கட்சி நிறுவனக் கோட்பாடுகள் | லெனின் | பாகம் 01

ஹிட்லர் என்ற பாசிச சர்வாதிகாரியின் அச்சுறுத்தலில் இருந்து இந்த உலகத்தை தனது வீரத்தாலும், தியாகத்தாலும் மீட்டது சோசலிச சோவியத் ரஷ்யா. தோழர் ஸ்டாலின் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சியும், ரசிய மக்களும் பெரும் தியாகங்களை ஈந்து இந்த உலகை பாசிச அபாயத்திலிருந்து மீட்டனர். இன்று இந்தியா உள்ளிட்டு உலகம் முழுவதும் வலதுசாரி பாசிச அரசுகள் உருவாகிவரும் இந்தச் சூழலில் பாசிசத்தை வீழ்த்தவல்லதாக ஒரு கம்யூனிஸ்ட் கட்சி இருக்க வேண்டுமெனில் அது எப்படி இருக்க வேண்டும் என்பதை தோழர் லெனின் கட்சி நிறுவனக் கோட்பாடுகள் எனும் தனது நூலில் வரையறுத்துள்ளார்.

இந்நூலின் முதல் பகுதியில் ஜனநாயக மத்தியத்துவம் என்பது ஒரு கட்சிக்கு எவ்வளவு முக்கியமானது என்பதையும், ஜனநாயகமும் மத்தியத்துவமும் தனித் தனியே பிரிக்க முடியாதது என்பதையும்  பெயரளவிலான ஜனநாயகம் என்பது ஒரு கட்சிக்கு எவ்வளவு ஆபத்தானது என்பதையும் எளிமையாக விளக்கியுள்ளார் லெனின் !

 

அறிமுகக் குறிப்பு

தோழர் லெனினது வழிகாட்டுதலின்கீழ் எழுதப்பட்டு, தோழர் லெனின் தலைமை தாங்கிய பொதுவுடைமை அகிலத்தின் மூன்றாவது பேராயத்தில் (1921-ல்) நிறைவேற்றப்பட்ட இந்த ஆவணம், புரட்சிகர பொதுவுடைமைவாத நிறுவனக் கோட்பாடுகளை வரையறுத்துத் தருகின்றது. “லெனினிசத்தின் அடிப்படைக் கோட்பாடுகள்” என்ற நூலில் தோழர் ஸ்டாலின் இந்தப் பொதுக் கோட்பாடுகளைச் சுருக்கமாக, எளிமையாக விளக்கியுள்ளார்.

பொதுவுடைமைவாத நிறுவனங்களுக்கான கோட்பாடுகள் சாரமாக வழங்கப்பட்டுள்ள இந்த ஆவணத்தில், பெரும்பாலும் முதலாளித்துவ நாடுகளைப் பற்றி மட்டுமே சொல்லப்பட்டுள்ளது என்பதைக் கவனத்தில் கொண்டு படிக்க வேண்டும். எனவே, நாடாளுமன்ற வடிவங்களைப் பயன்படுத்துவது, மையமான பெரிய நகரங்களில் குவிந்து வேலை செய்ய வேண்டும் என்பன போன்று வருகின்ற அனுபவங்களை, அந்த நாடுகளின் போர்த்தந்திரம், செயல்தந்திரம் ஆகியவைகளோடு இணைத்து புரிந்து கொள்ள வேண்டும். நமது நாட்டிற்குப் பொருத்தும்போது, நமது நாட்டு புதிய ஜனநாயகப் புரட்சிக்கான நீண்டகால மக்கள் யுத்தப் பாதை எனும் போர்த்தந்திரம் மற்றும் செயல் தந்திரம் ஆகியவைகளைக் கருத்தில் கொண்டு பார்க்க வேண்டும்.

இந்த ஆவணத்தில் வருகின்ற சோசலிஸ்டுக் கட்சிகள் என்பவைகள் சீர்திருத்தவாத கட்சிகளாகச் செயல்பட்டவை; இவைகளில் ஒரு சிலவோ, அல்லது பகுதிகளோ பொதுவுடைமைக் கட்சிகளாக மாற்றம் பெற்றன.

♦ ♦ ♦

 

பாட்டாளி வர்க்கக் கட்சியின் நிறுவனமும் கட்டமைப்பும்

1.பொதுவான கோட்பாடுகள்

1. நிலவுகின்ற சூழ்நிலைகளுக்கும் கட்சியினுடைய நடவடிக்கைகளின் குறிக்கோளுக்கும் பொருத்தமாகக் கட்சியின் நிறுவன அமைப்பு இருத்தல் வேண்டும். புரட்சிகர வர்க்கப் போராட்டத்தின் எல்லாக் கட்டங்களிலும், அதைத் தொடர்ந்து சோசலிசத்தை அடைவதற்கான இடைக்காலத்திலும், அதாவது பொதுவுடைமைச் சமுதாயத்தின் முதல் கட்டத்திலும் பொதுவுடைமைக் கட்சியானது, பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப் படையாகவும் முன்னேறிய முதல் படைவரிசையாகவும் விளங்க வேண்டும்.

2. முழுக்க முழுக்க தவறற்றதும் மாற்றக்கூடாததுமான ஒரு நிறுவன வடிவம் ஏதும் பொதுவுடைமைக் கட்சிகளுக்கு இருக்க முடியாது. பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்ட சூழ்நிலைகள் தொடர்ச்சியான பரிணாம நிகழ்வு மாற்றங்களுக்கு உள்ளாகிறது. இந்த மாற்றங்களுக்கு ஏற்ற பொருத்தமான வடிவங்களை பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப் படையினுடைய நிறுவன அமைப்பு இடையறாது மேற்கொள்ள வேண்டும். இதுபோலவே ஒவ்வொரு நாட்டினுடைய தனிவகைப்பட்ட சூழ்நிலைகள், குறிப்பிட்ட நாட்டு கட்சிகள் மேற்கொள்ள வேண்டிய நிறுவன அமைப்பு வடிவங்களைத் தீர்மானிக்கின்றன.

ஆனால், இத்தகைய பாகுபாட்டுக்கு நிச்சயம் குறிப்பிட்ட வரம்புகள் உள்ளன. தனிச்சிறப்புத் தன்மைகள் எதுவாயினும், பல்வேறு நாடுகளிலும் பாட்டாளி வர்க்கப் புரட்சியின் பல்வேறு இடைக்கட்டங்களிலும் உள்ள பாட்டாளி வர்க்கத்தினுடைய வர்க்கப் போராட்ட சூழ்நிலைகளின் தன்மை, உலகப் பொதுவுடைமை இயக்கத்திற்கு அடிப்படை முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இது, அனைத்து நாடுகளிலுமுள்ள பொதுவுடைமைக் கட்சிகளின் நிறுவன அமைப்புக்கு பொதுவான அடிப்படையைத் தோற்றுவிக்கின்றது.

இந்த அடிப்படையில் பொதுவுடைமைக் கட்சிகளின் நிறுவனத்தைக் கட்டி வளர்ப்பது அவசியம். ஆனால், இப்போது உள்ளவற்றுக்கு முற்றிலும் மாறாக, புதிய மாதிரியிலான கட்சிகளை நிறுவுவதற்கோ, முற்றிலும் முழுதான சரியான நிறுவன வடிவம் மற்றும் உன்னத அமைப்பு விதிகள் என்று ஏதோ ஒன்றுக்கு முயலவோ கூடாது.

புரட்சிக்கான கருவி

3. ஆகப் பெரும்பான்மையான பொதுவுடைமைக் கட்சிகளும், இதன் விளைவாக புரட்சிகர உலகப் பாட்டாளி வர்க்கத்தின் ஒன்றுபட்ட கட்சியான பொதுவுடைமை அகிலமும், தமது போராட்டச் சூழ்நிலைகளில் பொதுவான குணாம்சத்தைப் பலம் வாய்ந்த முதலாளித்துவ வர்க்கத்தை இன்னமும் எதிர்த்துப் போரிட வேண்டியதாக இருப்பதைக் கொண்டிருக்கின்றன. முதலாளித்துவ வர்க்கத்தை வெற்றி கொள்வதும், அதனிடமிருந்து அரசியல் அதிகாரத்தைப் பறித்தெடுப்பதுமே – புதிய மாற்றங்கள் ஏற்படும்வரை – எல்லா பொதுவுடைமைக் கட்சிகளுக்கும் பொதுவுடைமை அகிலத்திற்கும் வழிகாட்டுகின்ற மற்றும் தீர்மானிக்கின்ற பிரதான லட்சியமாக இருக்கும். இதற்கேற்ப முதலாளித்துவ நாடுகளில் உள்ள பொதுவுடைமைக் கட்சிகளினுடைய நிறுவன நடவடிக்கைகளைத் தீர்மானிக்கும் காரணி என்னவென்றால், உடைமை வர்க்கங்களின் மீதான பாட்டாளி வர்க்கப் புரட்சியின் வெற்றியைச் சாத்தியப்படுத்தும் மற்றும் உத்திரவாதப்படுத்தும்படியான நிறுவனங்களைக் கட்டியமைப்பதாகும்.

தலைவர்களின் நிறுவனம்

4. எந்தப் பொது நடவடிக்கைக்கும் தலைமை என்பது அவசியமான நிபந்தனை. ஆனால், உலக வரலாற்றில் அதி மகத்தான போரில் (போராட்டத்தில்) தலைமை என்பது, அதிமிக புறக்கணிக்க இயலாத ஒன்று. பொதுவுடைமைக் கட்சி நிறுவனம் என்பது, பாட்டாளி வர்க்கப் புரட்சியில் பொதுவுடைமைவாதத் தலைமையளிக்கும் நிறுவனம் ஆகும்.

பொதுவுடைக் கட்சி நிறுவனத்தில் உள்ள ஜனநாயக மத்தியத்துவமானது, – மத்தியத்துவம், பாட்டாளி வர்க்க ஜனநாயகம் ஆகியவற்றின் உருக்கு வார்ப்படமாக, உண்மையான ஒன்றிணைப்பாக இருத்தல் வேண்டும். இந்த ஒன்றிணைப்பு கட்சி நிறுவனம் முழுவதன், இடையறாத பொது நடவடிக்கையை, இடையறாத பொதுப் போராட்டத்தை அடித்தளமாகக் கொண்டே சாதிக்கப்பட முடியும்.

சிறந்த தலைவர்களாக இருக்க கட்சி சிறந்த தலைமைப் பண்பைக் கொண்டிருக்க வேண்டும். அதையொட்டி நமது நிறுவன வேலையின் பிரதானப் பணியானது, பாட்டாளி வர்க்கப் புரட்சிகர இயக்கத்தின் தலைமையிடத்திற்குத் திறமையுள்ள பொதுவுடைமைக் கட்சிகளைக் கொண்டுவர தகுதி வாய்ந்த, நெறிப்படுத்துகின்ற உறுப்புகளின் (organs) கீழ் கல்வியளித்தல், அமைப்பாக்குதல் மற்றும் பயிற்றுவித்தல் ஆகும்.

5. எப்பொழுதும் மாறிக் கொண்டிருக்கும் போராட்டச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப பொதுவுடைமைக் கட்சியும் அதன் தலைமை நிறுவனங்களும் ஆகப்பெரும் அளவில் தாக்கும் சக்தி கொண்டதாக இருக்கும் வகையிலும் தனது அங்கக் சேர்க்கையைக் கொண்டிருப்பது புரட்சிகர வர்க்கப் போராட்டத்திலுள்ள தலைமைக்கு முன்நிபந்தனைகளாகும். மேலும், வெற்றிகரமான தலைமைக்குப் பாட்டாளி வர்க்கத்துடன் முற்று முழுதாக நெருக்கமான உறவைக் கொண்டிருப்பது அவசியம். இத்தகைய நெருக்கமான உறவு இல்லாவிடில், தலைமையானது பரந்துபட்ட மக்களுக்குத் தலைமை ஏற்றுச் செல்லாது. மாறாக, அதிகபட்சம் போனால், மக்களுக்குப் பின்னால் செல்வதாக இருக்கும்.

ஜனநாயக மத்தியத்துவத்தின் வாயிலாக பொதுவுடைமைக் கட்சியில் அங்ககச் சேர்க்கையானது அடையப்பட வேண்டும்.

2. ஜனநாயக மத்தியத்துவம் பற்றி

இது எப்படி இருக்க வேண்டும்?

6. பொதுவுடைக் கட்சி நிறுவனத்தில் உள்ள ஜனநாயக மத்தியத்துவமானது, – மத்தியத்துவம், பாட்டாளி வர்க்க ஜனநாயகம் ஆகியவற்றின் உருக்கு வார்ப்படமாக, உண்மையான ஒன்றிணைப்பாக இருத்தல் வேண்டும். இந்த ஒன்றிணைப்பு கட்சி நிறுவனம் முழுவதன், இடையறாத பொது நடவடிக்கையை, இடையறாத பொதுப் போராட்டத்தை அடித்தளமாகக் கொண்டே சாதிக்கப்பட முடியும். பொதுவுடைமைக் கட்சி நிறுவனத்தில் உள்ள மத்தியத்துவம் பெயரளவிலான மற்றும் இயந்திரகதியான மத்தியத்துவம் என்று பொருள்படாது.

படிக்க:
சோசலிச சமூகம் அமைப்பதற்கான போராட்டத்தில் மாவோவின் பங்களிப்பு !
♦ மரணத்தை வென்றவன் நினைவைத் துரத்துகிறான் !

ஆனால், பொதுவுடைமைவாத நடவடிக்கைகளின் மத்தியத்துவமாக, அதாவது, போர் நிலைமைக்கும் அதேவேளையில் எந்த நிலைமைக்கும் மாறிக் கொள்வதற்கும் தயாராக உள்ள பலமான தலைமையை உருவாக்குவதாகும். பெயரளவிலான அல்லது இயந்திரகதியான மத்தியத்துவம் என்பது விரல்விட்டு எண்ணக்கூடிய சிலரது கரங்களில் ‘அதிகாரத்தை’ மத்தியத்துவப்படுத்தும் தொழிற்துறை அதிகாரத்துவம் ஆகும். இது, பிற உறுப்பினர்கள் மீது அல்லது கட்சி நிறுவனத்திற்கு வெளியில் உள்ள புரட்சிகர பாட்டாளி வர்க்கத்தின் மீது ஆதிக்கம் செலுத்துவதாகும். பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்டத்தை நடத்துகின்ற, பொதுவுடைமைவாதத் தலைமையை மத்தியத்துவப்படுத்துகின்ற பொதுவுடைமைக் கட்சியானது, புரட்சிகர பாட்டாளி வர்க்கத்தின் மீது ஆதிக்கம் செலுத்த முயற்சிப்பதாக பொதுவுடைமைவாதிகளின் எதிரிகள் மட்டுமே குற்றம் சாட்டுவர். அவர்களது இத்தகைய கூற்று அப்பட்டமான பொய்யாகும். பொதுவுடைமை அகிலத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள ஜனநாயக மத்தியத்துவ அடிப்படைக் கோட்பாடுகளுக்கு, அதிகாரத்துக்கான போட்டியோ அல்லது மேலாதிக்கத்துக்கான போட்டியோ அறவே பொருத்தமற்றதாகும்.

அதிகாரத்துவமும் அல்ல, பெயரளவிலான ஜனநாயகமும் அல்ல

புரட்சிகரமற்ற பழைய தொழிலாளர் இயக்க நிறுவனங்களில், முதலாளித்துவ அரசில் உள்ளது போன்ற இயல்புடைய, எங்கும் விரவிய இருமைவாதம் (இருமைவாதம் – தனித்தனியாகப் பிரிந்திருப்பது – மொழிபெயர்ப்பாளர்) அதாவது, அதிகாரத்துவத்துக்கும் ‘மக்களுக்கும்’ இடையிலான இருமைவாதம் வளர்ச்சியுற்று இருந்தது. முதலாளித்துவச் சூழலின் இந்த நச்சுச் செல்வாக்கின்கீழ் செயல்பாடுகள் பிரிந்திருப்பது – பொது முயற்சியுடைய உயிரோட்டமான அமைப்புக்குப் பதில், பயனற்ற பெயரளவிலான ஜனநாயகத்தை வைப்பதும், ஊக்கமான நிர்வாகிகள், செயல்படாத மக்கள் என்று அமைப்பைப் பிளவுபடுத்துவது – வளர்ச்சியுற்றது. முதலாளித்துவ சூழலின் காரணத்தால், புரட்சிகர தொழிலாளர் இயக்கம் கூட இருமைவாதம் மற்றும் சம்பிரதாயவாதம் என்ற போக்கைத் தவிர்க்கவியலாதபடி வழிவழியாகப் பெற்றுள்ளது.

முறையான மற்றும் விடாப்பிடியான அரசியல், அமைப்புப் பணிகள் மூலமாகவும் இடையறாது செழுமைப்படுத்துவது மற்றம் சரிசெய்வது மூலமாகவும் பொதுவுடைமைக் கட்சி இந்த எதிர்மறையான பண்புகளை அடியோடு வெற்றி கொள்ள வேண்டும்.

7. சோசலிஸ்டுக் கட்சியை பொதுவுடைமைக் கட்சியாக மாற்றியமைக்கும்போது பழைய கட்சி அமைப்பை அப்படியே விட்டு வைத்துவிட்டு தனது மத்தியத் தலைமையின் கரங்களில் அதிகாரத்தைக் குவிப்பதுடன் மட்டும் கட்சியானது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளக் கூடாது. மத்தியத்துவம் ஏட்டளவில் மட்டும் இல்லாமல் உண்மையில் உணர்வு பூர்வமாகக் கடைபிடிக்கப்படுவதாக அமைய வேண்டும். இதைச் சாதிப்பது எப்போது சாத்தியமாகும் என்றால், தமது பொது நடவடிக்கைகளிலும், போராட்டத்திலும் இந்த அதிகாரம் (Authority) அடிப்படையிலேயே திறனுள்ள கருவியாக பெரும்பான்மையான உறுப்பினர்கள் உணரும்போதுதான். அப்படியில்லையெனில், மத்தியத்துவமானது பரந்துபட்ட மக்களுக்கு, கட்சிக்குள்ளேயே உள்ள அதிகாரத்துவமாகத் தோன்றும். எனவே, இது அனைத்து வகையான தலைமைக்கும் அனைத்து வகையான உருக்குக் கட்டுப்பாட்டுக்கும் எதிர்ப்புணர்வைத் தூண்டுவதாக அமையும். அராஜகவாதமானது அதிகாரத்துவத்தின் எதிர்துருவமாகும்.

கட்சி நிறுவனத்தில் வெறும் பெயரளவிலான ஜனநாயகம் இருப்பது அதிகாரத்துவ போக்குகளையோ அல்லது அராஜகவாதப் போக்குகளையோ ஒழிக்காது. ஏனெனில், பெயரளவிலான ஜனநாயகம்தான் அந்தப் போக்குகளுக்கு செழுமையான விளைநிலமாக இருக்கிறது. எனவே, பெயரளவிலான ஜனநாயகத்தினை அடிப்படையாகக் கொண்டு கட்சி நிறுவனத்தின் மத்தியத்துவம், அதாவது பலமான தலைமையைப் படைக்கும் நோக்கம் வெற்றிகரமாகச் சாதிக்கப்பட முடியாது. கட்சிக்குள்ளேயே தலைமை நிறுவனங்களுக்கும் உறுப்பினர்களுக்கு இடையிலேயும்  – அதுபோலவே கட்சிக்கும் வெளியில் உள்ள திரளான பாட்டாளி வர்க்கத்துக்கும் கட்சிக்கும் இடையிலும் உயிரோட்டமான இணைப்புகளையும் பரஸ்பர உறவுகளையும் வளர்ப்பதும் நிலைநிறுத்துவதும் இதற்கான மிக அவசியமான முன்நிபந்தனைகள் ஆகும்.

(தொடரும்)

நூல் தேவைக்கு :

கீழைக்காற்று பதிப்பகம்,
16, அருமலை சாவடி,
கண்டோன்மென்ட் பல்லாவரம்,
சென்னை – 600043.
அலைபேசி : 9444 88 1066
மின்னஞ்சல் : keezhaikkatru2019@gmail.com
முகநூலில் பின் தொடர : கீழைக்காற்று

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

3 மறுமொழிகள்

  1. இந்தத் தொடருக்கு நன்றி!

    லி யூ ஷோசி யின் “உட்கட்சி விவாதம்” என்கிற நூலையும் தொடராக கொண்டு வந்தால் எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

  2. “ஓர் புரட்சிவாதி-ஒரு கம்யூனிஸ்ட்-கஷ்டங்களைக் கண்டு மனம் தளர மாட்டான், புரட்சியைத் தனது இலட்சியமாகக்கொண்டுள்ளவன்,புரட்சிவாதிகள் அவசியம் என்று நம்புபவன்.”
    என்று வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர், தோழர் ஹோ சிமின் கூறியுள்ளார்.
    சரித்திரம் நமக்குக் கற்பிக்கும் பாடங்களைச் சரியாகக் கணக்கிடக்கூடிய, பழைய சமுதாய அமைப்பை மாற்றி, புரட்சிகரமான புதிய சமுதாயத்தை நிர்ணயிப்பதையே தமது இலட்சியமாகக்கொண்ட தோழர்கள், தமது பணி, புரட்சிப்பணி என்பதை உணர வேண்டும். சிந்தனையிலும், செயலிலும் ஓர் புரட்சிவாதியாகத் திகழ வேண்டும். தேச பக்தியுள்ளவனுக, தனது நாட்டு மக்களுக்காக நேர்மையுடனும், அக்கறையுடனும் செயலாற்றவேண்டும். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, விடா முயற்சி, தொழில் விருப்பம், ‘விமர்சனம்-கய விமர்சனம்’’ ஆகிய குணும்சங்களைப் புரட்சிக்கரத் தலைவர்கள் பேணிக்கொள்ளுதல் வேண்டும். கட்சியின் தலைவர்கள், ஊழியர்கள் சகலரும், மற்றவர்கட்கு ஒர் எடுத்துக்காட்டாக விளங்கவேண்டும். ஓர் இயக்கத்தை அணிதிரட்டுவதிலோ, மக்களின் சக்திகளைப் பலப்படுத்துவதிலோ, இவர்கள் முன்னின்று செயலாற்றவேண்டும்.
    தலைமைக்கு இன்னுமொரு முக்கியமான கடமையாதெனில், தனது தீர்மானங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளனவா வென்று எப்பொழுதும் எடைபோட்டுப் பார்த்தல்.
    “விமர்சனம், சுய விமர்சனம்” என்ற பிரச்சினையைப் பற்றிச் சற்று சிந்திப்போம், புதிய தலைவர்களைச் சிருஷ்டிப்பதற்கும், உள்ளவர்களிடமிருந்து கூடிய சேவையைப்பெறுவதற்கும், கம்யூனிஸ்டுகளாகிய எங்களிடமுள்ள புனிதமான கருவி ‘விமர்சனம் சுய விமர்சனம்’’ ஆகும். இந்த முறை கம்யூனிஸ் இயக்கத்துடனேயே தோன்றியது. சோ. க. க. (போல்ஷ்விக்)யினுடைய மாஸ்கோ ஸ்தாபனத்தில் தோழர் ஸ்டாலின் சமர்ப்பித்த ஓர் அறிக்கையில் பின்வருமாறு கூறுகிறார்: “எமக்குத் தண்ணிரும், காற்றும் எவ்வளவு அவசியமோ, அதேபோல் விமர்சனமும்-சுய விமர்சனமும் அவ்வளவு அவசியம். ’’ இது இல்லாமல், எமது கட்சி முன்னேற முடியாது; எமது தவறுகளைப்புரிந்துகொள்ள முடியாது. குறைபாடுகளைத் திருத்திக்கொள்ளமுடியாது. எம்மிடம் குறைபாடுகள் ஏராளம். இதை நாம் ஒழிவு மறைவின்றியும், நேர்மையாகவும் ஏற்றுக்கொள்ளவேண்டும். இன்றுவரை அமைப்பு பிரச்சினை அரசியல் பிரச்சினை பற்றி சுயவிமர்சனம்செய்து கொள்வீர்களா?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க