆகியவற்றைத் தோழர்கள் தமது கூட்டு முயற்சியில் செய்தனர். அவர்களில் பலர் தமது வேலையுடன் சேர்த்து இதைச் செய்ததுடன் தமது ஊதியத்திலிருந்து பணத்தையும் ஒதுக்கினர். இவற்றுக்குக் கைமாறாக, அப்பத்திரிகையானது, அவர்கள் விரும்பிய மிகச் சிறந்த படைப்புகளை அளித்தது. அவர்களுக்கு உடனடியாகத் தேவைப்பட்டவற்றையும் மேலும் அவர்கள் தமது வேலையிலும் போராட்டத்திலும் பயன்படுத்தக் கூடியவற்றையும் அவர்களுக்கு அளித்தது. இத்தகைய பத்திரிகை கட்சி உறுப்பினர்களாலும் பிற புரட்சிகர தொழிலாளர்களாலும் “நமது பத்திரிகை” என்று உண்மையாகவும் யதார்த்தமாகவும் அழைக்கப்பட்டது.
கட்சியால் இயக்கப்படும் இயக்கங்களில் நேரடியாகப் பங்கேற்பது போர்க்குணமிக்க பொதுவுடைமைவாதப் பத்திரிகையின் சரியான பண்பாகும். ஒரு குறிப்பிட்ட தருணத்தில் கட்சியின் நடவடிக்கை குறிப்பிட்டதொரு இயக்கத்தில் குவிந்திருக்குமானால், அந்தக் குறிப்பிட்ட இயக்கத்துக்குப் பணியாற்ற பத்திரிகை தனது அனைத்து துறைகளையும் – தலையங்கப் பக்கங்கள் மட்டுமல்ல – ஈடுபடுத்துவது அதன் கடமையாகும். இந்த இயக்கத்துக்கு உதவும்படியாக பத்திரிகை முழுவதிலும் – அதன் உள்ளடக்கம், உருவம் என்ற இரண்டிலும் – அதற்கான பொருளாயத மற்றும் மூலாதார விசயங்களைச் சேகரித்தளிப்பதை ஆசிரியர் குழு செய்ய வேண்டும்.
“நமது பத்திரிகை”க்காக சந்தாக்கள் சேகரிப்பது என்பது ஒரு கட்டமைப்பாக ஆக்கப்பட வேண்டும். தொழிலாளர்களைக் கொதித்தெழச் செய்கின்ற ஒவ்வொரு நிகழ்ச்சியையும் (சந்தர்ப்பத்தையும்) தொழிலாளர்களின் அரசியல் மற்றும் சமூக உணர்வைத் தூண்டிவிடக் கூடிய விசேட நிகழ்ச்சியால் ஏற்படும் ஒவ்வொரு நிலைமையையும் பயன்படுத்திக் கொள்வது முதலாவது விசயம். இவ்வாறாக, ஒவ்வொரு பெரிய வேலை நிறுத்த இயக்கம் அல்லது கதவடைப்பை அடுத்து – அப்போது பத்திரிகை பகிரங்கமாகவும், ஊக்கமாகவும் தொழிலாளர் நலன்களுக்காகக் குரல் கொடுத்திருக்கும் – போராட்டத்தில் பங்கேற்பவர்கள் மத்தியில் சந்தா சேர்ப்பு இயக்கம் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட வேண்டும். பத்திரிகை சந்தா விண்ணப்பங்களையும் பொதுவுடைமையாளர்கள் ஊக்கமாக வேலை செய்யும் தொழில்களிலும், வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற தொழிற்சங்க பிராக்சன்கள் பணியாற்றும் தொழில்களிலும் மட்டுமின்றி, எவ்வெப்போது சாத்தியமோ, அவ்வப்போதெல்லாம் விசேட குழுக்கள் அல்லது பத்திரிகைக்காகப் பிரச்சாரம் செய்யமு தொழிலாளர்கள் வீடுவீடாகச் சென்று விநியோகிக்க வேண்டும்.
இதுபோலவே, தொழிலாளர்களை எழுச்சியுறச் செய்த ஒவ்வொரு தேர்தல் பிரச்சார இயக்கத்தைத் தொடர்ந்தும் விசேட பிரச்சாரத்துக்கான குழுக்கள் தொழிலாளர்களின் வீடுகளுக்குச் சென்று தொழிலாளர்களின் பத்திரிகைக்காகத் திட்டமிட்ட பிரச்சாரத்தை நடத்த வேண்டும்.
மிகப் பெரும் எண்ணிக்கையிலான தொழிலாளர்களைப் பாதிக்கின்ற விலைவாசி உயர்வு, வேலையின்மை மற்றும் பிற இடர்ப்பாடுகள் வாயிலாகத் தம்மை வெளிப்படுத்திக் கொள்ளும் கடுமையான அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளின் போது, பல்வேறு தொழிற்சாலைகளைச் சேர்ந்த தொழில் ரீதியில் அமைக்கப்பட்ட தொழிலாளர்களை வென்றெடுக்க வேண்டும். பத்திரிகைக்காக வீடு வீடாகச் சென்று திட்டமிட்ட பிரச்சாரத்தை நடத்துவதற்காக அவர்களை ஒழுங்கமைக்க சாத்தியமான எல்லா முயற்சிகளையும் செய்ய வேண்டும். ஒவ்வொரு மாதத்திலும் கடைசி வாரம் சந்தா சேர்ப்பு வேலைக்கு மிகமிகப் பொருத்தமான நேரமாகும் என்பதை அனுபவம் காட்டுகிறது. ஒரு மாதத்தின் கடைசி வாரத்தை பத்திரிகைக்காகப் பிரச்சாரம் செய்யும் வேலைக்குப் பயன்படுத்தத் தவறும் எந்த ஒரு உள்ளூர் குழுவும், பொதுவுடைமை இயக்கத்தைப் பரவலாக்குவதைப் பொருத்தவரை கடுமையான கேட்டை விளைவிக்கிறது என்று அர்த்தம். பத்திரிகைக்காகப் பிரச்சாரத்தை நடத்தும் வேலைக்கான குழு எந்தவொரு பொதுக் கூட்டத்திலும் அல்லது எந்தவொரு ஆர்ப்பாட்டத்திலும் இல்லாமல் இருக்கக் கூடாது. அதன் தொடக்கம், இடைவேளை, முடிவு ஆகியவற்றின் போது பத்திரிகைக்கான சந்தா பட்டியலுடன் தோன்ற வேண்டும். ஒவ்வொரு தொழிற்சங்கக் கூட்டத்தின் போது பிராக்சன்களும் ஒவ்வொரு பணிமனைக் கூட்டத்தின் போதும் குழு மற்றும் பிராக்சன்களும் இதே கடமைகளை மேற்கொள்ள வேண்டும்.
படிக்க :
♦ அரசியல் இயக்கங்களை எவ்வாறு நடத்துவது ? | லெனின்
♦ லியோ டால்ஸ்டாய் : ஒரு மகத்தான கலைஞர் ! லெனின்
கட்சிப் பத்திரிகைக்காக உறுதியாக நிற்பது
கட்சி உறுப்பினர் ஒவ்வொருவரும் கட்சிப் பத்திரிகைக்காக இடையறாது வாதிட வேண்டும். அதன் எதிரிகளுக்கு எதிராக நின்று உறுதியாகப் போராட வேண்டும். முதலாளித்துவப் பத்திரிகைகளுக்கு எதிராக உத்வேகத்துடன் போராட வேண்டும். முதலாளித்துவப் பத்திரிகையின் அப்பட்டமான நச்சுத் தன்மையை, போலித் தனத்தை, செய்திகளை இருட்டடிப்பு செய்தலை, எல்லா வகையான இரட்டை மோசடிகளை ஈவிரக்கமின்றி அம்பலப்படுத்த வேண்டும்.
நாள்தோறும் மிகமிகக் கொடியதாகும் வர்க்க மோதல்களை மூடிமறைக்கும் சமூக ஜனநாயக மற்றும் சுயேட்சையான பத்திரிகையின் துரோகத்தனத்தை விடாப்பிடியாக அம்பலப்படுத்தி, அற்பமான விதண்டாவாதத்தில் ஈடுபடாமல், இடையறாத மற்றும் முன்னேறித் தாக்கும் விமர்சனத்தின் மூலம் இப்பத்திரிகைகளை வெற்றிகொள்ள வேண்டும். தொழிற்சங்கம் மற்றும் பிற தொழிலாளர்களது நிறுவனங்களின் உறுப்பினர்களைத் தவறாக வழிநடத்தும், முடமாக்கும் சமூக ஜனநாயக பத்திரிகைகளின் செல்வாக்கிலிருந்து பிய்த்தெடுக்க தொழிற்சங்க மற்றும் பிராக்சன்கள் நிறுவன ரீதியிலான வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், வீட்டுக்கு வீடு நமது பத்திரிகைக்காகப் பிரச்சாரம் செய்வதன் மூலம் குறிப்பாக ஆலைத் தொழிலாளர்கள் மத்தியில் செய்வதன் மூலம் சமூக ஜனநாயக பத்திரிகைக்கு எதிரான நமது போராட்டக் கூர்முனை சாதுரியமாகத் திருப்பிவிடப்பட வேண்டும்.
(கட்சி நிறுவனக் கோட்பாடுகள் நூலிலிருந்து…)
வி.இ.லெனின்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க