சோசலிச சமூகத்தை அமைப்பதற்கான போராட்டம் ஃபிரட் எங்ஸ்ட் – உடன் ஓர் நேர்காணல் | பாகம் – 4

ஒனுர்கன் உல்கர்: முதலாளித்துவ பாதையினருக்கும் புரட்சியாளர்களுக்கும் இடையில் மாவோ காலத்தில் நடந்த போராட்டத்தைப் பற்றிக் கூறினீர்கள். கட்சிக்குள் இருந்த வலது பாதையாளர்களை முறியடிப்பதற்கு, அதிகார வர்க்க மேட்டுக் குடியினருக்கு எதிராக மக்களைத் திரட்டுவது மாவோவின் வழியாக இருந்தது… இருப்பினும் பிற்காலத்தில், திறந்த பொருளாதாரமும் (முதலாளித்துவ – மொர்) சீர்திருத்தங்களும் அறிமுகப்படுத்தப்பட்ட ஆரம்பக் கட்டங்களில், மாவோ காலத்திய கொள்கைகளை பாதுகாக்கும் பொருட்டு, சீர்திருத்தங்களுக்கு எதிராக எமக்குத் தெரிந்த வரை உழைக்கும் மக்கள் பரவலான முறையில் எதிர்ப்பு காட்டவில்லையே!

ஃபிரட் எங்ஸ்ட்: டெங் அதிகாரத்திற்கு வந்த போது, நாங்கள் சோசலிசத்திற்கு எதிரானவர்கள் என்று அவர்கள் அறிவித்துக் கொள்ளவில்லை. இது அனேகமாக மக்களை குழப்பியிருக்கலாம். ஆனால், பெரியளவு எதிர்ப்பு இல்லை என்று நீங்கள் சொல்லிவிட முடியாது.

டெங் சியாபெங்

அப்படியென்றால், 1989 -இன் நிகழ்வுகளைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்? அன்று புதிதாக உருவாகி வந்த புதிய ஆளும் வர்க்கத்தை மக்கள் எதிர்க்கிறார்கள் என்று காட்டிய போராட்டமல்லவா அது. அந்தப் போராட்டத்தின் முன்னணியில் இருந்த மாணவர் தலைவர்களின் நோக்கம் வேண்டுமானால் மேற்கத்திய ஜனநாயகமாக இருக்கலாம். அவர்களுக்கு ஆதரவளித்த தொழிலாளர்களும் விவசாயிகளும், ஜனநாயகம் என்ற அரூபமான கருத்துக்காக அந்தப் போராட்டத்தில் ஈடுபடவில்லை… எனக்குத் தெரியும்.

ஏனென்றால் 1988-ல் நான் பெய்ஜிங்கில் இருந்தேன். மக்கள் எல்லா விசயங்களைப் பற்றியும் அதிருப்தி கொண்டிருந்தார்கள். சீனத்தில் தாங்கள் உருவாக்கியிருந்த அனைத்தையும் சில பணக்காரர்கள் கைப்பற்றிக் கொண்டுவிட்டார்கள் என்ற ஆத்திரத்தில் மக்கள் இருந்தார்கள். ஆய்வாளர்கள் இதையெல்லாம் மிக மேலோட்டமாகப் பார்க்கிறார்கள். மக்கள் எதனால் அதிருப்தி அடைந்திருந்தார்கள் என்ற கேள்விக்கு நீங்கள் விடை தேடவேண்டும்.

ஆகவே, மேலே என்ன நடக்கிறது என்பதை மட்டும் பார்த்து முழு சித்திரத்தையும் புரிந்து கொள்ள முடியாது. என்ன நடக்கிறது என்பது குறித்து கணிசமான காலத்துக்கு எனக்கே தெளிவில்லாமல்தான் இருந்தது. 1976-ல் நடந்தது ஒரு ஆட்சிக் கவிழ்ப்பு என்ற விசயமே 20 ஆண்டுகளுக்குப் பின்னர்தான் திடீரென்று எனக்கு உரைத்தது.

ஒனுர்கன் உல்கர்: அப்படியென்றால், அந்த காலத்தில், கட்சிக்குள்ளிருந்த சோசலிசப் பாதையினர் மக்களுடன் உயிரோட்டமான தொடர்பைப் பேணவில்லை என்று கருதலாமா?

ஃபிரட் எங்ஸ்ட்: நான் அப்படிச் சொல்ல மாட்டேன். உழைக்கும் வர்க்கத்தின் பக்குவமின்மைதான் முதன்மையான காரணம். தங்களுக்குள் நிலவிய முரண்பாடுகளைக் கையாள்வதற்கு அவர்களுக்குத் தெரியவில்லை. கோஷ்டித் தகராறுகளை அவர்களால் தவிர்க்கமுடியவில்லை.

கலாச்சாரப் புரட்சியின் தொடக்கத்தில் மக்கள் திரளைத் தட்டியெழுப்புவது எப்படி என்பது சவாலாக இருந்தது. மக்கள் கிளர்ந்தெழுந்த பின், அவர்களுக்கிடையிலான கோஷ்டிவாதத்தை சமாளிப்பது மையப் பிரச்சினையாகிவிட்டது. உழைக்கும் வர்க்கம் பிரிந்து கிடந்தது. முதலாளித்துவப் பாதையினர் ஒற்றுமையாக இருந்தனர்.
நான் ஏற்கனவே கூறியது போல, முதலாளித்துவப் பாதையாளர்கள் தங்களது உண்மை சொரூபத்தை உடனே காட்டிவிடவில்லை. அவர்கள் செய்து கொண்டிருந்தது முதலாளித்துவ மீட்புதான் என்பதை மக்கள் புரிந்து கொள்ளவில்லை.

மார்க்சியத்திற்கும் திரிபுவாதத்திற்கும் இடையிலான முக்கிய வேறுபாடு இதுதான். எந்த திரிபுவாதியும் நான் மார்க்சியத்திற்கு எதிரானவன் என்று வெளிப்படையாகச் சொல்லமாட்டான். “புதிய சூழ்நிலை தோன்றியிருக்கிறது. இதனைக் கையாள்வதற்கு புதிய அணுகுமுறை தேவை” என்பார்கள். பெரும்பாலான மக்களுக்கும் அது சரிதானே என்று தோன்றும்.

அவர்கள் முதலாளித்துவ சீர்திருத்தத்தை முதலில் தொடங்கும்போது முதலில் நகரத்தில்தான் கொஞ்சம் முயற்சி செய்தார்கள். அதற்கு தொழிலாளர்களின் எதிர்ப்பு பலமாக இருந்தது. அதனால் கிராமப்புறத்தை நோக்கிப் போய்விட்டார்கள். கிராமப்புறம்தான் சங்கிலியின் பலவீனமான கண்ணி.

ஆரம்பத்தில், மலைப் பிராந்தியங்களில் பரவிக் கிடக்கும் விவசாயிகள் வறுமையில் வாடுகிறார்கள். அவர்களை கூட்டுப் பண்ணைக்கு கட்டாயப் படுத்த வேண்டாம். அவர்களுக்கு நிலத்தை பகிர்ந்து கொடுப்போம் என்றார்கள். அது நியாயம்தானே என்று தோன்றியது. சில ஆண்டுகளிலேயே கூட்டுப்பண்ணைகளின் நிலத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பிரிக்கத்தொடங்கினார்கள். சில ஆண்டுகளுக்குள் எல்லா கூட்டுப்பண்ணைகளையும் இல்லாமல் செய்து விட்டார்கள். என்ன நடக்கிறது என்று நீங்கள் சுதாரிப்பதற்குள், அதிகாரம் உங்கள் கையை விட்டுப் போய்விட்டது.

தொழிலாளி வர்க்கத்தைப் பொருத்தவரை, முதலாளித்துவப் பாதை என்றால் என்ன, சோசலிசப்பாதை என்றால் என்ன என்பதை அவர்கள் புரிந்திருக்கவில்லை. தந்திரமான பேச்சுக்கு அவர்கள் மிக எளிதில் பலியாகி விட்டார்கள்.

முதலாளித்துவ பாதையினர், “மாவோ காலத்தில் உங்கள் சம்பளம் உயரவே இல்லை. நாங்கள் உயர்த்தப் போகிறோம்” என்றார்கள். டெங் மென்மேலும் பணத்தாள்களை அச்சிட்டுத் தள்ளினார். கூடுதல் பணம் கிடைத்தது என்று எல்லோரும் மகிழ்ந்தனர். பணவீக்கத்தைப் பற்றி அப்புறம்தான் புரிந்து கொண்டனர். அதற்குள் காலம் கடந்து விட்டது. முதலாளித்துவப் பாதையினர் தங்கள் அதிகாரத்தை உறுதிப்படுத்திக்கொள்ளும் வரை, தற்காலிகமாக, விவசாயிகளையும், தொழிலாளர்களையும், அறிவுஜீவிகளையும் தனித்தனியே விலைக்கு வாங்கினர்.

அவர்களுக்கு கட்சி உறுப்பினர்களில் உண்மையான மாவோயிஸ்டுகள் யார் என்பது தெரியும். அவர்களை வெளியேற்றினார்கள், தனிமைப்படுத்தினார்கள், ஓரங்கட்டினார்கள். அவர்கள் கைதேர்ந்த தந்திரசாலிகள்! தவளையை சமைக்க வேண்டுமானால், தண்ணீரை மெதுவாக சூடேற்று என்றொரு பழமொழி சீனத்தில் உண்டு. தண்ணீரின் சூட்டை தாங்கமுடியாது என்று தவளை உணரும்போது அதனால் குதித்து வெளியேற முடியாமல் போய்விடும்.

படிக்க :
♦ மாவோவின் சீனாவில் மக்களை பட்டினியில் தள்ளிய முதலாளித்துவ பாதையாளர்கள்
♦ விஞ்ஞானிகள் அறிக்கை : நவீன முதலாளித்துவம் ஒழியாமல் உலகைக் காப்பாற்ற முடியாது !

ஒனுர்கன் உல்கர்: கலாச்சாரப்புரட்சி தோல்வியடைவதற்கான காரணங்கள் என்ன? சமூக வர்க்கம் குறித்த மாவோவின் கருத்தாக்கம் கொஞ்சம் தெளிவில்லாமல் இருந்தது என்றும், இந்த நிச்சயமின்மை காரணமாக நண்பர்கள் யார் எதிரிகள் யார் என்று புரட்சியாளர்களால் சரியாக இனங்காண முடியாமல் போய்விட்டது என்றும் கூறப்படுவதை நீங்கள் ஏற்கிறீர்களா?

ஃபிரட் எங்ஸ்ட்: ஆம். ஆனால் ஏன்? ஏனென்றால், சட்டப்படியும், நடைமுறையிலும், உற்பத்தி சாதனங்கள் தனியாருக்கு சொந்தமாக இல்லை. தலைவர்கள் தம் சொத்துகளை தங்கள் குழந்தைகளுக்கு விட்டுச் செல்லமுடியாது.

சோசலிசத்தின் கீழ் வர்க்கம் என்பதை வரையறுக்கும் போது யாரிடம் முடிவெடுக்கும் அதிகாரம் இருக்கிறது என்பதையும், அந்த அதிகாரம் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதையும் பார்ப்பது மிகவும் முக்கியம்.

பில் கேட்ஸ் அல்லது ராக்ஃபெல்லரை எடுத்துக்கொள்ளுங்கள். தங்களது உலகக் கண்ணோட்டத்தின்படி அவர்களால் முடிவெடுக்க முடியும், உலகத்தை மாற்றியமைக்க முடியும் என்பதுதான் அங்கே முக்கியம். இங்கே சோசலிசத்தின் கீழும், முடிவெடுக்கும் அதிகாரத்தை தம் கையில் வைத்துக் கொள்ள முதலாளித்துவ வர்க்கம் முயற்சிக்கத்தான் செய்கிறது.

இரண்டு வகை முதலாளித்துவ வர்க்கத்தினரும் மற்றவர்களின் கருத்துக்களைப் பற்றி கவலைப்படுவதில்லை. இதுதான் முதலாளித்துவத்தின் சாரம், அல்லது, டி.என்.ஏ.

ஈக்கள் பறக்கும், புழுக்கள் பறக்காது. பறப்பது என்பது பெரிய வேறுபாடுதான் என்ற போதிலும், இரண்டும் ஒரே இனம்தான். கொஞ்சம் பொருத்திருந்தால் புழுக்கள் ஈக்களாக மாறும். சோசலிச சமூகத்தில் இருக்கும் முதலாளித்துவத்தினர் ஈயாக வளர்வதற்கு முந்தைய புழுவின் நிலையில் இருப்பவர்கள். அவர்கள் ஈக்களின் நிலையை எய்திவிட்ட முதலாளி வர்க்கத்தின் கரு வடிவாக இருப்பவர்கள்.

மாவோவின் அரசியல் பாரம்பரியம் குறித்து

ஒனுர்கன் உல்கர்: மாசேதுங் அவர்களின் மறைவிற்கு 40 ஆண்டுகளுக்குப்பின், மாவோயிசத்தின், குறிப்பாக கலாச்சாரப் புரட்சியின் எஞ்சி இருக்கும் பாரம்பரியம் என்ன?

ஃபிரட் எங்ஸ்ட்: மாவோவின் பாரம்பரியம் அளப்பறியது. உலகில் எந்தப் பகுதியிலும் பழைய அமைப்பு முறையைத் தூக்கி எறிவதற்காகத் திரள்கின்ற மக்கள் அனைவரும் ஒரே பிரச்சனையைத்தான் எதிர்கொண்டார்கள். புரட்சியாளர்கள் புதிய ஆதிக்க சக்திகளாக மாறாமல் தடுப்பது எப்படி? இந்த பிரச்சனையைத் தீர்ப்பதற்கு மாவோ என்ன முயற்சி செய்தார் என்பதை புரிந்து கொள்ளாதவரை, புரட்சி, எதிர் புரட்சி என்ற இந்த சுழற்சி தொடரத்தான் செய்யும்.

பாரிஸ் கம்யூனுக்குப் பிறகு, மார்க்ஸ் அதன் படிப்பினைகளை தொகுத்தார்.
பாட்டாளி வர்க்கம் அதிகாரத்தை கைப்பற்றுவதைப் பற்றி மட்டும் அக்கறை செலுத்தினால் போதாது; அது பழைய அரசு எந்திரத்தைத் தகர்த்து புதிய ஒன்றை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்றார். ஆனால் அதிகாரத்திற்கு வந்த பிறகு உழைக்கும் வர்க்கத்தின் குறிப்பான பாத்திரம் என்னவாக இருக்கும் என்பதைப் பற்றி அவருக்கும் கூட ஒரு தெளிவு கிடைக்கவில்லை. அதைப் புரிந்து கொள்வதற்கு அப்போது காலம் கனியவில்லை.

லெனின், இது குறித்து பல ஆண்டு காலம் சிந்தித்தார். உயர்ந்த அளவில் ஒழுங்கமைக்கப்பட்ட, ஆகப் பெரும்பான்மையான உழைக்கும் மக்கட்பிரிவினரைத் தன் பின்னே திரட்டும் ஆற்றல் பெற்ற, முன்னணிக் கட்சி ஒன்றை பாட்டாளி வர்க்கம் தனக்கென உருவாக்கிக் கொண்டால் மட்டுமே, பொருளாதாரத்திலும், அரசியலிலும், இராணுவபலத்திலும், பண்பாட்டிலும் சமூகத்தின் மீது ஆதிக்கம் செலுத்துகின்ற முதலாளி வர்க்கத்தை வெற்றி கொள்ள முடியும் என்று உணர்ந்து கொண்டார்.

அக்டோபர் புரட்சி முடிந்த நான்கு ஆண்டுகளுக்குப் பின்னரும், சீன மக்களின் 1919 மே 4 எழுச்சிக்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னரும்தான் சீன கம்யூனிஸ்டு கட்சி உருவாக்கப்பட்டது. கட்சியை எப்படி உருவாக்குவது என்று யோசிக்க வேண்டிய தேவை அவர்களுக்கு ஏற்படவில்லை. அந்த வகையில் லெனினுடைய பங்களிப்பு, சீனப்புரட்சிக்கான காலத்தை மிகப்பல ஆண்டுகள் குறைத்துக் கொடுத்தது.

கலாச்சாரப்புரட்சியின் பங்கும் அதே போன்றதுதான். அடுத்த முறை, உழைக்கும் வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றும்போது, அவர்கள் முதலிலிருந்து தொடங்கத் தேவையில்லை. மற்ற புரட்சியாளர்கள் செய்த அதே தவறுகள் மீண்டும் நிகழாமல் தவிர்ப்பது எப்படி என்பதை அவர்கள் அறிந்திருப்பார்கள். அதாவது, சலுகை பெற்ற அதிகாரவர்க்கம் என்ற ஒரு பிரிவு வளர்ந்துவிடாமல் தடுப்பது எப்படி என்பதை அறிந்திருப்பார்கள். முன்னணிக் கட்சியின் மீது மக்கள்திரளின் கண்காணிப்பு இருந்தாகவேண்டும் என்று வலியுறுத்துவது எப்படி என்று அறிந்திருப்பார்கள்.

முன்னணிக் கட்சிக்கும் மக்கள் திரளின் கண்காணிப்புக்கும் இடையிலான உறவு என்பது சோசலிசத்தின் மிகப்பெரிய முரண்பாடாகும். இதிலிருந்து தப்பிக்கவே முடியாது. மாவோவைத் தவிர, சோசலிசம் குறித்த மற்றெல்லா கோட்பாடுகளும் இந்தச் சிக்கலைக் கையாள்வதில் தோல்வியடைந்து விட்டன. ஸ்டாலின் போன்றவர்கள் மக்கள் திரளின் கண்காணிப்பை புறக்கணித்து, கட்சியின் முக்கியத்துவத்தை மட்டுமே வலியுறுத்தினர். சமூக ஜனநாயகவாதிகள் ஜனநாயக அம்சங்களை மட்டும் வலியுறுத்தினர். முன்னணிக் கட்சியின் தேவையை முற்றிலுமாகப் புறக்கணித்தனர். மேற்சொன்ன இரண்டு அணுகுமுறைகளுமே வேலைக்கு ஆகாதவை. இதுதான் இயங்கியல்.

இந்த இரண்டு அம்சங்களையும் இணக்கமாக கையாள்வது எப்படி என்பதை மாவோ முயன்று பார்த்தார். ஆனால், இந்த விசயத்தை அவர் கிரகித்துக் கொள்வதற்குள் பெரிதும் காலங்கடந்து விட்டது. அதற்கு முன்னரே முதலாளித்துவப் பாதையினர் சீனத்தில் பெரிதும் பலம் பெற்றுவிட்டார்கள். முதலாளித்துவப் பாதையாளர்களை அடையாளம் காண்பதற்கே மாவோவிற்கு ஐந்து முதல் ஆறு ஆண்டுகள் (1957 முதல் 1962 வரை) ஆகிவிட்டன.

முதலாளித்துவப் பாதையாளர்கள் எனப்படுபவர்கள் வெளியில் வரும்போதுதானே புரட்சியாளர்கள் அவர்களை அடையாளம் காண இயலும்? மார்க்ஸ் காலத்தில் முதலாளித்துவப் பாதையாளர்களைப் பற்றி யோசித்திருக்க முடியாது. இது பற்றி ஆராய்வதற்கு லெனினுக்கு காலம் போதவில்லை. ஸ்டாலினுக்கு வாய்ப்பிருந்தது. ஆனால், அவர் அந்த வாய்ப்பை தவறவிட்டுவிட்டார். தவறிழைத்து விட்டார். அவர் நாடு கடத்தினார், மரண தண்டனை விதித்தார். அதெல்லாம் பிரச்சினையைத் தீர்க்கவில்லை. இருப்பினும், பாட்டாளி வர்க்கம் அதிகாரத்தில் இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் ஸ்டாலின் பாடுபட்டார். முதலாளித்துவத்தை மீண்டும் கொண்டு வர அவர் முயற்சிக்கவில்லை. எனவே சீனக்கம்யூனிஸ்டு கட்சியின் பல ஊழியர்கள் தவறிழைத்ததைப் போலவே அவரும் தவறிழைத்தார். இவர்களை உணர்வுபூர்மற்ற முதலாளித்துவப் பாதையாளர்கள் என்று நான் அழைப்பேன்.

நாம் உணர்வுபூர்மான முதலாளித்துவப் பாதையாளர்களையும், உணர்வுபூர்வமற்ற முதலாளித்துவப் பாதையாளர்களையும் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும். சிலருடைய வேலைப்பாணி தவறாக இருக்கிறது. சிலர் உணர்ச்சிவயப் படுபவர்களாக இருக்கிறார்கள். சிலர் ஆதிக்க மனோபாவம் கொண்டவர்களாக நடந்து கொள்கிறார்கள். இவர்களெல்லாம் உணர்வுபூர்வமாக முதலாளித்துவப் பாதையைத் தெரிவு செய்தவர்கள் அல்ல. ஆனால், மார்க்சிய இயங்கியல் குறித்த அவர்களது பார்வை பலவீனமாக இருந்தது.

எனவே, அவர்களால் முதலாளித்துவ மீட்பை தடுக்கவியலவில்லை. ஸ்டாலின் தெளிவாக இருந்தார். அவர் மற்றவர்கள் மீது நம்பிக்கை வைக்கவில்லை. மக்கள் திரள் வழியைப் பின்பற்றவில்லை… மக்களைத் திரட்டவில்லையென்றால், நீங்கள் அதிகாரவர்க்கத்துக்கு உள்ளேதான் தீர்வைத்தேட முடியும். மேலிருந்து திணிக்கப்பட்ட அணுகுமுறை தவிர்க்கவியலாமல் அதிகாரவர்க்க ஆட்சியைத்தான் மீண்டும் உற்பத்தி செய்யும்.

டிராட்ஸ்கி

இதில் டிராட்ஸ்கியவாதிகளின் தீர்வு என்பது சமூக ஜனநாயகவாதிகளின் தீர்வைப் போன்றது. அவர்களது தீர்வு கட்சி என்ற முன்னணிப்படையின் தேவையை நிராகரிக்கிறது. அவர்கள் ஜனநாயகம் என்பதை தொழிலாளர் காங்கிரஸ் என்பதாக பேசிக்கொண்டிருக்கிறார்கள். தொழிலாளர்களுக்கிடையே வெவ்வேறு கருத்துகள் வரும்போது என்ன செய்வது என்று அவர்கள் சொல்வதில்லை. சீனாவில் டிராட்ஸ்கியவாதிகளுடனான விவாதத்தில் நான் இந்த பிரச்சனையைத் தொடர்ந்து எதிர் கொள்கிறேன்.

சோசலிசம் என்பது ஒரு நீண்ட வரலாற்றுக் காலம். இந்தக் காலகட்டத்தில் வர்க்கங்களும் வர்க்கப்போராட்டமும் தொடர்ந்து நிலவவே செய்யும்.

தொடர்ந்து இருக்கும். முதலாளித்துவம் எப்போது வேண்டுமானாலும் மீண்டு வரலாம். அதுதான் சீனத்தில் நடந்திருக்கிறது. இன்று சீனாவில் அதிகாரத்தில் இருப்பவர்கள் முதலாளி வர்க்கத்தினர் அல்ல, திரிபுவாதிகள் என்றும், உட்கட்சி போராட்டம் நடத்தி அவர்களை முறியடிக்க வேண்டும் என்றும் சிலர் கூறுகிறார்கள். உண்மையில் இன்று சீனா ஒரு தொழில்மயமான முதலாளித்துவ நாடு. இங்கே முதலாளிவர்க்கம்தான் அதிகாரத்தில் இருக்கிறது.

ஒனுர்கன் உல்கர்: என் குறிப்பான கேள்வி இதுதான். மாவோ மறைந்து அரை நூற்றாண்டு ஆகிவிட்டது. 21-ம் நூற்றாண்டில் சோசலிசத்தைப் படைக்க விரும்பும் மக்கள் மார்க்சியத்திற்கு மாவோ செய்த பங்களிப்பை இன்று எதற்காக கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்?

ஃபிரட் எங்ஸ்ட்: ஏனென்றால், அது ஒரு கட்டாயம். புரட்சிக்காகப் போராடுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் எங்கே இருந்தாலும் அவர்கள் எதிர்கொள்ளக்கூடிய பிரச்சினையை அவர் ஆராய்ந்திருக்கிறார். முன்னோடியாகத் தீர்வு கண்டிருக்கிறார். குறிப்பான விசயங்களில் சில வேறுபாடுகள் இருக்கலாம்.

அடிப்படைக் கேள்வி இதுதான். உட்கட்சி போராட்டத்தை எப்படி கையாளவேண்டும்? இது குறித்த முழுமையான கோட்பாடும், நடைமுறையும் அவரிடம் இருக்கிறது. மார்க்சியத்தை நடைமுறைப்படுத்துங்கள். திருத்தல்வாதத்தை அல்ல என்கிறார். வெளிப்படையாக இருங்கள், சூழ்ச்சி செய்யாதீர்கள் என்கிறார். ஐக்கியப்படுங்கள் பிளவுபடாதீர்கள் என்கிறார். விமரிசனம் சுயவிமரிசனத்தை திறந்த மனதுடன் எதிர்கொள்ளுங்கள் என்கிறார்.

இவை அனைத்தும் புரட்சிகர அணிகள் மத்தியிலான போராட்டம் தொடர்பானவை. மக்களிடையேயான முரண்பாடுகளைக் கையாள்வது தொடர்பானவை. கோஷ்டிவாதத்தை முறியடிப்பதற்கும் ஐக்கியத்தை சாதிப்பதற்கும் மாவோவின் இந்தக் கருத்துக்கள் புரட்சியாளர்கள் அனைவருக்கும் மிகவும் அவசியமானவை. ஐக்கியம் என்பதன் பொருள் நமது கருத்தை வெளியிடாமல் விழுங்கிக் கொள்வது அல்ல. அது ஒரு ஒத்த கருத்தை எட்டுவதற்கானது. இவையனைத்தும் கலாச்சாரப் புரட்சிக்கு முன்னதாகவே அவரால் கோட்பாடு ரீதியாகத் தொகுக்கப்பட்டு விட்டன.

கோட்பாடு ரீதியாக மட்டுமல்ல, புரட்சிகர நடைமுறையிலும் மாவோ பங்களித்திருக்கிறார். மாவோவை நிராகரிப்பவர்கள் தம் அறியாமையைத்தான் வெளிப்படுத்துகிறார்கள். பருண்மையான நிலைமைகள் குறித்த உண்மையான புரிதலின் அடிப்படையில் மாவோவின் மீது விமரிசனம் வைக்கின்ற அர்ப்பணிப்புள்ள அறிஞர்கள் யாரும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

கலாச்சாரப் புரட்சி காலகட்டத்தில் செங்காவலர்கள் மத்தியில் பாடியாடும் சிறுமி. (கோப்புப் படம்)

மூன்றுலக கோட்பாடு போன்ற விசயங்களுக்காக மாவோவை சிலர் நிராகரிக்கிறார்கள். சோவியத் யூனியன் உண்மையிலேயே பெரிய அபாயமாக இருந்தது. அது சீனத்துக்கு மட்டும் அபாயமாக இல்லை. சோவியத் யூனியன் சிதறிவிட்டது என்பது உண்மை. ஆனால் என்ன நடக்கப்போகிறது என்பதை யாராலும் அனுமானிக்க முடியவில்லை… முதலாளித்துவப் பாதையாளர்கள் குறித்தும் ஏகாதிபத்தியம் குறித்தும் மார்க்ஸ் முன்கூட்டியே ஆய்வு செய்திருக்க முடியவில்லை என்பதைப் போன்றதுதான் இதுவும்.

சோவியத் யூனியன் அரசின் பலவீனத்தைப் பார்க்க முடியாத காரணத்தினால், அந்த அபாயத்தைப் பற்றி மாவோ சற்று மிகையாக கவலைப்பட்டிருக்க கூடுமோ என்று இப்போது நமக்குத் தோன்றுகிறது. இதற்காக மாவோவை யாரேனும் குற்றம் சொல்ல முடியுமா? சோவியத் யூனியனுக்கு என்ன நடக்கப்போகிறது என்பதை யார்தான் முன்கூட்டி அறிந்திருந்தார்கள்? தவறிழைப்பதை யாரும் தவிர்க்கவியலாது. மார்க்ஸ் தவறு செய்திருக்கிறார், லெனின் தவறு செய்திருக்கிறார், ஸ்டாலினும் பல தவறுகள் செய்திருக்கிறார். மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆகியோரின் பல கணிப்புகள் நடக்காமல் போயிருக்கின்றன. அதற்காக அவர்களைக் குற்றம் சொல்வது அபத்தமானது.

ஒனுர்கன் உல்கர்: உங்கள் நேரத்தையும் ஞானத்தையும் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி. நீங்கள் புதிய தெளிவை ஏற்படுத்தி இருக்கிறீர்கள்.

(முற்றும்)

புதிய ஜனநாயகம், ஜனவரி 2019

மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

புதிய ஜனநாயகம் நவம்பர் 2018

15.00Add to cart

புதிய ஜனநாயகம்

15.00Add to cart

புதிய ஜனநாயகம்

15.00Add to cart

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க