சீனக் கல்வி நிலையங்களிலும் பல்கலைக்கழகங்களிலும் ’கம்யூனிச’ கல்வி கட்டாயம். ஆனால், அவர்கள் எம்மாதிரியான ‘கம்யூனிசத்தை’ கற்க வேண்டும் என்பதை அரசு முடிவு செய்யும்.

சீன கம்யூனிஸ்டு கட்சி சந்தைப் பொருளாதாரத்தை வரித்துக் கொண்ட  ஆண்டு 1992 என்றாலும் அதற்குத் தேவையான அடித்தளத்தை 1978 -ல் இருந்தே போடத் துவங்கி விட்டது. ‘சோசலிச சந்தைப் பொருளாதாரம்’ என ஒன்றுக்கொன்று பொருந்தாத சொற்களால் தனது நவீன திரிபுவாதத்திற்கு விளக்கமளித்தது சீன கம்யூனிஸ்டு கட்சி.

எனினும், அந்நாட்டின் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் கம்யூனிச கல்வி அளிக்கும் நடைமுறை அவ்வாறே தொடர்ந்து கொண்டிருந்தது. தற்போது இருபதுகளில் இருக்கும் மாணவர்கள் பலர் சொந்த முறையில் கம்யூனிச தத்துவங்களைக் கற்றுக் கொள்ள படிப்பு வட்டங்களை அமைத்து மார்க்ஸ், லெனின், மாவோவின் படைப்புகளைப் படித்து விவாதித்து வருகின்றனர். விளைவு? இந்த மாணவர் குழுக்கள் தங்கள் பல்கலைக்கழக ஊழியர் சங்கங்களின் போராட்டங்களுக்கும், வெளியில் நடக்கும் தொழிலாளர் போராட்டங்களுக்கும் ஆதரவாக களமிறங்கத் துவங்கியுள்ளன.

இளம் கம்யூனிஸ்டுகள் என அறியப்படும் இம்மாணவர்கள் கடுமையான அரசு அடக்குமுறைகளை எதிர்கொள்ளும் அதே சமயம் களப் போராட்டங்களிலும், சித்தாந்தப் போராட்டங்களிலும் துணிச்சலுடன் முன்னேறிச் செல்கின்றனர். அவ்வாறான மாணவர்களில் ஒருவர் தான் யூயீ ஜின்.

*****

யூயீ ஜின் (Yue Xin) 21 வயதேயான கல்லூரி மாணவி. பீகிங் பல்கலைக்கழகத்தில் இறுதி ஆண்டு படித்து வரும் யூயீ, அதே பல்கலைக்கழகத்தில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் நடந்த பாலியல் வல்லுறவு தொடர்பான வழக்கை அரசு தரப்பில் இழுத்தடித்துக் கொண்டிருப்பதை எதிர்த்து தனது சக மாணவர்களைத் திரட்டிக் களமிறங்குகிறார்.

இந்தாண்டு ஏப்ரல் மாதம் உலகளலவில் பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண்கள் முன்னெடுத்த #MeToo இயக்கம் சீனாவிலும் மெல்லப் பரவியது. அந்த சமயத்தில் தான் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகி பின் தற்கொலை செய்து கொண்ட மாணவிக்கு நீதி கேட்டு மாணவர்களைத் திரட்டத் துவங்கினார் யூயீ.

சென்ஷென் பகுதி மாணவர்கள் தொழிலாளர் போராட்டங்களுக்கு ஆதரவாகவும், சீரழிந்து போயுள்ள போலீசு துறையை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர், (படம் : நன்றி – நியூயார்க் டைம்ஸ்)

சமூக வலைத்தளங்களிலும் இயங்கி வரும் யூயீ, “சீனாவில் மார்க்சிய தத்துவம் ஒரு கட்டாயப் பாடம் தான்… ஆனால், நீங்கள் உண்மையான மார்க்சியத்தைக் கற்றுக் கொள்ள வேண்டுமெனில் அதை உங்கள் சொந்த முயற்சியில் தான் மேற்கொள்ள வேண்டும்” எனப் பதிவு செய்துள்ளார். மேலும், தொழிலாளர் உரிமை, ஆலைகளின் பணிச்சூழல், ஏற்றத்தாழ்வான ஊதியம் மற்றும் ஜனநாயக மறுப்பு உள்ளிட்ட பல்வேறு விசயங்களைக் குறித்தும் பதிவு செய்துள்ள யூயீ, பல்கலைக்கழக வளாகத்தில் தான் சந்தித்த கம்யூனிஸ்டு தோழர்களின் மூலமே தான் அரசியல் கற்றுக் கொண்டதாக குறிப்பிடுகிறார்.

எனினும், கம்யூனிச படிப்பு வட்டங்கள் அரசாங்கத்திற்குத் தெரியாமல் இரகசியமாகத் தான் நடத்தியாக வேண்டும். ஜாங் யுன்ஃபான் (Zhang Yunfan) 25 வயது மாணவர். கடந்த ஆண்டு (2017) நவம்பர் 15ம் தேதி தனது தோழர்களோடு கம்யூனிச நூல்களைப் படித்து விவாதித்துக் கொண்டிருந்த போது போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஜாங்குடன் அவரது தோழர்களும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் செய்த குற்றம்? தொழிலாளர் உரிமை மற்றும் ஜனநாயக மறுப்பு குறித்து படித்து விவாதித்ததே.

“அது ஒரு ஹாலிவுட் ஆக்சன் திரைப்படம் போல் இருந்தது” எனத் தான் கைது செய்யப்பட்டது குறித்து விவரிக்கிறார் ஜாங்கின் நண்பர். அவரது வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு கும்பலாக உள்ளே நுழைந்துள்ளனர் போலீசார். அப்போது படுத்துக் கொண்டிருந்த ஜாங்கின் நண்பரின் கழுத்தைப் பிடித்து படுக்கையோடு அழுத்தி கைகளில் விலங்கு மாட்டி இழுத்துச் சென்றுள்ளனர்.

ஜாங்கும் அவரது நண்பர்கள் ஏழு பேரும் கடந்தாண்டு செப்டம்பரில் இருந்து விவாதக் குழு ஒன்றை நடத்தி வந்துள்ளனர். அதில் மாவோவின் கலாச்சாரப் புரட்சி மற்றும் சீனாவின் சந்தைச் சீர்திருத்தங்கள் குறித்து விவாதித்துள்ளனர்.

தற்போது அதிகாரத்தில் உள்ள சீன கம்யூனிஸ்டு கட்சி மாவோவின் கலாச்சாரப் புரட்சியை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதும், அதை அரசியல் பேரழிவு என்று வகைப்படுத்தியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.  சுமார் ஒரு மாத கால சிறைவாசத்திற்குப் பிறகு இனிமேல் மார்க்சிய வகுப்புகளை நடத்தினால் அதில் விவாதிக்கப்பட உள்ள நூல்கள் மற்றும் தலைப்புகளை போலீசாருக்கு முன்னறிவிக்க வேண்டும் என்கிற எச்சரிக்கையின் பேரில் விடுவிக்கப்பட்டனர்.

மேலும், தொழிலாளர்களின் வாழ்க்கைச் சூழலை சித்தரிக்கும் “வெண் கூந்தல் பெண்” (White-haired Girl) எனும் மாவோ காலத்திய நாடகத்தை நடத்துவதற்கும் போலீசார் தடைவிதித்துள்ளனர். தொழிலாளர்களின் போராட்டத்தோடு தொடர்புபடுத்திக் கொள்வதையும், அதற்கு ஆதரவளிப்பதையும் சீன ஆளும் வர்க்கம் மிகக் கடுமையாக ஒடுக்கி வருகின்றது. சீனாவின் குவாங்ஜொவ் மாகான நீதிமன்றம் 2016 -ம் ஆண்டு வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த தொழிலாளர் இயக்க பிரதிநிதிகளுக்கு மூன்றாண்டுகள் சிறை தண்டனை வழங்கித் தீர்ப்பளித்துள்ளது.

மார்க்சிய சித்தாந்தத்தால் ஒளியூட்டப்பட்ட சமூக செயல்பாடுகள் சமீப ஆண்டுகளில் அதிகரித்து வருவதாக கூறுகிறார் மார்க்சிய தத்துவவியலாளரான யுவான் யுவா (Yuan Yuhua). ’குவாங்ஜொவ் குழு’ எனும் மார்க்சியக் குழுவில் உள்ளவர்கள் பெரும்பாலும் தங்களது 20-களின் மத்தியில் இருப்பவர்கள். இவர்கள் தங்களுக்கு பள்ளிப் பருவத்திலேயே மார்க்சியத்தின் மீது ஈர்ப்பு ஏற்பட்டதாகவும் – அந்த ஈர்ப்புக்கு அரசின் பாடதிட்டம் காரணம் இல்லை எனவும் கூறுகின்றனர்.

தீவிர இடதுசாரி மாணவர் குழுக்களில் இணைகிறவர்கள் தங்களது சொந்த முயற்சியில் மூல மார்க்சிய நூல்களைப் படித்து விவாதிப்பது, நேரடியான கள ஆய்வுகளில் ஈடுபடுவது மற்றும் தாங்களே ஆலைகளில் வேலை செய்து தொழிலாளர் நிலைமைகப் புரிந்து கொள்வது போன்ற செயல்பாடுகளின் மூலம் மார்க்சியத்தைக் கற்றுக் கொள்கின்றனர். இதன் விளைவே தொழிலாளர் போராட்டங்களை இம்மாணவர் குழுக்கள் ஆதரிக்கின்றன.

சீனத் தொழிலாளர்களின் நிலை 2008 -ம் ஆண்டு துவங்கிய பொருளாதார நெருக்கடியை ஒட்டி மேலும் சீரழிந்தது என்கிறார் ஹான் பெங் (Han Peng). முன்பு போலீசாரின் தேடப்படுவோர் பட்டியிலில் இடம் பிடித்திருந்த ஹான் பெங், தீவிர இடதுசாரிக் குழுக்களில் இயங்கி வருபவர். பத்தாண்டுகளுக்கு முன் துவங்கிய பொருளாதார நெருக்கடியால் உலகளவில் பொருட்களின் நுகர்வு சரிந்துள்ளது. இதைத் தாக்குப் பிடிக்க சீன ஆலை முதலாளிகள் தாங்க முடியாத பணிச் சுமையை தொழிலாளர்களின் மேல் சுமத்தியுள்ளனர்.

பணி உத்திரவாதம் ரத்து, பாதுகாப்பான பணிச் சூழல் ரத்து, தொழிலாளர் நலச் சட்டங்கள் ரத்து, பணிக் கொடை ரத்து என வரிசையாக தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை எடுத்த சீன ஆளும் வர்க்கம், தொழிலாளர்களை ஒட்டச் சுரண்டுவதற்கு முதலாளிகளுக்கு இருந்த பெயரளவுக்கான தடைகளையும் விலக்கியுள்ளது.

இதன் விளைவாக தொழிலாளர் போராட்டங்கள் பரவலாக நடந்து வருகின்றது. இன்னொருபுறம், நவீன திரிபுவாத சீன கம்யூனிஸ்டுக் கட்சியின் எதேச்சாதிகாரத்தை எதிர்த்து மாணவர்களும் இளைஞர்களும் சரியான கம்யூனிச கோட்பாடுகளைக் கற்பதும் தொழிலாளர் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிப்பதுமான போக்கு எழுந்துள்ளது.

மார்க்சிய கோட்பாடுகளை வரித்துக் கொண்ட மூளையில் இருந்து உழைக்கும் வர்க்கத்திற்கு ஆதரவான சிந்தனைகள் உதிப்பதில் எந்த ஆச்சர்யமும் இல்லை. நல்ல மரம் நல்ல கனிகளைத் தானே கொடுத்தாக வேண்டும். எனினும், இந்த போக்கு சர்வ வல்லமை கொண்டு இரும்புக் கரத்தோடு நாட்டை ஆண்டு வரும் சீனத் திரிபுவாத கம்யூனிஸ்டு தலைமையை எதிர்க்கும் அளவுக்கான வலிமையை இன்னும் பெறவில்லை.

சீன கம்யூனிஸ்டுகளிடையே அதிகரித்து வரும் மேற்கத்திய சிந்தனைகள் குறித்து கட்சி காங்கிரசின் போது சீன அதிபர் ஜீ ஜின்பிங் பேசியதற்கு பதிலாக யூயீ அனுப்பிய கடிதம் ஒன்றில், ஊழலை ஒழிக்க அவர் எடுத்து வரும் நடவடிக்கைகளை முதலில் பாராட்டுகிறார். அதன் பின், தன்னைப் போன்ற இளம் கம்யூனிஸ்டுகளின் செயல்பாடுகள் மேற்கத்திய சிந்தனைகளில் இருந்து கிளைத்தவை அல்ல என்றும் 1919 மே 4 இயக்கத்தில் (சீனப் புரட்சிக்கு வித்திட்ட மாணவர் இயக்கம்) இருந்தே தாங்கள் உணர்வு பெற்றதாகவும் குறிப்பிடுகிறார்.

எப்படிப் பார்த்தாலும் சீனாவின் நவீனத் திரிபுவாதிகளின் எதேச்சாதிகாரத்திற்கான முடிவு சீனாவில் முளைவிடத் துவங்கியுள்ளதை மட்டும் மறுக்கவே முடியாது. விசயம் என்னவென்றால் முளைவிட்டெழும் குருத்துகள் அனைத்தும் மார்க்சியம் எனும் விதையில் இருந்தே முளைத்தெழுகின்றன.

உண்மையான மார்க்சியம் என்கிற விதையை மறைப்பதாக எண்ணிய சீன எதேச்சாதிகாரவாதிகள் அதை பண்பட்ட மண்ணுக்கடியில் புதைத்து வைத்துள்ளனர் என்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது.    

மேலும் :

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க