கட்சி நிறுவனக் கோட்பாடுகள் | லெனின் | பாகம் 11

முதல் பாகம்

மத்தியக் கமிட்டியும் அரசியல் தலைமைக் குழுவும்

  1. கட்சியின் மத்தியக் கமிட்டி, கட்சியின் பேரவையில் தேர்ந்தெடுக்கப்படுகிறது. மத்தியக் கமிட்டி பேரவைக்குப் பொறுப்பானதாகும். மத்தியக் கமிட்டி தனது உறுப்பினர்களிலிருந்து அரசியல் நடவடிக்கைக்காக இரு துணைக் கமிட்டிகளைத் தெரிவு செய்கிறது. இவ்விரு துணைக் கமிட்டிகளும் கட்சியினுடைய அரசியல் மற்றும் அன்றாட வேலைகளுக்குப் பொறுப்பானவையாகும். இத்துணைக் கமிட்டிகள் அல்லது குழுக்கள் கட்சியின் மத்தியக் கமிட்டியின் முறையான கூட்டுக் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யும். இக்கூட்டங்களில் உடனடி முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகள் எடுக்கப்படும். பொதுவான மற்றும் அரசியல் நிலைமைகளை ஆய்வு செய்யவும் கட்சியில் உள்ள நிலைமைகள் – நடப்புகள் பற்றித் தெளிவான முடிவுக்கு வரவும், இதுபோலவே கட்சி முழுவதன் வாழ்வைத் தீர்மானிக்கக் கூடிய முடிவுகள் எடுக்கப்படும்போதும் மத்தியக் கமிட்டியில் பல்வேறு பகுதிகளும் பிரதிநிதித்துவப்படுத்துவதும் அவசியம். இதே காரணங்களால் செயல்தந்திரங்கள் பற்றிய கருத்து வேறுபாடுகளை – அவை மிகப் பாரதூரமான இயல்புடையவையாக இருக்கும் பட்சத்தில் – மத்தியக் கமிட்டி ஒடுக்கக் கூடாது. மாறாக, இந்தக் கருத்துக்கள் மத்தியக் கமிட்டியில் பிரதிநிதித்துவம் பெற வேண்டும். ஆனால், சிறு குழு (அரசியல் தலைமைக் குழு) சீரானதாக அமைக்கப்பட்டு இயங்க வேண்டும். உறுதியான மற்றும் நிச்சயமான கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு அரசியல் தலைமைக் குழுவானது தனது சொந்த அதிகாரத்தை மத்தியக் கமிட்டியின் குறிப்பிடத்தக்க பெரும்பான்மையைச் சார்ந்திருக்க வேண்டும்.

இத்தகைய அடிப்படையில் கட்சியின் மத்தியக் கமிட்டியானது குறிப்பாக சட்டபூர்வமான கட்சிகளில், கட்சி உறுப்பினர்களின் நிபந்தனையற்ற நம்பிக்கைக்கு அவசியமான கட்டுப்பாட்டு உறுதியான அடித்தளத்தை மிகவும் குறைந்த காலத்திலேயே அமைக்க இயலும். அதேவேளையில் எழுகின்ற ஊசலாட்டங்கள் மற்றும் தெரிய வருகின்ற விலகல்களை முறியடிக்க முடியும். கட்சியில் இத்தகைய மாறுபட்ட போக்குகள் ஒரு கட்டத்துக்கு வளர்ச்சி அடையும் முன்பு, கட்சிப் பேரவையில் முடிவெடுக்கக் கொண்டுவரப்பட்டு நீக்கப்படக் கூடும்.

வேலைப் பிரிவின், துணைக் கமிட்டிகள்

  1. வேலைகளின் பல்வேறு கிளைகளில் தேர்ச்சியை அடைவதற்கு ஒவ்வொரு மேல்மட்டக் கமிட்டியும் தனது உறுப்பினர்களுக்குள் வேலைகளைப் பிரித்துக் கொள்ள வேண்டும். இதற்குப் பல்வேறு விசேடக் கமிட்டிகள் – எடுத்துக்காட்டாக, பிரச்சாரத்துக்கானவை, பத்திரிகைகளுக்கானவை, தொழிற்சங்க இயக்கங்களை நடத்துவதற்கானவை, செய்தித் தொடர்புகளுக்கானவை, இன்னும் பிறவற்றுக்கானவை என்று கமிட்டிகள் – அமைப்பது அவசியம். ஒவ்வொரு விசேடக் கமிட்டியும் கட்சியின் மத்தியக் கமிட்டிக்கோ, மாவட்டக் கமிட்டிக்கோ கட்டுப்பட்டதாகும்.

அனைத்து கமிட்டிகளின் நடவடிக்கைகள் மற்றும் சேர்க்கையின் (Composition) மீதான கட்டுப்பாடு குறிப்பிட்ட மாவட்டக் கமிட்டிகளின், இறுதியாகப் பார்க்கப்போனால், கட்சியின் மத்தியக் கமிட்டியின் கரங்களில் இருக்க வேண்டும். பத்திரிகை ஆசிரியர்கள், அமைப்பாளர்கள், பிரச்சாரகர்கள் இன்னும் இவை போன்ற பல்வேறு கட்சிப் பணிகளை ஆற்றுபவர்களின் வேலைகள் மற்றும் அலுவலகங்களைக் குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை மாற்றுவது – கட்சி வேலைகளில் அதிகமாக பாதிப்பை ஏற்படுத்தாதிருக்கும் பட்சத்தில் – உசிதமாகலாம். பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் பிரச்சாரகர்கள் ஏதாவது ஒரு கட்சிக் குழுவில் இருந்துகொண்டு முறையான கட்சிப் பணிகளில் பங்கேற்க வேண்டும்.

கட்சியின் மத்தியக் கமிட்டி

  1. கட்சியின் மத்தியக் கமிட்டியும் இதுபோலவே பொதுவுடைமை அகிலமும் எந்த நேரத்திலும் தமது எல்லா பொதுவுடைமைவாத நிறுவனங்களிலிருந்து உறுப்புகள் மற்றும் அவற்றின் தனிப்பட்ட உறுப்பினர்களிடமிருந்து முழுமையான அறிக்கைகள் பெற உரிமை பெற்றுள்ளன. மத்தியக் கமிட்டியின் பிரதிநிதிகளும் அதனால் அதிகாரம் அளிக்கப்பட்டவர்களும் தீர்மானிக்கும் உரிமையுடன் எல்லாக் கூட்டங்களிலும் கூட்டத் தொடர்களிலும் அனுமதிக்கப்படுவர். கட்சியின் மத்தியக் கமிட்டி சர்வ அதிகாரமும் பொறுப்பும் உள்ள பிரதிநிதிகளை எப்போதும் தன்வசம் வைத்திருக்க வேண்டும். (அதாவது, பல்வேறு மாவட்ட மற்றும் பிராந்திய தலைமை நிறுவனங்களுக்குப் பொறுப்புள்ள அமைப்புகளுக்கும் தமது சுற்றறிக்கைகள், கடிதங்கள் மூலமாக மட்டுமின்றி நேரடியாகவும் வாய்வழியாகவும் அரசியல் – அமைப்புப் பிரச்சினைகள் பற்றி அறிவுறுத்தவும், அறிவிக்கவும் அனுப்பப்படும் கமிசார்களே இப்பிரதிநிதிகள்)

எந்தவொரு நிறுவனமும் கட்சியின் எந்தக் கிளையும், தனிப்பட்ட உறுப்பினரும் கூட தனது விருப்பங்கள், ஆலோசனைகள், விமர்சனங்கள் அல்லது புகார்களை நேரடியாக, எந்த நேரத்திலும் கட்சியின் மத்தியக் கமிட்டிக்கோ அல்லது பொதுவுடைமை அகிலத்துக்கோ அனுப்ப உரிமை உண்டு.

படிக்க:
அர்ச்சகர் பணியில் அனைத்து இந்துக்களுக்குமான இடஒதுக்கீட்டை தடுப்பது யார் ?
எஃகுறுதி வாய்ந்த கட்சி வேண்டும் | லெனின்

கீழ்மட்ட நிறுவனங்கள் மேல்மட்ட நிறுவனங்களுக்குக் கட்டுப்பட வேண்டும்

  1. கட்சியின் மேல்மட்ட நிறுவனங்களினுடைய அறிவுறுத்தல்கள் மற்றும் முடிவுகளுக்குக் கீழ்மட்ட நிறுவனங்களும், தனிப்பட்ட உறுப்பினர்களும் கட்டுப்பட வேண்டும். தலைமை நிறுவனங்களின் பொறுப்புகளும், கடமை தவறுவது அல்லது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதை ஒரு பகுதி அளவுக்கு மட்டுமே அதிகார பூர்வமாகத் தீர்மானிக்க முடியும். அவர்களது அதிகார பூர்வமான பொறுப்பு எந்த அளவுக்குக் குறைவாக இருக்கிறதோ (உதாரணமாக, சட்டவிரோதக் கட்சிகளில்) அந்த அளவுக்குத் தலைமைக்குக் கட்சி உறுப்பினர்களின் கருத்துக்களை ஆய்வு செய்வது என்ற கடமை அதிகமாக உள்ளது. தலைமை, முறையான மற்றும் நம்பகமான தகவல்களைப் பெற்று முதிர்ச்சி மற்றும் தெள்ளத் தெளிவான பரிசீலனைக்குப் பின், தமது சொந்த முடிவுகளை எடுக்க வேண்டுவது அதன் பொறுப்பாகும்.
  2. கட்சி உறுப்பினர்கள் அனைவரும் தமது நடவடிக்கைகள் அனைத்திலும் எப்போதும் ஒரு போர்க்குணமிக்க நிறுவனத்தின் உறுப்பினர்கள் போல கட்டுப்பாட்டுடன் நடக்க வேண்டிய கடப்பாடு உடையவர்கள்.

பொருத்தமான நடவடிக்கை பற்றி கருத்து வேறுபாடு ஏற்படுமானால், சாத்தியமான அளவு கட்சிக்குள் நடந்த விவாதங்களில் வந்தடைந்த முடிவுகளின்படி, கட்சி நடவடிக்கையானது தீர்மானிக்கப்பட வேண்டும். பிற உறுப்பினர்களின் கருத்துப்படி கட்சியின் அல்லது கட்சிக் கமிட்டியின் முடிவு தவறாக இருந்தாலும் கூட ஒன்றுபட்ட முன்னணியின் ஐக்கியத்துக்குத் தடங்கல் ஏற்படுத்துவதோ, அல்லது முழுமையாக உடைப்பதோ கூடாது. அது கட்டுப்பாடற்ற நடவடிக்கையின் மிகமிக மோசமான உதாரணமாகும். இராணுவ ரீதியில் ஆக மிகப் பெரும் தவறாகும். இந்த உண்மையை தமது பொது நடவடிக்கையில் மாறுபட்ட கருத்துடைய தோழர்கள் காணத் தவறக் கூடாது.

பொதுவுடைமைவாதத்தின் எதிரிகள் அனைவருக்கும் எதிராக பொதுவுடைமைக் கட்சிக்காக எல்லாவற்றுக்கும் மேலாக, பொதுவுடைமை அகிலத்துக்காகப் போராடுவது கட்சி உறுப்பினர் ஒவ்வொருவரின் அதி உயர்ந்த கடமையாகும். மாறாக, இதை மறந்து பகிரங்கமாகக் கட்சியையோ, பொதுவுடைமை அகிலத்தையோ கண்டனம் செய்பவர் ஒரு மோசமான பொதுவுடைமைவாதியாவார்.

  1. கட்சியின் அமைப்பு விதிகள் பொதுவான கட்சி நிறுவனங்களின் பொதுவுடைமைவாத வளர்ச்சியில் தலைமைக் கட்சி நிறுவனங்களுக்கு உதவக் கூடியதாக – தடையேற்படுத்துவதாக அல்ல – கட்சி நடவடிக்கைகளின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கு உதவக் கூடியதாக – தடையேற்படுத்துவதாக அல்ல – வகுக்கப்பட வேண்டும். பொதுவுடைமை அகிலத்தின் முடிவுகள் அதில் சேர்ந்துள்ள கட்சிகளால் உடனுக்குடன் அமல்படுத்தப்பட வேண்டும். இதற்காகவே ஏற்கெனவே உள்ள நிறுவன அமைப்பு விதிகளிலும் கட்சி முடிவுகளிலும் தேவையான மாற்றங்களைச் செய்ய வேண்டுமானாலும் பின்னர் செய்து கொள்ளலாம்.

(தொடரும்)


முந்தைய பாகம் ******************************************* அடுத்த பாகம்

நூல் தேவைக்கு :

கீழைக்காற்று பதிப்பகம்,
16, அருமலை சாவடி,
கண்டோன்மென்ட் பல்லாவரம்,
சென்னை – 600043.
அலைபேசி : 9444 88 1066
மின்னஞ்சல் : keezhaikkatru2019@gmail.com
முகநூலில் பின் தொடர : கீழைக்காற்று

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க