நவம்பர் 7: ரசிய சோசலிசப் புரட்சி நாளை உயர்த்திப் பிடிப்போம்!
டிசம்பர் 21: ஹிட்லர்-முசோலினியின் பாசிசத்தை வீழ்த்திய பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் ஸ்டாலினின் பிறந்த நாளை நெஞ்சிலேந்துவோம்!

சிறுதொழில்கள் நசிவு – வேலையின்மை – விலையேற்றம் – பாசிச அடக்குமுறைகள்:

ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.; அம்பானி-அதானி பாசிசம் முறியடிப்போம்!
ரசிய சோசலிசப் புரட்சி நாளை உயர்த்திப் பிடிப்போம்!

நவம்பர் – டிசம்பர் 2022

அரங்கக் கூட்டங்கள் | தெருமுனைக் கூட்டங்கள் | கலைநிகழ்ச்சிகள்

அன்பார்ந்த உழைக்கும் மக்களே!

1917 நவம்பர் 7 அன்று ரஷ்யாவில் நடந்த மகத்தான சோசலிசப் புரட்சியிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. உலகையே அச்சுறுத்தி வந்த ஹிட்லர் – முசோலினி பாசிசத்தை வீழ்த்திய பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் ஸ்டாலின் பிறந்தநாளில் நமது நாட்டை அச்சுறுத்திவரும் காவி – கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிக்கும் கடமையை நாம் சுமந்துள்ளோம்.

எட்டாண்டு கால பாசிசப் பேயாட்சி:

பணப் பரிவர்த்தனையில் கொள்ளையிட டிஜிட்டல் மயமாக்கம், சிறுதொழில்களை அழிக்கும் ஜி.எஸ்.டி., செஸ் வரி, பெட்ரோல், டீசல் மீதான கலால்வரி என 20 இலட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் உழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை ஒட்டச் சுரண்டி கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வாரி வழங்கிவரும் மோடி அரசு, மாநில அரசுகளை பேரரசனுக்குக் கப்பம் கட்டும் அடிமை பாளையங்களாக்கி விட்டது.

நமது சொந்த நாட்டில் சிறுதொழில்களைச் செய்வதையும், விவாசயம் செய்வதையும், பழங்குடி மக்கள் காடுகளைச் சார்ந்து வாழ்வதையும், நிலத்தடி நீரை பயன்படுத்துவதையும் தடுத்து, அம்பானி, அதானி, வேதாந்தா, மிட்டல் போன்ற கார்ப்பரேட்டுகள் கொள்ளையடிப்பதற்கேற்ப சட்டத்திருத்தங்களைச் செய்துவருகிறது. மூன்று வேளாண் சட்டங்கள், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு மசோதா, தொழிலாளர் நலச்சட்டத் திருத்தங்கள், புதிய கல்விக்கொள்கை, மின்சார மசோதா, பொதுத்துறைகளை கார்ப்பரேட்டுகளுக்குத் தாரை வார்க்கும் தேசியப் பணமயமாக்கல் திட்டம் போன்றவை மோடியின் பாசிசத் திட்டங்களில் சிலதுளிகள் மட்டுமே.

ஆம், நாட்டையே பேரழிவின் விளிம்பில் நிறுத்தியிருக்கிறது மோடியின் ஆட்சி!

மோடி உருவாக்குவது சொர்க்கமா, சோமாலியாவா?

கடந்த எட்டாண்டுகளாக, பெருவாரியான வேலைவாய்ப்புகளை உருவாக்கி வந்த சிறுகுறுதொழில்கள், கைத்தொழில்கள் மீது, கார்ப்பரேட் கொள்ளை என்னும் சுருக்குக் கயிற்றை மாட்டி நெருக்கி வருகிறது. இதன் விளைவாக, வரலாறு காணாத வகையில் வேலையின்மை அதிகரித்து வருகிறது. சொர்க்கத்தைப் படைப்பதாக வாக்குறுதி கொடுத்த மோடி ஆட்சியில் பஞ்சமும், பட்டினிச்சாவுகளும் பெருகி, நம் நாடு சோமாலியாவாக மாறும் அபாயம் சூழ்ந்து வருகிறது. ஆகக் கொடூரமான ஆர்.எஸ்.எஸ். கும்பலே இந்த உண்மையை இனியும் மறைக்க முடியாத நிலைக்கு வந்துவிட்டது, அதனால்தான், 20 கோடிக்கும் மேற்பட்டோர் வறுமையில் வாடுவதாகவும், 4 கோடி இளைஞர்களுக்கு வேலையில்லை எனவும் நீலிக்கண்ணீர் வடிக்கிறது.

இந்தச் சூழ்நிலையில், அமெரிக்க ஏகாதிபத்தியம் டாலரின் மதிப்பைத் தொடர்ந்து உயர்த்தி வருகிறது. இதனால், உலகம் முழுவதும் பணவீக்கம் அதிகரிக்கிறது. தனது பொருளாதார நெருக்கடியை உலக மக்களின் மீது சுமத்துகின்ற அமெரிக்காவின் இந்த அயோக்கியத்தனத்தைக் கண்டிக்கத் துணிவின்றி, உலகப் பொருளாதாரம் புதிய புயலின் கண்ணியில் சிக்கியிருக்கிறது என்கிறார் ரிசர்வங்கியின் கவர்னர். இதன் விளைவாக, இந்தியாவில் உணவுப் பஞ்சம் வரப்போகிறது என்று சொல்லி மக்களை கைகழுவுகிறது மோடி-நிர்மலா சீதாராமன் கும்பல்.

உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார வல்லரசாக இந்தியாவை மாற்றிவிட்டதாக பீற்றிக் கொள்கிறார் மோடி. ஆனால், இந்தியாவை இன்னொரு இலங்கையாக மாற்றியிருப்பதே உண்மை.

ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.; அம்பானி-அதானி; பாசிசம்

அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகள், நம்மைப் போன்ற பின்தங்கிய, வளரும் நாடுகளைக் கொள்ளையடிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற மறுகாலனியாக்கக் கொள்கைகள் 1992-களில் இருந்தே இந்தியாவில் திணிக்கப்பட்டு வருகின்றன. இந்தக் கொள்ளையில் மார்வாரி, பார்சி, பார்ப்பன, பனியா, சிந்தி பின்னணி கொண்ட கார்ப்பரேட் முதலாளிகளான அம்பானி, அதானி, வேதாந்தா, மிட்டல், டாடா-க்களுக்கு பங்கு பிரித்துக் கொடுப்பதில் முன்னணியில் நிற்கிறது பா.ஜ.க.வின் மோடி ஆட்சி.

ஏற்றத்தாழ்வு, ஜனநாயக மறுப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய சாதிய வர்ணாசிரம – பார்ப்பன பயங்கரவாதமே ஆர்.எஸ்.எஸ்.இன் சித்தாந்தம். இதன் வெளிப்படாகிய இந்துராஷ்டிரக் கொள்கையே பா.ஜ.க.வின் கார்ப்பரேட் விசுவாசத்துக்கு அடிப்படை. எனவேதான், கார்ப்பரேட் கொள்ளையைக் காக்க, பார்ப்பன பாசிசமும் கார்ப்பரேட் பாசிசமும் பின்னிப் பிணைந்து சீறி வருகின்றன.

தனியுடைமையையும் சுரண்டலையும் பாதுகாப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ள அரசியலமைப்புச் சட்டம் வழங்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி, அரசு எந்திரம் மற்றும் சமூகத்தின் அனைத்து துறைகளிலும் ஆர்.எஸ்.எஸ். விஷக்கிருமிகள் ஊடுருவியுள்ளன. கார்ப்பரேட் சுரண்டலையும், இந்துராஷ்டிர நோக்கத்தையும் கேள்விக்கிடமற்ற முறையில் மேற்கொள்வதற்கு வசதியாக, ஏட்டளவிலான ஜனநாயகக் கூறுகள் அனைத்தையும் ஒழித்துக் கட்டி வருகின்றது பாசிசக் கும்பல்.

முசுலீம் மக்களை நாட்டின் எதிரிகளாகக் காட்டி மக்களைப் பிளவுபடுத்துவது, அவர்களுக்கு எதிராகக் கலவரங்களைத் திட்டமிட்டு நடத்துவது; சிறுபான்மை மதத்தினர், பழங்குடியினர், தலித்துகளை அடித்துக் கொல்வது; சிறுமிகள், பெண்களை பாலியல் வல்லுறவு செய்து கொல்வது போன்றவை பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் அன்றாட நிகழ்வாகி, ஒட்டுமொத்த சமூகத்தையும் பதட்டத்திலேயே வைத்துள்ளது ஆர்.எஸ்.எஸ். சங்கப் பரிவாரக் கும்பல்.

பார்ப்பனர்கள் உள்ளிட்ட ஆதிக்க சாதியினர், பணக்கார மேட்டுக்குடியினருக்கு மட்டும்தான் இது நாடு. மற்ற உழைக்கும் மக்களுக்கோ உரிமைகள் ஏதுமற்ற சுடுகாடு. இதுதான் காவிகள் கட்டமைக்க விரும்பும் இந்துராஷ்ட்ரம்.

சோசலிச ரசியாவே நமது வழிகாட்டி!

ஏகாதிபத்தியங்களின் கொள்ளைக்காக நடந்த முதல் உலப்போரின் போது, தோழர் லெனின் தலைமையில் ரசிய உழைப்பாளி மக்கள், சொந்த நாட்டில் முதலாளித்துவத்தை வீழ்த்தி சோசலிப் புரட்சியை நடத்தினர். உழைக்கும் மக்களின் அதிகாரத்தை நிலைநாட்டினர். அதைபோல, நாஜி ஹிட்லர் – பாசிச முசோலினி தலைமையில் மீண்டுமொரு கொள்ளைக்கார போரை – இரண்டாம் உலகப்போரை ஏகாதிபத்தியங்கள் கட்டவிழ்த்து விட்டபோது, தோழர் ஸ்டாலின் தலைமையிலான சோசலிச ரசியாவின் 200 இலட்சம் பாட்டாளிகள் தங்களது இன்னுயிரை தியாகம் செய்து பாசிசத்திடமிருந்து உலக மக்களைக் காத்தனர்.

இத்தகைய, உழைக்கும் மக்களின் ஒன்றுபட்ட போராட்டங்களும் தியாகங்களுமே இந்தியாவைச் சூழ்ந்துவரும் பாசிசத்தையும் கிள்ளியெறியும்.

போராட்டங்கள் எழுச்சிகளாக உயரட்டும்!

நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.; அம்பானி-அதானி; பாசிச கும்பலுக்கு எதிரான போராட்டங்கள் வளர்ந்து வருகின்றன. தமிழகத்திலும் கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, பரந்தூர், புதுச்சேரி, கோவை என பல பகுதிகளில் விவசாயிகள், தொழிலாளர்கள், மீனவர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள், மாணவர்கள், செவிலியர்கள், பேராசிரியர்கள் என அனைத்துத் தரப்பினரும் போராடி வருகின்றனர். பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்.இன் பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழக பாசிச எதிர்ப்பு சக்திகள் போராடி வருகின்றனர். பாசிச ஆட்சியதிகாரத்திற்கு எதிராகப் போராடுகின்ற அனைவரும் ஒன்றிணைந்து பாசிச எதிர்ப்புக் கூட்டமைப்புகள், பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணிகளை அமைத்துப் போராடுவது காலத்தின் கட்டாயமாகும். பாசிசத்தை முறியடிக்கும் இலக்கில் இந்தப் போராட்டங்களை மக்கள் எழுச்சிகளாக வளர்த்தெடுப்பது அவசியமாகும்.

தமிழகத்தில் தனது அடித்தளத்தை நிறுவத் தீவிரமாக சதிவேலைகளில் ஈடுபட்டு வருகிறது ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. கும்பல். தமிழகம் ஒருபோதும் மண்டியிடாது என்பதை மீண்டும் உணர்த்துவோம்! மக்கள் போராட்டங்களை மாபெரும் எழுச்சிகளாக வளர்த்தெடுப்போம்! ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.; அம்பானி-அதானி; பாசிசத்தை வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்துவோம்!

  • காவி – கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம்!
  • போலி ஜனநாயக அரசுக் கட்டமைப்பின் மீதுள்ள மாயையை உதறியெறிவோம்!
  • பாசிச எதிர்ப்பு ஜனநாயக் குடியரசைக் கட்டியமைப்போம்!
  • ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.; அம்பானி-அதானி; பாசிசம் முறியடிப்போம்!
  • பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியாக ஒன்றிணைவோம்!
  • பாசிச எதிர்ப்பு மக்கள் எழுச்சியைக் கட்டியமைப்போம்!

மக்கள் கலை இலக்கியக் கழகம்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
(மாநில ஒருங்கிணைப்புக்குழு)
மக்கள் அதிகாரம், தமிழ்நாடு – புதுவை.

தொடர்புக்கு :- 9791653200, 9444836642, 7397404242, 9962366321

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க